சுற்றறிக்கை எண் :7/2012 நாள்: 28.5.2012
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவை நாட்டு மக்கள் மீது ஈவிரக்கமற்ற முறையில் மற்றுமொரு தாக்குதலை நிகழ்த்திக் கொண்டாடியுள்ளது. லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50 அளவிற்கு மிகக்கடுமையான பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மேலும் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிக்கொண்டு இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு நிர்ணயம் தொடர்பாக அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டை கைவிட்டதன் விளைவாக மாதத்திற்கு ஒருமுறை சர்தேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப உள்நாட்டில் பெட்ரோல் விலையை மாற்றி அமைப்பதாகக் கூறி எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ச்சியாக விலையை உயர்த்தி வருகின்றன. இதற்கு அரசு முழு அனுமதி வழங்கியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த காலக் கட்டத்தில் மொத்தம் 39 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முதலாவது ஐந்தாண்டு காலத்தில் 22 முறை பெட் ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது கடந்த மூன்றாண்டு காலத்தில் மட்டும் 17 முறை விலை உயர்த்தப்பட் டுள்ளது. இதன்மூலம், நமது ஊதியத்திலிருந்து மாதமாதம் சராசரியாக ரூ.500 முதல் ரூ.1000 வரை, மத்திய அரசு வழிப்பறி செய்கிறது என்பதுதான் உண்மை.ஒரு சமூகப்பார்வையுள்ள தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களாக, இதனால் நாமும் நமது குடும்பமும் பாதிக்கப்படுகிறது என்கிற யதார்த்தம் புரிந்து கோபம் கொள்கிற மனிதர்களாக நாமும் மத்திய அரசின் இரக்கமற்ற பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அணி திரள்வோம்!
Mass deputation and memorandum:
நமது பணிச்சூழலை மேம்படுத்துவதற்காகவும், நமது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக நிலைநிறுத்திக்கொள்ளவும் நாம் இங்கே ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம். ஊழியர்கள் மத்தியிலும் அலுவலர்கள் மத்தியிலும் பரவலாக இந்த இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அவை நமது இயக்கத்தை நபர் சார்ந்து பார்ப்பதால் உருவாகும் எதிர்வினைகளாக புரிந்துகொள்ள முடிகிறது. புதிய சேர்மன், பழைய சேர்மன் என்று நபர் சார்ந்து நாம் விஷயத்தை முன்வைக்கவில்லை. நிர்வாகம்தான் நமக்குப் பிரதானம். தனிநபர்கள் அல்ல.
நமது இரண்டு சங்கங்களின் கூட்டுச் செயற்குழு கூடி விவாதித்ததில், இந்த வங்கியும், நாமும் கடந்த சில வருடங்களில் மிகக் கடுமையாக பதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தது. மொத்த systemமும் நோய்வாய்ப்பட்டு, இருப்பதாக விமர்சனம் செய்தது. அதிகரிக்கும் பணிச்சுமை, ஒழுங்கு நடவடிக்கைகள், பணிபுரியும் சூழல், பணி ஓய்வு பெறுகிறவர்களின் பரிதாப நிலைமை எல்லாம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் ஒரு பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியிருப்பதை உணர்ந்தது. பதவி உயர்வு, புதிய பணிநியமனம், மாறுதல்கள் எல்லாம் நகர முடியாமல் struck ஆகிக் கிடப்பதையும், அதனால் வர இருக்கிற குழப்பங்களை புரிந்துகொண்டது. நடைமுறையில் இருக்கும் அத்தனை குளறுபடிகளையும் கேள்விகளுக்குள்ளாக்குவதன் மூலம் நிர்வாகத்தை சரிசெய்வதுதான் இந்த இயக்கத்தின் அர்த்தமும், புரிதலும் ஆகும்.
நம்மை ஆள்பவர்களே சீர்திருத்தங்களை அறிவிக்கிறார்கள். vision 2020, vision 2015 என்று தங்கள் தொலைதூரப்பார்வையை அறிவிக்கிறார்கள். அதுபோல உழைக்கும் மனிதர்களாகிய நாம் நமக்கென்று முன்வைக்கும் visionதான் இந்த இயக்கம். நமது தன்மானத்தையும், சுயமரியாதையையும் நிலைநிறுத்துவது, பணிச்சூழலை பாதுகாப்பானதாக ஏற்படுத்துவது, நிம்மதியான பணி ஓய்வை நிச்சயமாக்குவது, வணிக வங்கிக்கு இணையான அத்தனை உரிமைகளையும், சலுகைகளையும் பெறுவது, ஒழுங்கு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது, பதவி உயர்விலும் மாறுதல்களிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது என்பது நமது vision. இதன் பொருட்டே நமது இயக்கம்.
இது நீண்டதொரு பயணம். இந்த இயக்கத்திற்கான ஆதரவை பெருகச் செய்வது என்பதுதான் நமது முதற்கட்ட நடவடிக்கை. தொடர்ந்த பிரச்சாரங்கள் மூலம், எல்லாத் திசைகளிலிருந்தும் குரல்களை எதிரொலிக்கச் செய்ய வேண்டும் என்பதே நமது உடனடித் திட்டம். அந்த இயக்கத்தை துவக்கும் நிகழ்வாக தலைமையலுவலகத்திற்கு 10.5.2012 அன்று, நமது இரு சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் mass deputation சென்று, memorandum அளிப்பது என்று முடிவு செய்திருந்தோம். அன்று, நமது PGBEA, PGBOU செயற்குழு உறுப்பினர்களும் தலைமையலுவலகத்திற்கு mass deputation சென்றோம். Memorandum Day என்னும் பேட்ஜ் அணிந்து, நமது இயக்கத்தை துவக்கினோம். வந்திருந்த ஐ.ஓ.பி உயரதிகாரிகளோடு பிஸியாக இருந்தார் சேர்மன் அன்று. நாம் mass deputationஆக பொது மேலாளரை சந்தித்து மெமொரெண்டம் கொடுத்தோம். மாலையில் கோரிக்கைகளை விளக்கி வாயிற்கூட்டம் நடத்தினோம்.
Our Regional Meetings:
அடுத்தக் கட்டமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மண்டலக் கூட்டங்கள் நடத்தி, உறுப்பினர்களை சந்தித்து இந்த இயக்கம் பற்றி விளக்கியும், பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற இருக்கும் ஜுன் 8ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தை வலியுறுத்தியும் வட்டாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரளாக தோழர்கள் கலந்துகொண்டதோடு, தங்கள் கருத்துக்களை அதிக அளவில் பகிர்ந்து கொண்டது இந்த மண்டலக் கூட்டங்களின் சிறப்பம்சம். புதிய தோழர்கள் கலந்து கொண்டதோடு தங்கள் கருத்துக்களை முன்வைத்தது இன்னொரு சிறப்பம்சம். இன்றைய வேலைப்பளு, மன அழுத்தம், பதற்றம் கூடிய பணிச்சூழல் குறித்தே பெரும்பான்மையான தோழர்களிடமிருந்து கருத்துக்கள் வெளிப்பட்டன. ஐந்து மண்டலக் கூட்டங்களிலும் வந்திருந்த தோழர்களின் கருத்துக்களை தொகுத்து அதன் அடிப்படையில் நமது செயற்குழுக்கள் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும்.
Courtesy meeting with our new Chairman:
பாண்டியன் கிராம வங்கியின் புதிய சேர்மனாக திரு.சேவியர் திலகராஜ் அவர்கள் பொறுப்பேற்று இருக்கிறார். அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க நமது PGBEA, PGBOU சங்கங்களின் சார்பில் கேட்டு இருந்தோம். 17.5.2012 மாலை 4 மணிக்கு சந்திக்க வருமாறு நமக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
PGBEA சார்பில் தோழர்கள் சோலைமாணிக்கம், மாதவராஜ், சுப்பிரமணியன் ஆகியோரும், PGBOU சார்பில் தோழர்கள் போஸ்பாண்டியன், சங்கரலிங்கம், சாமுவேல் ஜோதிக்குமார், பெருமாள்சாமி ஆகியோர் சென்றிருந்தோம். புதிய சேர்மனுக்கு நமது வாழ்த்துக்களையும், வரவேற்பையும் தெரிவித்தோம். பாண்டியன் கிராம வங்கியில் சேர்மன்களாக பொறுப்பு வகித்த பலரும், அந்தக் காலத்தை இனிய நினைவுகளாக வைத்திருப்பதை புதிய சேர்மன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
இந்த வங்கியின் business, staff welfare இரண்டுமே தனக்குப் பிரதானம் என்பதை புதிய சேர்மன் தெரிவித்தார். நிச்சயம் வெளிப்படையாகவும், பாரபட்சமில்லாமலும் இருப்பேன் என்று நம்மிடம் உறுதியளித்தார். நாம் அதை வரவேற்றதோடு, அதுவே இந்த வங்கியின் பல பிரச்சினைகளை தீர்த்துவிடும் என நம் கருத்தை வெளிப்படுத்தினோம்.
நமது இரு சங்கங்களின் சார்பில் பல முக்கிய பிரச்சினைகள் முன்வைத்திருப்பதை சுட்டிக்காட்டி, அவைகள் அனைத்தையும் இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் பேச முடியாவிட்டாலும், சில அடிப்படையான பிரச்சினைகளை தெரிவிக்க விரும்புவதாகச் சொல்லி, நம் தரப்பில் அவற்றை முன்வைத்தோம்.
1. இந்த வங்கியில் ஊழியர்களிடமும், அலுவலர்களிடம் வேலை வாங்குவதில் எந்த விதிகளும் பின்பற்றுவதில்லை. ஆனால் சலுகைகள் வழங்குவதில் மட்டும் விதிகளையும், கடுமையான நிர்ப்பந்தங்களையும் நிர்வாகம் பின்பற்றுகிறது என்பதை சுட்டிக்காட்டினோம். உதாரணமாக பல கிளைகளில் மெஸஞ்சர்கள் கிடையாது. அந்தக் கிளைகளில் கிளரிக்கலாக பணிபுரிபவர்கள் அப்ரைசர்களையோ, தற்காலிக ஊழியர்களையோத்தான் FUndsக்கு அழைத்துச் செல்கிறார்கள். இங்கே நிர்வாகம் விதிகளை கண்டும் காணாததும் போல இருக்கிறது. அதே நேரம் இங்கு ஊழியர்களும், அலுவலர்களும் deputation சென்றால் இடையில் வரும் holidaysக்கு halting allowance வழங்குவதில்லை.
2. இங்கு முறையான transfer policy இல்லை. பாரபட்சங்களும், பழிவாங்கல்களும் நீடிக்கின்றன. இருதரப்பு ஒப்பந்தத்தில் உள்ளது போல், transfer policy ஒன்று வேண்டும்.
3. கடுமையான பணி நெருக்கடியும், ஆள் பற்றாக்குறையும் நிலவுகிறது. பணிச்சூழலை மேம்படுத்த வேண்டும்.
4. பணி ஓய்வு பெறுகிறவர்களிடம் நிர்வாகம் இரக்கமில்லாமல் நடந்துகொள்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே, சரிசெய்ய வேண்டியவைகளை தெரியப்படுத்தி, பணி ஓய்வுக்காலம் சுமூகமாகவும், நிம்மதியாகவும் இருக்க நிர்வாகத்தரப்பில் ஏற்பாடுகள் இல்லை. ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தெரியப்படுத்தி வெறுங்கையோடு அனுப்புகிறது.
5.கடந்த சில வருடங்களாக, நிர்வாகத்தரப்பில் ஏராளமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நியாயமான முறையில் விரைந்து முடிப்பது, வங்கியில் ஒரு புதிய சூழலையும், இங்கு பணிபுரிபவர்களின் மனோநிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
நாம் சொன்னவைகளை, அமைதியாகவும் உன்னிப்பாகவும் புதிய சேர்மன் அவர்கள் கேட்டுக்கொண்டார். அவைகள் குறித்து இரு பொதுமேலாளர்களிடமும் அபிப்பிராயங்களை அறிந்துகொண்டார். News paper allowance, overtime allowance குறித்து ஸ்பான்ஸர் வங்கியில் உடனடியாக தொடர்பு கொண்டு முடிக்க அறிவுறுத்தினார். TA மற்றும், Halting allowance நம் கையில்தானே இருக்கிறது என்றவர், “இனி holidayக்களிலும் halting allowance வழங்கப்படும்” என்றார். இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். நாம் நமது சந்தோஷத்தை அவரிடம் பகிர்ந்துகொண்டோம். மிக நீண்ட நாள் கோரிக்கை, நமது தொடர்ந்த முயற்சியாலும், நமது இயக்கத்தாலும் இங்கு சாத்தியமாகி இருக்கிறது. அதற்கு சேர்மனும் இரு பொதுமேலாளர்களும் காட்டிய இணக்கமான அணுகுமுறையும் முக்கியமானது.
பேச்சுவார்த்தையின் போது, உடனடியாக இந்த வங்கிக்கு 420 பேர் புதிதாக பணி நியமனம் செய்ய வேண்டும் என தான் திட்டமிட்டு இருந்ததாகவும், மத்திய அரசின் சமீபத்திய முடிவு அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதையும் தெரிவித்தார். Per staff profit 5 லட்சத்துக்கு மேல் இருந்தால்தான் நாம் விரும்பியபடி புதிய பணி நியமனம் செய்துகொள்ளலாம் என மத்திய அரசில் இருந்து வந்திருக்கும் தகவலைச் சுட்டிக்காட்டினார். Profitஐ அதிகரிக்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து loans, recovery குறித்த நமது யோசனைகளை தெரிவித்திருக்கிறோம். அவைகளை வரவேற்ற சேர்மன், பொதுமேலாளர்களிடம் விவாதித்தார். அதுகுறித்து பரிசீலனைகள் செய்வதாகவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை சுமூகமாகவும், நல்ல தொடக்கமாகவும் இருந்தது. நமது கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசவேண்டி இருப்பதைச் சொன்னோம். பேச்சுவார்த்தை மூலமாக நாம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என சேர்மன் தெரிவித்தார். நாமும் அதையே விரும்புவதாக கூறி அவரிடமிருந்து விடை பெற்றோம்.
Deputation to Sponsor bank:
ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து கிராம வங்கிகளுக்கும், கிராம வங்கிகளிலிருந்து ஸ்பான்ஸர் வங்கிக்கும் ஆபிஸர்களை டெபுடேஷன் அனுப்புவது என வங்கித்துறை முடிவு செய்திருக்கிறது. அதனை மே 2012க்குள் முடிவு செய்திடுமாறு கிரம வங்கி நிர்வாகங்களை விரைவுபடுத்துகிறது. தொழில்நுட்பம் மற்றும் நவீன வங்கிப்பணிகளில் கிராம வங்கி அலுவலர்கள் நிபுணத்துவம் பெறுவதற்கு இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது. நமது வங்கியிலிருந்தும் சில ஆபிஸர்களை ஐ.ஓ.பிக்கு டெபுடேஷன் அனுப்ப நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. நம்மைப் பொறுத்த வரையில், நமது அகில இந்திய சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, இந்த டெபுடேஷனை எதிர்க்கிறோம். இது நமது பிரத்யேகமான, சுயேச்சையான தன்மையினை பாதிக்கும் என்றும், கிராம வங்கிகள், ஸ்பான்ஸர் வங்கிகளின் காலனிகளாகவும், வால்களாகவும் மாறிவிடக்கூடும் எனவும் எச்சரிக்கிறோம்.
ஜுன் 8ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம்:
நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் அறைகூவலை ஏற்று, டெல்லி தர்ணாவுக்கு அடுத்தக் கட்டமாக, ஜுன் 8 தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டு இருக்கிறது. மண்டலக் கூட்டங்களில் வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவம் விளக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் phamplets மற்றும் posters கிளைகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஜுன் 8ம் தேதி மதுரையில், ஒருநாள் கருத்தரங்கம் ஏற்படு செய்திருக்கிறோம். தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், பொருளதார சிந்தனையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைப்பர்கள்.
தோழர்களே!
இந்த வேலைநிறுத்தம் நம் ஜீவாதாரப் பிரச்சினையான பென்ஷனுக்கானது. நாடு முழுவதும் எதிரொலிக்கும் கிராம வங்கி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் அரசுக்கு மேலும் அழுத்தத்தை உருவாக்கும். நமக்கு மேலும் ஆதரவு சக்திகளை ஏற்படுத்தும். அதுதான் அரசிடமிருந்து பென்ஷனுக்கான அறிவிப்பை வெளியிடச் செய்யும். நீதிமன்றம் முலம் வெற்றி பெற்று, பேச்சுவார்த்தைகளின் முலம் அரசை சம்மதிக்க வைத்தது. பாராளுமன்றம் மூலம் நெருக்கடிகளை உருவாக்கியது என நீண்ட நமது முயற்சியில், இந்த வேலை நிறுத்தம் இறுதிக்கட்ட தாக்குதல்! வேலை நிறுத்தத்தின் வெற்றியே, பென்ஷன் எனும் கோரிக்கையின் வெற்றி. நாம் அனைவரும் பங்கேற்போம். நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் பங்கேற்கச் செய்வோம். வெற்றி நமதே!!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!