அருமைத் தோழர்களே!
வணக்கம்.
சென்ற இரண்டு மூன்று வாரங்களுமே சங்கத்தின் நாட்குறிப்புகளில் முக்கியமானவையாகவும், இயக்கங்கள் நிறைந்ததாகவும் இருந்திருக்கின்றன. நமது சங்க அலுவலகம் தொடர்ந்து செயல்படுகிற இடமாக பரிணமித்திருக்கிறது.
JUNE 8th ALL India Strike:
ஜூன் 8 ம் தேதி நமது வேலைநிறுத்தம் மிகுந்த எழுச்சியோடும் உணர்வு பூர்வமாகவும் நடந்திருக்கிறது. தங்கள் எதிர்காலத்திற்கான வெளிச்சத்தை நோக்கி, தேசம் முழுவதும் AIRRBEA அறைகூவலின் பேரில் நடந்து முடிந்திருக்கிற இந்த வேலைநிறுத்தத்தில், பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கியில் உள்ள நமது இணைப்புச் சங்கங்கள் பங்கேற்றன.
பாண்டியன் கிராம வங்கியில் , இந்த வேலைநிறுத்த நாளன்று , பெரும்பாலான கிராம வங்கிகளில் வணிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மூன்றில் ஒரு பகுதி கிளைகளில் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை. பேருக்கு ஒரு அலுவலரையும், ஊழியரையும் வைத்து, கிளைகளை திறந்து, ஒப்புக்கு சில transaction செய்த கிளைகளின் எண்ணிக்கை பல.
PGBEA, PGBOU வின் உறுப்பினர்களில் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏறத்தாழ முழுமையாக கலந்து கொண்டு இருக்கின்றனர். Red salutes to comrades! வாழ்வதற்கான அர்த்தத்தை அறிந்தவர்கள் நாம். வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் வேண்டும் என கிராம வங்கி ஊழியர்கள் அனைவருக்குமாக போராடிய, மகத்தான மனிதர்களாய் நமது தோழர்கள் நிமிர்ந்து நிற்கும் நேரமிது.
இந்த வேலை நிறுத்த நாளன்று, மதுரையில் நடந்த கருத்தரங்கில், ஏறத்தாழ 200 தோழர்கள் பங்கேற்றனர். பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கியிலிருந்தும் தோழர்கள் வந்து கலந்துகொண்டனர். நமது மாநில அமைப்பின் தலைவர் தோழர். பிச்சைமுத்து தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தோழர். விக்கிரமன் (சி.ஐ.டி.யூ) அவர்களின் உரை உணர்ச்சிமிக்கதாகவும் , சிந்தனையைத் தூண்டிவிடுவதாகவும் அமைந்திருந்தது. வங்கித்துறையில் அரசு திட்டமிட்டுவரும் ஊழியர் விரோத, மக்கள் விரோத சீர்திருத்தங்களை எதிர்த்து சி.ஐ.டி.யூ அகில இந்திய அளவில் ஆற்றி வரும் பணிகளை சுட்டிக்காட்டினார். பல்வேறு தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி தொழிலாளிவர்க்கம் அணிதிரண்டு நிற்க வேண்டிய காலமிது என்பதை அழுத்தமாக எடுத்துரைத்தார்.
தோழர். சி.பி.கிருஷ்ணன் (BEFI) அவர்களும், தோழர். கிரிஜா (AIIEA) அவர்களும் நிதித்துறையில் நடந்து வரும் மாற்றங்களையும், அது ஊழியர்களுக்கு விரோதமானவையாக இருப்பதையும் சுட்டிக்காட்டினர். நாம் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டிய பாதையை வகுப்பதாய் அவர்களது கருத்துக்கள் அமைந்திருந்தன. இறுதியாக மாநில அமைப்பின் organising secretary தோழர்.டி.கிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.
Talks with Management on 14.06.2012:
14.6.2012 அன்று, சேர்மனோடு பேச்சுவார்த்தை நடந்தது. நமது இரு சங்கங்களும் தனித்தனியாகவே பேச்சுவார்த்தை நடத்தின. PGBEA சார்பில் தோழர்கள் சோலைமாணிக்கம், மாதவராஜ் ஆகியோரும் PGBOU சார்பில் தோழர்கள் போஸ்பாண்டியன், சங்கரலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஏற்கனவே வங்கி நிர்வாகத்துக்கு 10.5.2012 அன்று கொடுத்திருந்த memorandum அடிப்படையில் நமது தரப்பை முன்வைத்தோம்.
1. Working atmoshphere:
நம் தரப்பு: மகிழ்வுடன் கூடிய மலர்முக சேவை என்பது நமது வங்கியின் அடையாளம். இப்போது அது இல்லை என்பதே வருத்தமான ஒரு யதார்த்தம். கிளைகளில் ஆள் பற்றாக்குறை, infrastructure இல்லாதது, குவியும் புதிய புதிய வேலைகள் எல்லாம் மன அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றன. கிளைகள் ஒரு tension free zone ஆக மாற்றப்பட வேண்டும். அதுதான் வங்கியின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். இது ஒரு demand அல்ல. ஒரு process. ஓரிரு நாட்களில் முடிக்கக் கூடியதும் அல்ல. காலம் ஆகலாம். அதற்கு சில தெளிவான வரையறைகளும், திட்டமிடுதல்களும், ஒழுங்குபடுத்துதல்களும் அவசியமாகிறது. இதனை நிர்வாகமும், சங்கங்கங்களும் சேர்ந்துதான் உருவாக்க முடியும். அதற்கு நிர்வாகம் முதலில் தயாராக வேண்டும். இப்போது பல கிளைகளுக்கு புதிய ஜெனரேட்டர் வந்திருக்கின்றன. ஆனால் மண்ணென்ணெய் இல்லை. Solar system மூலம் மின் இணைப்புக்கு முயற்சிக்கலாம்.
நிர்வாகத் தரப்பு: இந்த யோசனைகளில் எந்த மாறுபட்ட கருத்தும் தங்களுக்கு இல்லை. நாம் எல்லோரும் சேர்ந்து இதனைச் செய்வோம் என்பதை வரவேற்கிறோம். ஆரம்பக்கட்டமாக இரண்டு மூன்று கிளைகளுக்கு solar system முயற்சித்துப் பார்ப்போம்.
2. Wages to sweepers:
நம் தரப்பு: கிளைகளை சுத்தம் செய்யும் sweeperகளுக்கு இன்னும் மாதம் முன்னூறு அல்லது நானூறு ருபாய்தான் கொடுக்கப்படுகிறது. இது மிகக் குறைவு. அவர்களுக்கு தினக்கூலியாக குறைந்தது ரூ.40 இருக்க வேண்டும்.
நிர்வாகத் தரப்பு: நிச்சயம் கூட்டித் தருகிறோம்.
3. Wages to Temporary employees:
நம் தரப்பு: Temporary employeesக்கு தினக்கூலியாக ரூ. 100லிருந்து 125 வரை இப்போது கொடுக்கப்படுகிறது. இதுவும் மிகக் குறைவு. அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.400/- அல்லது மத்திய அரசு அறிவித்திருக்கும் குறைந்த பட்ச ஊதியத்தையாவது நிர்ணயம் செய்ய வேண்டும்.
நிர்வாகத் தரப்பு: அடுத்தக் கட்டமாக இதனை நிறைவேற்றுகிறோம்.
4.Pay Protection to Ex-Servicemen:
நம் தரப்பு: வங்கியில் ஒரு ex-serviceman சேர்ந்து நான்கு வருடங்களாகியும், இன்னும் அவருக்கு மத்திய அரசு விதிகளின்படி நிர்ணயிக்க வேண்டிய ஊதியம் நிர்ணயிக்கப்படாததற்கு நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டும். Exservicemen appointment orderலேயே “you will not be confirmed in the service of the bank until the verification report is received from the authorities" என்று தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. இதன் பிரகாரம் exserviceman நமது வங்கியில் confirmம் செய்யப்பட்டுவிட்டார். இப்போது அவருக்கு pay fixation செய்வதற்கு verification from concerned authorities என நிர்வாகம் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறது. இதை நாம் எப்படி புரிந்துகொள்வது. இதற்கு இடையில் PADக்கு, இந்த மூன்று வருடங்களில் பல கடிதங்கள் அனுப்புகிறார். எதற்கும் பதில் கிடையாது. இதை எப்படி புரிந்துகொள்வது? மேலும் PAD இப்போது கேட்கும் Discharge certificate மற்றும் Last pay drawn certificate ஐயும் குறைந்தது ஐந்து முறையாவது சம்பந்தப்பட்ட exserviceman அனுப்பியிருக்கிறார். இப்போது மீண்டும் அந்த documentsகேட்கப்படுகிறது. இதை எப்படி நாம் புரிந்துகொள்வது? ஊழியர்கள் நலனில் இந்த வங்கி காட்டும் அசாதாரண காலதாமதத்திற்கும், அக்கறையின்மைக்கும் Ex-servicemen pay fitment ஒரு உதாரணமாக இருக்கிறது. தெளிவற்ற விதிகளுக்கும், தேவையற்ற நடைமுறைகளுக்கும் இடையே ஊழியர்கள் நலன் இங்கு அல்லாடுகிறது.
நிர்வாகத் தரப்பு: இது உண்மையிலேயே மிக மோசமான நிலைமைதான். வருத்தப்பட வேண்டிய விஷயம். சிறப்புக்கவனங்கள் எடுத்து மிகவிரைவில் Ex-servicemen pay fitment நிறைவேற்றப்படும்.
5. Halting Allowance for Holidays:
நம் தரப்பு: லீவு நாட்களுக்கும் சேர்த்து halting allowance கொடுக்க வேண்டும் என courtesy meetingன் போது சேர்மன் ஒப்புக்கொண்ட பிறகும் சில Regional Managerகள் லீவு நாட்களுக்கு halting allowance கொடுக்காமல் வெட்டுகிறார்கள். அதனை முறைப்படுத்த வேண்டும்.
நிர்வாகத் தரப்பு: உடனடியாக Regional Managerகளுக்குத் தெரிவிக்கிறோம். சொன்னபடி லீவு நாட்களுக்கும் Halting allowance கொடுக்கப்படும்.
6. Allowances and Benefits on par with Sponsor Bank:
நம் தரப்பு: Newspaper Allowance to all, Petrol expenses reimbursement, Enhancement of Lodge expenses reimbursement for officers, Enhancement of House building Loan ஆகியவை ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளது போல் வழங்கப்பட வேண்டும்.
நிர்வாகத் தரப்பு: Newspaper allowance to all ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட்டுவிடும். Car loan, Housing Loan மிக விரைவில் உயர்த்தப்படும். மற்றவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
7.Computer operating Allowance to 2008 batch new clericals:
நம்தரப்பு: 2008ம் வருடம் வங்கியில் புதிதாக பணிக்குச் சேர்ந்த எழுத்தர்களுக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் அலவன்சு வழங்கப்படவில்லை. நாங்கள் கேட்டதற்கு, probationery periodல் கொடுக்க ஸ்பான்ஸர் வங்கியில் அனுமதிக்கவில்லை எனக் கூறினார்கள். ஆனால் பல்லவன் கிராம வங்கியில் கொடுத்தார்கள். இப்போது 2011ல் பணிக்குச் சேர்ந்த எழுத்தர்களுக்கு probationery periodல் நமது வங்கியிலேயே கொடுக்கிறார்கள். எனவே 2008ம் வருடம் பணிக்குச் சேர்ந்த எழுத்தர்களுக்கும் முதல் 12 மாதங்களுக்குரிய கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் அலவன்சு கொடுக்கப்பட வேண்டும்.
நிர்வாகத் தரப்பு: பல்லவன் கிராம வங்கி, ஸ்பான்ஸர் வங்கியில் இதுகுறித்து ஆராய்ந்துவிட்டு, முடிவு சொல்கிறோம்.
8. Transfer Policy:
நம் தரப்பு : இந்த வங்கியில் இப்போது டிரான்ஸ்பர் பாலிசி என்று ஒன்று இல்லை. இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஒரு முறையான டிரான்ஸ்பர் பாலிசி வேண்டும்.
நிர்வாகத் தரப்பு: டிரான்ஸ்பர் பாலிசி வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதற்கான வழிமுறைகளை ஆராய்வோம்.
9. Mounting Disciplinary Actions:
நம் தரப்பு: கடந்த சில ஆண்டுகளில் நகைக்கடன் சம்பந்தமாக மிக அதிக அளவில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. சில ஒழுங்கு நடவடிக்கைகள், வருடக்கனக்கில் முடிக்கப்படாமல் இருக்கின்றன. ஒரு கால வரையறை செய்து அவைகளை விரைவாகவும், நியாயமாகவும் முடித்துத் தர வேண்டும்.
நிர்வாகத்தரப்பு: ஒழுங்கு நடவடிக்கைகள் ஸ்பான்ஸர் வங்கியின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்படுகின்றன. நடத்தப்படுகின்றன. இருந்தாலும், இந்த யோசனைகள் குறித்து ஆராய்கிறோம்.
10. Torchure to Retiring Staff:
நம் தரப்பு: ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்தில் கொடுக்கப்பட்ட லோன்களில் சரிசெய்ய வேண்டிய விஷயங்களை நிர்வாகம் 6 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நிர்வாகம் ஒப்புக்கொள்வதோடு சரி. ஆனால் நிறைவேற்றுவதில்லை. இந்த மாதம் ரிடையர் ஆகப்போகும் 4 அலுவலர்களுக்கு இன்று வரை எந்த அறிவுப்பும் நிர்வாகத்திடம் இருந்து வரவில்லை. இதற்குப் பிறகு தெரிவித்து, அதனை எப்படி அந்த அலுவலர்கள் சரிசெய்வார்கள். இதனைக் காரணம் காட்டி, அவர்கள் ஓய்வுகாலச் சலுகைகளில் நிர்வாகம் பிடித்தம் செய்யுமானால், நாங்கள் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவிப்போம்.
நிர்வாகத் தரப்பு: நிச்சயம் இனி சரி செய்கிறோம். செப்டம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெறுகிறவர்களுக்கு இப்போதே அவர்கள் சரிசெய்ய வேண்டிய விஷயங்களை அறிவித்து விடுகிறோம்.
11. Time-barred, a major threat to officers:
நம் தரப்பு: பல லோன்கள் RL வாங்க முடியாததால் Time-barred ஆகிவிடுகின்றன. அவைகளை write-off செய்யவோ, அவைகளின் மீது legal action எடுக்கவோ இங்கு மேலாளர்களுக்கு அனுமதி இல்லை. இங்குதான் நாம் நமது கோரிக்கையை வைக்கிறோம். RL வாங்க முடியாத லோன்கள் குறித்த நிலைமைகளை, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்தி விடுவார்கள். நிர்வாகம் அவைகளுக்கு waiver அளிக்க வேண்டும். அந்தப் பழியை அந்த அலுவலர் மீது சுமத்தி, அவருடைய ஓய்வுகாலச் சலுகைகளில் கை வைக்கக் கூடாது.
நிர்வாகத் தரப்பு: ஏன் இத்தனை வருடங்களாக இந்தப் பிரச்சினைக்கு இந்த வங்கியில் தீர்வு எட்டாமலேயே இருக்கிறது? இது குறித்து பரிசீலிக்கிறோம்.
12. Revamping of Head Office:
நம் தரப்பு : இதனை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஊழியர்களில், அலுவலர்களில் ஒருசிலரே வருடக்கணக்கில் தலைமையலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை முறைப்படுத்த வேண்டும்.
நிர்வாகத்தரப்பு: ஒப்புக்கொள்கிறோம். அதற்கான வழிகளை ஆராய்கிறோம்.
தோழர்களே, நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தைகளில் சில சாதகமான நிலைமைகள் ஏற்பட்டு இருக்கின்றன. சில விஷய்ங்களில் நமது முயற்சிகள் தொடர வேண்டி இருக்கின்றன. முதலில் ஒப்புக்கொண்ட விஷயங்களை நிர்வாகம் மேலும் காலதாமதமின்றி நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்.
Meeting for Retired Staff on 15.06.2012:
இந்த வங்கியிலிருந்து பணிபுரிந்து ஓய்வு பெற்ற நாளிலிருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறார்கள். மறக்கவே முடியாத நாட்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விடுகிறார்கள். பென்ஷன் விரைவில் கிடைக்க இருக்கிற இந்தக் காலக்கட்டத்தில், கிராம வங்கிகளில் ஓய்வு பெற்ற அனைவருக்குமான ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென நமது அகில இந்திய சங்கம் AIRRBEA அறைகூவல் விடுத்திருந்தது. அதையொட்டி பல மாநிலங்களிலும் AII India Regional Rural Bank Retired Staff Associationகளின் மாநில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாட்டிலும் அப்படியொரு அமைப்பை ஏற்படுத்த நாம் முயற்சிகள் மேற்கொண்டோம். 15.6.2012 அன்று 12 மணிக்கு கூட்டம் ஏற்பாடு செய்வதென திட்டமிட்டோம்.
அன்பு, நட்பு, தோழமை என எல்லா வார்த்தைகளின் அர்த்தங்களையும் தாண்டிய அற்புதமான வெளியில் சஞ்சரித்த தருணங்களால் நிரம்பிய நாள் இது. முப்பெத்தெட்டு தோழர்கள் கலந்துகொண்டனர். தோழர்.சுந்தர்சிங் எபனேசர், தான் ஏற்கனவே இப்படியொரு முயற்சியில் ஈடுபட்டதையும், பின் உடல்நலக்குறைவால் தொடரமுடியாமல் போனதையும் தெரிவித்தார். மிக மூத்த தோழர்களான டி.எஸ்.லஷ்மணன், சடகோபன், மார்க்கண்டன், துரைராஜ், முகம்மது இஸ்மாயில், முகம்மது மீரான், நடராஜன், சந்திரசேகரன், ஏ.எஸ்.முருகன் மற்றும் தொழிற்சங்கத்தலைவர்களாய் இருந்த தோழர்கள் புளுகாண்டி, சங்கரேஸ்வரன், பாலசுப்பிரமணியம் போன்றவர்களும் கலந்துகொண்டதும், இப்படியொரு சங்கம் தேவை என்று AIRRBEAவை வாழ்த்தியதும், நாம் இனி ஒன்றுபட்டு நிற்போம் என உறுதிபட தெரிவித்ததும் நெகிழ்வான நிகழ்ச்சியாக இருந்தது. தோழர்கள் வெங்கட்ராமன், கிருஷ்ணன், அண்ணாமலை ஆகியோரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
முன்னதாக, தோழர்.மாதவராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கடந்தகால நினைவுகளை மீட்டெடுத்து, அதில் இருந்த நெருக்கமான, பிரியமான வாழ்க்கையைத் தொட்டுப் பேசினார். நம்மிடையே கருத்து முரண்பாடுகள், விமர்சனங்கள் இருந்தபோதும் யாரிடமும் யாருக்கும் வெறுப்பு ஏற்பட்டதில்லை என்றபோது அனைவருமே கைதட்டி ஆரவாரித்தனர். நமது மூத்த தோழர்கள், இந்த வங்கியின் அறிவுச் செல்வம், அனுபவச் சொத்து என்பதை விளக்கினார். எல்லோருக்குள்ளும் ‘பாண்டியன் கிராம வங்கி’ என்பது ஒரு மந்திரச்சொல்லாக ஒலித்துக்கொண்டு இருந்தது, அதை ஓய்வு பெற்றதால் யாரும் இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் கூட்டம் என்று முடித்தார்.
தொடர்ந்து பேசிய, தோழர் போஸ்பாண்டியன் நமக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வாங்கிக் கொடுத்த AIRRBEAவின் முயற்சிகளை விளக்கி, இப்போது பென்ஷனை வென்றெடுக்க நடக்கும் இயக்கங்களை எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் AIRRBEA வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றிருப்பது, அரசு பென்ஷனுக்கான நிதியத்தை ஏற்படுத்த யோசனைகள் தெரிவித்தது, அதில் ஏர்படும் காலதாமதம், அரசுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்க சமீபத்தில் நடத்திய ஜூன் 8ம் தேதி வேலைநிறுத்தம் வரை என அனைத்தையும் மிக விரிவாகப் பேசினார். இடையிடையே மூத்த தோழர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
வந்திருந்த தோழர்களை கலந்தாலோசித்து, சங்கம் அமைப்பதற்கான ஒரு adhoc கமிட்டியை இப்போது அமைப்பது எனவும், உறுப்பினர்கள் சேர்ப்பு, by-laws ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து முடிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. விரைவில் ஓய்வு பெற்ற தோழர்களுக்கான மாநாட்டை நடத்தி, அதில் முறைப்படி ஒரு கமிட்டி தேர்ந்தெடுத்து, நமது நடவடிக்கைகளை வரையறை செய்வது எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட தோழர்கள் அடங்கிய adhoc committee அமைக்கப்பட்டுள்ளது.
1. தோழர்.சந்திரசேகர் (convenor)
2.தோழர்.சங்கரேஸ்வரன் (co-convenor)
3.தோழர்.செல்லக்கனி (treasurer)
4.தோழர். புளுகாண்டி
5.தோழர்.துரைராஜ்
6.தோழர்.நடராஜன்
7.தோழர்.பாலசுப்பிரமணியன்
8.தோழர்.சுந்தர்சிங் எபனேசர்
9.தோழர்.முகம்மது மீரான்
10.தோழர்.சுப்புராஜ்
11.தோழர்.என்.டி.கோமதிநாயகம்
12.தோழர்.அண்ணாமலை
இந்தக் கமிட்டியின் advisory committeeயாக, PGBEA, PGBOU சங்கங்களின் தலைவர்களும், பொதுச்செயலாளர்களும் இருந்து ஒத்துழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
Free coaching class to Dalit youths and staff relatives for IBPS written exam for RRBs:
கிராம வங்கிகளில் office Assistants மற்றும் Officers பணிநியமனத்திற்காக வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் IBPS எழுத்துத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. Onlineல் apply செய்யக் கடைசி நாள் 25.6.2012. இதுகுறித்து ஏற்கனவே நமது வெப்சைட்டில் செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம்.
இந்த எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வெளியிட்டு, தேர்வு எழுதிய எல்லோருக்கும் Mark sheetஐ IBPS செப்டம்பர் இறுதிக்குள் கொடுத்துவிடும். அதற்குப் பிறகு பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி நிர்வாகங்கள் தங்களுக்குத் தேவையான பணியிடங்களைக் குறிப்பிட்டு விளம்பரங்கள் செய்வார்கள். அதில் IBPS நடத்திய எழுத்துத் தேர்வில் எத்தனை சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடுவார்கள். அதன் அடிப்படையில் விண்னப்பங்கள் பெற்று, அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, புதிய பணிநியமனங்கள் கிராம வங்கிகளில் நடைபெற இருக்கின்றன.
போட்டோ, கையெழுத்து முதற்கொண்டு அனைத்தையும் scan செய்து online application லேயே அனுப்ப வேண்டும். மேலும் credit/debit cardகள் மூலமும் fees செலுத்தலாம். ஓரளவுக்கு இதைப் பற்றித் தெரிந்த, நகரம் சார்ந்த மக்களுக்கு இந்த முறைகள் சாத்தியமாகிவிடும். ஆனால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கும், அதிலும் குறிப்பாக தலித் மக்களுக்கும் இந்த முறைகள் மிகப் புதியவையாகவும், அதற்கான வாய்ப்பும் வசதியும் இல்லாமலும் இருக்கும்.
அவர்களுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தவும், onlineல் apply செய்ய உதவவும், அவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கவும் ‘அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்’ கோவையில் 2009ல் துவங்கப்பட்டு, இன்று தமிழகமெங்கும் திருநெல்வேலி, மதுரை உட்பட 11 மையங்களில் செயல்பட்டு வருகிறது. இன்று அதன் மூலம் பல தலித் இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பெரும்பாலும் இந்த மையங்களை அகில இந்திய இன்சூரன்சு ஊழியர்கள் சங்கத்தின் தோழர்களே நடத்தி வருகின்றனர். சென்னையில் BEFI யும், மதுரையில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் இந்த காரியத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கிராம வங்கிகளில் நடைபெற இருக்கும் பணிநியமனங்களையொட்டி, PGBEAவும், PGBOUவும் இந்த இயக்கத்தில் இணைந்து விருதுநகரை மையமாக வைத்து ஒரு பயிற்சிமுகாம் நடத்தலாம் என யோசித்தோம். அதன் அடிப்படையில் 16.6.2012 அன்று மாலை 5 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் கல்வி மையத்தின் சார்பில் தோழர் கணேஷ் கோவையில் இருந்து வந்து கலந்துகொண்டார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் மூலம் இந்த பயிற்சிமுகாம் குறித்து தெரியப்படுத்துவது, கல்வித்தகுதியுள்ள தலித் இளைஞர்களை onlineல் apply செய்ய உதவுவது, விருதுநகரில் நமது சங்க அலுவலகத்தில் வைத்து பயிற்சிமுகாம் நடத்துவது எனவும் திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலித் இளைஞர்களோடு, நமது வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் சொந்தங்களுக்கும் இந்த பயிற்சியளிக்க வேண்டும் என்னும் நமது யோசனையையும் வந்திருந்தவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
ஜுலை 1ம் தேதி இந்த பயிற்சிமுகாம் ஆரம்பித்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நமது சங்க அலுவலகத்தில் வைத்து ஆக்ஸ்ட் இறுதிவரை எட்டு வாரங்கள் நடைபெறும். அதற்கென syllabus உடன் பாடங்கள் முறையாக நடத்தப்படும். நம் தோழர்கள் தாங்கள் பணிபுரியும் கிளைகளில் வரும் வாடிக்கையாளர்களிடம் இதுகுறித்துத் தெரிவியுங்கள். இன்னும் apply செய்ய ஒரு வாரமே இருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்தவர்களை online apply செய்யச் சொல்லுங்கள். தாங்களும் அதற்கு உதவுங்கள். அதுகுறித்து விளக்கங்கள் வேண்டியிருந்தால் இந்த தொலைபேசி எண்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். ( தோழர் பவளவண்ணன் - 9965690611, தோழர். ஞானகுரு - 9442312040, தோழர்.பரமசிவம் - 9486026779, தோழர். ராஜாராம் - 9443731165)
நம் வங்கியில் பணிபுரியும் தோழர்களின் சொந்தங்கள் பயிற்சி பெற விரும்பினால், தோழர்கள் போஸ்பாண்டியன் மற்றும் மாதவராஜ் ஆகியோரோடு தொடர்பு கொள்ளுங்கள்.
தோழமையுடன்
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!