இன்னும் உணர்வுகளின் அதிர்வுகளிலிருந்து விடுபடமுடியவில்லை. அன்பு, நட்பு, தோழமை என எல்லா வார்த்தைகளின் அர்த்தங்களையும் தாண்டிய அற்புதமான வெளியில் சஞ்சரித்த தருணங்களால் நிரம்பிய நாள் இது. குளமாகிய கண்களும், மலர்ந்த முகங்களையும் சுமந்த எவ்வளவு அழகான நாள் இது!
15.6.2012!
சர்வதேச தந்தையர் தினம்!!
எவ்வளவு பொருத்தமான நாள் இது!!!
பாண்டியன் கிராம வங்கியில் நம்மோடு பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்தவர்கள் பலரையும் சந்தித்துப் பேசமுடிந்த இந்த நாள் வாழ்வின் சந்தோஷமான, நெகிழ்வான நாட்களில் ஒன்றாக அமைந்திருந்தது!
பென்ஷன் விரைவில் கிடைக்க இருக்கிற இந்தக் காலக்கட்டத்தில், கிராம வங்கிகளில் ஓய்வு பெற்ற அனைவருக்குமான ஒரு அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென நமது அகில இந்திய சங்கம் AIRRBEA அறைகூவல் விடுத்திருந்தது. அதையொட்டி பல மாநிலங்களிலும் AII India Regional Rural Bank Retired Staff Associationகளின் மாநில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாட்டிலும் அப்படியொரு அமைப்பை ஏற்படுத்த நாம் முயற்சிகள் மேற்கொண்டோம். 15.6.2012 அன்று 12 மணிக்கு கூட்டம் ஏற்பாடு செய்வதென திட்டமிட்டோம்.
நமது வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் பட்டியலோ, தொடர்பு முகவரிகளோ நமது நிர்வாகத்திடம் இல்லை. ஓய்வு பெற்ற நாளிலிருந்து அவர்கள் வங்கியிலிருந்து துண்டிக்கப்பட்டு இருந்தார்கள். பணியில் இருக்கும் நம் தோழர்களிடம், அந்தந்தப் பகுதியில் இருக்கும் ஓய்வு பெற்ற தோழர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை சேகரிக்க ஆரம்பித்தோம். தொலைபேசியில் பேசி, அவர்களின் முகவரிகளை சேகரிக்க ஆரம்பித்தோம். தொடர்ந்த நான்கைந்து நாட்களுக்குள் நம்மிடம் 75க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தோழர்களின் பட்டியலும், தொடர்பு முகவரிகளும் இருந்தன. அவர்களிடம் AIRRBEAவின் வழிகாட்டுதலின்படி, இப்படி ஒரு சங்கம் அமைக்க வேண்டும், அதற்கென ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம், தாங்கள் அவசியம் வரவேண்டும்’ என அன்போடு அழைத்தோம். பெரும்பாலும் அனைவருமே மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் தங்கள் சம்மதங்களைத் தெரிவித்தனர். தோழர்கள் உமர் சலீம், சங்கரசுப்பு, ரவீந்திரன், முருகையா, N.T.கோமதிநாயகம், கருப்பன்செட்டி, முனியாண்டி, எல்.சொக்கலிங்கம் போன்றோர் இந்த முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருந்தாலும், அடுத்தக் கூட்டங்களில் அவசியம் கலந்துகொள்வதாகவும், கூட்டத்துக்கு தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ‘அனைவரையும் பார்க்க வேண்டும்’ என்கிற நெகிழ்வான, மனிதப் பிணைப்பே எல்லாவற்றுக்கும் அடிநாதமாக இருந்தது.
15.6.2012 காலை 11.30 மணிக்கு சங்க அலுவலகம் செல்லும்போது அருகே இருந்த டீக்கடையில் இருந்து தோழர் வெங்கட்ராமன், டிரைவர் K.E.பரமசிவம் கையசைத்தார்கள். சிறிது நேரத்தில் தோழர் காஜா முகம்மது வந்தார். அங்கிருந்து சங்க அலுவலகம் சென்றபோது, தோழர்கள் சடகோபன் மற்றும் மார்க்கண்டன் அவர்களும் ஏற்கனவே வந்திருந்தனர். தோழர்.முகம்மது இஸ்மாயில் அவர்களும், ஏ.எஸ்.முருகன் அவர்களும் ரெயிலில் வந்துவிட்டதாகவும், அழைத்துக்கொண்டு வருவதாகவும் தோழர்.சங்கரலிங்கம் செய்தி அனுப்பினார். அவர்களை எல்லாம் பார்த்து எவ்வளவு நாட்களாயிருந்தன. தோழர்கள் முகம்மது மீரான், நடராஜன், பாலசுப்பிரமணியம், கோமதிநாயகம், சகாதேவன், அமல்ராஜ், சுந்தர்சிங் எபனேசர் ஆகியோர் மொத்தமாய் திருநெல்வேலியிலிருந்து வர. தோழர்கள் தேன்ராஜ், துரைராஜ் கோவில்பட்டியிலிருந்து வந்தனர். அந்த இடம் முழுவதும் கலகலவென சந்தோஷமான குரல்களால் ததும்பி நின்றது. வார்த்தை பரிமாற்றங்களின் வழியே ஒரு பெருங்கதையை கேட்டுக்கொண்டு இருந்தது நமது சங்கக் கட்டிடம்.
ஒவ்வொரு தோழர்களாக வந்துகொண்டே இருந்தனர். தோழர் துரைராஜ் அவர்களும் தோழர்.T.S.லட்சுமணன் அவர்களும் சங்க அலுவலகத்துக்குள் வந்த போது மிகுந்த ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் ஏற்பட்டது. எல்லோரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொண்டு இருக்க நேரம் போவது தெரியவில்லை. பிறகு நமது சங்க அலுவலகத்துக்கு எதிரே அடர்ந்திருந்த வேப்ப மரத்தின் நிழலில், மதிய உணவருந்தினோம். மெல்ல வருடிய காற்றில் அனைவரிடமும் ஒரு சாவகாசமும், நிம்மதியும் வந்திருந்தது. தொலைத்த எதோவொன்றை கண்டெடுத்த உணர்வுதான் அது.
பிறகு சரியாக பிற்பகல் 3 மணிக்கு சங்க அலுவலகத்துக்குள் கூடி, பேச ஆரம்பித்தோம். தோழர்.மாதவராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கடந்தகால நினைவுகளை மீட்டெடுத்து, அதில் இருந்த நெருக்கமான, பிரியமான வாழ்க்கையைத் தொட்டுப் பேசினார். நம்மிடையே கருத்து முரண்பாடுகள், விமர்சனங்கள் இருந்தபோதும் யாரிடமும் யாருக்கும் வெறுப்பு ஏற்பட்டதில்லை என்றபோது அனைவருமே கைதட்டி ஆரவாரித்தனர். நமது மூத்த தோழர்கள், இந்த வங்கியின் அறிவுச் செல்வம், அனுபவச் சொத்து என்பதை விளக்கினார். எல்லோருக்குள்ளும் ‘பாண்டியன் கிராம வங்கி’ என்பது ஒரு மந்திரச்சொல்லாக ஒலித்துக்கொண்டு இருந்தது, அதை ஓய்வு பெற்றதால் யாரும் இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தக் கூட்டம் என்று முடித்தார்.
தொடர்ந்து பேசிய, தோழர் போஸ்பாண்டியன் நமக்கு ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வாங்கிக் கொடுத்த AIRRBEAவின் முயற்சிகளை விளக்கி, இப்போது பென்ஷனை வென்றெடுக்க நடக்கும் இயக்கங்களை எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் AIRRBEA வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றிருப்பது, அரசு பென்ஷனுக்கான நிதியத்தை ஏற்படுத்த யோசனைகள் தெரிவித்தது, அதில் ஏர்படும் காலதாமதம், அரசுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்க சமீபத்தில் நடத்திய ஜூன் 8ம் தேதி வேலைநிறுத்தம் வரை என அனைத்தையும் மிக விரிவாகப் பேசினார். இடையிடையே மூத்த தோழர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். இந்த சமயத்தில் தோழர்கள் சந்திரசேகரன், சங்கரேஸ்வரன், புளுகாண்டி ஆகியோர் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
அடுத்துப் பேசிய தோழர்.சுந்தர்சிங் எபனேசர், இதுபோன்ற ஒரு முயற்சியைத் தான் ஏற்கனவே தொடங்கியதையும், தனது உடல்நலக்குறைவால் அது நின்றுபோனதையும் நினைவுகூர்ந்தார். AIRRBEAவின் முயற்சிக்கு தந்து பாராட்டுதல்களைத் தெரிவித்து, நாம் அனைவரும் இதில் ஒன்றுபட்டு நிற்போம் என்றார். தொடர்ந்து தோழர்கள் பாலசுப்பிரமணியம், முகம்மது இஸ்மாயில், சந்திரசேகரன், T.S.லட்சுமணன், வெங்கட்ராமன், கிருஷ்ணன், மார்க்கண்டன், அண்ணாமலை, முகம்மது மீரான் ஆகியோர் பேசினார்கள். “நாங்க ரிடையர்தான் ஆகியிருக்கோம். செத்துப் போகவில்லை” , “எத்தனையோ வாடிக்கையாளர்களுக்கு அக்கவுண்ட் ஒபன் பண்ணிய எனக்கு, இப்போது தெரிந்த ஒருவருக்கு சேமிப்புக் கணக்குத் தொடங்க அறிமுகம் செய்யக்கூட முடியாமல் போய்விட்டது”, “நான் இருக்கும் இடம் அருகேதான் நமது வங்கியின் புதிய கிளை துவங்கினார்கள். எனக்கு யாரோ மூன்றாவது மனிதர்கள் சொல்கிறார்கள்” என வெளிப்பட்ட வார்த்தைகளுக்குள் இருந்த அவலமும், வலியும் எல்லோரையும் கலங்க வைத்தன. தங்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத நிர்வாகத்தின் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. Retired Staff Associationக்கு என்னென்ன பணிகள் எதிர்காலத்தின் இருக்கின்றன என்பதை அவர்களின் பேச்சுக்கள் சுட்டிக்காட்டின.
இறுதியாக பேசிய தோழர்.புளுகாண்டி அவர்கள், எல்லாவற்றையும் சுருக்கமாக தொகுத்தும், இப்படியொரு சங்கம் நமக்கு அவசியம் என்பதையும் விளக்கியும் பேசினார். பென்ஷனை முன்னிறுத்தி நாம் நகர வேண்டி இருப்பதையும், சங்க பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டு நிற்க வேண்டியதையும் வலியுறுத்தினார்.
வந்திருந்த தோழர்களை கலந்தாலோசித்து, சங்கம் அமைப்பதற்கான ஒரு adhoc கமிட்டி இப்போது அமைப்பது எனவும், உறுப்பினர்கள் சேர்ப்பு, by-laws ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து முடிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. விரைவில் ஓய்வு பெற்ற தோழர்களுக்கான மாநாட்டை நடத்தி, அதில் முறைப்படி ஒரு கமிட்டி தேர்ந்தெடுத்து, நமது நடவடிக்கைகளை வரையறை செய்வது எனவும் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட தோழர்கள் அடங்கிய adhoc committee அமைக்கப்பட்டுள்ளது.
1. தோழர்.சந்திரசேகர் (convenor)
2.தோழர்.சங்கரேஸ்வரன் (co-convenor)
3.தோழர்.செல்லக்கனி (treasurer)
4.தோழர். புளுகாண்டி
5.தோழர்.துரைராஜ்
6.தோழர்.நடராஜன்
7.தோழர்.பாலசுப்பிரமணியன்
8.தோழர்.சுந்தர்சிங் எபனேசர்
9.தோழர்.முகம்மது மீரான்
10.தோழர்.சுப்புராஜ்
11.தோழர்.என்.டி.கோமதிநாயகம்
12.தோழர்.அண்ணாமலை
இந்தக் கமிட்டியின் advisory committeeயாக, PGBEA, PGBOU சங்கங்களின் தலைவர்களும், பொதுச்செயலாளர்களும் இருந்து ஒத்துழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தப் புதிய சங்கம் முதலில் இயங்க ஆரம்பிப்பதற்கு PGBEA, PGBOU சார்பில் தலா ரூ.5000/- ஆக, ரூ.10,000/- அளிப்பது எனவும் பலத்த கரகோஷங்களுக்கு இடையே அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தோழர். T.S.லட்சுமணன் அவர்கள், தான் ஒப்போதே ரூ.500/- அளிப்பதாகச் சொல்ல, அடுத்து தோழர்.முகம்மது மீரான் தன் பங்காக ரூ.1000/- வழங்க, தொடர்ந்து பல தோழர்களும் ஆர்வத்துடன் தங்கள் பங்களிக்க, அங்கேயே ரு.5000/-த்திற்கும் மேலாக நிதி திரண்டது. எல்லாம் கண்கொள்ளாக் காட்சி!
இறுதியாக தோழர்.சி.நடராஜன் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அதற்குப் பிறகும், தோழர்கள் ஆற அமர உட்கார்ந்து பேசி, சந்தோஷத்துடன் கலைந்தனர், மீண்டும் சந்திப்பதற்காக.
நம் உறவுகளையும்ம் தொடர்புகளையும் தக்க வைத்துக்கொள்வதற்கான கனவு மெய்ப்பட ஆரம்பித்திருக்கிறது.
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்திருக்கிறது.
ஓய்வு பெற்ற தோழர் முருகையா அவர்கள் மெயிலில் அனுப்பிய வாழ்த்துச்செய்தி:
ReplyDelete”Dear Madavaraj, due to some urgent and un expected works i was unable to attend the meeting. Pl.convey my regards to all friends . My sincere payer for the successful conduct of the meeting. ”
A.Murugiah
ஓய்வு பெற்ற தோழர். D.கதிரேசன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியும், நன்கொடையும்!
ReplyDelete-----------------------------------------------
தோழர்கள் T.சங்கரலிங்கம் & J.மாதவராஜ் அவர்களுக்கு வணக்கம். நலம் நல்குவதும் அதுவே.
’இதனை இதனால் முடிப்பன் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்’ என்ற குறள்படி, பணிநிறைவு பெற்றவர்களின் நலம் வேண்டி, AIRRBEA எடுத்துள்ள நடவடிக்கைக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டுக்களையும் பதிவு செய்கிறேன்.
நம்மை (PGBEAN) நாமே நினைவுகூற நல் வாய்ப்பு. அமைப்பு அவசியமே.
பணிநிறைவு பெற்றவர்கள் என்பது நமது வங்கியின் வேர்களாகவும், விழுதுகளாகவும், வங்கி உயர, கோபுர கலசமாகவும் இருந்து, பணியாற்றியவர்கள் எனபதை நாம் அறிவோம்.
எனது சொந்த பணியால் 15th வர இயலவில்லை. தங்கள் முயற்சி வெற்றி பெற, சிறப்பாய் செயல்பட வாழ்த்தி ரூ.1000/- காசோலை அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொள்ளவும்.
நம்மவர் அனைவரிடமும் எனது வணக்கத்தையும், வாழ்த்தையும் கூறவும்.
என்னால் முடிந்த, இயன்ற பணியை உங்களோடு கலந்து செய்ய விரும்புகிறேன்.
அவ்வபோது தகவல் அனுப்பவும்.
நன்றி.
அன்புள்ள
த.கதிரேசன்
பல்லவன் கிராம வங்கி தோழர் பரிதிராஜா அனுப்பிய வாழ்த்துச் செய்தி:
ReplyDelete-----------------------------------
“attempt to form an association for retired comrades is defnitely a welcome move. it will bring tbem back on the stream. wishes!!!”
-parithiraja