15.10.12

PGBEA - PGBOU circular 16/2012 dt 15.10.2012


சுற்றறிக்கை: 16/2012         நாள்: 15.10.2012

அருமைத் தோழர்களே!


10.10.2012 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு நடைபெற்ற நமது இரு சங்கங்களின் தர்ணா, 1980களின் நினைவுகளை மீட்டெடுத்து, அந்த உணர்வுகளில் சஞ்சரிக்க வைத்த ஒரு எழுச்சிமிக்க அனுபவமாக இருந்தது. மிக நீண்ட பந்தலும், திரளான தோழர்களின் வருகையும், பங்கேற்பும் PGBEA, PGBOUவின் பாரம்பரியத்தையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்துவதாக இருந்தது.

நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எழுந்திருக்கும் நமது எதிர்ப்பியக்கத்தின் முக்கிய அத்தியாயங்களில் ஒன்று இந்த தர்ணா. இந்த எதிர்ப்பு உணர்வோடு உழியர்களும் அலுவலர்களும் திரண்டுகொண்டு இருக்கின்றனர் என்பதை அறிவித்த நிகழ்ச்சி இந்த தர்ணா. அதை சரியாக புரிந்துகொண்டு, நிர்வாகம் தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை எச்சரிக்கை செய்த களமே இந்த தர்ணா.

கோஷங்களின் ஆர்ப்பரிப்போடு,  PGBOU தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் தர்ணாவுக்கு தலைமை தாங்கினார். “பாண்டியன் கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்து,  44 நாட்கள் நடந்த  வீரஞ்செறிந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காக, நான் இந்த நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாள் இது. அதன் 25வது வருடம் இது.” என அவர் தர்ணாவை துவக்கியபோது எழுந்த ஆரவாரத்தில் தர்ணாப் பந்தல் களைகட்டியது.

AIRRBEA மாநில அமைப்பின் தலைவர் தோழர்.பிச்சைமுத்து, AIRRBEA மாநில அமைப்பின் organising secretary தோழர்.T.கிருஷ்ணன், PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ், PGBOU பொருளாளர் தோழர்.பெருமாள்சாமி, PGBEA துணைப்பொதுச்செயலாளர் தோழர்.அண்டோ கால்பட், PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் ஆகியோர் தர்ணாவின் நோக்கத்தையும், நமது போராட்டத்தையும் விளக்கிப் பேசினர். அதில் முக்கியமான விஷயங்கள்:

இந்த போராட்டம் ஒரு பக்கம் நிர்வாகத்தை சரிசெய்வதும், இன்னொரு பக்கம் நம்மை சரிசெய்வதுமாகும். நிர்வாகத்தை எதிர்ப்பதும், நம்மைத் தற்காத்துக் கொள்வதுமே இதன் அர்த்தம்.

இந்த நிர்வாகம் பணிநிலைமைகளையும், அவரவர் கடமைகளையும் இங்கு முறைப்படுத்தவில்லை. ஒவ்வொரு பதவியிலும் அவரவர்க்கான duties and responsibilities  குறித்து இதுவரை ஒரு சர்க்குலர் இல்லை.  Joint custodian குறித்தும், key handling குறித்தும் வரையறைகள் இல்லை. கடைநிலை ஊழியர்கள் இல்லாத  singleman கிளைகளில் fundsக்கு போவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை. Net connectivity போனால் என்ன செய்ய வேண்டும் என்று சர்க்குலர்கள் இல்லை. தலைமையலுவலகத்தை தொடர்பு கொண்டால், எதற்கும் முறையான பதில் இல்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மொத்தத்தில் எதிலும் ஒரு system என்பதே இல்லை. இந்த ஆக்கத்தில், துரிதமான வாடிக்கையாளர் சேவை என்றும் வங்கியின் பிஸினஸ் என்றும்  நிர்வாகம் கொடுக்கிற நெருக்கடிகளுக்கு மட்டும் குறைச்சலே இல்லை. அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளுக்குமான துவக்கப் புள்ளி  இதுதான். தன் பக்கம் இருக்கும் குறைகளையும், குளறுபடிகளையும் சரிசெய்யாமல், தன் காரியங்களை சாதித்துக்கொண்டு, நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பேரில் நம் தோழர்களை வங்கியை விட்டு வெளியேற்ற துடிக்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது.

இதனைக் கையாளுகிறவர்களாக AIVDயின்  சீனியர் மேனேஜர் மிஸ்டர் சங்கர நாராயணனும், Vigilance cellன்  முக்கிய அங்கமாக மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவும் இருக்கிறார்கள். Cental Vigilance commission, Chief Vigilance officer என்கிற இந்த ஏற்பாடுகள் ஏறத்தாழ இருபது வருடங்களாக இருக்கவே செய்கின்றன. வங்கித்துறையில் அவர்களின் தலையீடுகள் 2000ம் வருடத்திலிருந்தே அதிகமாகி இருக்கின்றன. ஆனால், நமது வங்கியில், மிஸ்டர் சங்கர நாராயணன் மற்றும் மிஸ்டர் ரூபன் விக்டோரியா காலத்தில்தான்,  ‘எல்லாவற்றுக்கும்  CVO' என்ற நிலைமையும், மிக அதிகமாக தோழர்களுக்கு capital punishment என்பதும் உருவாகியிருக்கின்றன. எனவே, அந்த இரு நபர்களை தலைமையலுவலகத்திலிருந்து மாற்றுவதிலிருந்து, நிர்வாகம் தனது பக்கம் மாற்றங்களைத் துவக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இந்த வங்கியில் அமைதியும், சகஜமான நிலைமையும் திரும்புவதற்கு அதுதான் வழிவகுக்கும்.

நம் தரப்பில் சரிசெய்ய வேண்டியது, இருக்கும் அரைகுறையான விதிகளையாவது முழுமையாக கடைப்பிடித்து பணிபுரிய வேண்டியதாக இருக்கிறது. அவரவர் பாஸ்வேர்டுகளை அவரவர் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள். கடைநிலை ஊழியர்கள் இல்லாத  singleman கிளைகளில் fundsக்கு  போவதென்றால், வட்டார அலுவலகங்களை தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகளை செய்யுங்கள். எவ்வளவு கூட்டமாயிருந்தாலும், மேலாளரும், கேஷியருமே நகை எடுக்கச் செல்லுங்கள். KYC norms இல்லாமல் Account openingஐ செய்யவே செய்யாதீர்கள். இதில் தவறு நடந்தால், அது எந்த நேரமும் நம் தலையின் மேல் தொங்கும் கத்தி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாம் விதிப்படி வேலை செய்ய ஆரம்பித்தால் இங்கு தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் உறுதியும், ஒற்றுமையும் வேண்டும்.

தலைவர்களின் பேச்சுக்கள் இந்த திசையில் இருந்தன. அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் தோழர்.சிவகுமார், பல்லவன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் தலைவர் தோழர்.சங்கரராமன், BEFI-TN இணைச்செயலாளர் தோழர்.செந்தூர் நாதன் ஆகியோர் தர்ணாவை வாழ்த்தி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். PGBOU பொதுச்செயலாளர் தோழர். சங்கரலிங்கம் நன்றி சொல்ல, தர்ணா  நிறைவடைந்தது.

இந்த தர்ணாவில் பங்கேற்ற நமது பெருமைக்குரிய தோழர்கள் ஒரு செய்தியை இந்த மொத்த வங்கிக்கும் தெரிவித்து இருக்கின்றனர். அது மிக முக்கியமானது. “இதோ, நாங்கள் இருக்கிறோம். இந்த வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல... ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க... நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை எதிர்த்து நிற்க.... நாங்கள் சமரசமின்றி போராடுவோம்” என்பதுதான் அது.

நமது அடுத்தக்கட்ட போராட்டம்:

தர்ணா முடிந்த பிறகு, நாம் பொது மேலாளரை சந்தித்து, நிலைமைகளை விளக்கினோம். நிர்வாகம், மிஸ்டர் சங்கர நாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் தலைமையலுவலகத்திலிருந்து மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தோம். சேர்மன் பம்பாயிலிருந்து வந்த பிறகு அவரிடம் நம் தரப்பை எடுத்துச் சொல்வதாகச் சொன்னார். நிர்வாகத் தரப்பில் மாற்றங்கள் இல்லாத பட்சத்தில் நமது போராட்டம் மேலும் தீவீரமடையும் எனபதையும் தெரிவித்து இருக்கிறோம்.

இந்த நிலையில், நமது அடுத்தக்கட்ட போராட்டமாக, மதுரை ஐ.ஓ.பி மண்டல அலுவலகத்தின் முன்பு 19.10.2012 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பட்டம் நடத்துவது எனவும், மண்டல மேலாளரிடம் மெமொரெண்டம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும்,  ராஜா அண்ணாமலை திருமண மஹாலில் (சினிப்ரியா தியேட்டர் அருகில்) நமது மதுரை மண்டல கூட்டம் நடைபெறும். தோழர்கள் திரளாக பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

தற்காலிக ஊழியர்களின் சிறப்பு மாநாடும், பேரணியும்:

23.9.2012 அன்று நடந்த நமது இரு சங்கங்களின் கூட்டுக்குழுவில் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கும் நமது முயற்சிகளை தீவிரப்படுத்துவது என விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பாக லேபர் கமிஷனர் முன்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. வரும் 19ம் தேதி மதுரையில் வைத்து அடுத்த பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், நமது வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களைத் திரட்டி நவம்பர் 4ம் தேதி அவர்களுக்கென ஒரு சிறப்பு மாநாடு நடத்துவது எனவும், மாநாட்டின் முடிவில் பேரணி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அரசியல் கட்சியைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் மாநில அளவிலான முக்கிய தொழிற்சங்கத் தலைவர்களை மாநாட்டிற்கும், பேரணிக்கும் அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு விட்டன.

இந்த வங்கியில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் முன்னிறுத்தி, சோர்வும் ஓய்வுமின்றி நமது பயணத்தைத் தொடருவோம். அது இங்கு நம்மால் மட்டுமே சாத்தியம்.




தோழமையுடன்



   
(M.சோலைமாணிக்கம்)                                   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                      பொதுச்செயலாளர் - PGBOU

1 comment:

  1. i could not participate in the struggle. but my heart is in that side itself. the united struggle for a cause will definitely bring the change and then the success. organisations and managemental structure remains the same allwhere, but the urge for the change from a place will overwhelm all places. workers unity zindabad!!!

    ReplyDelete

Comrades! Please share your views here!