சுற்றறிக்கை: 18/2012 நாள்: 28.12.2012
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
நமது சென்ற சர்க்குலர் 6.11.2012 அன்று வெளியிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும், இயக்கங்களையும் தோழர்களின் சிந்தனைக்கு இங்கு முன்வைக்கிறோம்.
20.12.2012 - வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்:
மக்களுக்கும், நாட்டுக்கும் எதிராக மத்திய அரசு மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் அந்நியர்கள் நுழைவதற்கு அனுமதி வழங்கியது. நாடெங்கிலும் மக்களின் எதிர்ப்புகள் எழுந்ததை அரசு பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இப்போது வங்கித்துறையை சீரழிக்கும் மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கித்துறையை கபளீகரம் செய்வதற்கும், சாதாரண மக்களிடமிருந்து வங்கிகளை அந்நியப்படுத்துவதற்குமான ஏற்பாடுகளை செய்ய துணிந்திருக்கிறது. பெருமுதலாளிகளுக்கு சவுகரியங்களையும், எளிய மக்களுக்கு தொடர்ந்து சங்கடங்களையும் தருவதே இந்த அரசின் நோக்கமாகவும் செயல்பாடாகவும் இருக்கிறது. வணிக வங்கியில் உள்ள அனைத்துச் சங்கங்களும் இதனை எதிர்த்து நாடு முழுவதும் டிசம்பர் 20ம் தேதி வேலைநிறுத்தம் செய்து, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். தேசப்பற்றும், நாட்டு மக்கள் நலனும் கொண்ட இந்த மகத்தான காரியத்தில் ஈடுபட்ட வணிக வங்கி ஊழியர்களையும், அலுவலர்களையும் நமது சங்கங்கள் நெஞ்சு நிமிர்த்தி, வீர வணக்கம் செய்கின்றன. கிராம வங்கியில் உள்ள சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லையென்றாலும் தங்களது தார்மீக ஆதரவைத் தெரிவித்துள்ளன.
தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள்:
தருமபுரியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் வேறு சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலையொட்டி, தலித் மக்கள் குடியிருப்புகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனிந்து நின்றது. முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும், இதனை கடுமையாக கண்டித்ததோடு தலித் மக்களுக்கு ஆதரவாகத் திரண்டன. அகில இந்திய இன்சூரன்சு ஊழியர்கள் சங்கம் 1,70,000/- பெறுமான நிவாரணப் பொருட்களை வழங்கினர். BEFI தமிழ்நாடு சார்பில் பொதுச்செயலாளர் தோழர். சி.பி.கிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார், சர்வேசன், எஸ்.வி.வேணுகோபாலன் போன்ற தலைவர்கள் அடங்கிய குழு, தாக்கப்பட்ட தலித் மக்கள் குடியிருப்புக்குச் சென்று, அவர்களுக்கு அதரவாக நின்று, அந்த மக்களுக்கு உடனடித் தேவைகளுக்கான பொருளாதார உதவி செய்தனர். அரசோ இன்று வரை அந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் வெறும் 5000/- ருபாய் கொடுத்துவிட்டு வாளாவிருக்கிறது. தீண்டாமையின் இந்தக் கோர நிகழ்வுகளை நமது இரு சங்கங்களும் கடுமையாகச் சாடுவதோடு, BFEIயின் அழைப்பினை ஏற்று தர்மபுரியில் தாக்கப்பட்ட தலித் மக்களுக்கு உதவும்போருட்டு நமது இரு சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ரூ.500/- நிதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நமது தோழர்களும் தங்களால் இயன்ற உதவியினை நிதியை, விருதுநகரில் உள்ள AIRRBEA- TN கணக்கு எண்: 5001 க்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்:
டெல்லியில், மருத்துவக் கல்லூரி மாணவியை ஒடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமை செய்து சிதைத்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதனை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் ஆவேசத்துடன் திரண்ட காட்சிகள் அரசையே ஸ்தம்பிக்க வைத்து இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் நாடு முழுவதும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஆணாதிக்க சமூகத்தின் மூர்க்கமும், பாலியல் ரீதியாக பெண்ணுடல் மீது உருவாக்கப்படும் கருத்தோட்ட வக்கிரங்களுமே இப்படி விபரீதங்கள் நிகழக் காரணமாகின்றன. இதற்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கடமையாகிறது. இதுபோன்ற வன்செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதோடு மட்டுமில்லாமல், இவை தொடர்ந்து நிகழாமலிருப்பதற்கான சூழல்களை உருவாக்க வேண்டியதும் அவசியமாகிறது.
16.11.2012 - நமது கண்டன ஆர்ப்பாட்டம்:
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை சரி செய்யும் நமது இயக்கத்தின் அடுத்தக் கட்டமாக 16.11.2012 அன்று, ஐ.ஓ.பி திருநெல்வேலி மண்டல அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
திரளான தோழர்கள் பங்கேற்ற கூட்டத்திற்கு தோழர்.பிச்சைமுத்து (president- AIRRBEA,TN) தலைமை தாங்கினார். தோழர்.மாதவராஜ் (Presidednt- PGBOU), தோழர். சங்கரலிங்கம் (Gen.Secretary - PGBOU) ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். தோழர்.ராஜாங்கம் (சி.ஐ.டி.யூ நெல்லை மாவட்டத் தலைவர் ), தோழர்.பார்த்தசாரதி (TNGEA), தோழர். முத்தையா (BEFI) ஆகியோர் ஆதரவளித்து, வாழ்த்திப் பேசினர்.
18.11.2012 - தற்காலிக ஊழியர்கள் மாநாடும் பேரணியும்:
PGBEAவின் அழைப்பை ஏற்று 170க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள், விருதுநகரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் காலை 10 மணிக்கு திரண்டு இருந்தனர்,
தற்காலிக ஊழியர்களின் இந்த பிரத்யேக மாநாட்டிற்கு PGBEA தலைவர் தோழர். மாதவராஜ் தலைமை தாங்கி, 2009ம் ஆண்டிலிருந்து, தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய, சங்கத்தின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைவு கூர்ந்தார். தற்காலிக ஊழியர்களுக்காக PGBEA மற்றும், PGBOU சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தது, தோழர்கள் காமராஜ், அண்டோ கால்பர்ட் சஸ்பென்ஷன் செய்யப்பட்டது, லேபர் கமிஷனர் முன்பு தொழில்தாவா தொடர்ந்தது, மதுரை ஹைகோர்ட்டில் தற்காலிக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதை எதிர்த்து ஸ்டே ஆர்டர் வாங்கியது, தொடர்ந்த முயற்சிகளின் பலனாக பாண்டியன் கிராம வங்கி நிர்வாகக் குழு தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய பரிந்துரைத்தது என வரலாற்றை தொகுத்தார். தற்காலிக ஊழியர்களும், எங்களைப் போல வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடும் நாள் தொலைவில் இல்லை என அவர் பேச்சை முடித்தபோது அரங்கம் முழுவதும் நம்பிக்கையின் எதிரொலிகளாய் கை தட்டி ஆரவாரம் எழுந்தன.
தொடர்ந்து, PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம், AIRRBEA மாநிலத் தலைவர் தோழர்.பிச்சைமுத்து, PGBOU பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கம் ஆகியோர் , கோரிக்கையை விளக்கியும், நம்பிக்கையளித்தும் பேசினர். சி.ஐ.டி.யூ தலைவர்களில் ஒருவரும், சி.பி.எம் கட்சியின் விருதுநகர் மாவட்டச்செயலாளருமான தோழர்.சேகர், 'நிரந்தர ஊழியர்களாக இருந்து கொண்டு, தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துப் போராட இடதுசாரிக் கருத்துக்கள் கொண்டவர்களால்தான் சாத்தியம், அவர்களால்தான் உங்கள் எதிர்காலத்திற்கு உத்திரவாதமளிக்க முடியும்" என்றார்.
திண்டுக்கல் தொகுதி எம்.எல்.ஏ, தோழர்.பாலபாரதி, "இதுபோன்று தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்காமல் வைத்திருப்பது பாண்டியன் கிராம வங்கியில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை அல்ல, மத்திய அரசின் கொள்கையே இதுதான்" என்பதை விளக்கினார். மேலும் " இன்று சகலதுறைகளிலும் இதுபோல தற்காலிக ஊழியர்களை வைத்து, வேலை வாங்குவது என்பது இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதற்கு எதிராக திரண்டு, பணிநிரந்தரம் செய்ய திரண்டு இருக்கும் தற்காலிக ஊழியர்களை வாழ்த்தினார். நமது ஒற்றுமையும், போராட்டக் குணமுமே நமக்கான விடியலைக் கொண்டு வரும். PGBEA சங்கம் அதை நிஜமாக்கும்" என நம்பிக்கையளித்தார்.
தொடர்ந்து மதிய உணவுக்குப் பின், தற்காலிக ஊழியர்களின் பேரணி ஆரம்பமாகியது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்திலிருந்து, கருமாதி மடம், தெப்பக்குளம், மார்க்கெட் வழியாகச் சென்று, தேசபந்து மைதானத்தில் ஆவேசமான கோஷங்களுடன் சென்றடைந்தது. BEFI சார்பில் தோழர்.மாரிக்கனியின் உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளுடன் பேரணி நிறைவடைந்தது. பாண்டியன் கிராம வங்கியின் தற்காலிக ஊழியர்களின் பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இது அவர்களின் எதிர்காலத்திற்காக ஏற்றப்பட்ட வெளிச்சம் என்பதே உண்மை.
29.11.2012 - ஒருநாள் உண்ணாவிரதம்:
ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில், ஈவிரக்கமின்றி ஊழியர்களையும், அலுவலர்களையும் வேட்டையாடுவதை கடுமையாக கண்டித்திருந்தோம். எந்த நியதிகளுமற்று, ஆதாரங்களுமற்று நிர்வாகம் நடத்தும் Enquiry proceedings ஐ, அம்பலப்படுத்தியிருந்தோம். பல என்கொயரி ஆபிஸர்களின் பாரபட்ச அணுகுமுறையை கடுமையாக தோலுரித்துக் காட்டியிருந்தோம். CVOவின் முறையற்ற தலையீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், வாயிற்கூட்டங்கள், தர்ணா, ஐ.ஓ.பி மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டங்கள் என நாம் நமது இயக்கத்தை வலுப்படுத்தியிருந்தோம். இதற்கிடையில் நிர்வாகத்தின் சில நடவடிக்கைகளில் சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டன. நல்லது நடக்கும் என நம்பினோம். ஆனால், 28.11.2012 அன்று தோழர்.சுந்தர வடிவேலுவை டிஸ்மிஸ் செய்தும், தோழர்.குருநாதனை compulsory retirement செய்தும் நிர்வாகம் தனது பிடிவாதத்தை நிலைநாட்டியது.
உடனடியாக நமது இரு சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து, தலைமையலுவலத்தில் 29.11.2012 உண்ணாவிரதம் நடத்துவது எனவும், செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் அதில் பங்கேற்பது எனவும் தீர்மானித்தோம். அதன் அடிப்படையில், அழுத்தமான உணர்வோடு நமது தோழர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மௌனமாக, அதே நேரத்தில் நமது எதிர்ப்பை மிக உணர்வுபூர்வமாக தெரிவித்த போராட்டம் இது.
4.12.2012 - அலுவலர் மாறுதல்கள்:
நிர்வாகம் 4.12.2012 அன்று அலுவலர்களுக்கான மாறுதல்கள் சிலவற்றை வெளியிட்டது. அதில் நமது தோழர்கள் சிலருக்கு சாதகமான மாறுதல்கள் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை. அதே நேரத்தில் நமது முக்கிய தோழர்கள் சிலருக்கு இன்னும் மாறுதல்கள் வழங்கப்படாமலும் இருக்கின்றன. நாம் தொடர்ந்து வலியுறுத்தி நிர்வாகத்திடம் பேசி வந்த போதிலும், நிர்வாகம் அவர்களுக்கு மாறுதல்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அவர்களுக்கும் சரி செய்து தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
8.12.12 - சேர்மனுடன் mass deputation:
ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த எதிர்ப்பையும், கொடுக்கப்பட்ட தண்டனைகளை மறு பரிசீலனை செய்யவும், நம் சங்கங்களின் சார்பில் முக்கிய தோழர்கள் மொத்தமாக சென்று நமது வங்கியின் சேர்மன் அவர்களிடம் வலியுறுத்துவது என சங்கத்தின் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 8.12.12 அன்று சேர்மனை சந்தித்துப் பேசினோம். தாங்கள் Positive ஆக இருப்பதாகவும், இருக்கும் நடைமுறைகளை எதிர்த்து தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதாகவும் நிர்வாகத்தின் நிலைபாடு இருந்தது.
அன்றைய தினமே, நமது இரு சங்கங்களின் சார்பில் சேர்மனிடம் promotions, Recruitment, இதர கோரிக்கைகள் குறித்தும் பேசினோம். மத்திய அரசில் இருந்து இன்னமும் புதிய பணி நியமனத்திற்காக ஒப்புதல் வரவில்லை, மிக விரைவில் ஒப்புதல் பெறுவதற்கான காரியங்களில் ஈடுபட்டு இருப்பதாகவும், ஜனவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் புதிய பணிநியமனத்திற்கான அறிவிப்புகள் வெளியிட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகச் சொன்னார்.
மின்வெட்டு மிகக் கடுமையாக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சூரிய ஓளியில் மின்சாரம் பெறுகிற சோலார் சிஸ்டத்திற்கு மத்திய அரசு ஊக்கம் அளித்தபோதிலும், அதுகுறித்து பரவலாக மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில், நாம் மக்களுக்கு சோலார் சிஸ்டம் வைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவது போல நமது staffகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இது மக்களிடையே சோலார் சிஸ்டம் குறித்து விரிவாகக் கொண்டு செல்ல உதவும் எனவும் தெரிவித்தோம். 'இது நல்ல விஷயமாக இருக்கிறதே' என சேர்மன் நம்மைப் பாராட்டியதோடு உடனடியாக அனைத்து staff களுக்கும் 50 % மானியத்துடன் சோலார் சிஸ்டத்திற்கு கடன் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். அதற்கான வழிமுறைகள் கிட்டத்தட்ட முடிவடைந்து மிக விரைவில் அதற்கான சுற்றறிக்கை வரவிருக்கிறது.
புதிய பணி நியமனங்கள் இல்லாமல் கிளைகள் திறக்கப்படுவது, இன்னும் சிரமங்களை ஏற்படுத்துகிறது என்பதை தெளிவுபடுத்தினோம். பாலக்குறிச்சி, அரியலூர் ஆகிய புதிய கிளைகளுக்குப் பிறகு மேலும் கிளைகள் திறக்கப்படாது, புதிய பணி நியமனத்திற்குப் பிறகே புதிய கிளைகள் திறக்கப்படும் என்றார்.
12.12.2012 - ALC முன்பு பேச்சு வார்த்தை:
தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்தக் கோரியும், 2008ம் ஆண்டு புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு Probation periodக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு வழங்கக் கோரியும் நாம் ALC முன்பு தொழில் தாவா ஏற்படுத்தி இருந்ததையும், அதுகுறித்த பேச்சு வார்த்தை விபரங்களை தோழர்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக 12.12.12 அன்று ALC முன்பு மதுரையில் பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகத்தின் சார்பில் பொதுமேலாளரும், PAD முதுநிலை மேலாளரும் கலந்து கொண்டனர். நமது சங்கத்தின் சார்பில் தோழர்கள் மாதவராஜ், சோலைமாணிக்கம், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்பத்தில் ALC முன்பு, நிர்வாகம் பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்களே பணிபுரியவில்லை என்று சொன்னதையும், இப்போது அதே நிர்வாகம், 'தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய பாண்டியன் கிராம வங்கி நிர்வாகக்குழு ஒப்புக்கொண்டுள்ளதையும்' சுட்டிக்காட்டினோம். எனவே பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதை நிர்வாகம் ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை எடுத்துரைத்தோம். மேலும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்கான வழிமுறைகளும், முன்மாதிரிகளும் ஏற்கனவே கிராம வங்கிகளில் இருக்கின்றன என்பதையும் விளக்கினோம். நிர்வாகத்தின் தரப்பில் பதில் சொல்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்ததாக, 2008ம் ஆண்டு புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கலில் 45 பேருக்கு மட்டும் அவர்களது probation periodல் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு வழங்காமல் இருப்பதையும், அதே வருடத்தில் மெஸஞ்சர்களிலிருந்து கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்றவர்களின் probation periodல் அதே கம்ப்யூட்டர் அலவன்சு வழங்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினோம். நிர்வாகம், புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களின் probation periodம், பதவி உயர்வு பெற்றவர்களின் probation periodம் ஒரே மாதிரியாக கருத முடியாது என அப்பட்டமான, முற்றிலும் நியாயமற்ற ஒரு பதிலை சொல்லியது. அதை ஒப்புக்கொள்ளாத நாம், 2011ம் ஆண்டு புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளர்க்கலுக்கு இந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு வழங்கப்பட்டு இருப்பதையும், இந்த ஒப்பந்தம் 1.11.2007லிருந்தே அமலுக்கு வந்துள்ளதையும், எனவே 2008ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் விளக்கினோம். நிர்வாகத்தின் தரப்பில் பதில் கொடுக்க அவகாசம் அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. நிர்வாகம் இவ்விஷயத்தில் தனது பக்கம் எந்த நியாயமும் இல்லையென்றாலும் வீண் பிடிவாதம் பிடிப்பதாகவே நாம் கருதுகிறோம். நேர்மையாக இவ்விஷயத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஐ.ஓ.பி உயரதிகாரிகளோடு சந்திப்பு:
ஒழுங்கு நடவடிக்கைகளில் இருக்கும் முறையற்ற விஷயங்களை முன்வைத்து, வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களையும், ஐ.ஓ.பி உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவதாக நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி முடிவு செய்தது. அதன் அடிப்படையில் நம் தோழர்கள் சென்னை சென்று நபார்டு, ரிசர்வ் பாங்க், ஐ.ஓ.பி உயரதிகாரிகளை சந்தித்துப் பேசி வந்திருக்கின்றனர். நம் தரப்பு நியாயங்களை கேட்டுக்கொண்டவர்கள், பாதிப்புகளை சரிசெய்வதற்கான நமது கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கின்றனர்.
ஐ.ஓ.பியில் நம் பேச்சுவார்த்தை மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஒழுங்கு நடவடிக்கைளைத் தாண்டி, தற்காலிக ஊழியர்களின் நிரந்தரம், பொருளாதரக் கோரிகைகளையும் பேசினோம். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்தும் முயற்சியில் ஐ.ஓ.பி நிர்வாகம் சாதகமாக இருப்பதாகவே நம்மிடம் சொல்லப்பட்டது. வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவை மிக விரைவில் உயர்த்தப்பட உள்ளது என்பதையும் தெரிவித்தனர். புதிய ஆண்டில் அவை நல்ல செய்திகளாக நமக்கு வந்து சேரும்.
கையெழுத்து இயக்கம்:
பாண்டியன் கிராம வங்கியில், ஒழுங்கு நடவடிக்கைகளில் நிலவும் முறையற்ற, நியாயமற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி, CVOவின் தலையீடுகளை எதிர்த்தும், பாதிப்புகளை சரிசெய்யவும் பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்களிடம் கையெழுத்து வாங்கி நமது வங்கி சேர்மனுக்கும், அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும், ஐ.ஓ.பி உயரதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பதென சங்கத்தின் செயற்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்கான பிரத்யேக படிவங்களுடன் சங்கத்தலைவர்கள் விரைவில் கிளைகளுக்கு வருவார்கள். தோழர்கள் அனைவரும் ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நாமா கருங்காலிகள்?
நம் சங்கத்தையே ஒழித்துக்கட்டிட கங்கணம் கட்டியவர்கள், இந்த வங்கியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்ய முயன்றவர்கள், நம் சங்கத்தலைவர்கள் மீது எப்படியாவது நிர்வாக நடவடிக்கை எடுக்கத் துடித்தவர்கள், ‘அவர்கள் இருவரையும் சஸ்பென்ஷன் செய்யுங்கள்' என நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தவர்கள் இன்று வீதிக்கு வந்து புலம்பத் தொடங்கி இருக்கிறார்கள். நாம்தான் காட்டிக் கொடுத்தோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இதன்மூலம் இவர்கள் எதோ ஏசு போலவும், வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரியும் சித்தரித்துக் கொள்கிறார்கள். தாங்கள் யோக்கியமானவர்களாய் இருந்தால் தங்கள் மீது சாட்டப்படுள்ள குற்றம் என்ன, இழைக்கப்பட்ட அநீதி என்னவென்று பகிரங்கமாக தெரிவித்து நியாயம் கேட்க வேண்டியதுதானே? நிர்வாகத்திடம் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காமல், 'இதற்கெல்லாம் அவங் காரணம், இவங் காரணம்' என்றும் 'அந்த ரெண்டு பேரை தூக்கிர வேண்டியதுதான்' என வன்மத்தோடு மிரட்டல் விடுக்கிறார்கள். அதையெல்லாம் நாங்கள் பகிரங்கப்படுத்தினால் நன்றாக இருக்காது என இத்தோடு விடுகிறோம். நமக்கு யாரையும் 'அடிக்க' வேண்டிய அவசியமுமில்லை. 'புடிக்க ' வேண்டிய தேவையும் இல்லை.
அதே நேரத்தில், ஒரு ஊழியருக்கு பொதுவாக அவர் பணி நிறைவு பெறுகிற கடைசி நேரத்தில் சார்ஜ் ஷீட் கொடுப்பதையும், அவரது retirement benefitகளை நிறுத்துவதையும் நாம் தொடர்ந்து கண்டித்து வருகிறோம். போதிய அவகாசம் கொடுத்து ஒழுங்கு நடவடிக்கைகளை முடித்து, ஒருவர் பணி ஓய்வு பெற வழிவகை செய்ய வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நமது சங்கங்களின் தலைவர்களுக்கு இல்லை, சாதாரண உறுப்பினர்களுக்கு இதுபோன்ற நிலைமை ஏற்பட்டபோதே நாம் தட்டிக்கேட்டு இருக்கிறோம். கண்டனக்குரல் எழுப்பி இருக்கிறோம்.
01- 01 - 2013 - புதிய ஆண்டு:
இந்த ஆண்டின் கடைசித் தருணங்களில் நாம் இருக்கிறோம். உலகம் இத்தோடு அழியப்போகிறது என்ற அத்தனை மூடத்தனத்தையும், வதந்திகளையும் தாண்டி உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. வாழ்வை அதன் அவலம், மகிழ்ச்சி எல்லாவற்றோடும் நாம் சுவாசிப்பதற்கான காலம் எவ்வளவோ இருக்கிறது. அதுவரை நமது இயக்கங்களும், செயல்பாடுகளும் அதிகாரத்தையும், அநீதிகளையும் எதிர்த்து நிகழ்ந்தபடியே இருக்கும். இதோ 2012ன் நாட்குறிப்புகள் முழுக்க நமது சங்க நடவடிக்கைகளை தொகுத்துப் பார்த்தால், அதன் அடையாளங்களாகவே நிறைந்து கிடக்கின்றன. அதே வேளை, வரும் புதிய ஆண்டை உற்றுப்பார்த்தால் சவால்களும், நெருக்கடிகளும் குவிந்து கிடக்கின்றன. முக்கியமாக, புதிய பணி நியமனம் இல்லாமல், வங்கியின் ஒட்டு மொத்த இயக்கமும் கேள்விக்குறியாகி உள்ளது. பதவி உயர்வுகள், மாறுதல்கள், கிளைகளில் பணி நெருக்கடிகள், டெபுடேஷனுக்கு வழியில்லாத அவலம் என ஒவ்வொரு நாளும் சித்திரவதையாக இருக்கிறது. ஜனவரியிலும் புதிய பணி நியமனம் இல்லாவிட்டால், நாம் வேறுவிதமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
pension, amalgamation, recruitment, promotion, transfers என நாம் புதிய ஆண்டின் நாட்களை சேகரிக்கத் துவங்குவோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
http://www.thehindubusinessline.com/industry-and-economy/banking/pandyan-grama-bank-to-open-atms-17-more-branches/article4256192.ece
ReplyDelete