சுற்றறிக்கை எண்: 1/2013 நாள்: 29.1.2013
அருமைத்தோழர்களே!
வணக்கம்.
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், புத்தாண்டுப் பரிசாக PGBEA தலைவர் மாதவராஜ் அவர்களுக்கு சார்ஜ் ஷீட் கொடுத்தது. சில குறிப்பிட்ட தினங்களில் அவர் வங்கிக்கு குறித்த நேரத்தில் வரவில்லையென்பதும், 2010 முதல் 2012 வரையிலான காலத்தில் 80 நாட்கள் unauthorised absence என்பதும் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். தொழிற்சங்கப்பணிகளுக்காக இங்கு Duty Relief கிடையாது. Special Leave கிடையாது. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக, நாம் நமது ஊதியத்தை இழந்து, LLPயில் சென்றால் அதையும் அனுமதிக்க முடியாது என்று நிர்வாகம் சார்ஜி ஷீட் செய்கிறது. இதையே காரணம் காட்டி, ஏற்கனவே தோழர்கள் சோலைமாணிக்கம் அவர்களுக்கும், மாதவராஜ் அவர்களுக்கும் 2005ல் இருந்து இன்கிரிமெண்ட் கொடுக்கப்படவில்லை. Leave regularise செய்யப்படவில்லை. முறையாக Leave regularise செய்யப்பட்டால் இப்போது கொடுக்கப்பட்ட சார்ஜ் ஷீட்டே தேவையே இல்லாத ஒன்றாகிவிடும்.
நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கை தாக்கீதுகளை வாங்கிக் கொண்டு வந்து நிற்கும் ஊழியருக்கு சங்க பிரதிநிதி உட்கார்ந்து பதில் எழுத வேண்டி இருக்கிறது. டெபுடேஷன், லீவு என அன்றாடம் தோழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டி இருக்கிறது. சங்க வேலைகளுக்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் அவர் இருக்கையிலிருந்து வெளியே போய் யாருடனாவது பேச நேரிட்டாலும், அல்லது யாரையாவது பார்த்துவிட்டு தாமதமாக வந்தாலும் அதற்கு ஒரு குற்றச் சாட்டு. சரி, விடுப்பில் போய் தொழிற்சங்கப் பொறுப்புகளை கவனித்து விட்டு வந்தாலும், அதிக நாள் விடுப்பு என்று அதற்கு வேறொரு குற்றச் சாட்டு. இந்த இரண்டும் தானே மாதவராஜ் மீது இப்போது நிறுத்தப் பட்டிருப்பது. தோழர் மாதவராஜ் என்ன, லீவு போட்டுவிட்டு, வங்கிக்கு தாமதமாக வந்து தனிப்பட்ட பிஸினஸ் ஏதும் செய்தாரா?
நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக 4.1.2013 அன்று தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நமது இரு சங்கங்களும் அறைகூவல் விடுத்தன. நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டு வந்து பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கைக்கு எதிராக ஆவேசமாக குரல் எழுப்பினர்.
இரு சங்கத்தின் சார்பிலும் பொதுமேலாளரையும், சேர்மனையும் சந்தித்துப் பேசியிருக்கிறோம். நம் தரப்பு நியாயங்களைக் கேட்டுக்கொண்ட அவர்கள், இப்பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கான வழிகளை மேற்கொள்வதாக சொல்லியிருக்கின்றனர்.
அகில இந்திய கோரிக்கைகளும், இயக்கங்களும்:
(1) கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பென்ஷன் வழங்கும் திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டு, அதுகுறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு, ஒரு பென்ஷன் திட்டம் தயாரான நிலையில் மேலும் காலதாமதம் செய்கிற காரியத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. (2) தேசீய கிராமப்புற வங்கி என்னும் நீண்டநாள் கோரிக்கையை நிஜமாக்க வேண்டியதிருக்கிறது. (3) நம் வங்கியில் உள்ளது போல நாடு முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் உள்ள தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டமல் இருக்கின்றனர். (4) கிராம வங்கி நிர்வாகக்குழுவில், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடம் வேண்டும் என்னும் நமது கோரிக்கையை இன்னும் அரசு பரிசீலிக்காமல் இருக்கிறது. (5) ஏற்கனவே குறைவான ஊழியர்களும், அதிகமான வேலைப்பளுவும் நம்மை அழுத்திக்கொண்டு இருக்கிற நிலையில், மத்திய அரசு தற்போது திட்டமிட்டு இருக்கும் HR பாலிசி, மேலும் நெருக்கடிகளையும், சுமைகளையும் நம்மீது திணிப்பதாக உள்ளது.
இந்தப் பிரச்சினைகளை முன்னிறுத்தி, அவைகளை தீர்ப்பதற்காக நமது அகில இந்திய சங்கம் தொடர் இயக்கங்களை அறிவித்துள்ளது. நமது இரு சங்கங்களின் செயற்குழுக்கள் கூடி கீழ்க்கண்டவாறு, அவ்வியக்கங்களை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கின்றன. அதன்படி-
1.பிப்ரவரி 5ம் தேதி நம் தலைமையலுவலகம் முன்பு ஒருநாள் தர்ணா.
2. பிப்ரவரி 25ம் தேதி, சென்னையில் நபார்டு, மண்டல அலுவலகம் முன்பு ஒருநாள் தர்ணா.
3. மார்ச் 31ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம்.
கிராம வங்கி ஊழியர்களின், அலுவலர்களின் எதிர்காலம் குறித்த தெளிவானப் புரிதலுடனும் அக்கறையுடனும் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் இந்த இயக்கங்களை வெற்றிகரமாக்குவது நம் அனைவரின் கடமையாகிறது. சென்னையில் நடைபெறும் தர்ணாவுக்குச் செல்வதற்கு மதுரை, திருநெல்வேலி, காரைக்குடி ஆகிய மையங்களில் இருந்து மினி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. தர்ணாவில் கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் அந்தந்த மையங்களில் உள்ள சங்கப் பொறுப்பாளர்களை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தப் போராட்டங்களுக்காக, நிதி திரட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி அலுவலர்த் தோழர்கள் ரூ.500/-, கிளரிக்கல் தோழர்கள் ரூ.300/- மற்றும் மெஸஞ்சர்த் தோழர்கள் ரூ.200/-ம், விருதுநகரில் உள்ள AIRRBEA- TN கணக்கு எண்: 5001 க்கு, இந்த ஜனவரி மாத ஊதியத்தில் அனுப்பிட வேண்டுகிறோம்.
பிப்ரவரி 21, 22 அகில இந்திய வேலை நிறுத்தம்:
இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் உள்ள முக்கிய சங்கங்கள் ஒன்றிணைந்து தேசம் காக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். CITU, AITUC, INTUC, BMS, HMS முதற்கொண்டு முக்கிய மத்திய சங்கங்கள், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பிப்ரவரி20 மற்றும் 21 தேதிகளில் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்திருக்கின்றனர். பல கோடி தொழிலாளிகள் சங்கமிக்க இருக்கும் மிக உக்கிரமான போராட்டம் இது. நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, மிக விரிவான தளத்தில் நடைபெற இருக்கும் மகத்தான தொழிற்சங்க வரலாற்று நிகழ்வு இது. மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்விலிருந்து, தொழிலாளர்களுக்கு பென்ஷன், போனஸ் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த இருநாள் வேலைநிறுத்தம் நடைபெற இருக்கிறது.
கோரிக்கைகள்
1. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
2. தொழிற்சங்க சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும்.
3. அணி திரட்டப்பட்ட/ திரட்டப்படாத தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
4. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பது நிறுத்தப்பட வேண்டும்.
5. அவுட்சோர்சிங் நிறுத்தப்பட்டு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
6. குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கபட வேண்டும்.
7. போன்ஸ், பிராவிடண்ட் பண்ட் மற்றும் கிராஜுவிட்டியில் உள்ள உச்ச வரம்புகளை நீக்க வேண்டும்.
8.அனைவருக்கும் பென்ஷன் உறுதி செய்யப்பட வேண்டும்.
வங்கித்துறையில் AIBEAவும், BEFIயும், AIRRBEAவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுகின்றன. நமது வங்கியில், இந்த வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பும், அர்ப்பணிப்பும் நம் அனைவருக்கும் வேண்டும்.
இதுகுறித்து, மூன்று கருத்தரங்குகளை நடத்துவது என நமது இரு சங்கங்களும் முடிவு செய்திருக்கின்றன.
1. விருதுநகர் : 8.2.2012 மாலை 5.30 மணி
2.இராமநாதபுரம்: 11.2.2013, திங்கள் மாலை 5.30 மணி
3.காரைக்குடி: 15.2.2013, வெள்ளி மாலை 5.30 மணி
கருத்தரங்கம் நடக்கும் இடம் குறித்த விவரங்கள் தோழர்களுக்கு தபால்கள் மூலம் தெரியப்படுத்தப்படும்.
மேலும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மையங்களில், அனைத்துத் தொழிற்சங்கங்கள் இனைந்து நடத்தும் கருத்தரங்குகளில் நம் தோழர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அழைக்கிறோம்.
3.3.2013 அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்:
இன்று அலுவலர்கள் பல்வேறு வகையான நெருக்கடிக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கின்றனர். கம்ப்யூட்டர் மயமான புதிய பணிச்சூழல் சிரமங்களைத் தருகிறது. ஓய்வு பெறுகிற நேரம், மன உளைச்சல் அலைக்கழிக்கிறது. ஒழுங்கு நடவடிக்கைகள் பயமுறுத்துகின்றன. இந்த நிலையில் கிளைகளில் பணிகளை சீரமைத்துக் கொள்ளவும், நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் ஒரு பயிற்சி முகாம் அவசியம் என பல தோழர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் அலுவலர்களுக்கென்று ஒரு சிறப்பு பயிற்சி முகாம் நடத்துவதென முடிவு செய்திருக்கிறோம். 3.3.2013 அன்று மதுரையில் வைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பிரத்யேகமான அழைப்பிதழ்கள் தோழர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தோழர்களே!
புதிய ஆண்டில் அகில இந்திய அளவிலான இயக்கங்கள் கூர்மையடைந்து இருக்கின்றன. சவால்கள் மிக்கதாகவும், போராட்டங்கள் நிறைந்ததாகவும் நாட்கள் துவங்கி இருக்கின்றன.
நமது வங்கியில், தலைமை அலுவலகத்தை சீரமைக்க வேண்டுமென கடந்த மே மாதம் ஒரு இயக்கம் ஆரம்பித்தோம். தொடர்ந்து நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இருந்தோம். அவைகள் ஒருநாளில் சரிசெய்யப்பட முடியாதவை என்றும், தொடர்ந்த இயக்கங்களால் மட்டுமே சரியாகும் என்றும் தெளிவு நமக்குண்டு. இப்போது சில மாற்றங்களும், நல்ல அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்து இருக்கின்றன. சேர்மன் அவர்களும் மற்றும் பொது மேலாளர் அவர்களும் ஒரு புதிய, சுமூகமான நிலைமையை உருவாக்குவது குறித்த தங்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளனர். வங்கியின் சிகரங்களை உயர்த்தவும் தங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தி இருக்கின்றனர். வெளிப்படையான, பாரபட்சமற்ற நிர்வாகத்தால் அது சாத்தியமாகும் என்பதையும், இப்போது இருக்கும் negative approachலிருந்து தலைமையலுவலகம் முதலில் மாற்றத்தை துவக்க வேண்டும் எனவும் அத்தகு முயற்சிகளுக்கு நாம் உறுதுணையாய் இருப்போம் என்பதையும் நம் தரப்பில் சொல்லி இருக்கிறோம். நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
This comment has been removed by the author.
ReplyDeletein title date of strike mentioned as feb21 and 22. but after that strike date mentioned as feb20 and 21. please,verify,
ReplyDelete