சுற்றறிக்கை: 3/2013 நாள்: 21.3.2013
அருமைத் தோழர்களே!
“மார்ச் 30 அகில இந்திய வேலை நிறுத்தம்”
திட்டமிட்டபடி நடக்கும் என AIRRBEA அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தின் பிரதான கோரிக்கையாகவும், முதல் கோரிக்கையாகவும் பென்ஷன் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் வழங்கப்பட வேண்டும், தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதும், கிராம வங்கிகளுக்கு போதிய manpower நிச்சயிக்கப்பட வேண்டும், மாநில அளவிலான கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டு அவைகளை இணைத்து தேசீய கிராமப்புற வங்கி உருவாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன.
பதினைந்து வருட நெடிய போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நாம் நிற்கிறோம். அதுதான் இந்த வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவம்.
வஞ்சகமும், சூதும், துரோகமும் நிறைந்த மத்திய அரசுக்கு எதிராக நாம் நமது குரலை கடுமையாக உயர்த்தியாக வேண்டிய தருணம் இது. அதுதான் இந்த வேலை நிறுத்தத்தின் அர்த்தம்.
மாபெரும் இயக்கங்களின் மூலமாகத்தான் வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தையும், சலுகைகளையும் பெறுகிற நிலைக்கு நாம் வந்தடைந்தோம். அதையும் முழுமையாக அமல்படுத்தாமல், மத்திய அரசு செய்த கொடுமைகளில் ஒன்றுதான், வணிக வங்கியில் 1993ல் அமல்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தை கிராம வங்கி ஊழியர்களுக்கு வழங்காமல் மறுத்தது.
இந்த சூழ்ச்சியை எதிர்த்து நாம் வாயை மூடிக்கொண்டு இருக்கவில்லை. கத்தியின்றி, ரத்தமின்றி காரியங்களை சாதித்துவிடலாம் என சத்தம் போடாமல் இருக்கவில்லை. தட்டாமலேயே கதவுகள் திறந்துவிடும் என அமைதி காக்கவில்லை.. ‘இது அநியாயம், இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என ஆவேசத்துடன் எழுந்து நின்றோம். அன்றிலிருந்து தொடர்ந்து இயக்கங்கள், தர்ணாக்கள், டெல்லி பேரணிகள் , நீதிமன்றங்களில் வழக்குகள் என பென்ஷனை பெறுவதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் உயிர்த்துடிப்பு கொண்டவர்களின் மூச்சுக்காற்றிலும், மூளையிலும் நிறைந்தே இருக்கும்.
தொடர்ந்து போராடி போராடியே நாம் கர்நாடகா, இராஜஸ்தான் உயர்நீதிமன்றங்களில் நமக்கு சாதகமான தீர்ப்புகளைப் பெற்றோம். இதன் மூலமே, கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினோம். இதன் விளைவாகத்தான், இப்போதைய ஜனாதிபதியும், அப்போதைய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி அவர்கள் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி, ‘கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பென்ஷன் வழங்குவற்கான' நிதியமைச்சக ஃபைலில் கையெழுத்து இட்ட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான கிராம வங்கி ஊழியர்கள், அலுவலர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது.
நிதியமைச்சகத்தின் முடிவைத் தொடர்ந்து, கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பென்ஷன் வழங்க நபார்டு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. லாபம் ஈட்டிய கிராம வங்கிகளுக்கு மட்டுமே பென்ஷன் வழங்கவேண்டும் என்கிற அரசின் முடிவுக்கு எதிரானதாக இராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருந்தது. நபார்டின் நிலைபாடும் அதுவாகவே இருந்தது. இந்த முரண்பாடுகளிடையே பென்ஷன் திட்டம் அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும், நபார்டின் பரிந்துரைகளையடுத்து, நிதியமைச்சகம் கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஒரு பென்ஷன் திட்டத்தை எழுத்துபூர்வமாக ஏறத்தாழ உருவாக்கி வைத்திருந்தது. அதன் சிறப்பம்சங்களை நாம் தோழர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.
சாதகமான சூழல்கள் ஒருபக்கம் உருவாகிக்கொண்டு இருக்கும்போதே, நிதியமைச்சகம் இன்னொரு பக்கம் இந்த பென்ஷன் திட்டத்தை முறியடிக்கும் சதி வேலைகளிலும் ஈடுபட்டு வந்தது. இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டை செய்தது. நிதியமைச்சகத்தின் இந்த முடிவு பச்சை துரோகமானது. கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டு, கையெழுத்திட்டு, அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்த பிறகு, முடிவுகளிலிருந்து பின் வாங்குவது என்பது நேர்மையற்ற செயல்.
இதனை எதிர்த்து AIRRBEA ஒருபுறம் நீதிமன்றங்களில் நியாயம் கிடைப்பதற்கான வழிகளில் ஈடுபட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம். ஏப்ரல் 29ம் தேதி அது ஹியரிங்குக்கு வருகிறது. அதே வேளையில், இன்னொருபுறம் கிராம வங்கி ஊழியர்களையும், அலுவலர்களையும் திரட்டி இந்த அரசுக்கு மேலும் நிர்ப்பந்தம் கொடுப்பதற்கான இயக்கங்களையும் அறிவித்து நாடெங்கிலும் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது AIRRBEA.
பிப்ரவரி 5ம் தேதி நமது தலைமை அலுவலகத்தின் முன்பாக ஒருநாள் தர்ணா நடத்தியிருக்கிறோம். அதையடுத்து, பிப்ரவரி 25ம் தேதி, மாநிலத் தலைநகர் சென்னையில் நபார்டு அலுவலகத்தின் முன்பு தர்ணா நடத்தியிருக்கிறோம். பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கிகளில் உள்ள AIRRBEAவின் இணைப்புச் சங்கங்களின் சார்பில் 80க்கும் மேற்பட்ட தோழர்கள் தர்ணாவில் கலந்து கொண்டனர். BEFI-TN தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். நபார்டு எம்ப்ளாயிஸ் யூனியன் தோழர்கள் மதிய உணவு தந்து, ஆதரவு தெரிவித்தனர். எழுச்சி மிக்க நமது போராட்டங்களில் ஒன்றாக அந்த போராட்டம் அமைந்திருந்தது.
இப்போது, மார்ச் 30 வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம். தோழர்களே! இது நம் எதிர்காலத்தை நம்பிக்கை நிறைந்ததாகவும், வெளிச்சம் கொண்டதாகவும் அமைத்துக்கொள்வதற்காக நாம் நடத்துகிற போராட்டம்.
இந்த வங்கியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவிட்டு, பணி நிறைவு பெறுகிற நாளில், ‘நாளை என்ன செய்யப் போகிறோம்' என்ற கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்து நிலைகுலைய வைப்பதை பார்க்கிறோம். 'பென்ஷன் வந்துவிடும்' என்ற கனவோடும், எதிர்பார்ப்போடும் இங்கு நாட்களை கடத்தும் அவர்களின் முகங்கள் நினைவுக்கு வருகின்றன. நாம் சும்மா இருந்தால் எதிர்காலம் வெறுமையும், விரக்தியும் கொண்டதாக மாறிவிடும்.
எனவே, இந்த வேலைநிறுத்ததில் பங்குகொள்கிற ஒவ்வொருவரும், இந்த இருளை விரட்டுகிற ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
யாருக்கோ வந்தது என்றோ, யாராவது போராடி வாங்கிக் கொடுப்பார்கள் என்றோ இருக்கும் மனநிலையை தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள்.
சங்க வித்தியாசம் கொண்டு, இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்கிற செயலில் ஈடுபட வேண்டாம் என மாற்று சங்கத்தினரை வேண்டுகிறோம். அது நமக்கு நாமே தோண்டிக்கொள்கிற குழியாகும்.
நாம் நமக்காகவும், நம் அனைவருக்காகவும் போராடுகிறோம். நாளை நாம் வாங்கப் போகும் பென்ஷனில், அதன் மூலம் கிடைக்கிற உணவில், உடையில், மரியாதையில் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரின் பெயர்களும் நிச்சயம் இருக்கும். அதில் உங்கள் பெயரும் இருப்பதை உறுதி செய்யுங்கள். அதுதான் சுயமரியாதைக்கான அர்த்தமாகும்.
வாருங்கள், மார்ச் 30 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!