அருமைத் தோழர்களே!
வணக்கம்.
கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிராக:
கிராம வங்கிகளை தனியார் மயமாக்க, மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகம் செய்ததையும், அதன் மோசமான அம்சங்களையும் சென்ற சர்க்குலரில் விளக்கமாய் தெரிவித்திருந்தோம். ஏப்ரல் 29ம் தேதி தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு AIRRBEA அறைகூவல் விடுத்திருந்ததையும் தெரியப்படுத்தியிருந்தோம். அதன் முதல் குரலாய், BEFI-TN சார்பில் திருச்சி, ஐ.ஓ.பி மண்டல அலுவலகத்தின் முன்பு ஒரு எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பாண்டியன் மற்றும் பல்லவன் கிராம வங்கி ஊழியர்களும், வணிக வங்கி ஊழியர்களும், எல்.ஐ.சி ஊழியர்களும், அரசு ஊழியர்களும் கலந்துகொண்டனர். AIRRBEA-TN தலைவர் தோழர்.பிச்சைமுத்து தலைமை தாங்கினார். BEFI-TN பொதுச்செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன், PGBEA பொதுச்செயலாளர் தோழர். சோலைமாணிக்கம் கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பதில் இருக்கும் ஆபத்துக்களை எடுத்துரைத்தனர்.
அடுத்தநாள் ஏப்ரல் 30ம் தேதி, பாண்டியன் கிராம வங்கித் தலைமை அலுவலகத்தின் முன்பு, நம் இரு சங்கங்களும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஏறத்தாழ 75 தோழர்கள் கலந்துகொண்டனர். PGBOU தலைவர் போஸ்பாண்டியன் தலைமை தாங்கினார். BEFI-TN விருதுநகர் மாவட்டத் தலைவர் தோழர்.மாரிக்கனி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவளித்துப் பேசினார்.
அடுத்தக்கட்டமாக, AIRRBEAவின் தலைவர்கள், அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து, ஆதரவு திரட்டி வருகின்றனர். தொடர்ந்த போராட்டங்களுக்கும் திட்டமிட்டு வருகின்றனர். நாம் ஊழியர்கள் மத்தியில் முதலில் ஒரு முழுமையான பிரச்சாரம் செய்வது எனத் திட்டமிட்டு இருக்கிறோம். 23.5.2013 அன்று தூத்துக்குடியிலும், 25.5.2013 அன்று காரைக்குடியிலும், 26.5.2013 அன்று திருநெல்வேலியிலும் வட்டாரக்கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். இடம், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பிரத்யேக அழைப்புகள் அனுப்பி வைக்கப்படும். தோழர்கள் திரளாக கலந்துகொள்ள அழைக்கிறோம்.
வங்கியின் லாபமும், ஊழியர்கள் நலனும்:
நமது வங்கி இந்த வருடம் 136 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடும் போட்டிகளுக்கு இடையில், நெருக்கடிகளுக்கு நடுவே இந்த லாபம் பெருமைக்குரியதாகவும், சந்தோஷம் தரக்கூடியதாகவும் இருக்கிறது. அதே வேளையில், நேரம் காலமில்லாமல், தேவையான ஊழியர்கள் இல்லாமல், சரியான பணிச்சூழல் இல்லாமல் நாம் அனைவரும் கடும் அவதிப்பட்டுத்தான் இந்த லாபத்தை ஈட்டியுள்ளோம் என்கிற சிந்தனையும் மேலோங்குகிறது. அதற்கான மரியாதையோ, அங்கீகாரமோ இந்த வங்கியின் நிர்வாகத்திலிருந்து இல்லையே என்ற விமர்சனமும் கூடவே வருகிறது. ஒரு compliment கூட இல்லையே என்கிற குரல் எழுகிறது. கிளைகளில் நம் தோழர்கள் தினம் தினம் படும் வேதனைகளையும், வலிகளையும் கணக்கிலேயே எடுக்காமல் இந்த நிர்வாகம் தன் காரியத்தை சாதிப்பதில் மட்டுமே கவனமாய் இருப்பதையும் காணமுடிகிறது. உண்மைகள் கசப்பாய் இருக்கின்றன.
தலைமையலுவலகத்தில் பொறுப்பில் இருப்பவர்களிடம் குறைகளை எடுத்துச் சொன்னாலோ, கேள்விகள் கேட்டாலோ பொறுத்துக்கொள்ளும் மனோநிலையில் இல்லை. யாராவது கேட்டுவிட்டால் அவர்களை ஜென்ம விரோதிகளாய் பாவித்து படுத்துகிற பாடு கொடுமையானது. லீவிற்கு அனுமதி கொடுப்பதில் கடைப்பிடிக்கப்படும் கெடுபிடிகள், சம்பளப் பிடித்தங்கள் என ஊழியர் விரோத நடவடிக்கைகளின் பட்டியல் நீள்கிறது. இது ஆரோக்கியமானது இல்லை என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம். வன்மங்களையும், வக்கிரங்களையும் மூளையில் இருந்து அப்புறப்படுத்தி, எல்லோரையும் சக மனிதர்களாய், சமமான மனிதர்களாய் பாவிப்பதும், மதிப்பதும் அவசியம். இந்த வங்கிக்கு லாபம் ஈட்டித் தந்தவர்களை அவமானப்படுத்தாதீர்கள். அடிமைகளாய் நடத்தாதீர்கள்.
சொஸட்டி தேர்தலில் நம் வெற்றியும், சிலரின் புழுக்கங்களும்:
Thrift Societyயின் டைரக்டர்கள் தேர்தலில் நம் தோழர்கள் அனைவரும் வெற்றிபெற்றார்கள் என்பதை ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தோம். இப்போது சொஸைட்டியின் தலைவராக தோழர்.ஸ்ரீராமச்சந்திரன் அவர்களும், உதவித் தலைவராக தோழர்.விஜயராகவன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வெற்றியைத் தாங்க முடியாமல் சர்க்குலர்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. Thrift society என்பது நம் ஊழியர்கள் அனைவருக்குமான பொது ஸ்தாபனம். அதற்கான தேர்தல் முறையாக நடத்தப்பட்டு, நம் தோழர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வெற்றி பெற்றதால், அந்த பொது ஸ்தாபனம் தனியார் கைகளுக்குச் சென்றுவிட்டதாக புலம்புகிறது PGBWU. கிராம வங்கிகள் தனியார் கைகளுக்குச் செல்வதை எதிர்த்து குரல் எழுப்ப சிந்தனையற்றவர்கள், நமது சொஸைட்டி தனியார் கைகளுக்குச் சென்றுவிட்டதாகச் சொல்வது வேடிக்கை. இதைவிடக் மோசமானது PGBOA சர்க்குலர். தேர்தலில் நின்றவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளை விடக் கேவலமாக நடந்துகொண்டதாகவும், காசு கொடுத்து வாக்கு சேகரித்ததாகவும் கன்னபின்னாவென உளறிக் கொட்டியிருக்கிறது. தேர்தலில் நின்றவர்கள், வாக்கு அளித்தவர்கள், தேர்தலை நடத்திய அதிகாரிகள் அனைவரையுமே அவதூறு செய்யும் வார்த்தைகள் இவை. வன்மையாக கண்டிக்கிறோம்.
புதிய பணிநியமனங்கள்:
புதிய பணிநியமனங்களுக்கான இண்டர்வியு, மே மாதம் 15 தேதி முதல், 21 தேதி வரை நடக்க இருக்கிறது. அனேகமாக ஜூன் முதல் வாரத்தில் முடிவுகள் வெளியாகி, புதியவர்கள் பணிக்குச் சேர்வார்கள். அதுசமயம், அலுவலர்கள், கிளரிக்கல் தோழர்களுக்கான மாறுதல்கள் இருக்கும். நம் சங்கங்கள் நிர்வாகத்திடம் இதுகுறித்து பேச ஆரம்பித்திருக்கின்றன. நம் தோழர்களுக்கு சாதகமான மாறுதல்களை சென்ற முறை போலவே பெற்றுத் தருவோம் .
நமது அடுத்த மாநாடு:
தோழர்களே! நமது இரு சங்கங்களின் அடுத்த மாநாடுகளை நடத்த கூட்டு செயற்குழு முடிவு செய்திருக்கிறது. ஜூலை 6, 7 தேதிகளில், மதுரையில் நடக்க இருக்கிறது.
நமது மகத்தான தலைவர் தோழர்.திலிப்குமார் முகர்ஜியின் நினவுகளை போற்றும் விதமாக, பிரம்மாண்டமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பெரும் பொருட்செலவுகள் இருப்பதால், அலுவலர் தோழர்கள் ரூ.1000/-ஐ PGBOUவின் சேமிப்புக் கணக்கிற்கும் (எண்:5000, கிளை: விருதுநகர்) , எழுத்தர்கள் ரு.600/-ஐயும், மெஸஞ்சர்கள் ரூ.300/-ஐயும் PGBEAவின் சேமிப்புக் கணக்கிற்கும் (எண்:5002, கிளை: விருதுநகர்) அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
தோழர்களே, இது நம் திருவிழா.
சந்தோஷத்துடனும், ஆரவாரத்துடனும் தயாராவோம்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!