சுற்றறிக்கை: 1/2013 நாள்: 29.6.2013
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
புதிதாக 22 ஆபிஸர்களும், 102 கிளர்க்குகளும் நமது வங்கியில் பணிக்குச் சேர்ந்திருக்கின்றனர். இந்த வங்கியின் இளைய தலைமுறை அவர்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம். கிளைகளில் அவர்களுடன் சினேகத்துடனும், தோழமையுடனும் பழகி, இந்த வங்கியைப் பற்றி, வேலைகளைப் பற்றி, தொழிற்சங்கம் பற்றி எடுத்துச் சொல்லுவோம். நம்பிக்கையளித்து அவர்களை அற்புதமான நம் PGB குடும்பத்தின் புதிய சொந்தமாக்குவோம்.
25 வருடம் சர்வீஸ் முடித்தவர்களுக்கு மட்டும் Compliment :
25 வருடம் சர்வீஸ் முடித்தவர்களுக்கு ரூ.2000/- பெறுமானமுள்ள Compliment கொடுக்க இருப்பதாக நமது வங்கியின் நிர்வாகக்குழு சந்தோஷத்துடன் அறிவித்திருக்கிறதாம். அதுபோல வணிகத்தில் முக்கிய parameterகளில் சாதனை படைக்கும் கிளைகளில் பணிபுரியும் அனைவருக்கும் தலா ரூ.500/-க்கு incentive கொடுக்க இருப்பதாகவும் போர்டில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறதாம். போர்டின் இந்த முடிவில் நமக்கு இருக்கும் வருத்தங்களையும், விமர்சனங்களையும் பொதுமேலாளரிடம் முன்வைத்திருக்கிறோம். இந்த வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் compliment/incentive கொடுக்க வேண்டும் என்றோம். நிர்வாகத்தின் இந்த முடிவு ஊழியர்களிடையே பாகுபாடுகளை ஏற்படுத்தும் என்றோம். போர்டு மீட்டிங்கின் முடிவை நடைமுறைப் படுத்தினால், PGBEA மற்றும் PGBOU சங்கங்களின் தலைவர்கள் இந்த complimentகளை பெறுவதில்லை என முடிவு செய்திருக்கிறோம். அனைவருக்கும் கிடைக்கும் போது, அதனைக் கடைசியாக பெறுகிறவர்களாக, நமது சங்கத் தலைவர்கள் இருப்பார்கள்.
TRANSFERS:
இந்த வருடம் இன்னும் General Transfers போடப்படவில்லை. 20 வருடங்கள், 25 வருடங்கள் சர்வீஸ் முடித்த பிறகு நமது மெசஞ்சர்த் தோழர்கள் கிளர்க்குகளாக பிரமோஷன் பெற்று, தொலைதூரக் கிளைகளில் மாறுதல் செய்யப்பட்டனர். பணி ஓய்வுக்கு இன்னும் சில வருடங்களே இருக்கிற அவர்கள் குடும்பத்தை விட்டு எங்கோ உள்ள கிளைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல 2011ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த பலர், பெண் ஊழியர்கள் உட்பட தொலைதூரக் கிளைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு புதிய பணி நியமனத்தையொட்டி இந்த வருடம் நிச்சயம் அருகாமைக் கிளைகளில் மாறுதல் செய்து தருவதாக நிர்வாகம் நம்பிக்கையளித்திருந்தது. இன்னும் அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை. அவநம்பிக்கையோடும், வேதனையோடும் அந்தத் தோழர்கள் தினம் தினம் நம்மிடம் மாறுதல்கள் குறித்து கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். நாம் இதுகுறித்து பொது மேலாளரிடம் இரண்டு முறை பேசிவிட்டோம். இறுதியாக 25.6.2013 அன்று சேர்மன் அவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறோம். இன்னும் 24 புதிய Office Assistantகளுக்கு appointment மற்றும் posting செய்ய வேண்டி இருக்கிறது. அதனையொட்டி மாறுதல்கள் இருக்கும், நிச்சயம் பாதிப்புகள் சரிசெய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய Office Assistant களின் ஊதியத்தில் மோசடியும் அநீதியும்:
புதிதாக பணிக்குச் சேர்பவர்களின் அடிப்படை ஊதியத்தின் ஆரம்ப நிலை என்பது ரூ.7200/- ஆகும். Graduates-ஆக இருந்தால் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே additional-ஆக இரண்டு இன்கிரிமெண்ட்கள் (ரு.400 + ரூ.400) கொடுக்கப்பட்டு, ரூ.8000/- அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதுதான் விதி. ஆனால் இது மீறப்பட்டு இருக்கிறது. ரூ.8000/- த்தை basic pay யாக விதிக்காமல் ரூ.7200/- அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்திருக்கிறது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம். விசாரிக்கும்போது, முன்பு office Assistantகள் பணிநியமனம் செய்யப்படுவதற்கு minimum qualification என்பது SSLC/ +2 பாஸ் செய்திருக்க வேண்டும் என்றிருந்தது. அதனால் graduation முடித்தவர்களுக்கு இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டும் என்றிருந்தது. இப்போதோ minimum qualificatiion என்பதே graduation ஆகிவிட்டது. எனவே, அந்த இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டியதில்லை என புதிய வில்லங்கம் ஒன்று முன்வைக்கப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல. கமர்ஷியல் வங்கிகளிலும் இப்போது minimum qualification என்பது graduation ஆகிவிட்டது. ஆனாலும் அங்கு graduation incrementகள் கொடுக்கப்படுகின்றன. அருகில் இருக்கிற பல்லவன் கிராம வங்கியில் இந்த 2013ம் வருடத்தில் புதிய பணிநியமனம் செய்யப்பட்ட office Assistant களுக்கு graduation incrementகள் கொடுக்கப்படுகின்றன. அது எதற்கு? நமது வங்கியில் 2011ம் ஆண்டு புதிதாக பணிநியமனம் நடந்தபோதே, office Assistantகளுக்கு minimum qualificatiion என்பது graduation தான். ஆனால் அவர்களுக்கு graduation incrementகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே நாம் இதனை மிகப்பெரும் மோசடியாகவும், புதிய தோழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் பார்க்கிறோம்.
ஆழமாய் சிந்தித்தால், நாம் போராடி வென்ற "சம வேலைக்கு சம் ஊதியம்' என்னும் கோட்பாட்டிற்கு வைக்கப்பட்ட வேட்டு என்பதும் தெளிவாகும். PGBEA சார்பில் தோழர்கள் மாதவராஜும், சோலைமாணிக்கமும் நமது வங்கியின் சேர்மனை சந்தித்து இப்பிரச்சினையை முன்வைத்துப் பேசினார்கள். விரைவில் இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக சேர்மன் சொல்லியிருக்கிறார். சாதகமான நிலைபாடு எடுக்கப்படும் என நம்புகிறோம். இல்லையெனில் நாம் நமக்கான பாதையை மேற்கொள்வோம்.
Transport Allowance-லும் வெட்டு!
8 வது இருதரப்பு ஒப்பந்தத்தின் போது, நமது தொடர் முயற்சியால் மெசஞ்சர் தோழர்களுக்கும், கிளரிக்கல் தோழர்களுக்கும் Transport Allowance ஆக, மாதம் ரு.105/-ஐப் பெற்றது நினைவிருக்கும். 9 வது இருதரப்பு ஒப்பந்தத்தில் அந்த Transport Allowance உயர்த்தப்பட்டது. 15 வருடத்திற்குள் சர்வீஸ் இருப்பவர்களுக்கு ரூ.225/- என்றும், அதற்கு மேல் சர்வீஸ் இருப்பவர்களுக்கு ரூ.275/- என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. நமது வங்கியில் பொத்தாம் பொதுவாக அனைவருக்கும் ரூ.200/- கொடுக்கப்பட்டு வருகிறது. 9 வது இருதரப்பு ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட 2010ம் ஆண்டில் இது குறித்து நமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தோம். அப்போதைய நிர்வாகம் ஐ.ஓ.பிக்கு கடிதம் எழுதியிருப்பதாகச் சொன்னது. இன்னும் சரிசெய்யப்படவில்லை. இப்போது 10 வது இருதரப்பு ஒப்பந்தம் வர இருக்கிறது. எனவே உடனடியாக நிர்வாகம் அதனை சரிசெய்து 1.11.2007ம் ஆண்டிலிருந்து அரியர்ஸ் தரவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்.
தற்காலிக ஊழியர்கள் பிரச்சினையில் பின்னடைவும், நமது முயற்சிகளும்!
நமது வங்கியில் ரூ.2000/-த்திற்கும், ரூ.3000/-த்திற்கும் பணிபுரிந்து வருகிற தற்காலிக கடைநிலை ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்காக நாம் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். 2009ம் வருடத்தின் மே மாதத்தில், பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கான மாநாடு நடத்தினோம். யார் யாரெல்லாம் , எத்தனை வருடம் பணிபுரிந்தார்கள் என்கிற தகவல்களை சேகரித்தோம்.
அவர்களுக்காக, PGBEA மற்றும் PGBOUவின் தலைவர்கள் அனைவரும் 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோம். 'ரூ.1000/-த்திற்கும், ரூ.2000/-த்திற்கும் பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்கள்' என பத்திரிகை செய்திகள் வெளியாயின. அதனை விளக்கி PGBEA வின் தலைவர்கள் தோழர்கள் காமராஜ், அண்டோ கால்பர்ட் இருவரும் பத்திரிக்கைகளில் எழுதினர். நிர்வாகம் உண்மையை பொறுக்க முடியாமல் இருவரையும் சஸ்பெண்ட் செய்தது. சேர்மன் அறையை முற்றுகையிட்டு போராடினோம். ஹைகோர்ட்டு அந்த சஸ்பென்சன்கள் செல்லாது என தடை விதித்தது. தோழர்கள் காமராஜும், அண்டோ கால்பர்ட்டும் மீண்டும் பணிக்குச் சேர்ந்தனர்.
லேபர் கமிஷனர் முன்பு, 'தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்' என தொழில் தாவா ஏற்படுத்தினோம். ஒரு நிறுவனத்தில் ஒரு வருடத்தில் ஒருவர் 240 நாட்கள் பணிபுரிந்தால் அவர் நிரந்தம் செய்யப்பட வேண்டும் என்பது Industrial Dispute Act, 1947ன் படி உள்ள நியதி. 'அப்படி தற்காலிக ஊழியர்களே இல்லை' என நிர்வாகம் தற்காலிக ஊழியர்களை எந்த அறிவிப்பும் இல்லாமல் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது. அதனை எதிர்த்து நாம் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். தற்காலிக ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புவதற்கு ஹை கோர்ட்டு தடை விதித்தது. லேபர் கமிஷனர் முன்பு நாம் தொடர்ந்த தாவா விசாரணைக்கு வந்தது.
இந்த சமயத்தில், புதிதாக வந்த சேர்மன் திரு.நடரஜன் அவர்களிடம் தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என நாம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். அவரும், நிர்வாகக்குழுவில் இப்பிரச்சினையை முன்வத்து தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த ஒரு தீர்மானத்தை 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றினார். நிர்வாகக்குழுவில் ஐ.ஓ.பியின் மதுரை மண்டல மேலாளராக இருக்கும் திரு.ஞானசம்பந்தம் அவர்களும் மிகவும் உதவிகரமாக இருந்தார். அவர்களை நம் சங்கம் அப்போதும் பாராட்டியது. இப்போதும் பாராட்டுகிறது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, லேபர் கமிஷனரிடம் சொல்லி, 'நாங்கள் ஐ.ஓ.பிக்கு அந்தத் தீர்மானத்தை அனுப்பி இருக்கிறோம். ஐ.ஓ.பியில் இருந்து ஒப்புதல் வந்தவுடன் தற்காலிக கடைநிலை ஊழியர்களை நிரந்தரப்படுத்துகிறோம்' என நிர்வாகத்தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.
இந்த நிலையில்தான் ஐ.ஓ.பியில் தற்காலிக கடைநிலை ஊழியர்களை நிரந்தரப்படுத்தியதில் இருந்த முறைகேடுகளும், மோசடிகளும் வெளிவரத் துவங்கின. ஐ.ஓ.பி யூனியன் (இந்த சங்கத்துடன்தான் Pandyan Grama Bank Workers Union இணைந்திருக்கிறது) தலைவர்கள் பலர் தற்காலிக ஊழியர்களிடம் லட்சக்கணக்கில், பணம் பெற்றதாக எங்கும் செய்திகளாய் பரவத் தொடங்கின. 16க்கும் மேற்பட்ட சங்க பொறுப்பாளர்கள் குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஐ.ஓ.பி நிர்வாகம் 'கிணறு தோண்ட பூதம் வெட்டிய கதையை' உணர்ந்தது. பாண்டியன் கிராம வங்கி நிர்வாகக்குழுவில் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய எடுத்த முடிவுக்கு அனுமதி அளிக்க தயக்கம் காட்டியது. இப்போது ALC முன்பு நாம் நடத்தி வந்த தொழில்தாவாவில், நமது நிர்வாகம், தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது சாத்தியமில்லை என மறுத்தும் விட்டது.
தற்காலிக ஊழியர்கள் இதனால் ஒன்றும் நம்பிக்கை இழந்திட வேண்டியதில்லை. அவர்களுக்காக PGBEAவும் PGBOUவும் சமரசமில்லாமல் முயற்சி செய்யும். நாம் லேபர் கமிஷனரிடம் தெளிவாக சொல்லி இருக்கிறோம். "எங்களுக்கு ஐ.ஒ.பியின் அனுமதி ஒரு பொருட்டில்லை. முதலில் பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்களே இல்லை என்ற நிர்வாகம், பிறகு தற்காலிக ஊழியர்கள் இருக்கிறார்கள்.... அவர்களை நிரந்தரம் செய்ய இருக்கிறோம் எனவும் சொல்லியிருக்கிறது. இதன் மூலம், இங்கு தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது. Industrial Disputes Actன்படி, 240 நாட்கள் ஒருவர் பணிபுரிந்தால் போதும். அந்த அடிப்படையில் பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்' என நாம் சட்டரீதியான வாதங்களை முன்வைத்திருக்கிறோம்.
இப்போது லேபர் கமிஷனர் முன்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. இனி, இந்த வழக்கு லேபர் கோர்ட்டில் தொடரும். அங்கு தற்காலிக ஊழியர்களுக்கு ஆதரவாக நிச்சயம் சாதகமான முடிவு கிடைக்கும், காலதாமதம் ஆகலாம். அவ்வளவுதான்.
அதுவரை, தற்காலிக ஊழியர்களுக்கு இப்போது நாளொன்றுக்கு நிர்வாகம் வழங்கி வரும் ரூ.175/- ஊதியத்தை, ரூ.300/-ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட தொகையை உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறது.
Chief manager, PAD-திருவாளர் சுரேஷின் அடாவடித்தனங்களும், அக்கிரம வார்த்தைகளும்:
புதிதாக பணிக்குச் சேர்ந்த Office Assistant ஒருவர், தன் கிளை மேலாளரிடம் நமது, 'Know your work, know your duty' வழிகாட்டி புத்தகத்தைப் படித்துவிட்டு தனக்கு medical aid-ஆக ரூ.2000/- உண்டா எனக் கேட்டு இருக்கிறார். அந்தக் கிளையில் உள்ள நமது தோழர்கள், "ஆமாம், நீங்கள் ஜூன் மாதம் சேர்ந்திருக்கிறீர்கள். எனவே ஏப்ரல், மே மாதம் நீங்கலாக பத்து மாதத்திற்கு பெற்றுக் கொள்ளலாம்" என சொல்லியிருக்கிறார்கள். எதற்கும் தெளிவு படுத்துக் கொள்வோமே என்று அந்தக் கிளையின் மேலாளர் Chief manager, PAD- திருவாளர் சுரேஷிற்கு போன் செய்து கேட்டு இருக்கிறார். அவ்வளவுதான். "அதற்குள் புதுசா வந்தவருக்கு உடம்பு சரியில்லாமப் போய்விட்டதா? எத்தனை நாள் டிரிட்மெண்ட் எடுத்தார். எத்தன நாள் லீவு போட்டார். எந்த டாக்டர்கிட்ட போனார்..." என பொரிந்து தள்ளி இருக்கிறார். இந்த medical aid என்பது நம் குடும்பத்திற்கு ஆகும் பொதுவான மருத்துவச் செலவு. இதனை வழக்கமாக நாம் அனைவரும் ஏப்ரல் 2ம் தேதியே எடுத்துவிடுவோம். அப்போது ரூல் பேசும் இந்த சுரேஷ் என்ன செய்தாராம். என்ன செய்ய முடியுமாம்? புதிதாக பணிக்குச் சேர்ந்த ஒருவர் இதனைக் கேட்டதுதான் இங்கு அவருக்கு பொறுக்க முடியவில்லை. இதுவா இளைய தலைமுறையை நடத்தும் லட்சணம்? இதுவா வழிகாட்டும் பெருந்தன்மை? இப்படி கடுப்படித்து கடுப்படித்து 2011ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த அருமையான அலுவலர் ஒருவரை, இந்த வங்கியை விட்டு நேஷனல் வங்கியொன்றில் கிளர்க் பதவிக்கு ஒட வைத்தது போதாதா? 'ரூலர் சுரேஷின்' ராஜ்ஜியத்தில் சலுகைகள், உரிமைகள் பற்றி யாரும் கேள்விகள் கேட்டுவிடக் கூடாது!
20 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து, நமது வங்கியில் ஒரு மெஸஞ்சர்த் தோழர் பதவி உயர்வு பெற்று சென்ற வருடம் கிளர்க்காக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். கம்ப்யூட்டரைக் கையாளக் கற்றுக் கொள்வதில் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டு இருக்கிறார். இங்கு பல ஆபிசர்களே திணறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும் உண்மைதானே. இதனை PADக்கு முதலில் தெரிவித்த கிளை மேலாளார், பிறகு சில மாதங்களில், 'அவர் இப்போது கம்ப்யூட்டர் கையாள்வதில் தேர்ச்சி பெற்றுவிட்டார்" என்பதையும் PAD-க்கு தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் அந்தத் தோழர்க்கு கன்பர்மேஷன் கொடுக்காமல், இன்கிரிமெண்ட் நிறுத்தப்பட்டு இருக்கிறது. Chief manager, PAD- திருவாளர் சுரேஷிற்கு அந்தக் கிளை மேலாளர் போன் செய்து கேட்டு இருக்கிறார். அவ்வளவுதான். "ஆமாம் சார், நீங்க ஒருநாள் கம்ப்யூட்டர் அவருக்குத் தெரியவில்லை என்பீர்கள். இன்னொரு நாள் கம்ப்யூட்டர் தெரியும் என்பீர்கள்." என ஆரம்பித்து வியாக்கியானங்களை பொரிந்திருக்கிறார். இத்தனை வருடம் கழித்து வாழ்வில் முதன் முறையாக பிரமோஷன் பெற்று மெல்ல மெல்ல வேலைகளைக் கற்றுக் கொள்ளும் ஒருவரை பரிவுடனும், ஆதரவுடனும் நடத்த வேண்டிய ஒரு முக்கிய துறையின் பொறுப்பாளருக்கு வருகிற சிந்தனையா இது? 'ரூலர் சுரேஷின்' ராஜ்ஜியத்தில் மனிதாபிமானத்திற்கும், இரக்கத்திற்கும் இடமில்லை.
ஒரு மேலாளர், தனது கிளையில் ஆள் பற்றாக்குறை இருப்பதை சொல்லி, "எப்ப சார் ஆள் போடப் போறீங்க" என்று கேட்டு இருக்கிறார். அவ்வளவுதான். "மிஸ்டர் நீங்க இந்த சீட்டுல வந்து உட்கார்ந்து டிரான்ஸ்பர் போடுங்க.." என்று கோபமாக பதில் சொல்லியிருக்கிறார். சரி. இதுபோல தலைமையலுவலகத்திலிருந்து ஒரு கிளை மேலாளருக்கு போன் செய்து, இந்தந்த வேலைகளை நீங்கள் செய்யவில்லை என்றால், "மிஸ்டர் நீங்க வந்து கிளையில் உட்கார்ந்து அதைச் செய்யுங்கள்" எனச் சொன்னால் அது எவ்வளவு மரியாதைக் குறைவானதாகவும், ஒழுக்கமின்மையாகவும் கருதப்படும்? 'ரூலர் சுரேஷின்' ராஜ்ஜியத்தில் ஒழுக்கம் என்பது கீழ் இருப்பவர்களுக்கு மட்டும்தான்.
இப்படி 'ரூலர் சுரேஷை'ப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் செய்யும் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கும் அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. தனக்குக் கீழ் இருப்பவர்கள் யாரும் அவரைக் கேள்வி கேட்டுவிட்டால், அடுத்த கணம் திருவாளர்.சுரேஷிற்கு கோபம் தலைக்கேறிவிடும். உலகின் மிக மோசமான எதிரியாக கேள்வி கேட்டவரை பாவித்து, அவர் மனம் வருந்தும்படி எதாவது செய்ய வேண்டும் என்கிற வெறியோடு சதாநேரமும் சிந்திக்க ஆரம்பிப்பார். நடந்து கொள்வார். குற்றம், குறை காண்பதில் ஒரு அலாதியான சுகமும், துடிப்பும் அவருக்குண்டு. சலுகைகள், உரிமைகளை வெட்டி சாய்ப்பதில் அளப்பரிய ஆனந்தத்தையும், பிறவிப்பயனையும் அடைவார். அதன் மூலம் தன் அறிவை உலகுக்கு காட்டிக்கொள்வார். ஆனால் இதற்கு பேர் வக்கிரம் என்பது அவருக்குத் தெரியாமல் போனதுதான் கொடுமை. அதிகாரத் திமிரிலும், ஆணவத்திலும் அவர் உதிர்த்த வார்த்தைகளை, அவர் செய்த காரியங்களை எல்லாம் நாமும் சகித்து சகித்துப் பார்த்தோம். திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்கள் அளித்தோம். ஆனால் அவர் திருந்துகிற மாதிரி இல்லை. எனவே அவரை இனி தொடர்ந்து அம்பலப்படுத்துவது என முடிவு செய்திருக்கிறோம்.
இந்த வங்கியில் இவரைப் போல எத்தனையோ பேர் அதிகாரத் திமிரில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி அடங்கி, கடைசியில் அடையாளம் தெரியாமல் போனார்கள். அதுதான் இப்படிப்பட்டவர்களுக்கான வரலாறு.
நமது PGBEA, PGBOU வின் மாநாடுகள்:
நமது மாநாடுகள் வரும் ஜூல 6, 7 தேதிகளில் மதுரையில் நடக்க இருப்பதையும், தோழர் முகர்ஜியின் நினைவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதையும் தோழர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். அதற்கான பங்களிப்பாக கிளரிக்கல் தோழர்கள் ரூ.600/-ம், மெஸஞ்சர்த் தோழர்கள் ரூ.300/-ம் , விருதுநகரில் உள்ள நமது சங்கக் கணக்கு 5002ற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நமது அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர்.சையது கான் இந்த மாநாட்டிற்கு வருவது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஜூலை 9 ம் தேதி டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டில் பென்ஷன் வழக்கு வர இருக்கிற சூழலில், அவரது வருகை சிறப்பு பெறுகிறது.
நாம் அனைவரும் ஓரிடத்தில் கூடி நிற்கப் போகிறோம்.
ஒருவரையொருவர் நலம் விசாரித்து உற்சாகம் கொள்ள இருக்கிறோம்.
அன்பை பரிமாறிக் கொள்ளவும், கடந்த காலத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இருக்கிறோம்.
வாருங்கள்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!