16.7.13

Clerks to Officers promotion: ஒரு எச்சரிக்கையும் சில வருத்தங்களும்!



இந்த வருடம்  கிளரிக்கலிலிருந்து ஆபிஸராக பதவி உயர்வு பெற 110 இடங்கள் நிர்ணயிக்கப்பட்டதும், அதற்கு 96 பேரே (நார்மல் சேனல் மற்றும் ஃபாஸ்ட் டிராக் சேனலை சேர்த்து) தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டதும் பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 14ம் தேதி நடந்த பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வில் அந்த 96 பேரில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பது பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். மொத்தம் 13 பேரே கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதிர்ச்சியான தகவல் மட்டுமல்லை இது. பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைவரும் கவலையும், கவனமும் கொள்ள வேண்டிய மோசமான நிலைமை இது.

பொதுவாக ஆபிஸர் பதவி என்பது கிளரிக்கலாக பணிபுரியும் பலருக்கும் கனவாக இருக்கும். அதற்கு  பொருளாதார ரீதியான உயர்வு மட்டும் காரணமில்லை, சமூக ரீதியான அந்தஸ்தும் முக்கியமான காரணம். இந்த ஆபிஸர் பதவிக்கு இதே வங்கியில் எவ்வளவோ போட்டிகள் நடந்திருக்கின்றன. நாலு பேர் தன்னை ‘கிளர்க்’ எனச் சொல்வதை விட, ‘ஆபிஸர்’ எனச் சொல்லும்போது கிடைக்கும் மரியாதைக்கும், மதிப்புக்கும் ஏங்கிய மனோபாவம் அது. ஒருமுறை கிளர்க் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, “நமக்காக இல்லை என்றாலும், நம் குழந்தைகளுகாகவாது ஆபிஸர் ஆகணும். அவர்களது திருமண அழைப்பிதழில் தன் தந்தை ஆபிஸர் என குறிப்பிட வேண்டும் என குழந்தைகள் விரும்புகிறார்கள்” எனச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

இப்பேர்ப்பட்ட ஆபிஸர் பதவி வேண்டாமென்று பலரும் இன்று ஒதுங்கி நிற்க என்ன காரணம்?

கேள்விப்பட்டதிலிருந்து சிந்தனைகள் இதுகுறித்தே சுற்றி வருகின்றன.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறவருக்கு, அந்த வேலை மீது ஒரு பற்றும், பிடிப்பும் இருக்கும். அந்த வேலை தரும் ஆத்ம சுகம், திருப்தி, அந்த வேலை மூலம் தன் வாழ்வில் மேலும் முன்னேற முடியும் என்னும் நம்பிக்கை என எதோ ஒருவகையில், அந்த ஊழியருக்கு வேலை பார்ப்பதற்கான உந்துசக்தி ஒன்று இருக்கும். இந்த உந்துசக்தி அவரின் வளர்ச்சிக்கு மட்டுமில்லை, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் காரணமாகிறது. வேலைபார்ப்பதில் ஈடுபாட்டையும், திறனையும் வளர்ப்பதற்கு இந்த உந்துசக்தியே அடிப்படையாகிறது. ஊதிய உயர்வு பதவி உயர்வு என்பதெல்லாம் அந்த உந்துசக்தியின் சில வடிவங்கள் அல்லது அடையாளங்களாய் இருக்கின்றன.

ஆபிஸர் பதவி வேண்டாமென்று புறக்கணிப்பதன் மூலம், பலருக்கும் இந்த வங்கியில் உந்துசக்தியாக எதுவும் இல்லை என்பது வெளிப்பட்டு இருக்கிறது. ஒருவகையான வெறுமையின்  குறியீடாகவே இதனை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் நம்மை கவலை கொள்ள வைக்கிற விஷயமாகவும் இருக்கிறது.

”என்ன வேலை பார்த்து என்ன?”, “ இருக்கிற வரைக்கும், இப்படியே இருந்து எந்த பொல்லாப்பும் இல்லாம சீக்கிரம் ரிடையர் ஆயிரணும்”, “முழுசா என் கிராஜுவிட்டியை நான் வீட்டுக்கு கொண்டு போக முடியுமான்னு தெரியல..” “லோன் கொடுத்தாலும் தப்பு, கொடுக்கலன்னாலும் தப்பு...”  “பிராஞ்ச்சில் என்ன நடக்குமோ, எது நடக்குமோன்னு  தினம்தினம் கழிக்க வேண்டியிருக்கு..”, “வேலை பாக்குறவங்களுக்கு என்ன  மரியாதை இருக்கு?” இப்படியான குரல்களை அடிக்கடி கேட்க முடிகிறது. இதன் பின்னணியில் நாம் மேலே குறிப்பிட்ட ‘வெறுமை’க்கான அர்த்தங்கள் விளங்குகின்றன.

சமீப காலங்களாக தலைமையலுவலகம்  ஊழியர்களையும், அலுவலர்களையும் நடத்துகிற விதம்  கடும் விமர்சனத்துக்குள்ளாகிக்கொண்டு இருக்கிறது.  பழிவாங்கும் உணர்வுகளும், குற்றம் மட்டுமே காண்கிற போக்குகளுமே மேலோங்கிக் கொண்டு இருக்கின்றன.  ஊழியர்கள் நலனில் அக்கறையற்ற தன்மையும் காலதாமதமும் பலராலும் விமர்சிக்கப்படுகின்றன.

இந்த வங்கியில் பணிபுரிகிற ஊழியர்களையும், அலுவலர்களையும் motivate செய்வதற்கு பதிலாக இந்த நிர்வாகம் அவர்களை terroriseசெய்து கொண்டு இருக்கிறது. Friendlyயான சூழல் இல்லை. எல்லாமும் எல்லோரும் நெகடிவ்வாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், வெறுமைதான் சூழும். இதனால் வங்கியின் வளர்ச்சியும் கேள்விக்குறியாக்கி விடும்.

புதியவர்கள் நம் வங்கியில் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிற சூழலில், இங்கு ஏற்கனவே  வேலை பார்ப்பவர்கள்  சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தால்தான், அது ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். புதியவர்களுக்கு தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். இங்கு நிலைமை அப்படியா இருக்கிறது?

சகலத்தையும் அடைத்துக்கொண்டு, இறுகிப்போய் இருக்கிற போக்குகளை விட்டொழித்து தலைமையலுவலகம் தன்னை புனரமைத்துக் கொள்ளாவிடில், நிலைமை இன்னும் மோசமாகும்.  நட்பும், பிரியமுமாய் மனம் இருந்தால்தான் உறவுகள் விரிவடையும். உந்துசக்திகள் ஏற்படும். இல்லையென்றால் யாருக்கோ வந்ததாய் ஒரு பிடிப்பற்ற, விட்டுப்போன மனோபாவாங்களே தலைதூக்கும். மரங்கள் துளிர்க்கும் இடங்களில் வெறுமை சூழ்வதில்லை. இதை எச்சரிக்கையாக மட்டுமில்லை, மிகுந்த வருத்தத்தோடும் சொல்லிக் கொள்கிறோம்.



2 comments:

  1. If there is too much vacancies on Officer Scale-1 post, please give us a chance for
    the second list interview for Officer Scale-1, Eligible candidates are waiting for
    their jobs.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Comrades! Please share your views here!