19.11.13

Joint Forum of All Trade unions Circular 1/2013



இந்த வங்கியில் அலுவலர்களுக்கு, ஊழியர்களுக்கு விரோதமாக இந்த நிர்வாகம் தொடர்ந்து பல வழிகளிலும் செயல்பட்டு வந்தது. இதுகுறித்து சங்கங்களிடையே தனித்தனி பார்வைகள் இருந்தாலும், அவை இந்த நிர்வாகத்தின் முறையற்ற, மனிதாபிமானமற்ற நடைமுறைகளுக்கு எதிராக இருந்தன. முணுமுணுப்பாக  இருந்த அதிருப்தியும், விமர்சனங்களும் இப்போது ஒருமித்த கருத்தாக எழுந்திருக்கின்றன. அப்ரைசர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் கோபத்தில் அனைத்து ஊழியர்களின் நலன்களும், உரிமைகளும் அடங்கியிருக்கின்றன. அதன் ஆரம்பமே இந்த சுற்றறிக்கை:-
______________________________________________________________________________

Joint Forum of All Trade Unions in Pandyan Grama Bank
(PGBOU, PGBOA, PGBSEWA, PGBWU, PGBEA)
Virudhunagar


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

கடந்த சில தினங்களாக `அப்ரைசர்களுக்கு டிரான்ஸ்பர்` என்னும் செய்தி அடிபட்டுக் கொண்டு இருந்தது. அதுகுறித்து நிர்வாகம் சங்கங்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என நாம் நம்பியிருந்தோம். ஆனால், நிர்வாகம் எதுபற்றியும் கவலைப்படாமல், சிலரது ஆலோசனைகளையும், தவறான வழிகாட்டுதல்களையும் நம்பி, அவசரம் அவசரமாக அப்ரைசர்களை உடனடியாக டிரான்ஸ்பர் செய்வது என முடிவெடுத்தது.

சென்ற சனிக்கிழமை (16.11.2013) அன்று, மண்டல அலுவலகங்களில் இருந்து ஒவ்வொரு கிளைக்கும் போன் செய்து, அவர்களது அப்ரைசரை வேறொரு கிளைக்கு டிரான்ஸ்பர் செய்திருப்பதாகவும், 18.11.2013 அன்று  இன்னொரு கிளை அப்ரைசர் அவர்களது கிளைக்கு வருவார்கள் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. அப்ரைசர்கள் தங்கள் வாழ்வும், எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டதாய் பரிதவித்தனர்.

எந்தக் கேள்வியும் கேட்காமல், சொல்வதையெல்லாம் கேட்கவேண்டிய அவலநிலையில் நமது அப்ரைசர்கள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். கிளைகளில் அவர்கள் ஆற்றிவரும் பணிகள் பல்வேறு வழிகளில் வங்கிக்கு உதவிகரமாக இருந்தபோதிலும், அவர்களை இந்த நிர்வாகம் மரியாதையோடு நடத்துவதிலை என்பதற்கு இந்த மாறுதல்கள் இன்னுமோர் உதாரணம். வாய்மொழியாகவே அப்ரைசர்களை  பணிநியமனம் செய்வது, பணி நீக்கம் செய்வது, மாறுதல் செய்வது என்பது தவறான நடைமுறை. இது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, பல மோசமான அனுபவங்களுக்கு வழிவகுக்கவே செய்யும். வங்கியின் வணிகமும் பெரிதும் பாதிக்கும்.

இந்த நிலையில், பாண்டியன் கிராம வங்கியில் உள்ள அனைத்து சங்கங்களும் அப்ரைசர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து, ஒருமித்த கருத்தோடு இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்பது என முடிவுக்கு வந்தன.  18.11.2013 அன்று வங்கியின் சேர்மனை, அனைத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசினர்.

அப்ரைசர்களை இடமாற்றம் செய்வது என்பது நிர்வாகக்குழுவின் முடிவு என்றும், இதை அமல்படுத்துவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை,  எனவே நிலைமையைப் புரிந்துகொண்டு சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும் என சேர்மன் வேண்டுகோள் விடுத்தார்.

நாம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துச் சங்கங்களும் இணைந்து ஒரு மெமோரெண்டம் கொடுக்கிறோம் என்றும், அதனை நிர்வாகக்குழுவில் வைத்து இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், அதுவரை அப்ரைசர்கள் அவரவர்களுக்குரிய கிளைகளிலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

நிர்வாகத்தரப்பில், மெமொரெண்டத்தை நிர்வாகக்குழுவிற்கு அனுப்பி மறுபரிசீலனை செய்ய சம்மதிப்பதாகவும், அதுவரை அப்ரைசர்கள் புதிய கிளைகளில் பணிபுரிய வேண்டும் எனவும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது.

நிர்வாகத்தின் இந்த நிலைபாட்டிற்கு நமது வருத்தங்களையும், அதிருப்தியையும் தெரிவித்தோம். `எழுத்துபூர்வமான மாறுதல் உத்தரவு இல்லாமல்  அப்ரைசர்களை புதிய கிளையில் பணிபுரிய அனுமதிக்க மாட்டோம் எனவும், அதுவரை அப்ரைசர்கள் இல்லாமல் நகைக்கடன்கள் எதுவும் வழங்க மாட்டோம்` என்றும் நமது முடிவைத் தெரிவித்தோம்.

தோழர்களே!

இதுதான் நிலைமை. இன்று அப்ரைசர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், நாளை இதே நிலைமை நமக்கும் வரும். இங்கு எதற்கும் கேள்வி கேட்க முடியாத அராஜகங்கள் அரங்கேறும். சகலமும் இங்கு வாய்மொழியாகவே அமலாக்கப்படும் என்றால், அதைவிட மோசமான நடைமுறை எதுவும் இருக்க முடியாது. எனவே நம் தோழர்கள் அனைவரும் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டு உறுதியாக நிற்போம்.

எழுத்துபூர்வமான மாறுதல் உத்தரவு இல்லாமல் அப்ரைசர்களை புதிய கிளைகளில் அனுமதிக்க வேண்டாம். அப்ரைசர்கள் இல்லாமல் நகைக்கடன்கள் அளிக்க வேண்டாம். மேலாளர்களே நகைக்கடன்கள் போட்டு வம்புகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கிறோம்.

அநீதிகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்போம்.  தவறான நடைமுறைகளை சரிசெய்வோம். நம் அனைவரின் நலன்களையும்  தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு நல்ல ஆரம்பமாக இது அமையட்டும்.

தோழமையுடன்
 
 
 
GS-PGBOU                   GS-PGBOA             GS-PGB SEWA       GS-PGBWU                 GS-PGBEA





No comments:

Post a Comment

Comrades! Please share your views here!