18.5.14

ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனுக்கு கொம்பு முளைத்து விட்டது!


சில முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து நேற்று (17.05.2014)  பாண்டியன் கிராம வங்கி ஜெனரல் மேனேஜர் மிஸ்டர்.ராமநாதனை PGBEA பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜும், இணைப்பொதுச்செயலாளர் தோழர் அருண்பிரகாஷ் சிங்கும் சந்தித்துப் பேசினர்.

இப்போது ராயவரம் கிளையில் பணிபுரிந்து வரும் தோழர்.ராமசாமி, காரைக்குடி கிளையில்  ஒரு நகைக்கடன் பெற்றிருக்கிறார். அது AJL ஆக இருப்பதால் பிரச்சினை. மாஸ்டர் அடிக்கும்போது தவறுதலாக AJL  அடிக்கப்பட்டு இருக்கிறது என சம்பந்தப்பட்ட அலுவலர் விளக்கம் கொடுத்துவிட்டார். நடந்த தவறுக்கு நான் பொறுப்பல்ல, இதனால் ஏற்படும் வட்டி இழப்பை சரி செய்து விடுகிறேன் என தோழர் ராமசாமியும் எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டார்.  கடந்த காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடந்தபோது இதே போன்று விளக்கம் அளித்து முடிக்கப்பட்டும் இருக்கின்றன. இந்தமுறை இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்ட் இதனை முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இதற்கிடையில் காரைக்குடி கிளை மேலாளர், அந்த நகையை திருப்புவதற்கு அனுமதியளிக்கவில்லை. தலைமையலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தால்தான் அனுமதிப்பேன் என்கிறார். கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த விஷயத்தை நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ‘இதோ முடித்து விடுகிறோம்’, ’இரண்டு நாளில் முடித்து விடுகிறோம்’ என்றார்கள். நாட்கள் கடந்துகொண்டே போனதுதான் மிச்சம். நாம், “முதலில் அந்த நகையைத் திருப்புவதற்கு அனுமதியுங்கள். கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மீதான உங்கள் முடிவை பிறகு கூட எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றோம். ‘அதானே, நகையை திருப்ப அனுமதிக்கலாமே, காரைக்குடி கிளைக்குச் சொல்லி விடுகிறோம்’ என்றார்கள். நடந்தபாடில்லை. நாமும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.

AJL வைத்ததால் வங்கிக்கு வட்டி இழப்பு என்றால், இப்படி 2013 அக்டோபர் மாதத்திலிருந்து குறிப்பிட்ட நகையைத் திருப்ப அனுமதிக்காததால் தோழர்.ராமசாமிக்கு ஏற்படும் வட்டி இழப்புக்கு யார் பொறுப்பு?

இந்த பிரச்சினையை நாம் இன்றும் பேச ஆரம்பித்தோம். உடனே ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன், “ஸாரி, நான் Disciplinary Proceedings குறித்த விஷயங்களை உங்களோடு விவாதிக்கத் தயாரில்லை “ என்றார்.

“இதில் என்ன இருக்கிறது. ஏன் நீங்கள் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டும்?” என்றோம் நாம்.

“இல்ல சார், இனிமேல் எந்த Disciplinary proceedings மேட்டராக இருந்தாலும் டிஸ்கஸ் பண்னுவதில்லை என்றிருக்கிறேன்.” என்றார்.

நாம் உடனே ”நாங்கள் சங்கத்திலிருந்து பேசத்தான் செய்வோம். represent பண்ணத்தான் செய்வோம். முடியாது என்று தாங்கள் சொல்ல முடியாது” என்றோம்.

“நீங்கள் தாராளமாய் represent செய்யுங்கள். ஆனால் அதுகுறித்து discuss செய்ய மாட்டேன்” என்றார்.

“ஏன் டிஸ்கஸ் செய்ய மறுக்கிறீர்கள்?”

“நான் Disciplinary Authorityயாக இருப்பதால் மறுக்கிறேன். Decision எடுத்த பிறகு appeal செய்யும்போது நீங்கள் விவாதித்துக் கொள்ளுங்கள்.”

“எப்போது decision எடுப்பீர்கள்?”

“அதையெல்லாம் சொல்ல முடியாது. வரும்போது வரும். You have to wait. இதனை அப்படியே வெளியில் சொல்லிக் கொள்ளுங்கள்.I am not bothered" என்றார்.

இத்துடன் அந்தப் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. ஆனால் விஷயம் முடியவில்லை. இதுகுறித்து பொது வெளியில் நாம் விவாதித்தாக வேண்டி இருக்கிறது.

Disciplinay Authority  என்றவுடன் தான் வானத்திலிருந்து குதித்தவர் போலவும், கேள்விகளுக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர் போலவும், ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன் ஒரு கருத்தாக்கத்தை இங்கே கட்டியமைக்க முயல்கிறார். கடந்த காலங்களில் இதே மிஸ்டர் ராமநாதன் பல முறை நம்மோடு Disciplinary Proceedings  குறித்த விஷயங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விவாதித்து இருக்கிறார். இப்போது திடுமென கொம்பு முளைத்து இருக்கிறது. இதுதான் விஷயம்.

இங்கே நாம் முதலில் ஒரு விஷயத்தை நம் தரப்பில் தெளிவுபடுத்திக் கொள்வோம். Disciplinary Proceedings குறித்து  PGBEAவுக்கும், PGBOUவுக்கும் தெளிவான பார்வையும் புரிதலும்  உண்டு.

1. அன்றாடப் பணிகளில் நடக்கும் தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தண்டனை வழங்குவது மூலமே தவறுகள் சரிசெய்யப்படும் என்பது சரியான ஒழுங்கு நடவடிக்கை ஆகாது.
2. ஒரு தவறு தொடர்ந்து நடக்கும்போது, அந்தத் தவறில் சம்பந்தப்பட்ட  தனிமனிதர்களுக்கு இருக்கும் பங்கையும் பொறுப்பையும் ஆராய்வதை விட அந்த அமைப்பில் (System) இருக்கும் கோளாறையும் குறைகளையும் கண்டுபிடித்து சரிசெய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதை விட்டு, தனிமனிதர்களை தண்டிப்பதன் மூலம், தவறுகளை சரிசெய்வது என்பது சரியான ஒழுங்கு நடவடிக்கை ஆகாது.
3. ஒழுங்கு நடவடிக்கைகளில் தண்டனை வழங்கும்போது அதிகபட்சம் மனிதாபிமானமும், இரக்கமும்  வேண்டும்.
4.ஒழுங்கு நடவடிக்கைகள்  உரிய காலத்துக்குள்  தொடங்கி முடிக்கப்பட வேண்டும். இதில் காலதாமதம் செய்வது பெரும் மன உளைச்சலையும், அவஸ்தையையும் ஏற்படுத்தும். அதுவே ஒரு தண்டனையாய் இருந்துவிடக் கூடாது.
5.தவறுகளை சரிசெய்துகொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வரும்போது அதற்கான வாய்ப்புகள் தர வேண்டும்.
6. தீர்ப்புகளிலும், தண்டனைகளிலும் பாரபட்சம் இருக்கக் கூடாது.
7. ஒழுங்கு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

இதனை PGBEAவும், PGBOUவும் தொடர்ந்து வலியுறுத்துவோம். பொறுப்பிலிருப்பவர்களோடு விவாதிக்கவேச் செய்வோம். இதில் முரண்பட்ட நிலையை நிர்வாகம் எடுக்கும்போது நிச்சயம் எதிர்ப்போம்.  சரி செய்ய முயல்வோம். அது யாராயிருந்தாலும் சரி.

இதன் அர்த்தம் Disciplinary Authorityயின் சுதந்திரத்துக்குள்ளோ, அதிகார வரம்புக்குள்ளோ, சுயமான முடிவுகளுக்குள்ளோ நாம் தலையிடுவது ஆகாது.  ஒழுங்கு நடவடிக்கையின் முறைகளும் முடிவுகளும் சரியானவையாய், நேர்மையாய், பாரபட்சமற்று இருப்பதற்காகத்தான் நாம் டிஸ்கஸ் செய்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இந்த வங்கியையே நாசமாக்கிக்கொண்டு இருக்கிறது ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனின் தலைமையில் இயங்கும் ஒரு குரூப். ஒழுங்கு நடவடிக்கைகளில் இந்த குரூப் கடைப்பிடிக்கும் நடைமுறைகள், கீழே அலுவலர்கள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலும் கடுமையான வெறுப்பையும், வெறுமையையும் ஏற்படுத்தி வருகிறது. எனவேதான் நாம் இதை டிஸ்கஸ் செய்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கைகளில் காலதாமதம் அளவுக்கு மிஞ்சி இருக்கிறது. தாமதப்படுத்தப்படும் போது நீதியும் அநீதிதான். எனவேதான் நாம் இதை டிஸ்கஸ் செய்கிறோம்.

ரிடையர் ஆன பல தோழர்களின் எதிர்காலத்தை ஒழுங்கு நடவடிக்கை என்ற பேரில் இரக்கமில்லாமல் சிதைத்து போட்டு இருக்கிறது நிர்வாகம்.

விளக்கக் கடிதங்கள் கேட்டு பதில் பெற்ற நிலையில் பல நடவடிக்கைகள் இருக்கின்றன. ரிடையர் ஆவதற்கு முன் ஒழுங்கு நடவடிக்கை ஆரம்பித்து முடிப்பதற்கான அவகாசத்தை வேண்டுமென்றே தர மறுக்கிறது நிர்வாகம்.

சஸ்பென்ஷன் செய்து வருடக்கணக்காகியும் சார்ஜ்ஷீட் கொடுக்காமல்  இருக்கிறது நிர்வாகம்.

என்கொயரிகள் நடத்தி முடிப்பதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயம் செய்வதில்லை நிர்வாகம்.

என்கொயரி முடிந்து வருடக்கணக்கான பிறகும், தீர்ப்புகள் கொடுக்காமல் இருக்கிறது நிர்வாகம்.

ஆனால் இந்த வங்கியில் ஓரே நாளில் Reply to charge sheet பெற்று,  show cause notice வழங்கி, அதே நாளில் அதற்கான பதிலையும் பெற்று, personal hearing எதுவும் இல்லாமல்  அதே ஒரே நாளில் Final orderஐ இதே ஜெனரல் மேனேஜர் வழங்கியதில்லையா? அதை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்த வேகம் தோழர்கள் கிருஷ்ணசாமிக்கும், வள்ளி நாயகம் பிள்ளைக்கும், எம்.எல் ஆர்.மோகனுக்கும், செல்வராஜுக்கும் ஏன் காட்டவில்லை.

தன் பக்கம் நியாயம் இருந்தால் யாராலும், எங்கும் பேச முடியும். மனசாட்சி உள்ளவர்களுக்கும்  நேர்மையாக இருப்பவர்களுக்கும் அந்தத் திராணி இருக்கும். மடியில் கனமிருப்பவனுக்குத்தான்  வழியில் பயமிருக்கும். அதுதான் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன்  டிஸ்கஸ் செய்ய மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியும்.

அதற்காக நாம் டிஸ்கஸ் பண்ணாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் இங்கு விவாதிக்க இருக்கிறோம். எல்லாவற்றையும் அம்பலப்படுத்துவோம். ஒவ்வொன்றிலும் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனின் தலைமையின் கீழ் இயங்கும் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டின் வன்மங்களும், வக்கிரங்களும், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளும் இனி வெளிவரும்.

வாருங்கள் தோழர்களே, நாம் டிஸ்கஸ் செய்வோம்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!