கடந்த செவ்வாய்க்கிழமை, 1.7.2014 அன்று இரவு- நம் அனைவரின் தோழனாக விளங்கிய செல்வகுமார் திலகராஜ் காலமாகி விட்டார். புதன்கிழமை மதியம், கயத்தாறு அருகே அவரது சொந்த ஊரான வேப்பங்குளத்தில் இறுதிச்சடங்கு நடந்தது.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலமற்று இருந்த அவர், இறுதியாக சென்னை சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அந்த பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது.
அதிர்ச்சியிலிருந்தும், வலியிலிருந்தும் விடுபட முடியவில்லை. நினைவுகள் அலைக்கழிக்கின்றன. செல்வகுமார் திலகராஜ் என்னும் போராளி குறித்த அனுபவங்கள் காட்சிகளாக மாறி மாறி தோன்றிக்கொண்டே இருக்கின்றன. நம்மோடு இருந்து அவர் ஆற்றிய காரியங்கள் மறையாமல் இருக்கின்றன.
55 வயதான அந்தத் தோழன், பாண்டியன் கிராம வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு 30 ஆண்டுகளாக நம் அனைவரோடும் நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்.
1989ல் - 44 நாட்கள் வேலை நிறுத்தத்திற்குப் பிறகு - ஊழியர்களும், அலுவலர்களும் ஒன்றாய் இருந்த PGBEAவின் செயற்குழுவில் பங்கேற்றார். தன்னலமற்ற ஈடுபாடும், ஆளுமையும், சமரசமற்ற தன்மையும் அவரை அறிய வைத்தன. PGBEAவிலிருந்து ஆபிஸர்களுக்கென்று PGBOU சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதன் முன்னணித் தலைவரானார். பின்னர் அதன் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.
போராட்டக் காலங்களிலும், நெருக்கடியான தருணங்களிலும் அவர் காட்டிய உறுதி அளவிட முடியாதது. அது மற்றவர்களையும் பற்றிக்கொண்டு நம்பிக்கையளிக்கும் ஆற்றல் கொண்டதாய் இருந்தது. மற்றவர்களுக்கு உதவுவதற்கென்றே பிறந்தவர் போல தனது வாழ்வை அமைத்துக்கொண்டார்.
நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் ஒரு யுத்தமே நடத்தினார் என்பதுதான் சரியாக இருக்கும். பல தோழர்களை நிர்வாகத்தின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றியவர். சட்ட நுணுக்கங்களை அறிந்து, நிர்வாகத்திற்கு எதிராக அவர் எழுப்பிய கேள்விகள் நமது தொழிற்சங்க இயக்கத்தில் வீரியமான பக்கங்கள்.
நிர்வாகத்திற்கு கடும் சவாலாக இருந்த அவரை, பழிவாங்கும் நோக்கத்தோடு குற்றச்சாட்டுகள் சுமத்தி 2012ம் ஆண்டின் இறுதியில் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது. ‘இது முறையற்றது” என நாம் நிர்வாகத்தோடு பேசிய போது விரைவில், அவரை reinstate செய்வதாக சொன்னது. ஆனால் நிர்வாகம் கடைசி வரை அந்த காரியத்தைச் செய்யாமல் இழுத்தடித்தது.
உடல்நலக்குறைவுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளான அவர் இப்போது நம்மோடு இல்லை. இந்த உண்மை பெரும் சுமையாய் அழுத்துகிறது.
பாண்டியன் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தில் அவருக்கென ஒரு முக்கிய இடம் உண்டு. அவர் ஒரு சகாப்தம்!
அவருக்கு நம் அஞ்சலியையும், அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்
அந்த மகத்தான போராளி நம்மோடு இப்போதுஇல்லை என்கிற பேருண்மையே நம்மை வருத்தத்திலும்,துயரிலும் ஆழ்த்துகிறது.அன்னாரின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்/
ReplyDeleteIt is a painful shock. We did not find any mean to come across.His disappearance reminds us the all pending as well as upcoming issues that need comprehensive efforts to protect employees rights
ReplyDelete