“மொட்டைக் கடிதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். நாம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும் பட்சத்தில், இவைகளை புறந்தள்ளி விடலாம்” என நாம் பொதுவாகச் சொன்னோம்.
அதன்பிறகு, அவ்வப்போது “இப்போது ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது”, “இரண்டு நாளைக்கு முன்பு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது”, “எதையெடுத்தாலும் மொட்டை போட்டா, என்ன செய்றது?” என்று நிர்வாகத் தரப்பில் சொல்லி வருத்தப்படுவதும் கையைப் பிசைவதும் தொடர்ந்தது.
நமது பிரச்சினைகளைப் பேசச் செல்கிற நம்மிடம், நிர்வாகம் தனது பிரச்சினையாக ‘மொட்டை’களை பேசியது. “உங்களில் ஒருவர்தான் இதனைப் போடுகிறார்கள்” என நம்மிடம் இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வார்த்தைகளை நிர்வாகம் ஒருநாள் உதிர்த்தது.
நாம் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. மொட்டைப் போடும் வழக்கத்தை நாம் கண்டிப்பதாகவும், நிர்வாகம் அவைகளை கணக்கிலெடுக்க வேண்டாம் என்றும் சொன்னோம். “நமக்கு மட்டும் போட்டால் பரவாயில்லை, ஐ.ஓ.பிக்கு, நபார்டுக்கு, ரிசர்வ் வங்கிக்கு எல்லாம் போடுகிறார்கள், அங்கிருந்து கமெண்ட்ஸ் கேட்கிறார்கள். என்ன செய்ய” என புலம்பத் தொடங்கியது நிர்வாகம்.
சமீபத்தில், இந்த ‘மொட்டை’யின் பாதிப்பு வேறு விதமாக உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஒரு தோழரின் அப்பீல் குறித்து பேசினோம். “என்ன செய்ய அது சம்பந்தமாக ஒரு மொட்டை வந்திருக்கிறது” எனச் சொல்லப்பட்டது. ஓய்வு பெற இருக்கும் ஒரு தோழருக்கு பாதிப்புகள் வந்துவிடக் கூடாது என்று பேசினோம். “அதற்கும் ஒரு மொட்டை வந்திருக்கு. என்ன செய்ய” என நிர்வாகம் தனது ‘மொட்டை’ பல்லவியைப் பாடியது!
ஒரு சமயத்தில் மொட்டைகளை தன்னைத் தாக்கும் ஆயுதங்களாக பாவித்த நிர்வாகம், இப்போது தன்னைப் பாதுகாக்கும் கவசங்களாகவும், கேடயங்களாகவும் புனரமைத்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகும் ‘மொட்டை’களைப் பற்றி வெளியே, வெளிப்படையாக நாம் பேசாமல் இருக்க முடியாது.
இந்த வங்கியில் ‘மொட்டை’ ஒரு சாபக்கேடு என்பதும், அதற்கென ஒரு தனி வரலாறு உண்டு என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், பொதுவாக இந்த மொட்டைகள் குறித்த சில பார்வைகள் உண்டு.
ஒரு தவறை நேரடியாகத் தட்டிக் கேட்க முடியாமல், எதாவது ஒரு வடிவில் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறவர்கள் ‘மொட்டையை’ தங்களுக்குரிய வழியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் கோழைகள்.
அடுத்ததாக தங்களுக்குப் பிடிக்காதவர்களை பொதுவில் அவமானப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் ‘மொட்டையை’ தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள் வக்கிரமானவர்கள்.
இன்னும் சிலர் கூடவே இருந்து ஒரு விஷயத்தை ஆதரித்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் அதனை எதிர்ப்பதற்கு ‘மொட்டையை’ பயன்படுத்துகிறார்கள். இவர்கள் துரோகிகள்.
மொட்டைகளின் காணப்படும் விஷயங்களைப் பொறுத்து அவர்கள் கோழைகளா, வக்கிரமானவர்களா அல்லது துரோகிகளா என்பதை அறிய முடியும். எது எப்படியானாலும் நேர்மையானவர்கள், நிமிர்ந்து நிற்கிறவர்கள் ‘மொட்டை’ போடும் காரியத்தைச் செய்ய மாட்டார்கள்.
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இந்த வங்கியில், அதிகமாக மொட்டை வந்த காலங்கள் புரியும். எப்போதெல்லாம் வங்கியின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் அருகில் குறிப்பிட்ட சிலரை வைத்துக் கொண்டு அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், அவர்களை கலந்து முடிவெடுப்பதும்,அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதும் நடக்கிறதோ, அப்போதெல்லாம் ‘மொட்டை’களின் வரத்து அதிகமாகிறது.
அதுபோல எப்போதெல்லாம், வங்கியின் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் எந்தக் குறிப்பிட்ட சிலரையும் தங்கள் அருகில் வைத்துக் கொள்ளாமல், சகலரிடமும் சம தூரத்தையும், சம நெருக்கத்தையும் காட்டுகிறார்களோ அப்போது ‘மொட்டைகள்’ காணாமல் போய்விடுகின்றன.
ஆக, மொட்டைகளை வரவைப்பதும், வரவிடாமல் தடுப்பதும் வங்கியின் உயர்பொறுப்பில் இருப்பவர்களின் கைகளில்தான் இருக்கின்றன. மொட்டைகளின் ராஜ்ஜியத்தை நிர்மூலமாக்கும் சாமர்த்தியம் இதுதான்!
அதைவிடுத்து மொட்டையைப் பார்த்து புலம்புவதும், வேதனைப் படுவதும் பிறகு அதிலேயே குளிர் காய்வதும் காரியசித்தி ஆகாது!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!