கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பத்தாவது இருதரப்பு ஒப்பந்தத்தை அமல் படுத்துவதில் மத்திய அரசும், நபார்டும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன.
கிராம வங்கிகள் ஆரம்பிக்கப் பட்ட போது, அவர்களுக்கு வணிக வங்கியின் ஊதியம் வழங்கப்படவில்லை. மாநில அரசுகளின், சில பதவிகளை, இங்கு பணிபுரிபவர்களுக்கு இணையாக விதிக்கப்பட்டு, அதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டு வந்தன. மாநிலத்துக்கு மாநிலம் ஊதிய முரண்பாடுகள் இருந்தன.
இதனை எதிர்த்து, All India Regional Rural Bank Employees Association (AIRRBEA) 1979ல் `சம வேலைக்கு சம ஊதியம்` என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், கிராம வங்கி ஊழியர்களுக்கு, வணிக வங்கி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து போராடத் துவங்கியது.
மகஜர்கள், பாராளுமன்றத்தில் கேள்விகள், ஆர்ப்பாட்டங்கள் எனத் துவங்கி எத்தனையோ டெல்லி பேரணிகள், எண்ணற்ற வேலை நிறுத்தங்கள் என உக்கிரமாக கிளர்ந்து எழுந்தனர் கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும். நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து, சகல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உச்ச நீதிமன்றம், மாண்புமிகு நீதிபதி ஓபுல்ரெட்டி தலைமையில், இந்த வழக்கை ஆராய்ந்து முடிவெடுக்க பிரத்யேகமாக ஹைதராபாத்தில் ஒரு டிரியூப்னல் அமைத்தது.
டிரியூப்னலில், AIRRBEA, நியாயத்தை நிலைநாட்ட செய்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. பல ஆயிரக்கணக்கான ஆவணங்களையும், நூற்றுக்கணக்கான சாட்சியங்களையும் முன் வைத்தனர். மத்திய அரசு, நபார்டு, ஸ்பான்ஸர் வங்கி அதிகாரிகள் நமக்கு எதிராக சாட்சியங்கள் அளித்தனர்.
1991ல், கிராம வங்கி ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது என டிரியூப்னல் தீர்ப்பு வழங்கியது. டிரியூப்னல் அமைக்கப்பட்ட 1987ல் இருந்து கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊதியம் கொடுக்க வேண்டும் என தெளிவாகச் சொல்லியது.
ஆனாலும், அந்த தீர்ப்பின் படி வணிக வங்கி ஊதியம் வழங்காமல், எப்படியாவது குறைக்க வேண்டும் என Equation committee என ஒரு கமிட்டியை நபார்டு அமைத்து, ஊதிய நிர்ணயம் செய்ய அந்தக் கமிட்டி வழிகாட்டும் என அறிவித்தது. கிராம வங்கி ஊழியர்களின் பதவிகளைப் பொறுத்து அவர்களது கடந்த கால பணிக்காலத்தை, 3:1 என்றும் 5:1 என்றும் சுருக்கி, ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என Equation committee சொல்லியது.அதன்படி 1987க்கு முன்னால் கிளர்க்குகளுக்கு பத்து வருடங்கள் பணி செய்தால் இரண்டு இன்கிரிமெண்ட்களும், ஆபிஸர்களுக்கு மூன்று இன்கிரிமெண்ட்களும் வழங்கப்பட்டு வணிக வங்கியின் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
அப்போது வணிக வங்கியில் நான்காவது இருதரப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டு வந்தது. பல அலவன்சுகள் கிராம வங்கிகளுக்கு மறுக்கப்பட்டன. AIRRBEA தலைமையில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. நிலமையை சமாளிக்க நபார்டு உடனடியாக `குப்தா கமிட்டி` என ஒன்றை அமைத்து, எந்தெந்த அலவன்சுகள் கொடுக்கலாம் என வழிகாட்டச் சொன்னது. அதன் அடிப்படையில் பத்தாவது இருதரப்பு ஒப்பந்தத்தில் வழங்கப்படும் அலவன்சுகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட கிராம வங்கிகள் அந்தந்த ஸ்பான்ஸர் வங்கியை கலந்துகொண்டு முடிவு செய்ய வேண்டும் என குப்தா கமிட்டி வழிகாட்டியது. நாம் அதனை எதிர்த்த போதிலும் அதுவே நடைமுறையாய் ஆனது.
பரவாயில்லை, இனி வணிக வங்கியில் ஊதிய உயர்வு ஏற்படும் போதெல்லாம் கிராம வங்கிகளுக்கும் தானாக அமலுக்கு வந்துவிடும் என கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் நினைத்தனர். ஆனால் அது நிலைமையாக இல்லை. வணிக வங்கிகள் IBAவின் உறுப்பினர்களாக இருக்கின்றன. IBA வோடு தொழிற்சங்கங்கள் பேசி, ஒப்பந்தம் ஏற்ப்பட்டவுடன், அந்தந்த வங்கிகள் அதனை அமல் செய்யும் அதிகாரம் கொண்டிருக்கின்றன. ஆனால் கிராம வங்கிகளுக்கு அப்படியில்லை. RRB ACT, sec 17ன் பிரகாரம், ஊதிய நிர்ணயம் செய்யும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது.
வணிக வங்கியில், 5 வது இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டவுடன், மத்திய அரசு உரிய ஆணை வெளியிடாமல் இழுத்தடித்தது. AIRRBEA தொடர்ந்து பேசி வந்தது. அதிகமான காலதாமதம் ஆனவுடன், போராட்டங்கள் மீண்டும் ஆரம்பித்தன. மத்திய அரசும், நபார்டும் மௌனம் சாதித்தன. டிரியூப்னல் தீர்ப்பை மதிக்கவில்லை என நாம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.
இதற்கிடையில் மத்திய அரசும், நபார்டும் மஹாலிக் கமிட்டி என ஒன்றை அமைத்து, கிராம வங்கி ஊழியர்களின் ஊதியம் குறித்து ஆராய்ந்து சொல்லு்மாறு பணித்தது. கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களின் ஊதியம் என்றில்லாமல், புதிதாக ஒரு இரண்டும் கெட்டான் ஊதியத்தை மஹாலிக் கமிட்டி முன்மொழிந்தது. அந்தக் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்தக் கூடாது என AIRRBEA வழக்குத் தொடுத்து தடை செய்தது.
மறுபுறம், ஐந்தாவது இருதரப்பு ஒப்பந்தத்திற்கான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. வருடங்கள் கடந்தபடி இருந்தன. மீண்டும் வேலைநிறுத்தங்கள், டெல்லி பேரணிகள் என AIRRBEA இயக்கம் நடத்திக் கொண்டே இருந்தது. வணிக வங்கி ஊழியர்களுக்கு ஆறாவது இருதரப்பு ஒப்பந்தமும் அமல் செய்யப்பட்டது. நாம் சளைக்காமல், சோர்ந்து போகாமல் போராடினோம். இறுதியாக சுப்ரீம் கோர்ட், கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊதியம் கொடுக்க வேண்டும் என மீண்டும் உறுதி செய்தது. அதன் விளைவாக, கிராம வங்கி ஊழியர்களுக்கும் , அலுவலர்களுக்கும் 5 வது மற்றும் 6 வது இருதரப்பு ஒப்பந்தங்கள் சேர்ந்து அமல்செய்யப் பட்டன.
தொடர்ந்து 7, 8, 9 வது இருதரப்பு ஒப்பந்தங்கள் அமல் செய்வதில் பெரிய பிரச்சினைகள் எழாமல் இருந்தது. வணிக வங்கிகளில் ஊதிய உயர்வு ஏற்பட்டவுடன் கிராம வங்கி தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் நிதியமைச்சக அதிகாரிகளை சந்தித்துப் பேசுவார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு, ஆணை வெளியிடும். அதனை நபார்டு அனைத்து கிராம வங்கி நிர்வகங்களுக்கும் சுறறிக்கையாக் அனுப்பும். பின்னர், அந்தந்த கிராம வங்கி நிர்வாகங்கள் அதனை அமல்படுத்தும். ஒரு சில மாதங்கள் மட்டுமே கால தாமதம் ஆகும்.
பத்தாவது இருதரப்பு ஒப்பந்தத்தில் மீண்டும் மத்திய அரசும், நபார்டும் வேதாளமாய் முருங்கை மரத்தில் ஏறுவதற்கு புறப்பட்டிருக்கின்றன. இந்த தடவை வணிக வங்கிகளின் ஊதியங்களில் Basic Pay+DA_+HRAவில் 2% மட்டுமே ஊதிய உயர்வு, கணிசமான ஊதிய உயர்வு என்பது 7% வழங்கப்படும் special allowanceல் தான் இருக்கிறது. அந்த அலவன்சை கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்குவதில் மத்திய அரசும், நபார்டும் யோசிக்கின்றன. AIRRBEA தலைவர்களும், UFRRBU சார்பிலும் நிதியமைச்சக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இந்த சதி வெளிப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே ஜூன் 30ம் தேதி கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் தேசம் முழுவதும் ஒன்றாய் நின்று ஒரு மகத்தான வேலை நிறுத்தம் செய்திருக்கின்றனர். மத்திய அரசும், நபார்டும் இறங்க வர மறுக்கின்றன.
மாறாக, பழைய குருடி கதவைத் திறந்த கதையாய், நபார்டு வழக்கம் போல ஒரு small committee அமைத்து, கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஊதியம் குறித்து ஆராய்ச்சி நடத்துமாறு இந்த ஜூலை 11ம் தேதி உத்தரவு போட்டு இருக்கிறது. GM.CBI, DGM.BOI and two Chairman of Sarva Haryana Gramin Bank and Andhra Gramin Vikas bank ஆகியோர்தான் அந்த small committee உறுப்பினர்கள்.
கமிட்டி போட்டாலே, மத்திய அரசும், நபார்டும் நமக்கு எதிரான ஒரு காரியத்தை செய்யப் போகிறார்கள் என அர்த்தம். கடந்த கால Equation committee, Gupta Committee, Mahalik Committee தரும் படிப்பினைகள் அதுதான்.
எனவே, விழித்துக் கொள்வோம் தோழர்களே!
ஒறுமையுடன் கிளர்ந்தெழுவோம் தோழர்களே!
போராட்டங்கள் நம்மை அழைக்கின்றன.
ஆயத்தமாவோம் தோழர்களே!
முருங்கை மரத்தை வெட்டுவதற்கு வாளோடு விக்கிரமாதித்தன்களாய் புறப்படுவோம் தோழர்களே!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!