இது எனது தனிப்பட்ட அனுபவம் அல்லது கதை மட்டுமல்ல.
கால வெளியின் மாற்றங்களோடு நீங்கள் செய்யப்போகும் பயணம்.
அறியாததிலிருந்து அறிவதற்கு யத்தனிக்கும் முயற்சி.
- மாதவராஜ்
1983 நவம்பர் 30ம் தேதி இரவில் இருந்த அந்த சாத்தூர் வேறு. இந்த இருபத்தேழு வருடங்களில் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. பிரதான சாலையில் அங்கங்கு டாடா இண்டிகா போன் செண்டர்கள். மூன்று அடுக்கு ஆஸ்பத்திரிகள். புதியக் கட்டிடங்களில் 'மைக்ரோ பிரெய்ன்' இண்டர்நெட்
மையங்கள் முளைத்திருக்கின்றன. தீப்பெட்டி ஆபிஸ் இருந்த இடத்தில் சி.எஸ்.சி கம்யூட்டர் மையம். பளீரென விளம்பர போர்டுகள் மின்னுகின்றன. மக்கள் வேக வேகமாய் பாய்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாம் முன்னை விட புழுதியாகி இருக்கிறது. வெம்பக்கோட்டை சாலை அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருக்கிறது. ஜவுளிக்கடைகள், பாட்டா செருப்புக்கடை, புரொபசனல் கூரியர் என வரிசையாய் கடைவீதி ஆகியிருக்கிறது. முன்பெல்லாம் வெறும் இருட்டும் முள்செடியுமாய் இருந்த இடம் இது. பைபாஸுமே அப்படித்தான் இருந்தது. நான்குமுனைச் சாலை காலங்களை விழுங்கி நீண்டிருக்க, 'அக்வா அரீனா' என்று நீச்சல் குள விளம்பர போர்டு என்று பெரிதாக நிற்கிறது. நிப்புக்கம்பெனிகள் காணாமல் போய்விட்டன. சிட்பண்ட் கம்பெனிகள் வந்திருக்கின்றன. பியூட்டி பார்லர்கள், ஜீம் கிளப்கள் அழைக்கின்றன. கொஞ்சம் புராதனமும், கிரமத்துச் சாயலும் படிந்திருந்த அந்த சாத்தூர் இன்று பழைய கதைதான்.
அடுத்த நாள், டிசம்பர் 1ம் தேதி பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிய அழைப்பு வந்திருந்தது. சென்னையில் எந்த வேலையும் பார்க்காமல் அலைந்துகொண்டும், தவித்தும் கொண்டிருந்த நாளில் திடுமென வந்த அந்தக் கடிதம் சந்தோஷம் தந்திருந்தது. திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ முடித்த கையோடு தேர்வு எழுதி, அடுத்த ஆறு மாதத்தில் இண்டர்வியுக்குப் போன பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து வந்திருக்கிறது. அண்ணன், அண்ணியிடம் விடைபெற்றுக் கொண்டு ஆறுமுகனேரி சென்று அம்மாவின் முத்தங்களைப் பெற்று சாத்தூரில் வந்து நின்றிருந்தேன். அப்போது சாத்தூரில்தான் பாண்டியன் கிராம வங்கியின் தலைமையலுவலகம் இருந்தது.
சென்னையில் அம்முவிடம் சொல்லிவிட்டு வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சாம்சன் ரப்பர் இண்டஸ்ட்ரீஸில் வேலை பார்த்து எச்சி தெறிக்க இங்கிலிஷ் பேசிக் கொண்டிருந்த கமர்ஷியல் மேனேஜரிடம் கோபப்பட்டு வெளியே வந்து கொஞ்ச நாள் சும்மாயிருந்தேன். யுனைட்டெட் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜண்ட்டாக சேர்ந்து கார் வைத்திருக்கும் வீடுகளையும், ஆட்களையும் பார்த்துக் கொண்டு அலைந்து திரிந்தேன். அப்போதெல்லாம் அண்ணனின் ஆதரவும், பக்கத்து வீட்டில் இருந்த அம்முவின் பார்வையுமே ஆறுதலாயிருந்தன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் 'ஆல் த பெஸ்ட்' என்று அண்ணன் சொன்ன போது அவனைக் கட்டிப் பிடித்து அழ வேண்டும் போல இருந்தது.
டீலக்ஸ் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி, சாத்தூரில் கழித்த அந்த முதல் நாள் இரவு தூக்கமில்லாமல் கடந்த கால நினைவுகளோடு கழிந்தது. அண்ணன், தங்கை, தம்பி என ஐந்து பேரோடு ஒரே வீட்டில் கிடந்து கொண்டாடிய நாட்களின் நினைவுகளில் அடங்கியிருந்த நிசப்தத்தை வெளியே இரைந்து கொண்டிருந்த வாகனங்களின் இரைச்சல் அவ்வப்போது உடைத்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் சுருதி இப்படித்தான் இருக்கிறது. 'யார்ட்டயும் கோபப்படாதய்யா...வேலைதான் முக்கியம். வாரத்துக்கு ஒருநாள் வந்து அம்மாவை பாத்துட்டு போ." சொல்லியபடி அம்மா சூட்கேஸிற்குள் திருச்செந்தூர் கோவில் திருநீறுப் பொட்டலத்தை வைத்திருந்தார்கள்.
காலையில் சிவன் கோவில் தெற்கு ரத வீதியில் இருந்த தலைமையலுவலகத்திற்குப் போனேன். ஒரு பழைய காலக் கட்டிடம். வாசல் அருகே மாடிக்குச் செல்வதற்கு குறுகிய மரப்படிகளும், பிடித்துச் செல்ல ஒரு கயிறும் தொங்கிக்கொண்டிருந்தது. 'பாண்டியன் கிராம வங்கி' என்று பெரிய கொட்டை எழுத்துக்களில் பெயரும் அதன் அடியில் 'முற்றிலும் இந்திய அரசு, தமிழக அரசு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குச் சொந்தமானது' என அடைப்புக் குறிக்குள் இருந்தது. அதுபற்றியெல்லாம் எந்த ஞானமும் அப்போது பெரிதாக இல்லை. வேலை கிடைத்ததைப் பற்றி யாரும் கேட்டால் திணற வேண்டி இருந்ததை அந்த ஒரு வாரத்துக்குள் அனுபவித்திருந்தேன். பாண்டியன் கிராம வங்கி என்றால் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதென்ன கிராம வங்கி என்று அடுத்த கேள்வி. 'பாண்டியன் வங்கிதான் ஏற்கனவே கனரா வங்கியாயிடுச்சே' என்று சந்தேகங்கள். ஐ.ஓ.பிக்குச் சொந்தமானது என்று சொல்லித் தப்பிக்க வேண்டியிருந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இந்திய நகரங்கள் முழுவதும் அறிந்து வைத்திருக்க முடிகிறது. அப்படி மெகா விளம்பரங்கள் சகல இடங்களிலும் வியாபித்து விடுகின்றன. ஆனால் 1977ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வங்கி அதே ஊரில் இருப்பவர்களுக்கு தெரியாமல் போகிறது. விசித்திரம்தான்.
ரோனியோ மெஷினில் பேப்பர் வைத்துக் கொண்டிருந்த ஒருவர் விசாரித்து விட்டு 'அந்த சோபாவில் போய் இருங்க' என்றார். அன்றைக்கு மொத்தம் 14 பேர் வேலைக்குச் சேர வந்திருந்தார்கள். உள்ளே டைப்ரைட்டர் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. சிறிதுநேரத்தில் பணியாளர் துறையில் கூப்பிட்டார்கள். நிறைய பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார்கள். இரண்டாயிரம் ருபாய் டெப்பாசிட் கட்டச் சொன்னார்கள். பிறகு கீழே காத்திருக்கச் சொன்னார்கள்.. யார் யாருக்கு என்னென்ன கிளைகள் என்பதைச் சாயங்காலம் சொல்வார்களாம். எங்களோடு இருந்த சண்முக சுந்தரம்1 சாத்தூர்க்காரர் என்பதால் இந்த வங்கியைப் பற்றி அவருக்கு நிறைய தெரிந்திருந்தது. ஏற்கனவே இங்கு பணிபுரிந்த பலர் அவருக்கு நெருக்கமானவாயிருந்தார்கள். 350ருபாய் basic pay என்பதும் மொத்தம் கையில் 610 சம்பளமாகக் கிடைக்குமென்பதும் அவர் சொல்லித்தான் தெரிந்தது. லஷ்மிபுரம், பொட்டகவயல் என்று பல ஊர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். பஸ் வசதி கிடையாதாம். தங்குவதற்குக் கூட இடம் இருக்காதாம். நல்ல தண்ணி கிடைக்காதாம். ஒவ்வொன்றாக கேள்விப்பட பட பலருடைய முகங்கள் மாறிவிட்டிருந்தன. அங்கே போஸ்டிங் போட்டுவிடுவார்களோ என்று பயம் வந்திருந்தது. ஒருவர் சொன்னார். "அங்கேயும் மனுஷங்க தான இருக்காங்க”.
மதியம் மூன்று மணி போல இருக்கும். சில பேர் சைக்கிளில் வந்தார்கள். அவர்களுக்கும் சண்முகசுந்தரம் தெரிந்திருந்தது. பேசிக்கொண்டு இருந்தார்கள். 'இவர்தான் மாரியப்பன்2. இங்க pandyan grama bank employees associationல பொதுச்செயலாளராய் இருக்கிறார்' என்று சண்முகசுந்தரம் எங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். அவர்கள் கொடுத்த ஒரு மனுவில் கையெழுத்து போட்டு விட்டு 'இங்க இருக்குற ஒரே யூனியன். அதுல மெம்பரா சேருங்க' என எங்களிடமும் மனுக்களை கொடுத்தார். கொஞ்ச பேர் மறுத்தார்கள். 'கன்பார்ம் ஆகட்டும் பாக்கலாம்' என்றார்கள். சிலர் தயங்கிவிட்டு 'வீட்ல கேட்டுச் சொல்றேன்' என்றார்கள். மாரியப்பன் அவர்களிடம் யூனியன் பற்றி எடுத்துச் சொன்னார். பயம் வேண்டிதில்லை எனவும், யூனியன் பாதுகாப்பாய் இருப்பதற்குத்தான் என்றும் அமைதியாக சொல்லிக் கொண்டிருந்தார்.
யூனியன் என்பது பயங்கரமான ஒரு விஷயமாகத்தான் எனக்குள்ளும் படிந்திருந்தது. காந்தி, நேரு, காமராஜ் படங்களோடு நிறைந்திருந்த வீடும், நான் அறிந்திருந்த மனிதர்களும் வேறு எதை போதித்திருக்க முடியும்? யூனியன் ஸ்டிரைக் செய்யும் என்பதுதான் ஒரே விஷயமாக அறிந்திருந்தேன். கல்லூரியில் ஒரு தடவை ஹாஸ்டல் பிரச்சினைக்காக ஸ்டிரைக் நடந்தபோது பத்து பனிரெண்டு பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டது நினவிலிருந்தது. கலவரப்பட்டுக் கொண்டிருந்தபோது "சரி அவங்கள விடுங்க..." என்று மாரியப்பனை அழைத்து "இவர் பேரு மாதவராஜ். உறுதியா நம்மக் கிட்ட மெம்பராவார்..' என்று சொல்லிக் கொண்டே அந்த விண்ணப்பத்தை என்னிடம் நீட்டினார். சட்டென்று நானும் கையெழுத்துப் போட்டு கொடுத்து நிமிர்ந்தேன். கைகுலுக்கினார்கள். கொஞ்ச நேரம் பேசியிருந்து விட்டு போனார்கள். என்ன நடந்தது எனக்குள் என்று தெரியவில்லை. பலர் முடியாது என்று மறுக்கிற போது அதற்கு மாறாய் நடந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதா? அப்படி கையெழுத்து போட்டதால் எதோ சாகசம் செய்ததாய் மற்றவர்களுக்குத் தோன்றட்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமா? மிக நம்பிக்கையோடு என்னிடம் வந்த சண்முகசுந்தரம் ஏமாற்றம் அடையக் கூடாது என்பதாலா? ஆனால் நான் கையெழுத்து போட்ட பிறகு மேலும் சிலர் கையெழுத்து போட்டார்கள்.
பொது மேலாளர் ஒவ்வொருவராய் அழைத்து அவர்கள் பணிபுரிய வேண்டிய கிளைகளுக்குரிய போஸ்டிங் கடிதங்களைக் கொடுத்து அனுப்பி வைத்தார். ஒருவர் திரு உத்திரகோச மங்கை என்றார். ஒருவர் பரமக்குடி என்றார். எப்படி போக வேண்டும் என பரிதாபமாக தலைமையலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வழி சொல்லியபடி "அங்கு அவர் வேலை பார்க்கிறார்", "இவர் மேனேஜர், நன்றாக கவனித்துக் கொள்வார்" "அங்கு தங்கிக் கொள்ளலாம்" என தைரியம் சொல்லிக்கொண்டிருந்தனர். நான்தான் கடைசியாக அழைக்கப்பட்டேன். "உங்கள் கையெழுத்து அழகாகவும் தெளிவாகவும் இருப்பதால் உங்களுக்கு ஹெட் ஆபிஸ்ல ஏ.சி.டி போட்டிருக்கிறோம். நல்லா வேலை பாருங்க" என்று கைகொடுத்து அனுப்பினார். ஏ.சி.டி என்றால் அக்ரிகல்ச்சரல் க்ரெடிட் டிபார்ட்மெண்ட் என்பது அடுத்த நாள்தான் தெரிந்தது. அந்த ஆபிஸ் பிள்ளையார் கோவில் தெருவில் தனியாக இருக்கிறது என்றார்கள்.
தலைமையலுவலகத்தில் வேலைபார்த்த மகரபூஷணம்3 எங்களோடு மணிசங்கர் லாட்ஜில் வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்று அழைத்தார். டீலக்ஸ் லாட்ஜில் ரூமை காலி செய்துவிட்டு மணி சங்கர் லாட்ஜ் சென்றேன். மாரியம்மன் கோவில் தெரு வழியாக நீண்ட குறுகிய சந்தில் கடைசியில் ஊருக்குள் இருந்தது. அது லாட்ஜ் போல இல்லை. எதோ போர்ஷன் வீடுகள் போல இருந்தன . மகரபூஷணம், நெல்லையப்பன், சிதம்பரம், பாலுவோடு ஐந்தாவது நபராக அந்த போர்ஷனில் சேர்ந்திருந்தேன். ஒவ்வொரு போர்ஷனும் இரண்டு இரண்டு அறைகளோடு இருக்கும். யார் யாரையெல்லாமோ அறிமுகப்படுத்தினார்கள். ஹைவேஸ் என்றார்கள். டெலிபோன்ஸ் என்றார்கள். ஈ.பி என்றார்கள். இரவில் நாடார் மெஸ்ஸுக்கு அழைத்துச் சென்று என் பெயரில் கணக்கு ஒன்று ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ரூமில் வைத்து சிகரெட் பிடித்தது பிடிக்கவில்லை. மகரபூஷணம் "சார் வெளியே போய் குடிங்க" என்றார். அன்று இரவில் அவர்கள் அறிந்திருந்த பாண்டியன் கிராம வங்கிக் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தனர். சில விஷயங்கள் புரிந்தன. சில புரியவில்லை. ஊர், சென்னை ஞாபகங்களே உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருந்தன. அம்முவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. காலையில் ஆற்று மணலில் தோண்டிய ஊற்றுக்களில் குளிப்பதற்கு வாளியோடு அழைத்துச் சென்றார்கள்.
முதல்நாள் வேலை ஆரம்பமாகியது. கிளைகளின் முகவரிகளைக் கொடுத்து படிக்கச் சொன்னார்கள். அப்போது பிரிக்கப்படாத திருநெல்வெலி மாவட்டமும், இராமநாதபுர மாவட்டமும் மட்டுமே பாண்டியன் கிராம வங்கியின் பரப்பாயிருந்தன. நூற்று எட்டு கிளைகளே இருந்தன. மதியத்திற்கு மேல் நிறைய கவர்களைக் கொடுத்து முகவரிகளை எழுதச் சொன்னார்கள். சாயங்காலம் ஐந்து மணிக்கு கிளம்பிய போது அந்தத் துறையின் உதவி சுப்பிரண்டட்டாக இருந்த மெய்யப்பன் 'கொஞ்சம் இருங்க' என்றார். எல்லோரும் சென்ற பிறகு 'எங்க தங்கியிருக்கீங்க' என்றார். 'மணிசங்கர் லாட்ஜ்' என்றேன். 'புதுசா இப்பத்தான் ஜாய்ன் பண்ணியிருக்கீங்க.... ஒபிடியண்ட்டா இருப்பீங்கன்னுதான் ஹெட் ஆபிஸ்ல உங்கள போஸ்ட் பண்ணியிருக்காங்க. தெரிஞ்சுதா. அதக் காப்பாத்திக்கீங்க' என அறிவுறுத்தினார். பேசாமல் நின்றிருந்தேன். 'அஞ்சு மணின்னா அஞ்சு மணிக்கே கிளம்பணுமா..லாட்ஜிலத்தான தங்கியிருக்கீங்க.... அங்க போயி என்ன பண்ணப் போறீங்க?" என்றார். எதுவும் சொல்லத் தோன்றவில்லை. கொஞ்சம் தள்ளி சீரியஸாய் உட்கார்ந்து கடன் விண்ணப்பங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பீல்டு சூப்பர்வைசர்கள் மதுரமும், பாஸ்கரும் லேசாய் சிரிப்பது புரிந்தது. 'இந்த சங்கர், காந்தி, சிதம்பரத்துக்கிட்டேல்லாம்4 சேராதீங்க..போங்க' என்றார்.
லாட்ஜுக்குத் திரும்பிய போது அவமானமாய் இருந்தது. "அந்தாளு அப்பிடித்தான். சேர்மனுக்கு வேண்டியவரு. நாளைக்குக் காலையில் சிதம்பரத்துக்கிட்ட சொல்லிருங்க" என்று சமாதானப்படுத்தினார்கள். யார் அந்த சிதம்பரம் என்று தெரியவில்லை. எதற்கு அவரிடம் சொல்ல வேண்டும் என்பதும் புரியவில்லை. விசாரித்தபோது அவர் சங்கத்தின் உதவிப் பொதுச்செயலாளர் என்பதும், அதே துறையில் பணிபுரிபவர் என்பதும், அன்றைக்கு எதோ வெளியூரூக்குச் சென்றிருப்பதாகவும் சொன்னார்கள்.
அடுத்த நாள் அவர்களே காலையில் அழைத்துப் போய் சிதம்பரம் என்பவரிடம் சொன்னார்கள். கனத்த உருட்டுக் கட்டை போலிருந்தார் அவர். துல்லியமாக இன் பண்ணி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அன்று முழுவதும் அடிக்கடி என்னிடம் வந்து 'என்ன தம்பி' என்று எதாவது பேசிக் கொண்டிருந்தார் சிதம்பரம். மெய்யப்பன் கண்ணாடிக்குள் கண்களை உருட்டியபடி என்னை அடிக்கடி பார்த்தார். சாயங்காலம் போகும் போது "வா..மாது' என்று அழைத்தார் சிதம்பரம். அவர் பின்னால் சென்றேன். திரும்பிப் பார்த்த போது உதடுகளை பிதுக்கியபடி "இது தேறாது" என்று மெய்யப்பன் சொன்னது புரிந்தது. அதற்குப் பிறகு எதுவும் என்னிடம் அவர் கேட்பதேயில்லை. இதுதான் யூனியன் சக்தியா?
சனிக்கிழமைகளில் ஊருக்குப் போய் அம்மாவோடு இருந்துவிட்டு திங்கட்கிழமை காலை வங்கிக்கு வருவதாக இரண்டு மூன்று வாரங்கள் கழிந்தன. லாட்ஜிலும், ஆபிஸிலும் மனிதர்களின் முகங்கள் அவர்களோடு பேர்களோடு நினைவில் தங்க ஆரம்பித்திருந்தன. இடிந்தகரை என்னும் கிளையில் திருடர்கள் நுழைந்ததும், நகைகள் திருட்டுப் போனதும் எங்கும் பரபரப்பான பேச்சாயிருந்தது. அப்போதுதான் ஒருநாள் சாயங்காலம் "ஹெட் ஆபிஸ் முன்னால நாளைக்கு தர்ணா இருக்கு வந்துரு" சிதம்பரம் சொன்னார். எதற்கு என்று இப்போது நினைவில் இல்லை. சரி என்று சொல்லிக் கொண்டே அவரிடம் ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டேன். வேலைக்குச் சேர்ந்து முழுதாக ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. தைரியமாக சொல்லிவிட்டாலும் பயம் வந்தது. லாட்ஜில் தங்கியிருந்தவர்களும் வேண்டாம் என்றுதான் சொன்னார்கள்.
1. சண்முகசுந்தரம் - இப்போது திருவில்லிபுத்தூர் கிளையில் பணி புரிகிறார்.
2. மாரியப்பன் - PGBOA வில் பொதுச்செயலாளராய் இருந்தார். இப்போது கீழவெளிவீதி கிளையில் அலுவலர்.
3. மகரபூஷணம் - இப்போது அலுவலர்.
4. சிதம்பரம் - பின்னாளில் PGBWU வின் பொதுச்செயலாலராய் இருந்தார். பிறகு PGBEAவில் சேர்ந்தார். பிறகு PGBWUவுக்குப் போனார்.திரும்பவும் PGBEA வில் உறுப்பினரானார். திரும்பவும் PGBWUவுக்குப்போனார். இப்போது அலுவலராக பிரமோஷன் பெற்றிருக்கிறார்.
(இன்னும் இருக்கிறது....) இருட்டிலிருந்து -2 படிக்க
- இந்த அனுபவங்கள் தோழர். மாதவராஜோடு மட்டும் சம்பந்தப்பட்டவையல்ல. பலருக்குள்ளும் படிந்திருப்பவை. பலரோடும் சம்பந்தப்பட்டவை. இதுகுறித்த கருத்துக்களை,தொடர்புடைய சம்பவங்களை, விஷய்ங்களை எல்லோரும் பகிர்ந்துகொள்ளலாம். எனவே comment பகுதி enable செய்யப்பட்டு இருக்கிறது. ‘post a comment' பகுதியை கிளிக் செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
- PGBEA
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!