“போன் வசதியெல்லாம் இப்போது போல இருக்கவில்லை. திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம், சாத்தூர் போன்ற சில கிளைகளில் மட்டுமே இருந்தன. விருதுநகரிலிருந்து சாத்தூருக்கும் போன் செய்ய வேண்டுமென்றால்கூட டிரங்க் கால் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். ”
-மாதவராஜ்
அடுத்த நாள் காலையில் வேலைக்குத்தான் சென்றேன். 'சிதம்பரத்திடம் நாங்கள் சொல்லிக் கொள்கிறோம்.' என்று நெல்லையப்பன் சொல்லியிருந்தார். அலுவலகத்திற்குள் நுழைந்ததும் சூப்பிரண்டெண்ட் மெய்யப்பன் மேலும் கீழுமாய் ஆச்சரியமாய் பார்ப்பது போல பாவனை செய்தார். 'என்ன தர்ணாவுக்குப் போகலியா' கேட்டார். எதோ உசுப்பி விட்டது போல தோன்றியது. ஒரு பேப்பரை எடுத்து லீவு எழுதிக் கொடுத்து விட்டு, வேகவேகமாய் சிவன் கோவில் தெற்கு ரத வீதிக்கு சென்று விட்டேன். கீற்றுக் கொட்டகை வாசலில் நின்றிருந்த சிதம்பரம் 'ஏ..வாப்பா' என்றார். நெல்லையப்பன் 'என்ன வந்துட்டீங்க' என்று அருகில் வந்து கேட்டார். ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டேன். பொதுச்செயலாளராய் இருந்த மாரியப்பன் கைகுலுக்கி உள்ளே உட்காரச் சொன்னார். மொத்தம் பனிரெண்டு பேர் போலத்தான் அப்போது இருந்தார்கள். வெள்ளையும் சுள்ளையுமாய் வேட்டி சட்டையோடு சிவப்புக் கலர் துண்டு போட்டு உட்கார்ந்திருந்த ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். 'இவர்தான் நம்ம சங்கத்தின் தலைவர் பரிமளச்செல்வம்' என்றார்.
மாரியப்பனும், இன்னும் சிலரும் எதிரே இருந்த தலைமையலுவலகத்திற்குள் சென்று சிலரை தர்ணாப் பந்தலுக்கு அழைத்து வந்தனர். தயக்கங்களோடு வந்தவர்களிடம், "இப்போது வேலைக்குச் சேர்ந்த மாதவராஜே வந்திருக்கிறார். நீங்க என்ன இப்படி பயப்படுறீங்க" சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரத்திற்குள் பல கிளைகளில் இருந்து அறுபது பேருக்கு மேல் வந்து விட்டார்கள். மேலும் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோருமே இந்த பாண்டியன் கிராம வங்கியில் நம்மோடு எங்கெங்கோ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும் உணர்வு வந்தது. அவர்களோடு அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது, பேசும் போது எனக்கு முன்பே இங்கு இருந்த மனிதர்களின் கதைகள் புலப்பட ஆரம்பித்தன.
"ஜிந்தாபாத், ஜிந்தாபாத்' என்று கோஷங்கள் எழுந்தன. "வொர்க்கர்ஸ் யூனிட்டி ஜிந்தாபாத்' என்று பெருங்குரலெடுத்து முழங்கினார்கள். எல்லாமே வித்தியாசமாகவும், புதிதாகவும் இருந்தன. கடைநிலை ஊழியர்களுக்கு லீவு, மாநில அரசில் கொடுத்தது போல வறட்சி நிவாரணக் கடன் போன்ற விஷயங்களை தர்ணாப் பந்தலில் பேசினார்கள். வங்கியின் சேர்மனாயிருந்த குமரப்பனையும், பொது மேலாளராயிருந்த கருப்பன் செட்டியையும் கடுமையாகச் சாடி பரிமளச்செல்வம் பேசினார். 'ஆபிசர்களுக்கு வெளியிலிருந்து ஆட்கள் எடுக்கக் கூடாது, இங்கிருப்பவர்களைத்தான் பிரமோஷன் செய்யணும்" என்று உணர்ச்சி பொங்க பேசிய செயற்குழு உறுப்பினர் சூரியப்பிரகாசம் "அப்படி வெளியிலிருந்து ஆட்களை எடுத்தால் என் பிணத்தின் மீதுதான் அது நடக்கும்" என்று தொண்டை வெடிக்கச் சொன்னார். கை தட்டினார்கள். நிறைய பேர் பேசினார்கள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். கோஷம் அவ்வப்போது போட்டார்கள்.
மதியத்திற்குப் பிறகு ஒன்றிரண்டு பேர் சூரியப்பிரகாசத்திடம் உயரமான அந்த மனிதரை அருகில் அழைத்து பேசிக் கொண்டிருப்பதை கவனித்தேன். சூரியப்பிரகாசம் மைக் முன்பு வந்து "இப்போது நம்மிடம் மேலப்பரளச்சி கிளையில் வேலை பார்த்து வரும் கிருஷ்ணகுமார் பேசுவார். நமது செயற்குழுவில் இல்லாவிட்டாலும் அவர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபாடு உள்ளவர். சென்றமுறை நானும் சிதம்பரமும் நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர் அழைப்பின் பேரில் டெல்லி சென்றபோது அவரும் வந்திருந்தார்" என்று அந்த மனிதரை அறிமுகப்படுத்தினார். மைக் முன்பு நின்று மிக நிதானமாக கிருஷ்ணகுமார் பேச ஆரம்பித்தார். அதுவரை அந்த பந்தலில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அப்போதுதான் அர்த்தம் வந்தது போல இருந்தது. கம்பீரமான, தெளிவான, நிதானமான குரலில் மொத்த பந்தலும் மிக கூர்மையாக ஆழ்ந்தது. “ரத்தம் சிந்தாமல் எந்தத் தாயும் குழந்தையை பூமிக்குத் தருவதில்லை, போராடாமல் எதுவும் சாத்தியமில்லை” என்றார். பாரதியின் கவிதைகளும், ஆவேசமான சிந்தனைகளுமாய் இருபது நிமிடங்கள் போல பேசி முடித்ததும் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்றிருந்தது. அவரையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
வெளியிலிருந்து ஆபிசர்களை பணிநியமனம் செய்கிற காரியங்களை நிர்வாகம் நிறுத்தவில்லை. பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. ஊழியர்களிடம் அதிருப்தி வந்தது. ஆனாலும் கல்வித்தகுதி கொண்டிருந்த கிளர்க்குகள் பலரும் கூட விண்ணப்பித்தார்கள். புத்தகங்களை வாங்கி அங்கங்கு படிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு மூன்று மாதங்களில் தேர்வு இருக்கும் எனச் சொல்லப்பட்டது.
அம்முவிடமிருந்து வரும் கடிதங்களை எடுத்து வைத்துக்கொண்டு திரும்பத் திரும்ப படித்தேன். அவளுக்குக் கடிதம் எழுதுவதும், கவிதைகள் எழுதுவதும், சாயங்காலங்களில் எட்வர்ட் பள்ளி சென்று கிரிக்கெட் விளையாடுவதும், இரவில் லாட்ஜுக்கு வரும் எட்வர்ட் பள்ளியின் சில ஆசிரியர்களோடு சீட்டு விளையாடுவதுமாய் இருந்தேன். மணிசங்கர் லாட்ஜில் இன்னொரு குடியிருப்பில் தங்கியிருந்த நாராயணன் ஊருக்குச் செல்லாத ஒரு சனிக்கிழமை சாயங்காலம் கோவில்பட்டியில் நிஜ நாடகங்கள் பார்க்க அழைத்துச் சென்றார். நாராயணன் யூனியனில் கமிட்டி மெம்பராயிருந்தார். அவரோடு ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். ராதாகிருஷ்ணனை தர்ணாப் பந்தலில் ஏற்கனவே பார்த்திருந்தேன். சாத்தூரிலேயே வசித்து வருபவர் என்பது அன்றைக்குத்தான் தெரியும். நிஜ நாடகங்களை அதற்கு முன்பு பார்த்து இருக்கவில்லை. ஒவ்வொன்றிலும் தெறித்து வந்த உண்மைகள் மனிதர்களை உலுக்கிக் கொண்டிருந்தன. கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் 'எட்டையபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி' இசைக்குரலில் பாரதி பாடப்புத்தகங்களை விட்டு புதிய மனிதராக எழுந்து கொண்டிருந்தார். எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வனும், கோணங்கி, சாரதி இன்னும் சிலர் நடித்த மாப்பிள்ளைக்கடை போன்ற நாடகங்கள் லாட்ஜில் வந்து படுத்த பிறகும் நிழலாடிக்கொண்டு இருந்தன.
வைப்பாற்றில் முழங்கால் அளவுக்கு சில இடங்களில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரும் கோடை வருவதற்குள் காணாமல் போயிருந்தது. ஊரில் இஷ்டம் போல குளிக்கவும், சுவையான தண்ணீரைப் பருகியும் வாழ்ந்த எனக்கு ஒன்றரை வருட சென்னை வாசம் ஓரளவுக்கு தண்ணீர் குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தியிருந்தது. சாத்தூரில் தண்ணீருக்கான மனிதர்களின் ஓட்டங்கள் மிரட்சி தந்தன. குடங்களோடு ஆண்களும் பெண்களும் தெருக்களில் விறுவிறுத்திருந்தார்கள். மனிதர்கள் விழிப்பது அடிகுழாய் சத்தத்தில்தான். விடாமல் விக்கல் எடுப்பது போன்று அந்த ஒசைகள் இருந்தன.
மணிசங்கர் லாட்ஜில் நடுவில் பாதையும் எதிரெதிரே ஒன்றையொன்று பார்த்தபடி வரிசையாக பத்து குடியிருப்புகள் இருந்தன. ஒவ்வொரு அறையிலும் குறைந்தது மூன்று பேரும், அதிகமாக ஐந்து பேருமாக இருந்தார்கள். எப்போது படுப்பது, எப்போது தூங்குவது, எப்போது விழிப்பது என்றில்லாத வாழ்க்கை. விதவிதமானவர்கள். மகரபூஷணம் எங்கள் குடியிருப்பின் தலைவர் போல இருந்தார். காலையிலேயே விழித்து எல்லோரையும் எழுப்புவார். மாரியம்மன் கோவில் தெருவில் தென்வடல் புதுத்தெரு வந்து சந்திக்கிற இடத்தில் இருந்த டீக்கடைக்கு செல்வோம். ஹைவேஸில் வேலை பார்த்த வினோத்தோ, எட்வர்ட் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராய் இருக்கிற ஜெயச்சந்திரனோ அங்கு ஏற்கனவே வந்து காபி குடித்துக்கொண்டே தினத்தந்தி படித்துக் கொண்டு இருப்பார்கள். அப்போது ஜெயலலிதா அ.தி.மு.க வின் கொள்கை பரப்புச் செயலாளராகி இருந்தார். எம்,ஜி.ஆர், ரஜினி, கமல், ஸ்ரீதேவி, அம்பிகா ஆகியோர் பேச்சுக்களில் வரும் முக்கியமானவர்களாயிருந்தனர். பின்னர் லாட்ஜில் காலைக் கடன்களை நிறைவேற்ற அவரவர் விரைவார்கள்.
பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிந்தவர்கள் மணிசங்கர் லாட்ஜில் இரண்டு குடியிருப்புகளில் இருந்தனர். ஒன்று எங்கள் அறை. இன்னொன்றில் நாராயணன் மட்டும் தங்கியிருந்தார். சிலர் வைப்பாற்றங்கரையோரமாய் இருக்கிற எல்.எப்.தெரு எனப்படும் லோக்கல் பண்ட் தெருவில் ஒரு மாடியில் உள்ள மூன்று குடியிருப்புகளில் இருந்தார்கள். எங்கள் டிபார்ட்மெண்ட் சூப்பிரண்டெண்ட் முகம்மது இஸ்மாயில், உதவி சூப்பிரண்டெண்ட் மெய்யப்பன், ஸ்டாப் டிபார்ட்மெண்ட் சூப்பிரண்டெண்ட் சங்கரசுப்பு, இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட் சூப்பிரண்டெண்ட் உமர் சலீம் ஆகியோரெல்லாம் அங்குதான் இரண்டு அறைகளில் தங்கியிருப்பதாகச் சொன்னார்கள். அவர்களுக்கெல்லாம் திருமணம் ஆகியிருந்தது. கனகராஜ், கோபிநாத் எல்லாம் அங்குள்ள இன்னொரு அறையில் தங்கியிருந்திருக்க வேண்டும். தலைமையலுவலகம் அருகிலேயே உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்துக் கொண்டு வங்கியில் பணிபுரிந்த பெண்களும் தங்கியிருந்தார்கள். இந்த சூப்பிரண்டுகளைத் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் இருபத்தைந்து வயதையொட்டியவர்களே. ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்றவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. வேலை ஒன்று கிடைத்திருப்பதால் திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஒவ்வொருவருக்கும் துவங்கிய காலமாக இருந்தது.
எங்கள் அறையில் தங்கியிருந்த நெல்லையப்பனுக்கு திருமணம் ஆகியிருந்தது. குழந்தை இருந்தது. இரவுகளில் அந்தக் குழந்தையின் நினைவுகளாகவே அவரது பேச்சும் இருக்கும். தனிமையில் மனசாட்சியிடம் பேசுவது போல குரல் ஒலிக்கும். சோகத்தில் மிதந்தபடிதான் அனேகமாக வார்த்தைகள் வெளிவரும். கண்காட்சிக்கு சென்ற போது குழந்தை ஆசை ஆசையாய் கேட்டதை வாங்கித் தர முடியாமல் தவித்ததையெல்லாம் சொல்வார். அவரது குழந்தைக்கு ஒரு ருபாய் நாணயம் என்பது அற்புதம். வாரக் கடைசியில் திருநெல்வேலியில் வீட்டுக்குச் செல்லும் ஒவ்வொரு தடவையும் சில்லறை மாற்றி இரண்டு ஒரு ருபாய் நாணயத்தை பத்திரமாக கொண்டு செல்வார். அன்றிரவு அவர் மீது ஒரு கையை போட்டுக் கொண்டு படுத்திருக்கும் குழந்தையின் இன்னொரு மூடிய கையில் அந்த ஒரு ருபாய் நாணயம் இருக்குமாம்.
இதைச் சொல்லும்போதுதான் நெல்லையப்பன் இன்னொரு ஒரு ருபாயைப் பற்றியும் சொன்னார். அப்போது கிளர்க்குகளுக்கு மொத்தத்தில் அறுநூறு ருபாயும், பீல்டு சூப்பர்வைசர்களுக்கு தொள்ளாயிரம் ருபாயும், மேனேஜர்களுக்கு ஆயிரத்து சொச்சமும் போலத்தான் சம்பளமயிருந்தது. அதாவது கிளர்க்குகளுக்கு மாநில அரசின் ஜூனியர் அசிஸ்டெண்ட்களுக்கு இணையாகவும், மேனேஜர்களுக்கு பிளாக் டெவலப்மெண்ட் ஆபிசர்களுக்கு இணையாகவும் ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. மாநில அரசில் அவர்களுக்கு எப்போது சம்பளம் கூடுகிறதோ அப்போது எங்களுக்கும் கூடுமாம். அவர்களுக்கு பஞ்சப்படி உயர்த்தப்பட்டால் எங்களுக்கும் உயர்த்தப்படுமாம்.
இதில் மிக மோசமான நிலையில் இருந்தது கடைநிலை ஊழியர்கள்தான். சுவீப்பர் கம் மெஸஞ்சர் என அழைக்கப்பட்ட அவர்கள் முற்றிலும் தற்காலிகமானவர்களே. பணிவிதிகளில் கூட அவர்கள் வரமாட்டார்கள். தினக்கூலிதான். நாளொன்றுக்கு ஆறு ருபாய் போல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தனர். போர்டு மீட்டிங் நடக்கப் போவதாக தெரிந்தால் கனவுகளோடு காத்திருப்பார்களாம். ஒரு ருபாய் சம்பளம் கூட்டிவிட மாட்டார்களா என பரிதவிப்பார்களாம். போன் வசதியெல்லாம் இப்போது போல இருக்கவில்லை. திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம், சாத்தூர் போன்ற சில கிளைகளில் மட்டுமே இருந்தன. விருதுநகரிலிருந்து சாத்தூருக்கும் போன் செய்ய வேண்டுமென்றால்கூட டிரங்க்கால் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். போர்டு மீட்டிங் முடிவைத் தெரிந்து கொள்ள சனிக்கிழமை சாத்தூரிலிருந்து செல்லும் திருநெல்வேலிக்காரர்களை எதிர்பார்த்து ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் சிலர் காத்திருப்பார்களாம். போர்டில் இந்த தடவை ஒரு ருபாய் சம்பளம் கூட்டவில்லை என்று தெரிந்ததும் தொண்டை விக்கித்துக் கொள்ள அந்தக் கடைநிலை ஊழியர்கள் முகம் மாறிப் போவார்களாம். இதைச் சொல்லும்போது நெல்லையப்பனும் கண்கலங்குவார்.
எல்லோருக்கும் புதிய நம்பிக்கை தருகிற மாதிரி ஒரு செய்தி பாண்டியன் கிராம வங்கி முழுவதும் வாசிக்கப்பட்டது. ‘இந்த சேர்மன் ஐ.ஓ.பிக்கு போகப் போகிறார்." "புதிய சேர்மன் வரப்போகிறார். அவர் பேர் திருமலை", "ரொம்ப நல்லவர். இரக்க குணமுடையவர்" என்றெல்லாம் சொல்லப்பட்டன. "அவருக்கு சொந்தக்காரர்", "இங்கிலீஷ்ல மன்னன். தமிழ்ல்ல பிரமாதமா பேசுவார்" தினம் தினம் தகவல்கள் எல்லோரிடம் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. 'வெளியே இருந்து ஆள் எடுக்காமல் நமக்கே பிரமோஷன் கொடுத்து விடுவார்" என கனவுகள் விதைக்கப்பட்டன. வங்கியே பெரும் எதிர்பார்ப்புக்கும், பரபரப்புக்கும் உள்ளாகியிருந்தது.
திருமலை என்னும் அந்த மனிதரின் வருகையோடு பாண்டியன் கிராம வங்கியில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பித்தது.
(இன்னுமிருக்கிறது....)
- இந்த அனுபவங்கள் தோழர். மாதவராஜோடு மட்டும் சம்பந்தப்பட்டவையல்ல. பலருக்குள்ளும் படிந்திருப்பவை. பலரோடும் சம்பந்தப்பட்டவை. இதுகுறித்த கருத்துக்களை,தொடர்புடைய சம்பவங்களை, விஷய்ங்களை எல்லோரும் பகிர்ந்துகொள்ளலாம். எனவே comment பகுதி enable செய்யப்பட்டு இருக்கிறது. ‘post a comment' பகுதியை கிளிக் செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
- PGBEA
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!