27.7.11

இருட்டிலிருந்து -3

காலையில் ஆற்றுக்குப் போகும் போது நேற்றுவரை கூட வந்தவர்கள் அவர்கள். ஒரே இடத்தில் ஒன்றாக இருந்து, பார்த்துப் பழகிய மனிதர்கள் ஒருநாள் கண்களின் பார்வையிலிருந்து மறைந்து வேறு இடங்களுக்குப் போவது ஒரு வெறுமையை ஏற்படுத்தி விடுகிறது.

-மாதவராஜ்

வேலைக்குச் சேர்ந்த அந்த நான்கைந்து மாதங்களில் முக்கியமாக மனதில் பதிந்து போன காட்சிகளில் ஒன்று மணிசங்கர் லாட்ஜின் சனிக்கிழமை காலைகள். மற்ற தினங்களில் கடனே என்று விழித்து எந்த முனைப்புமற்று தயாராகும் மனிதர்களுக்கு சனிக்கிழமைகள் மட்டும் உற்சாகத்தோடு விடிந்தன. பிடித்தப் பாட்டுக்களின் ராகத்தோடு சூட்கேஸுக்குள் துணிகளை மடித்து வைத்தார்கள். கவனமாக ஷேவ் செய்து கொண்டார்கள். கிளம்பும் அந்த ஆயத்த நேரங்களில் எதிர்ப்படும் ஒவ்வொருவரிடமும் சத்தமாக எதையாவது பகிர்ந்து கொண்டு கடந்தார்கள். இல்லையென்றால் 'ம்..'மென்று முகம் மலர்ந்து செல்லமாய் முதுகை தட்டிக் கொடுத்துச் சென்றார்கள். எல்லாவற்றுக்கும் ஒரே அர்த்தம்தான். அவர்கள் சந்தோஷமாய் இருந்தார்கள் அன்றைய தினம். வீட்டுக்குச் செல்லும் குதூகலம். அம்மாவை, அப்பாவை, கூடப் பிறந்தவர்களை, நண்பர்களை, அதுவரை வாழ்ந்த வீட்டை, தெருவை, பக்கத்து வீட்டுப் பெண்ணை என மனது அடைகாத்து வைத்திருக்கும் ஆயிரம் நேசங்கள் ஒவ்வொருவருக்கும் இருந்தன. திங்கட்கிழமை காலையில் ஏக்கங்களோடும், பெருமூச்சுக்களோடும் திரும்பினார்கள். இன்னும் ஒரு வாரம் அவர்கள் காத்திருக்க வேண்டும். எதிர்காலத்தை நிச்சயித்துக் கொள்வதற்கான துடிப்பு சொந்தங்களை விட்டு மனிதர்களை பிரித்து வைத்தாலும், வாழ்வின் ஆதாரங்களாக வீடுகளே இருக்கின்றன.

மாதத்தில் ஒன்றிரண்டு சனிக்கிழமைகளில் ஊருக்குப் போகாமல் லாட்ஜிலேயே இருந்து விடுவது எனக்கு வழக்கமாயிருந்தது. பணத்தை திட்டமிட்டுச் செலவு செய்வது இயல்பில் இல்லாமல் போனதால் அந்த நிலைமை. அறுநூறு ருபாய் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது ருபாய் போல மெஸ்ஸுக்கு கொடுக்க வேண்டி வரும். நாற்பது ருபாய் வாடகைக்குப் போய் விடும். ஊரில் அம்மாவுக்கு எதாவது வாங்கிக் கொண்டு ஒரு தடவை பார்த்துவிட்டு வர எப்படியும் நூறு ருபாய்க் கிட்ட ஆகும். அது போக சிகரெட், சினிமா என்று இருக்கவேச்  செய்தன. மாதக் கடைசி சனிக்கிழமைகளில் கையில் ஒன்றும் இல்லாமல் போய் விடும். இந்த சம்பளத்தில் மற்றவர்கள் வாரா வாரம் ஊருக்குப் போவது, வீட்டிற்கு எதோ கொஞ்சம் பணம் கொடுக்க முடிவது எல்லாம் ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆக்கத்தில் சிதம்பரம் போன்றவர்கள் குடும்பம் சகிதமாக சாத்தூரிலேயே வாழ்க்கை நடத்திக் கொண்டு வேறு இருந்தார்கள். 

நாடார் மெஸ்ஸில் மதியம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து நான்கைந்து வீடுகள் தள்ளியிருக்கிற சிதம்பரம் வீட்டிற்குச் சென்று பத்துப் பதினைந்து நிமிடங்கள் போல பேசிக்கொண்டிருப்பது எனக்கும், காந்திக்கும், சங்கருக்கும் பழக்கமாகி விட்டிருந்தது. பேசிக்கொண்டு இருக்கும் போதே சிதம்பரம் உடை மாற்றிக் கொண்டு எங்களோடு அவரும் ஆபிஸுக்கு புறப்படத் தயாராவார். அவருக்குத் திருமணம் ஆகி பெண் குழந்தையும் இருந்தது. எப்போதும் அவரின் துணைவியார் எங்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாலும் எதோ ஒரு இழப்பின் சோகம் உள்ளுக்குள் இருப்பதாகவே பட்டது.

சிதம்பரமும் புதுச்சேர்மனைப் பற்றி நல்லவிதமாகவே கருத்து வைத்திருந்தார். சங்கத்திலிருந்து சென்று நடத்திய முதல் பேச்சுவார்த்தையில் எல்லோருக்கும் பிரமோஷன் கொடுக்கப் போவதாகச் சொன்னாராம். பொதுச்செயலாளர் மாரியப்பன் இதை பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். வெளியிலிருந்து ஆபிஸர் பதவிக்கு ஆள் எடுக்கப் போவது பற்றிக் கேட்கும் போது மட்டும் மௌனம் சாதித்தார். ஊழியர்களிடம் அது குறித்து எழுந்திருக்கும் அதிருப்தியை மட்டுப்படுத்தவே பிரமோஷன் கொடுக்கப்போவதாக நிர்வாகம் நாடகம் ஆடுவதாகவும் சிலர் சொல்லிக் கொண்டிருந்தனர். மணிசங்கர் லாட்ஜில் சாயங்காலங்களில் கண்டிப்பாக இது பற்றி பேச்சுக்கள் நடக்கும். புங்கை மரங்களும், வேப்ப மரங்களும் வரிசையாய் நிற்கும் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அந்த அமைதியில் ஆபிஸர் பதவிக்கான எழுத்துத் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தனர். இந்த களேபேரங்களில் அகில இந்தியப் பொதுச் செயலாளர் திலிப் குமார் முகர்ஜி சாத்தூருக்கு வருகிறார் என்பது ஒரு முக்கியத்துவமற்ற நிகழ்ச்சி போல இருப்பதாக ராதாகிருஷ்ணன் ஒருநாள் வருத்தப்பட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார். சங்கத்தின் பொறுப்பிலிருப்பவர்கள் ஊழியர்களை திரட்டுவதற்கான முயற்சி எடுக்கவில்லை என குறைபட்டுக் கொண்டார்.

அக்கினி நட்சத்திரத்தை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக்கிழமை சாத்தூரில் ரமண வித்யாலாயா பள்ளியில் முகர்ஜி வருவதையொட்டி அந்தக் கூட்டம் நடந்தது. சிதம்பரம் சொல்லியிருந்ததால் அந்த வாரம் ஊருக்குப் போகாமல் இருந்தேன். ஆபிசர்களும், ஊழியர்களுமாய் வங்கியில் பணிபுரிந்து வந்த கிட்டத்தட்ட 650 பேரில் மொத்தமே நூறு பேர் போலத்தான் வந்திருந்தார்கள். மஞ்சளும், இளஞ்சிகப்பும் கலந்த நிறத்தில் இருந்த முகர்ஜி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தார். சால்வை போர்த்தினார்கள். சூரியப்பிரகாசம் ஏற்கனவே டெல்லியில் முகர்ஜியை சந்தித்தது, சென்னைக்கு ஒருமுறை வந்தபோது அவரோடு ஸ்பான்ஸர் வங்கியான ஐ.ஓ.பிக்குச் சென்றது பற்றியெல்லாம் விலாவாரியாக அரைகுறை ஆங்கிலத்தில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார். நாராயணின் தம்பியும், செயற்குழு உறுப்பினருமான கிருஷ்ணன் என்பவர் ஆங்கிலத்தில் பிச்சு வாங்கினார். பின்னால் உட்கார்ந்து சிலர் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். கிருஷ்ணகுமாரும் அன்றைக்கு வந்திருந்தார். முகர்ஜியின் அருகில் போய் குனிந்து பேசிக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்திலேயே கூட்டத்தின் எண்ணிக்கை குறித்து முகர்ஜி பேசும்போது வருத்தப்பட்டார். மேற்குவங்காளத்தின் பெர்ஹாம்பூரிலிருந்து ஆவலோடு எல்லோரையும் பார்க்க வந்த தனக்கு ஏமாற்றமே என்றார். லேசான கரகரத்த குரலில் பிரத்யேகமான வங்காள உச்சரிப்பில் ஆங்கிலம் எளிதாக புரிவதாகவே இருந்தது. கிராம வங்கி ஊழியர்களாகிய நாம் நம்மையும், நமது பிரச்சினைகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்து தொடர்ந்த போதுதான் முதன்முதலாக பல உண்மைகளை புரிந்து கொள்ள முடிந்தது.

1969ல் வங்கிகள் தேசீய மயமாக்கப்பட்ட பிறகு, கிராமப் பொருளாதாரத்தையும் தேசத்தின் பணசுழற்சியில் கொண்டு வர அரசு திட்டமிட்டிருக்கிறது. கந்து வட்டிக்காரர்களிடம் விவசாய உற்பத்திக்கு பணம் வாங்கி மீள முடியாமல் தவித்திருந்த கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் முதலீடுகளுக்கு ஏற்பாடு செய்து அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றப் போகிறோம் என அரசு அறிவித்திருக்கிறது. முழுக்க முழுக்க சேவை கோஷத்தோடு நரசிம்மம் கமிட்டி மூன்றே மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க, கிராம வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 1975 அக்டோபர் 2ம் தேதி உத்திரப்பிரதேசத்தில் பாகீரதி கிராம வங்கி ஆரம்பிக்கப்பட, 1976ல் மேலும் 4 கிராம வங்கிகள் தோன்றி, 1978க்குள் 48 கிராம வங்கிகளாய் விரிந்திருக்கிறது. அதிலொன்றுதான் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாண்டியன் கிராம வங்கியாக இருந்திருக்கிறது. முகர்ஜி இதை விவரித்து வரும்போது, எதன் பின்னணியில் நான் இங்கே வேலைக்குச் சேர முடிந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் அரசின் சதியின் கைகள் இதில் ஒளிந்திருந்தன என்று முகர்ஜி மேலும் தொடர்ந்து கொண்டிருந்தார்.

கிராமப்புறங்களில் வங்கிகள் திறக்கப்படும்போது அவை வணிக வங்கியின் கிளைகளாகவே திறக்கப்பட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு கிராம வங்கிகள் என்று ஏன் தனியே ஆரம்பிக்கப் பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி, பத்து ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுக்கும் இடத்தில் மூன்று ருபாய் சம்பளத்திற்கு ஆள் எடுப்பதுதான் அதிலுள்ள நோக்கம் என்றார். அதனால் வணிக வங்கியின் சம்பளம் நமக்கு கொடுக்கப்படாமல் மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கிய போது இருட்டு மெல்ல மெல்ல விலகுவது போல தென்பட்டது.

தேதிகள், நிகழ்ச்சிகள் எதையும் குறித்து வைக்காமல் சரளமாக ஞாபகத்திலிருந்து எடுத்து எங்கள் முன் வைத்துக் கொண்டிருந்தார் முகர்ஜி. 1977ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1ம் தேதி, பூனாவில் பல்வேறு கிராம வங்கிகளைச் சேர்ந்த 39 கிள மேலாளர்களுக்கு ஒரு பயிற்சி கொடுக்கப்பட்ட போது, அங்கு வந்திருந்தவர்கள் அரசின் இந்த பாரபட்சம் குறித்து தங்களுக்குள் பேசியிருந்திருக்கிறார்கள். அதில் ஒருவராக முகர்ஜி இருந்திருக்கிறார். இதுவே அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கம் (All India Regional Rural Bank Employees Association) என்று ஆரம்பிக்கப்படுவதற்கான வேகத்தை கொடுத்திருக்கிறது.  1978 மே 27, 28 தேதிகளில் புவனேஸ்வரில் அகில இந்திய சங்கத்தின் அமைப்பு மாநாடு நடந்திருக்கிறது. அதில்தான் அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராயிருந்த அசிஸ்சென் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கிராம வங்கிகளில் சங்கங்களை ஆரம்பிப்பதும், அகில இந்திய சங்கத்தோடு தொடர்பு கொள்ள வைப்பதும் இரண்டு வருட வேலைகளாக இருந்திருக்கின்றன. தொடர்ந்த பயணங்களாக முகர்ஜி எல்லா மாநிலங்களுக்கும் சென்று இந்த பணியினைச் செய்திருக்கிறார். கேட்க கேட்க ஆச்சரியமாகவும், சிலிர்ப்பாகவும் இருந்தது. 1978 என்றால் நான் அப்போது கல்லூரியில் முதலாமாண்டு மாணவனாய் இருந்திருப்பேன். அதே நேரத்தில் ஒரு மனிதர், கிராம வங்கிகளில் இனி வரப் போகிற அனைவருக்காகவும் தன்னை வருத்திக் கொண்டு தேசமெங்கும் அலைந்து கொண்டு இருந்திருக்கிறார். 

1978ல் கேரளாவில் உள்ள கன்னணூரில் அகில இந்திய சங்கத்தின் முதல் மாநாடு நடந்திருக்கிறது. அங்குதான் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. வணிக வங்கியில் உள்ளது போலவே பணிகள் செய்வதால் 'சம வேலைக்கு சம ஊதியம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கி ஊழியர்களின் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், தேசமெங்கும் இருக்கிற கிராம வங்கிகளை ஒன்றிணைத்து 'தேசீய கிராமப் புற வங்கி' என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும்  தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. கிராம வங்கிகள் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதாலும், வெவ்வேறு ஸ்பான்ஸர் வங்கிகளைச் சார்ந்திருப்பதாலும் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட நடைமுறைகளோடும், சீரற்ற விதிமுறைகளோடும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே தேசீய கிராமப்புற வங்கி என்பது அவசியம் என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் முகர்ஜி. 

நாம் பார்க்கிற வேலைகளுக்குள் எவ்வளவு பிரச்சினைகளும், குழப்பங்களும் இருக்கின்றன என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். சிதம்பரமோ, மாரியப்பனோ இதையெல்லாம் இவ்வளவு நாள் ஆகியிருந்தும் சொல்லியிருக்கவில்லை. முகர்ஜி பேசி முடித்த பிறகு சேர்மன் வீட்டிற்கு சென்று அவரைச் சந்தித்து கல்கத்தா புறப்படுவதாகச் சொன்னார்கள். அவர் கிருஷ்ணகுமாரை அழைத்து பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார். அடுத்தநாள் சிதம்பரம் வீட்டில் மதியம் இது பற்றி பேச்சு வந்தது. முகர்ஜி சேர்மனை புகழ்ந்ததாகவும், இவரிடம் நிறைய நீங்கள் சாதித்துக் கொள்ளலாம் என சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் அறிவுறுத்தியதாகவும் சொன்னார்.

ஆபிசர்களுக்கு வெளியிலிருந்து ஆள் எடுக்க எழுத்துத் தேர்வு நடைபெற்ற அதே சமயத்தில் உள்ளுக்குள்ளேயே அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வும் கொடுக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ஜூனியர் அசிஸ்டெண்டுகள் சீனியர் அசிஸ்டெண்டுகள் ஆனார்கள். பல சீனியர் அசிஸ்டெண்டுகள் பீல்டு சூப்பர்வைசர்கள் ஆனார்கள். பீல்டு சூப்பர்வசர்களில் பலர் ஆபிசர்கள் ஆனார்கள். பணிவிதிகளற்ற மெஸஞ்சர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தனர். பொற்கோவிலுக்குள் இராணுவம் புகுந்து ஆபரேஷன் புளுஸ்டாரை நடத்தி பிந்திரன்வாலேவை சுட்டுக் கொன்றது எல்லாம் பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிந்தவர்களுக்கு சாதாரண செய்தியாகவே இருந்தது. எங்கும் பதவி உயர்வை ஒட்டிய டிரான்ஸ்பர்கள்தான் முக்கிய பேச்சாயிருந்தது.

சீனியர் அசிஸ்டெண்டுகளாய் பதவி உயர்வு பெற்ற நெல்லையப்பனும், மகரபூஷணமும் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள கிளைகளுக்கு மாறுதலில் சென்றுவிட்டனர். ஏழு மாதகாலம் அவர்களோடு இருந்தது சில நினைவுகளைத் தந்திருந்தன. பிரிவின் வேதனையும் வந்தது. காலையில் ஆற்றுக்குப் போகும் போது நேற்றுவரை கூட வந்தவர்கள் அவர்கள். ஒரே இடத்தில் ஒன்றாக இருந்து, பார்த்துப் பழகிய மனிதர்கள் ஒருநாள் கண்களின் பார்வையிலிருந்து மறைந்து வேறு இடங்களுக்குப் போவது ஒரு வெறுமையை ஏற்படுத்தி விடுகிறது. நாம் எப்போது திருச்செந்தூர் பக்கத்தில் உள்ள சொந்த ஊரான செங்குழிக்குச் செல்வோம் என்று ஒரு ஆசை உள்ளுக்குள் வர ஆரம்பித்தது. சாத்தான்குளம் பகுதியிலிருந்து மாறுதலில் வந்த ஜீவலிங்கமும் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட முருகனும் எங்கள் அறையில் வந்து தங்கிக் கொண்டனர். ஜீவலிங்கத்தின் பாட்டுக்களும், அரட்டைகளும், சிரிப்புகளும் அறையிலிருந்த மவுனத்தை மிகச் சீக்கிரத்தில் உடைத்து விட்டன.

வீ. திருமலை என்னும் சேர்மனின் பெயர் இந்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் வீ.ட்டி என்று இனிஷியல்களாகி கம்பீரமான உருவமாய் வலம் வந்தது. பலருக்கும் பிரமோஷன் கொடுத்து பெயர் வாங்கியிருந்த வீ.திருமலை அடுத்த சில வாரங்களுக்குள் பெரிய அளவில் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு அவர் பெரும்பாலான ஊழியர்களுக்கு எதிரானவராகிப் போனார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பழைய பேட்டை என்னும் கிளையிலிருந்து அது உருவானது. செயல்பாடுகளற்ற PGBEA என்னும் சங்கத்தின் மீது சூறைக்காற்றாய் ஓங்கி அடித்தது.

(இன்னும் இருக்கிறது....)

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!