22.1.12

இருட்டிலிருந்து - 10



ரோஹிணி சஸ்பென்ஷன் செய்யப்பட்டபோது அப்போதிருந்த சங்கத்தலைமை செய்யத் தவறிய இடம் இதுதான். நிர்வாகத்தை எதிர்த்தாக வேண்டும் என்கிற வேகம் பொறுப்பில் இருந்தவர்களுக்கு தன்னியல்பாக கூடியிருந்தது. ஊழியர்களிடையே பயத்தை விதைத்து, சங்கத்தலைமையை அந்நியப்படுத்த நிர்வாகம் முயற்சிக்கிறது என்பதை புரிந்து கொண்ட பி.கேவுக்கு அதே தருணத்தை முன்வைத்து தோழர்களிடம் கிளர்ச்சி ஏற்படுத்திட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தன்னையே உந்துசக்தியாக முன்னிறுத்திக் கொண்டார். அதற்கான ஆகிருதியும், ஆளுமையும் அவரே கொண்டிருந்தார்.

சட்டையப்பனின் சஸ்பென்ஷனை ரத்துச் செய்ய சங்கத்திலிருந்து வந்து கெஞ்சுவார்கள் என்று நிர்வாகம் நினைத்திருக்கலாம். சங்கத்தின் திமிரை அடக்கி வைக்க இது சரியான தருணம் என்று கருதியிருக்கலாம். உடனடியாக பி.கே உண்ணாவிரதம் இருந்தது நிர்வாகத்தை அதிர்ச்சியடையச் செய்திருந்தது. எந்தவித முகாந்திரமும் இன்றி, காரணம் எதுவும் காட்டப்படாமல், சஸ்பென்ஷன் செய்தால், போராட்டமும் முன்னறிவிப்பின்றிதான் இருக்கும் என்பதை அந்த உண்ணாவிரதப் பந்தல் அறிவித்துக்கொண்டிருந்தது. வங்கி ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ ஒன்பது வருடங்களான பிறகு, நிர்வாகம் முதன்முறையாக வித்தைகளும், தந்திரங்களும், தைரியமும் நிறைந்த சங்கத்தை சந்திக்க வேண்டி இருந்தது. சேர்மன் வீட்டி காரை நிறுத்தி தலைமையலுவலகத்திற்குள் செல்லாமல் பி.கேவிடம் கையைக் கொடுத்து "ஆல் த பெஸ்ட்" என தன்னை எதற்கும் சளைக்காதவராய் காட்டிக்கொள்ள பந்தலுக்கு வந்தார். பி.கே எந்த அதிசயமும் படாமல், அவசரமுமில்லாமல் உட்கார்ந்தபடியே வெகு இயல்பாக கையைக் கொடுத்து "தேங்க்ஸ்" சொன்னார். தோழர்கள் கணேசன், விஸ்வநாதன், சுப்புராஜ், மணி, வேலு, சோமு, பரமசிவம், காமராஜ், பெருமாள்சாமி தலைமையலுவலகத்திலிருந்து நான், ஜீவா, அழகப்பன், போன்ற சிலரோடு மொத்தம் இருபது பேர் போலத்தான் அப்போது இருந்தோம்.

நேரம் ஆக, ஆக தோழர்கள் கிளையிலிருந்து வந்து கொண்டே இருந்தனர். கோஷங்கள் நிர்வாகத்திற்கு எதிராக தெறித்து எழும்பிக்கொண்டு இருந்தன. மதியத்திற்குள் அறுபது பேரைத் தாண்டி விட்டிருந்தது. வீட்டி காலையில் காட்டிய புன்சிரிப்பு, நாகரீகம் எல்லாம் அவரது கடுகடுப்பான முகத்தில் வெளுத்துப் போயிருந்ததாம். சாப்பிடப்போகும்போது அறைந்த காரின் கதவில் அது சத்தமாய் வெளிப்பட்டது. பந்தலில் இருந்த யாரும் சாப்பிடவில்லை. தோழர்.சட்டையப்பன் அமைதியாக ஒரு இடத்தில் வந்து உட்கார்ந்திருந்தார். அவரை அப்போதுதான் தோழர்கள் பலருக்கு அறிமுகமே ஆகியிருந்தது. பி.கே எல்லோரையும் வரவேற்று உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தார். மாலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களோடு பந்தல் விரிந்திருந்தது. இரவில் விளக்குகள் கட்டப்பட்டு ஜே ஜே என்றிருந்தது. சிலர் சாப்பிடச்சென்றாலும், பெரும்பாலானவர்கள் பி.கே பக்கத்தில் உட்கார்ந்து இருந்தனர். அவரிடம் காணப்பட்ட சிறு சோர்வும் நிர்வாகத்திற்கு எதிரான கோபத்தை எல்லோரிடமும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது. எங்கோ எதோ ஒரு கிளையில், யாரோ ஒரு தோழர் சஸ்பென்ஷன் செய்யப்பட்டதற்கு பி.கே உண்ணாவிரதம் இருக்கிறார் என்பது தொலைபேசி வசதி சரியாக இல்லாத அந்தக் காலத்தில் எல்லோருக்கும் தெரிந்துகொண்டே இருந்தது.

தன்னலமற்ற காரியத்தில் ஒருவர் ஈடுபடுவதை புரிந்து கொள்ளும்போது உணர்வுபூர்வமான மாற்றங்கள் மனிதர்களுக்குள் ஏற்பட்டுவிடுகின்றன. அதைத்தான் அந்த இரவு சொல்லிக்கொண்டு இருந்தது. தூரத்துக் கிளைகளிலிருந்தெல்லாம் இரவிலும் வந்து கொண்டே இருந்தனர் தோழர்கள். வந்தவர்கள் பி.கே அருகில் சென்று கொஞ்சநேரம் அமைதியாய் இருப்பார்கள். கையைப் பிடித்து கண்கலங்குவார்கள். சிலர் மோசமான கெட்ட வார்த்தைகளால் நிர்வாகத்தையும், சேர்மனையும் பேசினார்கள். சங்கத்தலைவர் பரமசிவத்திற்கு கிடைத்த தகவல்களை அவ்வப்போது பி.கேவிடம் தெரியப்படுத்திக்கொண்டு இருந்தார். நிர்வாகம் சங்கத்தோடு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்து பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறது என்பதை மாலையிலிருந்தே சொல்லிக்கொண்டு இருந்தார். சாத்தூர் ஐ.ஓ.பி மேலாளர் இதில் தீவீரமாக இறங்கி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. பரமசிவத்தின் சகோதரர் கோவில்பட்டி ஐ.ஓ.பி மேலாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார் அப்போது.

அடுத்தநாள் காலையிலிருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டது. சிவன்கோவில் தெற்கு ரதவீதி முழுவதும் தோழர்களின் நடமாட்டங்களாய் இருந்தன. இருநூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் வந்து சேர்ந்திருந்தனர். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். சேர்மனின் டிரைவர் அம்பி தர்ணாப்பந்தலுக்குள் வந்து கிருஷ்ணகுமாருக்கு மாலை அணிவித்து "அநீதியை எதிர்க்க வந்த கிருஷ்ணன்" என்று சொன்னபோது கூட்டம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்து பெருஞ்சத்தமாய் ஆரவாரித்தது. சேர்மன் வீட்டியிடம் தொடர்ந்து அவமானங்களை சந்தித்து வந்த அவருக்குள் இருந்த கோபம் அன்றைக்கு வெளிப்பட்டது. சஸ்பென்ஷனில் அதிருப்தியடைந்திருந்த பொதுமேலாளர் கருப்பன்செட்டி அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தார். நிர்வாகத்தின் முறையற்ற நடவடிக்கை ஒவ்வொன்றும் சங்கத்தை மேலும் மேலும் வளர்ப்பதாகவே இருக்கிறது என்ற கவலை அவருக்குள் ஓடிக்கொண்டு இருந்திருக்க வேண்டும். பொதுமேலாளரின் பிரத்யேக கடைநிலை ஊழியராயிருந்த வரதராஜ பெருமாள் பந்தலுக்குள் வந்து எல்லோரிடமும் சகஜமாய் நின்று பேசிக்கொண்டு இருந்ததையும் அன்றைக்கு பார்க்க முடிந்தது.

மதியத்திற்குப் பிறகு பி.கேவிடம் சோர்வு அதிகமாக தென்பட்டது. சவரம் செய்யப்படாத அந்த முகத்தை வரைந்து கொண்டிருந்தேன். "காந்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துவிட்டால் பத்து நாட்களுக்கு முன்பிருந்தே தயாராகிவிடுவாராம். திட உணவை நிறுத்தி திரவ உணவிலேயே இருப்பாராம். உண்ணாவிரதம் இருக்கும்போது கடுமையான களைப்பை திடுமென ஏற்படுத்தாதாம்" என்று பி.கே சொல்லிக்கொண்டு இருந்தார். ஐ.ஓ.பி சாத்தூர் கிளை மேலாளர் தலைமையலுவலகத்திற்குள் சென்றார். கொஞ்சநேரம் கழித்து பரமசிவத்திடம் பேசினார். பரமசிவம், கணேசன், சோமு, சுப்புராஜ், வேலு, மணி எல்லோரும் பி.கேவிடம் பேசினார்கள். பிறகு பரமசிவம் " தோழர்களே! நிர்வாகம் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி" என அறிவித்தார். பி.கேவும் எழுந்து பேச்சுவார்த்தைக்குச் சென்றார்.

ஒருமணி நேரத்திற்கும் மேலே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. திரும்பி வந்து கிருஷ்ணகுமார் பேசினார். "தோழர்களே! நிர்வாகம் அதன் பிடிவாதத்திலேயே இருக்கிறது. உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமாம். பெரிய தண்டனை இல்லாமல் நிர்வாகம் சஸ்பென்ஷனை சில நாட்களில் விலக்கிக் கொள்ளுமாம். எந்த தவறும் செய்யாமல் இருக்கும் போது எந்த தண்டனையும் இருக்கக்கூடாது. இதில் பெரிசென்ன...சிறிசென்ன? சரி. ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி எதாவது காரணங்கள் கேட்கப்பட்டிருக்கிறதா? இல்லை. இம்மென்றால் சிறைவாசம்...உம்மென்றால் வனவாசமா. பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த நிர்வாகத்திற்கும், இந்த சேர்மனுக்கும் அப்படியே பொருந்துகிறது" என்று உணர்ச்சிபட பேசிக்கொண்டு போக கூட்டம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

கொஞ்சநேரத்தில் திரும்பவும் ஐ.ஓ.பி மேலாளர்  தலைமையலுவலகத்திலிருந்து வந்தார். அவருடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்கத்தின் சாத்தூர் கிளைச் செயலாளரும் இருந்தார். இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட் சூப்பிரண்டட்டும், அலுவலர் சங்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவருமான உமர்சலீமும், இன்னும் சில அலுவலர் சங்க பொறுப்பாளர்களும் வந்துவிட்டிருந்தனர். நிலைமை நீடித்தால் வங்கி ஸ்தம்பித்துவிடும் என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். திரும்பவும் பேச்சு வார்த்தைக்குச் சென்றனர். மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது. தெருவிளக்குகள் போடப்பட்டன. இந்தமுறை வெளியே வந்தபோது நிர்வாகம் தன்னிலையிலிருந்து இறங்கி வந்திருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. "தோழர்களே! நிர்வாகம் தோழர்.சட்டையப்பனின் சஸ்பென்ஷனை உடனடியாக விலக்கிக்கொள்வதாக உறுதியளித்திருக்கிறது" என்று பி.கே நிறுத்தினார். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். கைதட்டி "பி.ஜி.பி.இ.ஏ ஜிந்தாபாத்...ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ  ஜிந்தாபாத் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்தவாறு அமைதி காத்த பி.கே "கொஞ்சம் இருங்க..இனுமத்தான இருக்கு... ஆனால்.... அதற்கு தோழர்.சட்டையப்பன் தான் செய்த தவறுகளை எதிர்காலத்தில் திருத்திக்கொள்வதாக ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க வேண்டுமாம்" என்று சொல்லிமுடிப்பதற்குள் கூட்டத்திலிருந்து "ஒரு மயிரும் எழுதிக்கொடுக்க முடியாது" ஒருவர் ஆவேசப்பட பி.கே அடக்கினார். தோழர்.சட்டையப்பன் சலனமற்ற முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

ஊழியர் சங்க நிர்வாகிகளிடமும், நிர்வாகத்திடமுமாக மத்தியஸ்தம் செய்ய வந்தவர்கள் மாறி மாறிப் பேசினார்கள். அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பி.கே எழுந்து நிற்கும்போது லேசாக தள்ளாடியது போல இருந்தது. அவ்வளவுதான். ஒரே கூச்சல் எழுந்தது. "பி.கே நீங்க போக வேண்டாம். சேர்மனை இங்க வரச் சொல்லுங்க" என்றார்கள். சைகையால் அமைதியாக இருக்கும்படி தெரிவித்துவிட்டு பரமசிவம், கணேசன் ஆகியோரோடு பேச்சுவார்த்தைக்குச் சென்றார். முன்னூறு பேருக்கும் மேலே திரண்டிருந்த தோழர்கள் கடுமையான வேகத்தோடு இருந்தார்கள்.  கட்டுக்கடங்காத வெறி புகுந்துகொண்டது போல அந்த இடமே பரபரத்திருந்தது. காமராஜ் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டான். பக்கத்தில் இருந்த விறகுக்கடையில் சில தோழர்கள் கட்டைகளை எடுத்தபடி இருந்தார்கள். சோமுவும், ராதாவும் அவர்களை வெளியே அழைத்துக்கொண்டு இருந்தார்கள்.

இந்த தடவை வெளியே வந்தபோது பி.கே "தோழர்களே! நிர்வாகம் மேலும் இறங்கி வந்திருக்கிறது. தோழர்.சட்டையப்பன் இனி நல்லவிதமாக இருப்பேன்" என எழுதிக்கொடுத்துவிட்டால் சஸ்பென்ஷனை ரத்து செய்துவிடுவதாக சொல்கிறார்கள்" என்றார். "முடியாது...முடியாது" என்று சத்தங்கள் எழுந்தன. ஊழியர் சங்க நிர்வாகிகள் திரும்பவும் கூடி பேசினார்கள். அலுவலர் சங்கப் பொதுச்செயலாளர் ஆறுமுகம் "நிர்வாகம் இவ்வளவு இறங்கி வந்திருக்கு. நீங்களும் கொஞ்சம் இறங்கி வாங்க" என்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டு இருந்தார். பி.கே என்னை அழைத்தார். 'இனிமேல் ஒழுங்காக இருப்பேன்' என்பதற்கு பதிலாக 'எப்போதும்போல ஒழுங்காக இருப்பேன்' என்று ஆங்கிலத்தில் எழுத்தித்தர கேட்டார். எழுதிக் கொடுத்தேன். வேலு பார்த்து சரி சொன்னார். அந்த கடிதத்தை மத்தியஸ்தம் செய்ய வந்தவர்களிடம் "இப்படித்தான் எழுதித்தர முடியும்" என்று சொல்லிக் கொடுத்தார். அவர்கள் வாங்கிக் கொண்டு மாடியேறி சென்றார்கள். பி.கே விறகுக்கடைப்பக்கம் எட்டிப் பார்த்து " தோழர்களே! அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நமக்கு ஒற்றுமையைத் தாண்டி ஆயுதம் வேறு எதுவும் இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். கோபத்துக்கும், குரோதத்துக்கும் இங்கு இடமில்லை." என உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டு இருந்தார். தொண்டை அடைத்துப் பேச முடியாமல் போனது. "பி.கே உட்காருங்க...உட்காருங்க.." என்றார்கள். "அங்கு இருப்பவர்களை ஒன்று பந்தலில் வந்து உட்காரச் சொல்லுங்கள். இல்லை, இடத்தை காலி பண்ணச் சொல்லுங்கள்" என்றார். விறகுக்கடைப்பக்கம் சில தோழர்கள் எழுந்து ஒடினார்கள்.

நிர்வாகம் பிடிவாதமாக இருந்தது. வார்த்தைகளின் அர்த்தங்களில் இரண்டு பக்கமும் உறுதியாய் நின்றார்கள். எந்தத் தவறும் செய்யாதபோது, தவறு செய்தது போல எழுதித்தர முடியாது என்று பி.கே சத்தம் போட்டார். மத்தியஸ்தம் செய்ய வந்தவர்கள் மேலும் கீழுமாக போய் வந்து கொண்டிருந்தனர். கடைசியில் இரண்டு தரப்பின் அர்த்தங்களும் வருவது போன்ற ஆங்கில வார்த்தைகள் பிடிபட்ட பிறகு உடன்பாடு ஏற்பட்டது. தோழர் சட்டையப்பனிடம் கையெழுத்து வாங்கி நிர்வாகத்திடம் கொடுக்கச் சென்றனர் சங்க நிர்வாகிகள். சேர்மன் வீட்டி, சஸ்பென்ஷனை ரத்து செய்த ஆர்டரோடு, பி.கேவிடம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைக்க பழச்சாறும் வாங்கி வைத்திருந்திருக்கிறார். "என் தோழர்கள் கீழே காத்து இருக்கிறார்கள் என்று பி.கே அவரிடம் கை கொடுத்து இறங்கியிருக்கிறார். வெளியே ஒரே கொண்டாட்டமாவும், குதூகலாமாகவும் இருந்தது. கைகளை உயர்த்தி காரைக்குடியிலிருந்து வந்திருந்த தோழர்.சோலைமாணிக்கம் கோஷம் போட்டது அந்த இடத்தையும் அந்த இரவையும் காவியக்காட்சியாக்கி விட்டது. சிலர் உணர்ச்சி மேலீட்டால் கண்ணீர் விட்டு அழுதார்கள். பி.கே பழச்சாறு அருந்தி முடிக்கும் போது மணி பத்தரைக்கும் மேலே ஆகியிருந்தது. கண்ணாடி ஏற்றப்பட்ட காரில் சேர்மன் வீட்டி சென்றார்.

அடுத்தநாள் காலை தலைமையலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிவிட்டு சங்க நிர்வாகிகள் சட்டையப்பனின் சஸ்பென்ஷன் ரத்து செய்யப்பட்ட கடிதத்தோடு அவரை அழைத்துக் கொண்டு புன்னையாபுரம் கிளைக்குச் சென்றனர். அந்தக்கிளையின் மேலாளர், இப்படியெல்லாம் வீபரீதம் ஆகும் என்பதை அறியாதவராய் இருந்தாராம். மிகச்சாதாரணமான ஒரு விஷயத்தை நிர்வாகம் எப்படி பயன்படுத்தி விட்டது என்ற வருத்தம் அவருக்குள் ஒடியிருந்திருக்கிறது. திரும்பும் வழியில் சங்க நிர்வாகிகள் பல கிளைக்குச் சென்று இருக்கின்றனர்.

அடுத்தநாள் இரவு வெகுநேரம் கழித்து பி.கே சங்கக் கதவைத் தட்டினார். விளக்குகள் போடப்பட்டு சங்க அலுவலகமே விழித்துக் கொண்டது. இரண்டு நாள் பயணத்தையும், கிளைகளில் தோழர்கள் உற்சாகமடைந்ததையும் களைப்பின்றி சொல்லிக்கொண்டு இருந்தார். முத்துவிஜயன் என்னும் ஒரு அலுவலர் சங்க நிர்வாகிகளையும், தன்னையும் உபசரித்ததைப் பற்றி சொல்லி சிலிர்த்துக் கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாக் களைப்புகளையும் வெற்றி எப்படி உதிர்த்துப் போட்டு விடுகிறது? இரண்டுநாள் உண்ணாவிரதத்தில் போராளியாய் நின்ற மனிதரா இவர்? கம்பீரமற்று குழந்தை போலிருந்தார் இப்போது. எல்லோரும் போய் அந்த இரவிலும் முக்கணாந்தலில் டீ சாப்பிட்டோம். பி.கே பேசிக்கொண்டே இருந்தார். திருவள்ளுவர் பஸ்கள் ஊருக்குள் அதிவேகமாக புழுதி பறக்கச் சென்றன. கழுதைகள் போலீஸ் பிட்டுக்கு அடியில் அப்படியே நின்று கொண்டிருந்தன. நிப்புக்கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வந்து ஓய்வாக டீ குடித்துக் கொண்டிருந்தனர். "இந்த மனிதர்களுக்காக, இவர்கள் காட்டும் பாசத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற பி.கேவின் வார்த்தைகள் மட்டும் திடுமென கவனத்தில் பதிந்தாலும் மொத்த அர்த்தமும் புரிந்தது.

(இன்னும் இருக்கிறது....)

மாதவராஜ்

முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
 1 ,   2   ,   3  ,   4,   5,   6   7     8    9


No comments:

Post a Comment

Comrades! Please share your views here!