காலவரையற்ற அந்த வேலைநிறுத்த நாட்களில்தான் ஊரில் தங்கையின் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. போராட்டத்தின் உக்கிரம் பற்றிக்கொள்ளாமல் வேறு உலகத்தில் நான் இருந்தேன். கூடப்பிறந்தவர்களோடு, ஊர் நண்பர்களோடு நேரம் கலகலப்பாயிருந்தது. "அம்மாவும், அப்பாவும் ஊர்ப்பக்கம் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வாப்பா" என்றார்கள். ஒரு வாரத்திற்குப்பிறகு எங்களோடு சாத்தூரில் தங்கியிருந்த ஜீவா அவரது ஊரான சாத்தான்குளத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார். இன்னும் இரண்டு நாட்களில் வங்கி திறக்கப்படும் என்றும், முக்கியக் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது. சாத்தூருக்குச் சென்ற பிறகு எல்லாவற்றையும் உற்சாகமாக கதைகதையாய் தோழர்கள் சொன்னார்கள்.
காரைக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சாத்தூர் என போராட்டக் குழுக்கள் பிரிக்கப்பட்டு தோழர்கள் கிளைகிளையாய் சென்றிருக்கிறார்கள். முதலில் திறக்கப்பட்ட பத்துப்பனிரெண்டு கிளைகளிலும் ஒன்றிரண்டு நாட்களில் ஐந்து கிளைகள் போல மூடப்பட்டிருக்கின்றன. ஐ.என்.டி.யூ.சி யூனியனின் தலைவர்கள் தங்கள் கிளைகளையே திறக்கமுடியவில்லையாம். அங்கு கேஷியரோ அல்லது மேலாளரோ ஊழியர் சங்கத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும், போராட்டக்குழுக்கள் லாட்ஜ்களில் தங்கி, முப்பதுக்கும் மேற்பட்டவர்களோடு உற்சாகத்தோடு இயங்கி வந்திருக்கின்றனர். பொது மேலாளர் கருப்பன்செட்டிக்கு நிர்வாகத்தை வீட்டி கையாளுகிற விதம் எதுவும் பிடிக்காமல் இருப்பதாகவும் தலைமையலுவலகத்தில் பேச்சு அடிபட்டிருக்கிறது. வீட்டியின் வீட்டில் ஆலோசனைகள் மாறி மாறி நடந்திருக்கின்றன. அலுவலர் சங்கத்தை தன்னோடு தக்க வைத்துக் கொள்வதற்கு படாதபாடு பட்டிருக்கிறார். எதுவும் முடியாமல் போக, இறுதியில் உடன்பாட்டிற்கு இறங்கி வந்திருக்கிறார்.
வேலைநிறுத்தம் நடந்த ஒன்பது நாட்களையும் லீவாகக் கருதி சம்பளம் கொடுக்க நிர்வாகம் ஒப்புக் கொள்கிற அளவுக்கு போராட்டம் வெற்றி பெற்றிருந்தது. ஊழியர்களும், அலுவலர்களும் பணிக்குச் சேரும் போது கட்டியிருந்த செக்யூரிட்டி டெபாசிட்டை திருப்பித் தரவும், டிரான்ஸ்பர் பாலிசி ஒன்று சங்கங்களோடு கலந்து பேசி ஏற்படுத்தவும், அனைத்துக் கிளைகளுக்கும் கேல்குலேட்டர் வாங்கித் தரவும், எழுத்தர் தேர்வு எழுத பத்து வரை கல்வித் தகுதி உள்ள கடைநிலை ஊழியர்களை அனுமதிக்கவும் நிர்வாகம் தள்ளப்பட்டிருந்தது. எல்லாம் நமது ஒற்றுமையால் வந்தது என்று கிருஷ்ணகுமார் வட்டாரக் கூட்டங்களில் எழுச்சியோடு புரிய வைத்தார். எங்கும் உற்சாகமும், சங்கத்தின் மீது அளப்பரிய காதலும் பொங்கியிருந்தது. வாழ்க்கை எவ்வளவு வேகமாக நிறம் மாறிக்கொண்டே போகிறது. ஐந்தாறு மாதங்களுக்கு முந்தைய நிலைமையை யோசித்துப் பார்க்கும் போது எல்லாம் பிரமிப்பாய் இருந்தது. ஒரு அமைப்புக்கு தலைமை எவ்வளவு முக்கியமானது என்பது புரிய ஆரம்பித்தது.
தென்காசியில் வைத்து அலுவலர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களும், ஊழியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களும் சேர்ந்து டிரான்ஸ்பர் பாலிசியை ஒன்றை உருவாக்கினார்கள். அலுவர்களுக்கு ஒரு இடத்தில் மூன்று வருடங்கள் எனவும், ஊழியர்களுக்கு நான்கு வருடங்களெனவும் முடிவு செய்யப்பட்டது. கடைநிலை ஊழியர்களுக்கு மாறுதல் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே எனவும், பெண்களுக்கு அவர்களது வாழ்க்கைத்துணை பணிபுரியும் இடங்களுக்கு அருகில் எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிருஷ்ணகுமாரே எல்லாவற்றுக்கும் ஆதார சுருதியாக இருந்தார். அவரது பேச்சில் அவர் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்தார். பி.கே என்னும் இனிஷியலில் கம்பீரமாக தெரிந்தார். ஊழியர்கள் மத்தியில் மறுப்பேதுமற்ற பிம்பம் அப்போது அவர்.
கொக்கி என்றும், கம்யூனிஸ்ட் என்றும் பி.கே அடையாளம் காணப்பட்டிருந்தார். ஒருநாள் அவரிடமே "நீங்கள் கம்யூனிஸ்டா" என்று கேட்டேன். சிரித்துக்கொண்டார். "ஏன் சிரிக்கிறீர்கள்" என்ற போது, "அப்படி அழைக்கப்படுவதில் சந்தோஷம், ஆனால் அதற்கு நான் தகுதியில்லையே" என்று அந்தப் பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டு, "இந்தக் கடிதத்தை எழுதுங்களேன்" என்று டிக்டேட் செய்ய ஆரம்பித்தார். ஜீவாவுக்கு நான் பி.கே அறைக்குச் செல்வதில் கொஞ்சம் வருத்தமிருந்தது. அவர் மீது மதிப்பு இருந்தாலும், என் மீது இருந்த அக்கறையே அதற்கு காரணம். "ஏலே...அந்த நெட்டையனோடு சேர்ந்து ஒரேயடியாத் திரியாத. அளவோட வச்சுக்க. பொழைக்கிற வழியப் பாரு" என்று திடுமெனச் சொல்வார். அவரது பாட்டையும், பாசத்தையும் ரசிக்கும் எனக்கு இந்த பேச்சு மட்டும் பிடிக்காது. திமிர் வரும். பழகினா என்ன ஆகிவிடும் என்று பி.கே அறைக்குப் போவேன்.
சாயங்காலமானால் எதோ வெறுமை சூழ்ந்து கொள்ள, பிடிப்பற்ற வாழ்வில் எதையோ தேடுவது போல இருந்தது. அறைக்கு பெரும்பாலும் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகுதான் போவேன். காலையில் எல்லோரும் குளித்து முடித்துக் கிளம்பிய பிறகுதான் எழுந்து சோம்பல் முறிப்பேன். வங்கியில் வேலை முடிந்த பிறகு சில நாட்கள் கிருஷ்ணகுமாரோடு, சில நாட்கள் அறை நண்பர்களோடு சினிமா, மணிசங்கர் லாட்ஜில் தங்கியிருந்த ஐ.ஓ.பியில் வேலை பார்த்த கண்னன் அறைக்குச் செல்வது என்று கழியும். பாண்டுகுடியிலிருந்து சாத்தூருக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்திருந்த காமராஜ் சாயங்கால நேரங்களில் வந்து ஒரு சிகரெட் குடித்துவிட்டு எதாவது புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பான். எப்போதாவது சீக்கிரத்தில் அறைக்குச் சென்றால் ஜீவாவை பாடச் சொல்லி தாளம் போட்டு கூத்தடிப்போம். அந்தத் தெருவில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் தங்கமாரியப்பனுக்குத்தான் இந்த சத்தங்கள் அவ்வளவாக பிடிக்காது.
அப்படியொரு நாளில்தான் அம்முவிடமிருந்து முதன்முதலாக கடிதம் வந்திருந்தது. சென்னையில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்காரம்மாவிடம் முகவரி வாங்கி எழுதியிருந்தாள். அண்ணன் பாண்டிச்சேரிக்கு மாற்றலாகும் வரை என்னை சந்திக்க முடியும் என்று நம்பியிருந்திருக்கிறாள். வாழ்க்கை முழுவதும் என்னோடு பயணிக்க விருப்பம் தெரிவித்திருந்தாள். கல்லூரி முகவரிக்கு கடிதம் எழுதி, அனுப்புனர் முகவரியில் என்பெயரைப் போடாமல் சாந்தி என்று குறிப்பிடச் சொல்லியிருந்தாள். சாத்தூர், அந்த வெப்பம், புன்னகை இழந்த நாட்கள் எல்லாம் சட்டென்று மாறிப்போக, ஒரு பெண்ணின் காதலனாக திளைத்துப் போனேன். கடிதத்தை திரும்ப திரும்பப் படித்தேன். ஆக்ஸ்போர்டு பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகள் குதூகலித்தது யாவும் எனக்காக எனத் தோன்றியது. அன்றைக்கே கடிதம் எழுதினேன். நான்கு நாட்கள் கழிந்ததும் தபால்காரருக்காக அலுவலகத்தில் காத்திருந்தேன். அவளிடமிருந்து கடிதம் வந்ததும் நிலை கொள்ளாமல் எழுத்துக்களை அடைகாப்பேன். தவித்து, சிலிர்த்து, சுவாசித்துக் கிடந்தேன்.
அலுவலர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் ஊழியர்கள் சங்கத்தில் அரவமில்லாமல் சேர்ந்து கொண்டிருந்தனர். தங்களுக்கு பாதுகாப்பும், எதிர்காலமும் ஊழியர்கள் சங்கத்தில் இருப்பதாக நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர். உமர்சலீமும், சங்கரசுப்புவும் டிரான்ஸ்பரில் செல்ல அவர்கள் தங்கியிருந்த 42-பி, எல்.எப் தெருவுக்கு ஊழியர்கள் சங்கம் வாடகைக்கு குடி புகுந்தது. வக்கீல் அகமதுஜான் போர்ஷனில் இருந்து, முழுவதும் தங்களுக்கு என்ற விலாசத்துடன் வாடகைக்குச் சென்ற அந்த நாளை தலைமையலுவலகத்தின் முன்பு திருவிழா போல கொண்டாடினார்கள். நானூறுக்கும் மேலே தோழர்கள் திரண்டிருந்தனர். சென்னையிலிருந்து பெஃபி சங்கத்திலிருந்து ஆறுமுகநயினார், கோதண்டராமன், வாசுகி வந்திருந்தார்கள். நயினார் கொடியேற்றினார். கிளைகளிலிருந்து, வட்டாரங்களிலிருந்து சங்கத்திற்கு நாற்காலிகள். பீரோ, டேபிள், ஃபேன்கள், கடிகாரம் என சாமான்களை தோழர்கள் குவித்தனர். அந்த விழாவில் நான் ஒரு கவிதை வாசித்தேன். 'இந்த எட்டு மாதக் குழந்தை தத்தி நடக்க ஒரு குட்டித் தொட்டில்' என்று வைரமுத்து பாணியில் எழுதிய வரிகள் கைதட்டல் பெற்றன. கிருஷ்ணகுமார் அன்று மொத்தக் கூட்டத்தையும் தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வார்த்தைகளாலும், தொனியாலும் மெய்சிலிர்க்க வைத்தார். சங்கத்தின் மகத்துவத்தை ஒரே நாளில் எல்லோருக்கும் புரிய வைத்துவிடமென்ற துடிப்பும், வெறியும் நிறைந்திருந்தது. பேசி முடித்ததும், "எப்படியிருந்துச்சு" என்று என்னிடம் கேட்கிற பழக்கம் உண்டாகியிருந்தது.
அவரோடு நெருக்கம் தென்பட்டாலும், ஊழியர் சங்கத்தின் முழுச் செயல்பாடுகளையும் அறியாமல் இருந்தேன். பி.கே தான் எல்லாமும் என்றுதான் எல்லோரையும் போல எனக்கும் புரிந்திருந்தது. ஒரு சங்கம் என்றால் என்ன, அது எப்படி வழி நடத்தப்படுகிறது, எப்படி இயங்குகிறது, செயற்குழுவின் பங்கு என்ன, தொழிற்சங்கத்தின் அரசியல் என்ன என்பதெல்லாம் புரிந்திருக்கவில்லை. நான் வெளியேத்தான் இருந்திருக்கிறேன். உள்ளே செல்வதற்கான நாள் ஒன்று வந்தது. மேலும் அருகில் செல்வதற்காகவே அந்த சம்பவம் நடந்தது போலிருக்கிறது.
அந்த அந்தி வேளையில் எங்கள் அறை களை கட்டியிருந்தது. அழகப்பனும் வழக்கத்தை மீறி உற்சாகமாயிருந்தான். திடுமென கதவைத் தள்ளிக் கொண்டு நான்கைந்து பேர் உள்ளே நுழைந்தார்கள். கூட இருக்கிற அறை நண்பர்களைப் பார்க்க வந்தவர்களாய் தோன்றவில்லையென்றாலும், "யார் வேணும்" என்றேன். "உனக்கு எந்த ஊருடா" என்று மிரட்டலாக பதில் வந்தது. விபரீதமாய்த் தெரிந்தாலும், "என்ன மரியாதையில்லாம பேசுறீங்க" என்று கேட்பதற்குள் முன்னால் இருந்தவன் வேகமாக பெல்ட்டை சுழற்றினான். எதிர்பாராத சுளீரால் நிலைகுலைந்து நிதானிப்பதற்குள் பெல்ட்டை மீண்டும் சுழற்றினான். தடுப்பதற்கு உயர்ந்த என் முன்னங்கையில் பெல்ட் சுற்றியது. சுண்டி இழுக்கவும் பெல்ட் என் கைக்கு வந்தது. தைரியம் கொண்டு மோசமான கெட்ட வார்த்தையை உதிர்த்துக் கொண்டு பெல்ட்டை ஒங்கிய அந்த கணத்தில் பின்னால் நின்றவனின் அசைவைப் பார்த்தேன். தோளுக்குப் பின்னால் இருந்து நீண்ட அரிவாள் அவன் கைகளுக்கு மின்னல் போல வந்தது.
(இன்னும் இருக்கிறது....)
- மாதவராஜ்
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!