17.1.12

இருட்டிலிருந்து - 9



ஒரு கணம்தான். சர்வாங்கமும் நடுங்கிப் போக, தப்பித்துக் கொள் என்று உள்ளுக்குள் அலறியது. பின்பக்கம் திறந்திருந்த வாசல் வழியே ஒட்டமெடுத்தேன். யாரோ துரத்துவது தெரிந்தது. வாசலைத் தாண்டி பரந்திருந்த சின்ன மொட்டை மாடியைக் கடந்து, சுவரை தாண்டி கீழே சரிந்திருந்த ஓடுகளில் உட்கார, வழுக்கி கீழே போய் குதித்தேன். அது கமர்ஷியல் டாக்ஸ் அலுவலகத்தின் பின்பக்கம். உள்ளேயிருந்து இரண்டு பேர் வேகமாக அருகில் வந்து 'என்ன சார்...என்ன சார்" என்று பதறினார்கள். மூச்சு வங்கிக்கொண்டு "மேலே யார்னு தெரில ..கொஞ்சம் பேர் வந்து அடிக்கிறாங்க" என்றேன். எனக்குப் பின்னால் அழகப்பனும் என்னைப் போலவே ஓடுகளின் வழியே கீழே வந்து சேர்ந்தான். ஓடுகளில் உட்காராமல் குதித்ததால், ஓடுகள் காலை அங்கங்கு வசமாக கிழித்து விட்டிருந்தன. சிராய்ப்புகளில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பரிதாபமாக நின்றிருந்தான். மேலே சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஜீவாவும், தங்கமாரியப்பனும் மாட்டிக் கொண்டு விட்டார்கள். என்ன ஆச்சு என்று தெரியாமல் தவிப்பாயிருந்தது. அதற்குள் அலுவலகத்தில் உள்ளவர்களும், தெருவில் உள்ளவர்களும் வெளியே கூடிவிட, மரப்படிகளின் வழியே தம் தம்மென்று சத்தங்கள் எழும்பி மெல்ல அடங்கியது.

"போய்ட்டாங்க", "யார்னு தெரியல", "எதுக்கு வந்து அடிச்சாங்க" குரல்கள் கேட்டன. அழகப்பன் மேலே சென்றான். நான் அசையாமல் கீழேயே உட்கார்ந்திருந்தேன். குற்ற உணர்ச்சி வதைத்தது. நான் மட்டும் தப்பித்து ஓடி வந்தது நியாயமாக படவில்லை. அலுவலகத்தில் இருந்த ஒருவர் "சார்...எதாவது குடிக்கிறிங்களா?' என்று கேட்டார். வேண்டாம் என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து மேலே போனேன். ஜீவா ஒரு மூலையிலும், தங்க மாரியப்பன் இன்னொரு மூலையிலும் நின்றிருந்தார்கள். தெருவில் உள்ளவர்கள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ஜீவாவின் அருகில் செல்ல தெம்பில்லாமல் வாசலில் உட்கார்ந்து விட்டேன். சூட்கேஸ்கள் தூக்கியெறியப்பட்டிருக்க துணிகள் அறை முழுவதும் இறைந்து கிடந்தன. ஜீவா அவரது முழங்கையை பார்த்துக் கொண்டிருந்தார். அருவாளின் பின்பக்கத்தால் அடித்திருக்க வீங்கியிருந்தது. தங்க மாரியப்பனின் கண்கள் சிவந்திருக்க, முகம் வீங்கிப் போயிருந்தது.

கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணகுமார், பெருமாள்சாமி, காமராஜ் என நிறைய தோழர்கள் வந்து விட்டனர். கிருஷ்ணகுமார் பதற்றத்தோடு அருகில் வந்து தோளில் கைவைத்து அமைதியாக இருந்தார். ஜீவாவின் அருகில் போய் பார்த்தார். சட்டென்று "வாங்க ஆக வேண்டியதைப் பார்ப்போம்" என்றார். போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறப்பட்டது. ரோட்டோரக் கடையில் இட்லி சாப்பிட்டதும், கிருஷ்ணகுமார் எல்லோரையும் சங்க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே இரவு தங்கச் செய்தார்.

எவ்வளவு யோசித்தாலும் அசம்பாவிதம் ஏன் நடந்தது என்று ஊகங்கள் மட்டுமே மிஞ்சின. காலையில் சங்கத்தலைவர் பரமசிவம் வீட்டில் டிபன் சாப்பிடும்போது ஜீவா மெதுவாக என்னிடம் கேட்டார். "ஏல நீ எதாவது சேட்டை பண்ணியா". அதிர்ச்சியாய் இருந்தது.  அறையில் தங்கியிருந்தவர்களில் நான் மட்டுமே எந்த வரைமுறையும், ஒழுங்கும் இல்லாதவனாக கருதப்பட்டேன். இரவு வெகுநேரம் கழித்து தூங்கச் செல்வது தவிர பெரும்பாலும் தங்கியது கிடையாது. இருந்தாலும் நான்தான் காரணமாக இருக்க முடியும் என பேச்சு நிலவியது அவமானமாய் இருந்தது. அடுத்தநாள் சங்க உதவிப் பொதுச்செயலாளர் கணேசன் புதிரை அவிழ்த்தார். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி அப்போதுதான் திருமணமாகியிருந்த இளம் தம்பதியினர் இருந்ததாகவும், பிரம்மச்சாரிகளின் நடமாட்டம் அந்த கணவனுக்கு எரிச்சலாக இருந்ததாம். யாரை சொல்லி என்ன ஆகப்போகிறது. கேட்டுக் கொண்டு இருந்த கிருஷ்ணகுமார் "சரி...விடுங்க...இனும நீங்க அங்க போக வேண்டாம்...இங்கேயே தங்கிக்கங்க" என்றார். நான், அழகப்பன், ஜீவா, பெருமாள்சாமி சங்க அலுவலக வாசிகளானோம். 42-பி, எல்.எப்.தெரு என்னும் முகவரி எங்கள் விலாசமானது.

பாலம் கடந்து சாத்தூர் ஆரம்பிக்கிற இடத்தில் வலப்பக்கத்தில் சட்டென்று  ஆற்றை நோக்கி திரும்பும் ஒரு சின்னச்சந்து போன்ற தெருவின் துவக்கத்தில், மாடியில் வரிசையாய் இருந்த மூன்று குடியிருப்புகளில் நடுவே இருந்தது சங்க அலுவலகம். வீடுகளைப் போல இருந்தாலும், குடும்பமாக யாரும் தங்கியிருந்தது இல்லை. இப்படி அலுவலகங்களில் பணிபுரிபவர்களே தங்கியிருந்தனர். சங்க அலுவலகத்தில் மூன்று அறைகள் இருந்தன. நடுவில் இருந்த அறைதான் பீரோ, மேஜை, டேபிள், நாற்காலிகளோடு சங்க அலுவலமாக செயல்பட்டது. அடுப்போடு இருந்த மூன்றாம் அறையில் எங்களது உடமைகளை வைத்துக் கொள்ள முடிந்தது. முன்பக்கம் வாசலைத் திறந்தால் மூன்று குடியிருப்புக்கும் பொதுவாக பால்கனி நீண்டிருக்கும். அங்கு நின்றால் கீழே தெருவும், நேர் எதிரே கொஞ்சம் தள்ளி மசூதியும் தெரியும். பின்பக்க வாசலைத் திறந்தால் மூன்று குடியிருப்புக்கும் பொதுவான சின்ன மொட்டைமாடி ஐந்தடி பக்கச் சுவரோடு காட்சியளிக்கும். கழிப்பறைகள், தண்ணீர் டேங்க் எல்லாம் அங்குதான். பக்கச்சுவர் அருகே சென்று பார்த்தால் எப்போதும் இரைந்து கொண்டிருக்கிற மெயின்ரோடு தெரியும். ஆற்றையொட்டி நிற்கிற மரங்களும், அதில் பிரம்மாண்டமான உருவத்தோடு அந்த புளிய மரமும் பார்வையை வசப்படுத்தும்.

அந்த புளியமரத்தின் அடையும் பட்சிகளின் சத்தங்களில் நாட்கள் புலர ஆரம்பித்தன. பிலால் டீக்கடையிலிருந்து வரும் அப்பாஸ் "தோழர்" என்று கதவைத்தட்டி நிற்பான். திறந்தால் நான்கு டீக்களோடு சிரிப்பான். மீண்டும் ஆற்றின் ஊற்றுக்களில் சென்று குளிப்பது வழக்கமானது. கிருஷ்ணகுமார் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தாலும், பெரும்பாலான நேரம் சங்க அலுவலகத்திலேயே இருந்தார். இரவுகளில் தொலைதூரத்தில் இருந்து வரும் தோழர்கள் கதவைத்தட்டுவார்கள். டிரான்ஸ்பருக்கு, தலைமையலுவலகத்தில் அடுத்தநாள் ஸ்டேசனரி எடுப்பதற்கு, கிளையில் எதாவது பிரச்சினை என்று வரும் அவர்களை சங்க அலுவலகம் ஆதரவோடு பராமரிக்கும். தினந்தோறும் 'அன்புள்ள பொதுச்செயலாளர் பி.கேவுக்கு...' என ஆரம்பித்த கடிதங்கள் ஏராளமாய் சங்க அலுவலகத்திற்கு வரும். தலைமையலுவலகத்தில் டிபார்ட்மெண்ட்டில் சென்று அந்தக் கடிதங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து உடனடியாக பேசி அன்று சாயங்காலமே பதில் எழுதிப் போடுவார். பல கடிதங்களுக்கு பி.கே சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். எப்போதும் தோழர்களின் வருகைகளோடும், நிர்வாகத்தின் நடவடிக்கைகளைப் பற்றிய விவாதங்களோடும் 42,பி-எல்.எப்.தெரு உயிரோட்டத்தோடு இருந்தது.

பி.கேவைப் பார்க்க சங்கத் தோழர்கள் மட்டுமில்லாமல் வெளியிலிருந்தும் அவ்வப்போது தோழர்கள் வந்து செல்வார்கள். அவர்களோடெல்லாம் நெருக்கமாக பழகமுடிந்தது. வக்கீல் மாரிமுத்து, டாக்டர் வல்லபாய், விகடன் மாணவ நிருபராய் அப்போது இருந்த சௌபா, மதுரையில் பாரத ஸ்டேட் பாங்க்கில் வேலை பார்த்த ஸ்ரீதர், மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளராய் இருந்த எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் போன்றோரெல்லாம் அடிக்கடி வருவார்கள். திடுமென இரவு பத்து மணிக்குப் போல தோழர்.எஸ்.ஏ.பெருமாள் வந்து ஆஜானுபாகுவாய் "என்ன பி.கே... எதாவது படம் பாக்கப் போவமா" என்பார். கிருஷ்ணகுமார் எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு என்னையும், காமராஜையும் அழைத்துக் கொண்டு படம் பார்க்கச் செல்வார். பி.கேவிடம் "யார் இவர்" என்றேன். சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர்களில் ஒருவர் என்றார். விட்டலாச்சாரியா படம் என்றால் சுவராஸ்யமாக பார்ப்பார் எஸ்.ஏ.பி. படம் பார்த்துவிட்டு வந்த பிறகு டீக்குடித்து விட்டு விடிய விடிய பி.கேவும், எஸ்.ஏ.பியும் பேசிக்கொண்டிருப்பார்கள். எம்.ஜி.ஆரைப் பற்றி, ராஜிவ் காந்தியின் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான அழைப்பு பற்றி, கோர்பச்சேவின் உலக அமைதிக்கான நடவடிக்கைகள் பற்றி செய்திகள் விரிந்து கொண்டிருக்கும். முடிந்தவரை விழித்து கேட்டு, அப்படியே தூங்கியும் விடுவேன். அவர்கள் இருவரும் எப்போது தூங்குவார்கள் என்று தெரியாது. காலையில் "மாது...எந்திரி' என்று டீக்குடிக்க பி.கே எழுப்புவார். எஸ்.ஏ.பி பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். எதோ கனவு மாதிரி எல்லாம் நினைவுக்கு வரும். வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல என்பது மெல்ல மெல்ல படிந்து கொண்டிருந்தது.

சேர்மன் வீட்டி புதிய கிளைகளைத் திறப்பதில் மிக துரிதமாக இருந்த நேரம் அது. 110க்குள் இருந்த கிளைகளின் எண்ணிக்கையை சில மாதங்களுக்குள் 140ஐ நெருக்கிக் கொண்டு வந்திருந்தார். ஒரேநாளில் மூன்று கிளைகளைக்கூட திறந்திருந்தார். திறப்புவிழா கூட்டங்களில் திரளும் தோழர்களிடையே தன்னை பிரதானப்படுத்திக் கொள்வதற்கும், தோழர்களை சங்க நடவடிக்கையிலிருந்து கவனத்தை திருப்புவதற்கும் அவர் ஜீப்புகளில் ஓடிக்கொண்டிருந்தார். ஐ.என்.டி.யு.சி தலைவர்கள் எல்லா கிளைத் திறப்புவிழாக்களுக்கும் சென்று வீட்டிக்கு மாலையும், சால்வையும் அணிவித்துக் கொண்டிருந்தனர். கிளைகள் திறக்கப்பட்ட இடங்கள் குறித்து அதிருப்தி இருந்த போதிலும் சங்கம் அவைகளில் குறிக்கிடாமல் இருந்தது. முதலில் கிளைகள் திறக்கப்படட்டும், வங்கியின் எதிர்காலம் குறித்த செயல்பாடுகளில் முட்டுக்கட்டை வேண்டாம் என்று பி.கே ஒரு தோழரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்பது நாள் ஸ்டிரைக்கிற்கு முக்கிய காரணமாயிருந்த அலுவலர் சங்கம் பி.ஜி.பி.இ.ஏவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் இடைவெளியை அதிகரித்துக் கொண்டிருந்தது. 'கிளர்க்குகள் சரிசமமாய் உட்கார்ந்து சிகரெட் பிடிக்கிறார்கள்' என்பது கூட அலுவலர் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு சகிக்க முடியாமல் இருந்ததாக சங்க அலுவலகத்தில் பேச்சு அடிபட்டது.

கொஞ்சநாள்தான் இந்த நிலைமை நீடித்தது. வீட்டிக்கு பொறுமையில்லாமல் போனது. வங்கியில் ஒரு தீர்மானகர சக்தியாக உருப்பெற்றிருந்த பி.ஜி.பி.இ.ஏவின் வளர்ச்சி அவரை உறுத்திக் கொண்டே இருந்தது. மரம் சும்மாயிருந்தாலும் காற்று சும்மாயிருக்க விடாது என்பது மீண்டும் நிருபணமாகியது. புன்னையாபுரம் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த தோழர்.சட்டையப்பன் மீது மேலாளர் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் 'disobedience' என்று ஒரு புகார் கொடுத்திருந்தார். நிர்வாகம் உடனடியாக தோழர்.சட்டையப்பனை சஸ்பெண்ட் செய்தது. டிரான்ஸ்பர்களை வைத்து ஊழியர்களை மிரட்டிய நிர்வாகம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றிருக்கிறது என்று புரிந்து கொள்ள சங்கத்திற்கு நேரமே தேவையில்லாமல் இருந்தது. தோழர்.பி.கே அடுத்தநாளே தலைமையலுவலகத்தின் முன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

(இன்னும் இருக்கிறது....)

மாதவராஜ்

முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
 1 ,   2   ,   3  ,   4,   5,   6   7     8


No comments:

Post a Comment

Comrades! Please share your views here!