26.1.2012 அன்று நமது சங்க அலுவலகத்தில், ‘வங்கியும், நாமும்’ என்று புதிதாக பணிக்குச் சேர்ந்திருக்கும் அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்குமான கலந்துரையாடல் நடந்தது. வித்தியாசமான , புதிய அனுபவமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது என்பதே அனைவரின் கருத்தாகவும், மன உணர்வாகவும் இருந்தது.
1989க்குப் பிறகு 20 வருடங்கள் கழித்துத்தான் புதிய பணிநியமனங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஏறத்தாழ ஒரு தலைமுறை இடைவெளி இது. இன்றைய இளைஞர்களின் உலகம் முற்றிலும் புதிதாகவும், இன்றைய சூழல் முற்றிலும் வேறொன்றாகவும் இருக்கிறது. அவர்கள் முதலாக பார்ப்பதே கணினி மயமான நமது கிளைகளைத்தான். அதற்கு முன்னால் லெட்ஜர்களைப் புரட்டிய காலங்கள் அவர்கள் அறியாதவை. அதுபோலவே இன்று ஓரளவுக்கு வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தை நாம் வாங்கிக்கொண்டு இருக்கிறோம். அதற்காக நாம் நடத்திய தொடர்ந்த போராட்டங்கள், செய்த தியாகங்களும் அவர்கள் அறியாதவை. இந்த இடைவெளிகளை நிரப்பும் முயற்சியாகவே நாம் தொடர்ந்து புதிய தோழர்களை அணுகுகிறோம். அப்படியொரு காரியம்தான் 26.1.2012 அன்றைய கலந்துரையாடலும்.
PGBOUவின் தலைவர் தோழர்.போஸ்பாண்டியன் எல்லோரையும் அறிமுகப்படுத்தியும், முகாமின் நோக்கத்தையும் விளக்கிப் பேசினார். மிக இயல்பாக இருந்ததோடு, நெருக்கமாக உணர வைப்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. தங்களை அறிமுகப்படுத்திகொண்டபோது சில தோழர்கள் முதலில் சங்கம் என்றால் தங்களுக்கு இருந்த புரிதல் வேறாகவும், இங்கு வந்தபிறகு அவை மாறியிருப்பதையும் தெரிவித்தனர். நெருக்கடியான நேரங்களில் PGBEAவும், PGBOUவும் எப்படித் தங்களுக்கு உதவின என்பதனையும் சிலர் தெரிவித்தனர்.
தொடர்ந்து AIRRBEA TN Orgainsing secretary தோழர் T.கிருஷ்ணன் கிளைகளில் புதிய தோழர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளையும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகளையும் விளக்கினார். அனுபவத்திலிருந்து எடுத்து வைத்த விஷயங்கள் புதிய தோழர்களுக்கு வழிகாட்டுவதாக இருந்தன. கொஞ்சம் தயக்கங்கள் இருந்தபோதும் , வந்திருந்த தோழர்கள் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை வெளிப்படுத்தினர். வாடிக்கையாளர்களை கையாள்கிற விதம், நிர்வாக விதிகளை எதிர்கொள்கிற நிர்ப்பந்தங்கள் எல்லாம் அவைகளில் இருந்தன.
அடுத்ததாக PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ், கிராம வங்கிகளில் தொழிற்சங்க இயக்கம் குறித்து பேசினார். அதில் கடந்த கால நமது வாழ்க்கை இருந்தது. வணிக வங்கியின் கிராமப்புற கிளைகளாக ஆரம்பிக்காமல், பிரத்யேகமாக மத்திய அரசு கிராம வங்கிகள் என ஆரம்பித்த சூழ்ச்சியிலிருந்து அந்த வரலாறு தொடங்கியது. 100 ருபாய் சம்பளம் கொடுக்க வேண்டிய இடத்தில் 30 ருபாய்க்கு ஆள் பிடிக்கிற வேலை அது என்பதையும், தனித்தனி தீவுகளாய் ஆரம்பிக்கப்பட்டதால் கிராம வங்கி ஊழியர்கள் தேசம் முழுவதும் திரள முடியாமல் செய்த ஏற்பாடு என்பதையும் விளக்கினார். 1977ல் லக்னோவில் பயிற்சிக்காக சென்ற தோழர்.திலிப்குமார் முகர்ஜி உள்ளிட்ட கிராம வங்கி அதிகாரிகள் இவைகள் குறித்து விவாதித்து சங்கம் ஆரம்பிப்பது என்கிற முடிவுக்கு வந்ததும், அதன் விளைவே AIRRBEA என்பதையும் தெரியப்படுத்தினார். அன்றைக்கு வணிக வங்கியில் இருந்த மிகப்பெரிய சங்கங்கள் எல்லாம் கிராமவங்கி ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வராதபோது அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்களின் பொதுச்செயலாளராக இருந்த தோழர். அசிஸ்சென் நமது சங்கத்திற்கும் தலைமை தாங்கி, “Equal pay for wequal work' என்றும் “Rural Bank for Rural India" என இரு கோரிக்கைகளை உருவாக்கித் தந்ததையும் அதன் வழியே நமது தொழிற்சங்க இயக்கம் தொடர்ந்ததையும், தொடர்வதையும் விளக்கினார். 1980ல் பாண்டியன் கிராம வங்கியில் ஒரு அலுவலர் ‘சொடக்கு’ போட்டு ஒரு ஊழியரை அழைத்ததை எதிர்த்து அனைவரும் திரண்டு எழுந்ததும், மரியாதைக்காகவும், குறைந்த பட்ச அடிப்படை வசதிகளுக்காகவும் PGBEA இங்கு போராட்டங்கள் நடத்தியதையும் நினைவுகூர்ந்தார். தொழிற்சங்க இயக்கங்கள் எல்லாம் நமது தேவைகளிலிருந்தும், சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்க்கவும் உருவானவை என்பதாகவும், அவைகளே நமது எதிர்காலத்திற்கான வெளிச்சம் என்பதாகவும் அவரது பேச்சு அமைந்திருந்தது.
மதிய உணவிற்குப் பிறகு புதிதாக வந்திருந்த தோழர்களிடம் கருத்துக்கள் ஒரு questionaire மூலம் பெறப்பட்டன. அவர்கள் பற்றிய குறிப்புகள், குறிக்கோள்கள், கிளைகளில் சீனியர்கள் அவர்களிடம் நடந்துகொள்ளும் விதம், கிளைகளில் பணிச்சூழல், அவர்கள் விரும்பும் கிளைகள் என மொத்தம் 29 கேள்விகள் அதில் இருந்தன. சில தோழர்கள் விரும்பும் கிளைகள் இல்லையென்று குறிப்பிட்டு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதில் காணப்பட்ட சில முக்கிய அம்சங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சங்கத்திடமிருந்து தாங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதற்கு ‘ஒற்றுமை’ என்றும், ‘ஊழியர்கள் நலன் பேண வேண்டும்’ என்றும் எழுதியிருந்தனர். நிர்வாகத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதற்கு பெரும்பாலும் ‘Transperancy' எனக் குறிப்பிட்டு இருந்தனர். நிர்வாகம் தானாக முன்வந்து ஊழியர்கள்/அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா என்பதற்கு அனைவருமே ‘இல்லை’ என தெளிவாக பதிலளித்து இருந்தனர்.
அமைதியாக இருந்த புதிய தோழர்கள் மெல்ல பேச அரம்பித்தனர். அவர்களுக்குள் இருக்கும் வெப்பம் அப்போது வெளிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கிளைகளில் ஏற்பட்டு இருக்கும் பணிநெருக்கடிகளும், அரசு மற்றும் நிர்வாகத்தின் புதிய பணி நியமனக் கொள்கைகளும் கடும் விமர்சனத்துக்குள்ளாயின. இங்கு பணிக்குச் சேர்கிறவர்கள் ஏன் வேறு வேலைக்குப் போகிறார்கள், ஏன் பணி நியமன நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு, பலர் தேர்வு பெறாத சூழல் ஏற்படுகிறது என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அடிப்படையான விஷயங்கள் குறித்து நாம் பரிசீலனை செய்யவும், தெளிவுகளை நமக்குள் ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்பதையும் தெரியப்படுத்தினர். ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைந்தது.
இதுவரையிலான மொத்த நிகழ்வையும் பார்த்தும், ரசித்தும், உள்வாங்கியும் இருந்த இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்மாநில உதவித்தலைவர் தோழர்.எஸ்.வி.வேணுகோபாலன் பேச அழைக்கப்பட்டார். புதிய தோழர்களுக்குள் இருக்கும் வெப்பம் வெளிப்பட்டதையும், அதை அணைக்க போர்த்தும் போர்வையும் தீப்பற்றிக் கொள்வதையும் தாம் இங்கு பார்த்ததாக அவர் பேச ஆரம்பித்தார். மாறிவரும் இன்றைய காலக்கட்டத்தில், புதிதாக பணிக்குச் சேர்கிறவர்களோடு இப்படியான உரையாடல்கள் நடைபெற வேண்டி இருப்பதையும், அதை தொழிற்சங்கங்கள் நடத்த வேண்டிய அவசியம் இருப்பதையும் குறிப்பிட்டவர் அப்படியொரு முன்முயற்சியை எடுத்திருக்கும் PGBEAவுக்கும், PGBOUவுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் என்றால் என்ன, அதன் நோக்கங்கள் என்ன, அதன் நடவடிக்கைகள் என்ன என்பதை இலக்கியத்தின் பக்கங்களிலிருந்தும் வாழ்வின் பக்கங்களிலிருந்தும் எடுத்துச் சொல்லச் சொல்ல வந்திருந்த புதிய தோழர்கள் அவைகளின் ஊடாக பயணித்துக்கொண்டு இருந்தனர் என்பதுதான் உண்மை. நமக்காகவும், நமது நலன்களுக்காகவும் தொழிற்சங்கங்கள் என்ற சுயநோக்கங்கள்தாம் அடிப்படை என்ற போதும், அதிலிருந்து எல்லை விரிவடைந்து ஒட்டுமொத்த சமூகத்தின் நலனாக பரிணமிப்பதையும் மிக எளிமையாக விளக்கினார். வேடன் விரித்த வலையில் அகப்பட்டுக்கொண்ட பறவைகள் ஒன்றுபட்டு சிறகசைக்க, வலையோடு அவை வானில் பறக்க முடிந்ததையும் சொல்லி, இதுதான் தீர்வுகளை நோக்கி நகரும் வித்தையென முடித்து வைத்தார்.
இன்னும் அவர் பேசியிருக்கலாமே என புதிய தோழர்களிடம் ஏக்கம் இருந்ததைத் தெரியப்படுத்தினர். இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது. எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. நிச்சயம் பேசுவோம். இப்போதுதானே பேச ஆரம்பித்திருக்கிறோம். ஆம், சில உரையாடல்கள்தாம் மகத்தான கனவுகளையும், மகத்தான காலத்தையும் உருவாக்கியிருக்கின்றன.
நிகழ்வு முடிந்து இரண்டு நாட்களாகியும் கூட, இன்னும் அவை எண்ணங்களில் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கின்றன.
it is one of the useful day for my life. very happy to see all workers in same den!! lot of informations are interchanging.. good interaction section with venugopal sir.. lot of demands infront of pgbou and pgbea by our employees.ashish shen,dilip mukherji and who is next? thanx for that meeting sir!!
ReplyDelete