12.7.13

PGBEA - PGBOU circular 6/2013 dt 09.07.2013




சுற்றறிக்கை: 6/2013         நாள்: 09.07.2013

அருமைத் தோழர்களே !

வணக்கம்.

மேடையில் தன் விரல் உயர்த்தி ஒரு இயக்கத்தின் துடிப்பாக தோழர்.முகர்ஜி நின்று கொண்டு இருந்தார்.  தோழர்கள் மாநாட்டு அரங்கிற்குள் நுழைந்துகொண்டு இருக்க, ஒருவரையொருவர் நலம் விசாரித்து,  தேனீர் அருந்தி, அங்கங்கு பேசிக்கொண்டு இருந்தனர்.

ஜூலை 6ம் தேதி, சனிக்கிழமை சாயங்காலம், கொடிகள், பேனர்கள் என அலங்கரிக்க மாநாட்டின் அரங்கிற்குள் நுழைந்த கணத்திலிருந்து ஒவ்வொரு தருணத்தையும் துளித் துளியாய் சேகரித்து, நினைவு படுத்தி பார்க்கும்போது உற்சாகமும், நம்பிக்கையும் நம்மை ஆட்கொள்கின்றன.

மாநாட்டில் மறைந்த மகத்தான தலைவர் தோழர்.முகர்ஜி அவர்கள் குறித்த ஒரு படக் கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. 1987ம் ஆண்டிலிருந்து அவரது புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு இருந்தன. லேசாக மீசை வைத்து ஒல்லியாக இருந்த தோழர்.முகர்ஜி ஆந்திரப்பிரதேசத்தில் ஒரு பேரணியை தலைமை தாங்கி நடத்தியதிலிருந்து துவங்கி, அவரது உருவத்தை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் மௌன ஊர்வலமாக அஞ்சலி செய்தது வரையில்  நிகழ்வுகளை கண்காட்சி பதிவு செய்திருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் முகர்ஜி, நம்மை பார்த்துக் கொண்டு இருப்பதாக உணர்வு ஏற்பட்டது.

AIRRBEA- TN தலைவர், கொடியேற்றி வைக்க, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, ஜூலை 6ம் தேதி குறிப்பிட்ட தோழர்களோடு மாநாடு துவங்கியது. PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் வரவேற்புரையாற்றினார். ஐ.ஓ.பியில் இருக்கிற, ஒரு நேர்மையான, எளிமையான சங்கத்தின் தலைவர் என்னும் அழுத்தத்தோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஸ்டாப் பெடரேசன் தலைவர் தோழர்.ஜீ.பாலச்சந்திரனை மாநாட்டை துவக்கிவைத்து பேச அழைத்த போது மாநாட்டு அரங்கம் அதை புரிந்துகொண்டு ஆரவாரித்தது. PGBEAவின் வெப்சைட்டை வெகுவாக தோழர்.ஜி.பாலச்சந்திரன் பாராட்டினார். அகில இந்திய அளவில் கூட பெரிய சங்கங்கள்கூட இவ்வளவு சிறப்பாகவும், தொழில்நுட்பத்திறனோடும் தங்கள் வெப்சைட்களை பயன்படுத்தியதில்லை எனக் குறிப்பிட்டார்.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த முறைகேடுகளுக்கு அந்த வங்கி நிர்வாகமும், அங்குள்ள எம்ப்ளாயீஸ் யூனியனுமே காரணம் என அவர் சாடினார். அதனால் பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவதில் பின்னடைவுகள் ஏற்பட்டு இருந்தாலும், PGBEAவும், PGBOUவும் சேர்ந்து அந்த தற்காலிக ஊழியர்களின் வாழ்வில் வெளிச்ச்சத்தை நிச்சயம் ஏற்றுவார்கள் என நம்பிக்கையளித்தார். லாபம் ஈட்டுவதற்காவே முதலாளிகளும், நிர்வாகங்களும் ஆட்குறைப்பையும், ஊதிய வெட்டையும் அமல்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். ஊழியர்கள் ஒன்றுபட்டு நின்று இவைகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பொதுமாநாடு ஜூலை 7, ஞாயிறன்று காலை துவங்கியது. நம் சங்க மாநாடுகளில், இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக எண்ணிக்கையில் பெண் தோழர்கள் வந்திருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு பணிக்குச் சேர்ந்த தோழர்களில் பலர் வந்திருந்தனர். நானூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் அரங்கம் நிறைந்திருக்க மாநாடு களைகட்டியிருந்தது.

PGBEA சங்கத்தலைவர் தோழர். மாதவராஜ்,  PGBOU தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் ஆகியோர் தலைமையுரையாற்றினர். இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (BEFI) தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன் பேசுகையில், இந்தியாவில் இன்னும் வங்கிச்சேவை பெறாமல் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படாமல், வங்கித்துறையில் மத்திய அரசு தனியார்களின், முதலாளிகளின் நலன்களுக்காக மாற்றங்களைச் செய்து வருவதிலேயே குறியாக இருக்கின்றன என்றார். சாதாரண மக்களுக்கான வங்கிச்சேவையை உறுதிப்படுத்துகிற வேளையில், வங்கி ஊழியர்கள் தங்கள் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ளவும் போராட வேண்டி இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.  வங்கி அரங்கில் சங்கங்களுக்குள் தனித்தனியாக பல முரண்பாடுகள், மோதல்கள் இருந்த போதும்,  பொதுவான பிரச்சினைகளில் அவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கிற, போராடுகிற நிலைமை ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார். 10வது இருதரப்பு பேச்சுவார்த்தைகளில்,நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதில் நாம் தெளிவான புரிதல்களோடு இருப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சொன்னார்.

அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சையீது கான் பேசுகையில், தான் முதன்முதலாக இப்போதுதான் தென்னிந்தியாவில் ஒரு கிராம வங்கி ஊழியர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதாக தெரிவித்தார். மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் காட்டும் அன்புக்கும், தோழமைக்கும் நன்றி தெரிவித்தார். தன் வாழ்வை கிராம வங்கிகளுக்காகவும், கிராம வங்கி ஊழியர்களுக்காகவும் அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த நமது மகத்தான தலைவர் திலிப்குமார் முகர்ஜியின் நினைவுகளைப் போற்றினார்.பென்ஷனுக்காக நாம் எப்படியெல்லாம் போராடி இருக்கிறோம் என்பதையும், ஏறத்தாழ அதனைப் பெறுகிற சூழல் இப்போது ஏற்பட்டு இருப்பதையும் விளக்கினார். கிராம வங்கி ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் கிடைக்கும் எனவும், அதற்கான முயற்சிகளில் சங்கம் முழுமையாக ஈடுபட்டு வருகிறது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் கிராம வங்கி ஊழியர்கள் கிளந்தெழுந்து போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் எச்சரித்தார்.

நம் அழைப்பை ஏற்று, பாண்டியன் கிராம வங்கியின் பொதுமேலாளர்கள் திரு.ராமநாதன் அவர்களும், திரு.ராமசுப்பு அவர்களும், மாநாட்டிற்கு வந்திருந்தனர். அவர்களை மேடைக்கு அழைத்து கௌரவித்தோம். இருவரும் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்கள்.

இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தலைவர்களில் ஒருவரான தோழர் எஸ்.வி.வேணுகோபால் மாநாட்டினை வாழ்த்தியும், மாநாட்டில் கலந்துகொண்ட புதிய தோழர்களை வரவேற்றும் பேசினார். தொழிற்சங்கம் என்பது எவ்வளவு அவசியமானது என்பதை இந்தியாவின் இரண்டு முக்கிய வழக்குகளின் கதைகளிருந்து விளக்கினார். உலகமயம் நம்மை தனித்தனி தீவுகளாய் தகவமைத்துக் கொண்டு இருப்பதையும், தொழிற்சங்கங்கள் அதை உடைத்து நம்மையெல்லாம் ஒன்று சேர்த்துக்கொண்டு இருக்கின்றன என்பதையும் இலக்கிய நயத்தோடு புரிய வைத்தார். ஐ.ஓ.பியில் இருக்கிற ஒரு பெரிய சங்கத்தின் தலைவர்கள் தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்காக கொள்ளை கொள்ளையாய் பணம் சம்பாதித்ததையும், இங்கே நமது சங்கத்தின் தலைவர்கள் தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதற்காக போராடி சஸ்பென்ஷன் ஆனதையும் சொல்லி, எது தொழிற்சங்கம் என்பதை புதிய தோழர்கள் முடிவு செய்யுங்கள் என முடித்த போது, மாநாட்டு அரங்கத்தில் ஆரவாரமும் கரகோஷமும்  அடங்க நேரமானது.

கிராம வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது எனவும் அனைத்து கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து தேசிய கிராமப்புற வங்கி அமைக்க வேண்டும் என்று தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. தர்மபுரியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன் மர்மமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் நடைபெற்ற தலித் மக்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இளவரசனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் மாவட்ட காவல்துறை பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது. இளவரசன் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்துவதுடன், சாதிய சக்திகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதிய உணவுக்கு பிறகு இரு சங்கங்களின் பிரதிநிதிகள் மாநாடுகள் தனித்தனியாக நடைபெற்றன.  பொதுச்செயலாளர் அறிக்கைகள், பொருளாளர் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்களுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அடுத்து- இரண்டு சங்கங்களின் புதிய செயற்குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன் - செயற்குழு

1. தோழர்.சாமுவேல் ஜோதிக்குமார், திருப்பத்தூர் - தலைவர்
2. தோழர்.போஸ்.பாண்டியன், கல்குறிச்சி - உதவித்தலைவர்
3. தோழர்.லூர்து ஆரோக்கியராஜ், துவரங்குறிச்சி - உதவித்தலைவர்
4. தோழர்.சங்கரலிங்கம், விருதுநகர்         - பொதுச்செயலாளர்
5. தோழர்.டி.கிருஷ்ணன், திருப்புவனம் - இணைப் பொதுச் செயலாளர்
6. தோழர்.பிச்சைமுத்து, ராயவரம்   - இணைப் பொதுச்செயலாளர்
7. தோழர்.பரதன், தலைமையலுவலகம் - பொருளாளர்
8. தோழர்.நடராஜன், தி.டவுண்           - உதவிப் பொருளாளர்
9. தோழர்.சண்முகநாதன், ஆலங்குளம் - செயற்குழு உறுப்பினர்
10. தோழர்.ராஜேந்திரன்,  இடைக்காட்டூர் - செயற்குழு உறுப்பினர்
11. தோழர்.காமராஜ், இராமநாதபுரம்         - செயற்குழு உறுப்பினர்
12. தோழர்.சிவகாமி, எட்டையபுரம்   - செயற்குழு உறுப்பினர்
13. தோழர்.அறிவுடை நம்பி, மங்கை நல்லூர் - செயற்குழு உறுப்பினர்
14. தோழர்.ரஜிதா, எட்டியபுரம் ரோடு      - செயற்குழு உறுப்பினர்
15. தோழர்.மகாராஜன், காரைக்குடி   - செயற்குழு உறுப்பினர்

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் - செயற்குழு

1. தோழர். சங்கர சீனிவாசன், உப்பத்தூர்   - தலைவர்
2. தோழர். சோலைமாணிக்கம், கொத்தடி   - உதவித்தலைவர்
3. தோழர். சுப்பிரமணியன், பழையபேட்டை     - உதவித்தலைவர்
4. தோழர். சங்கர், சங்கரலிங்கபுரம்           - உதவித்தலைவர்
5. தோழர். மாதவராஜ், சாத்தூர்                   - பொதுச்செயலாளர்
6. தோழர். அருண் பிரகாஷ் சிங், வி.எம்.சத்திரம் - இணைப் பொதுச்செயலாளர்
7. தோழர். அருளானந்தம், பொட்டகவயல்   - உதவிப் பொதுச்செயலாளர்
8. தோழர். வரலட்சுமி, எட்டையபுரம்         - உதவிப் பொதுச்செயலாளர்
9. தோழர். சந்தான செல்வம், கீழக்கரை         - உதவிப் பொதுச்செயலாளர்
10. தோழர். சக்திவேல், தலைமையலுவலகம் - பொருளாளர்
11. தோழர். சங்கரக்குமார், நெடுவயல்           - உதவிப் பொருளாளர்
12. தோழர். சோமசுந்தரம், ஆறுமுகநேரி           - செயற்குழு உறுப்பினர்
13. தோழர். நாசர், அடைக்கலப்பட்டினம்         - செயற்குழு உறுப்பினர்
14. தோழர். மகரபூஷணம், சிவந்திப்பட்டி         - செயற்குழு உறுப்பினர்
15. தோழர். வைரவன், அன்னவாசல்           - செயற்குழு உறுப்பினர்
16. தோழர். ராஜ்குமார், காரியாப்பட்டி           - செயற்குழு உறுப்பினர்
17. தோழர். முனியசாமி, இராமநாதபுரம்         - செயற்குழு உறுப்பினர்
18. தோழர். பாலசுப்பிரமணியன், பழங்காநத்தம் - செயற்குழு உறுப்பினர்
19.` தோழர். சோபியா ஜோஸ்மின் மேரி, சிவகங்கை - செயற்குழு உறுப்பினர்
20. தோழர். சாந்தி,  அரசரடி                     - செயற்குழு உறுப்பினர்
21. தோழர். சொர்ண சங்கரி, கமுதி                 - செயற்குழு உறுப்பினர்
22. தோழர். கோபால் சுப்பிரமணியன், எஸ்.வி.கரை - செயற்குழு உறுப்பினர்
23. தோழர். ராஜா கார்த்திகேயன், கன்னிவாடி - செயற்குழு உறுப்பினர்
24. தோழர். சதீஷ், பழைய காயல்                  - செயற்குழு உறுப்பினர்


மாநாட்டில், பொதுச் செயலாளர் அறிக்கைகளில் , எதிர் கால நடவடிக்கைகளில் நமக்கான வேலைகள் வரையறுக்கப்பட்டு இருக்கின்றன. அவைகளில் சில அடிகளாவது நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இதுதான் புதிய செயற்குழுக்களிடம் ஒப்படைக்கபட்டு இருக்கும் பொறுப்பு. இந்த எளிய உண்மையை புரிந்துகொண்டு நாம் இயங்குவோம்.

இந்தக் காரியங்களை தலைவரோ, பொதுச்செயலாளரோ அல்லது சில செயற்குழு உறுப்பினர்களோ மட்டும் நிறைவேற்றிட முடியாது. அப்படி எந்த சாகசங்கள் மீதும், சாதனைகள் மீதும் எந்த மூட நம்பிக்கையும் நமக்கு இல்லை. எல்லாவற்றையும் நாம் அனைவரும் சேர்ந்துதான் நிறைவேற்ற முடியும். கூட்டுச் சிந்தனை, கூட்டு செயல்பாடுகள் மூலமே காரியங்களை சாதிக்க முடியும். அதுதான் நம் பலமும், சக்தியுமாகும்.


தோழமையுடன்



   
(J.மாதவராஜ்)                                   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                      பொதுச்செயலாளர் - PGBOU

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!