இன்றைய (20.2.2014) தினத்தந்தி பத்திரிகையில், `பாண்டியன் கிராம வங்கித் தலைவருக்கு பிடிவாரண்ட்` எனற செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. இலுப்பையூர் கிளையில் கிளர்க்காக பணிபுரிந்த தோழர்.கணேசனை பணி நீக்கம் செய்ததையொட்டி நடந்த வழக்கில், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி இடைக்காலத்தடைக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டதாகவும், பாண்டியன் கிராம வங்கி அந்த உத்தரவை அமல்படுத்தவில்லையென்றும், அதன் மேலான கோர்ட்டை அவமதிப்பு வழக்கில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.
பாண்டியன் கிராம வங்கி மீது பிரியமும், பற்றும் கொண்ட ஊழியர்களும், அலுவலர்களும் இந்தச் செய்தியால் மிகுந்த அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர். நமது இரு சங்கங்களும் தங்களது வருத்தங்களை அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறோம். இந்த வங்கியில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் இதே மனநிலையில்தான் இருக்கின்றன. வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து நாம் விவாதிக்கப் போவதில்லை. ஆனால் சில பொதுவான விஷயங்களை பேச வேண்டி இருக்கிறது.
2003ம் ஆண்டிலிருந்து துவங்கிய இவ்வழக்கில், 2013ம் ஆண்டு பாண்டியன் கிராம வங்கியின் சேர்மனாக பொறுப்பேற்ற திரு.கார்த்திகேயன் பெரிய அளவில் சம்பந்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எல்லோரோடும் சினேகமும், பிரியமும் பாராட்டும் அவருக்கு இந்த வழக்கில் நேரிடையாக தொடர்பு இல்லை. ஆனால் தொடர்ந்து நிர்வாக முறையில் இருக்கும் தவறுகளுக்கும் கோளாறுகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய வேளையில் அவர் இந்த நிர்வாகத்தின் உயர்ந்த பொறுப்பு வகிக்க வேண்டியவராய் இருக்கிறார். இதுதான் அவரது துரதிர்ஷ்டம். ஆனால் இதுதான் விஷயம்.
நாம் கடந்த சில வருடங்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறோம். AIVD துறை என்பது மனிதத்தன்மையற்றதாகவும், ஊழியர்களையும் அலுவலர்களையும் வேட்டையாடும் களமாக இருப்பதையும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். குறிப்பாக மிஸ்டர் சங்கரநாராயணனும், ரூபன் விக்டோரியாவும் சதாநேரமும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரையும் குற்றவாளிகளாகவே பாவித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர் என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருக்கின்றோம். ஆனால் அவர்கள் திருந்துவதாகவே இல்லை. தாங்கள் எழுதிய குற்றங்களை யார் இல்லையென்று சொல்ல முடியும் என்று ஆணவத்திலும், அதிகாரத்திலும் வெறிகொண்டு செயல்பட்டார்கள். அதன் விளைவுதான் இன்றைய தினத்தந்திச் செய்தி.
கத்தியும், சட்டமும் ஒன்றுதான். அவைகளை வைத்து ஆள முடியாது. நிர்வகிக்க முடியாது. மனிதாபிமானம்தான் உலகை ஆளக் கூடியது.
இப்போதும், `இது வக்கீல்கள் தவறு என்று` பேசப்படுவதாகக் கேள்விப்படுகிறோம். தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் நம் மரியாதைக்குரிய சேர்மனுக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சிலர் டிபார்ட்மெண்ட்டைக் காப்பாற்றும் நோக்கில் வாதங்களை முன்வைப்பதாக கேள்விப்படுகிறோம். Technical responsibility ஐப் பற்றிப் பேசாமல் moral responsibility ஐப் பேசுகிற நேர்மை ஏன் இவர்களுக்கு இல்லாமல் போனது?
நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் நம் தோழர்கள் காமராஜ் மற்றும் அண்டோ, இந்த வங்கியின் நற்பெயரைக் கெடுத்துவிட்டதாக சொல்லி சஸ்பெண்ட் செய்தார்கள். இத்தனைக்கும் பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்கள் அவதிப்படுகின்றனர் என்ற உண்மையை Bank Workers Unity எனும் பத்திரிகையில் எழுதியதற்காக சஸ்பெண்ட செய்தார்கள். இன்று இந்த வங்கியின் மரியாதைக்குரிய சேர்மனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த செய்தி `தினத்தந்தியில்` வரக் காரணமான மிஸ்டர் சங்கரநாராயணன் மற்றும் மிஸ்டர் ரூபனை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை என்பதுதான் நமது கேள்வி.
இந்த வங்கியில் நிர்வாகம் செய்து வந்திருக்கும் தவறுகளை, குறிப்பாக AIVDயின் அட்டுழியங்களை எழுதினால், அது ஒரு பெரும் அராஜகத்தின் `மெகா சீரியலாக ஓளிபரப்பலாம். ஆவணங்களும், சாட்சியங்களும் குற்றங்களை நிருபீக்கமுடியவில்லையென்றாலும் வெறி பிடித்து குற்றங்கள் நிருபீக்கப்பட்டதாகச் சொல்ல இவர்கள் எடுத்த முயற்சிகள் நமக்குத் தெரியாதா? எத்தனை தோழர்களின் வாழ்க்கையை சிதைத்து, தெருவில் எறிந்திருக்கிறார்கள். தோழர்கள் குருநாதனிலிருந்து, தோழர்கள்.செல்வராஜ், கிருஷ்ணசாமி என விரிந்து, எம்.எல்.ஆர் மோஹன் வரை எத்தனை எத்தனை பேர். அவர்களின் சாபமும், அவர்களுக்கு இழைக்கப்பட்டு இருக்கும் அநீதியும் இந்த வங்கியை உலுக்கி எழுப்பிய கேள்விதான் இன்றைய தினத்தந்தி செய்தி.
இது தவறுகளை சரி செய்ய வேண்டிய தருணம். மனசாட்சி என்னும் கூண்டில் தன்னை ஏற்றி நிர்வாகம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம். AIVD ஐ மற்றும் தலைமையலுவலகத்தை முழுமையாக புனரமைக்க வேண்டிய காலம். இப்போதும் நிர்வாகம் செய்யத் தவறினால், பெரும் சோதனைகள் வந்து சேரும் எனத் தோன்றுகிறது.
எதற்கெடுத்தாலும், CVC, CVO என்று நாமாவளி சொல்லிக்கொண்டு இருந்தவர்களே, இந்த நெருக்கடியான வேளையில் CVC, CVO எங்கே? நாம் மட்டும்தான் சேர்மன் பக்கத்தில் நிற்கிறோம்.
இந்த வங்கியில் உள்ள சங்கங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இந்த வங்கிக்கு ஒரு சோதனை வந்தால் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து நிற்கும். அப்படி ஒன்று சேர்ந்து எழுப்பும் குரல்தான், 'மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ரூபனையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பதும், தலைமையலுவலகத்தை உடனடியாக புனரமைக்க வேண்டும்` என்பதும்.
விரைவில் அனைத்துச் சங்கங்களும் ஒன்று கூடி, பாண்டியன் கிராம வங்கியினை, அதன் பேரை காப்பாற்றும் பெரும் காரியத்தில் ஈடுபடும்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!