பாண்டியன் கிராம வங்கியில் நடைபெற இருக்கும் Officers Recruitmentற்கான இண்டர்வியூ குறித்து சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்தோம்.
மே 3ம் தேதி ஆரம்பிக்கும் இண்டர்வியூவிற்கு, ஏப்ரல் 26ம் தேதிதான் கடிதம் அனுப்பப்படுகிறது. ஏப்ரல் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. ஏப்ரல் 28ம் தேதிதான் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும். இடையில் ஏப்ரல் 29, 30, மே 1, 2 ஆகிய நான்கு தினங்களே இருக்கின்றன. இவ்வளவு அவசரகதியில் ஏன் இண்டர்வியூ என நாம் சந்தேகித்தோம்.
சரி. இது குறித்து பாண்டியன் கிராம வங்கி வெப்சைட்டில் எதாவது செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கின்றனவா எனப் பார்த்தால், அங்கும் ஒன்றுமில்லை. வெளிப்படைத் தன்மை இல்லாமல் ஏன் ரகசியமாக இந்த இண்டர்வியூ நடத்தப்படுகிறது என்பது அடுத்த சந்தேகமாக முளைத்தது.
இதுகுறித்து ஆராய முற்பட்டபோதுதான் , பூதம் வெளியே கிளம்பி வந்தது!
கடிதம் வந்த மற்றும் வராத நண்பர்கள் நம்மிடம் தொடர்பு கொண்ட போது, அவர்கள் IBPS தேர்வில் வாங்கிய மார்க்குகள் குறித்து விசாரிதோம். ஒருவர் 109 மார்க்குகள் வாங்கியிருந்தார். அவருக்கு இண்டர்வியூ கடிதம் வந்திருந்தது. ஒருவர் 111 மார்க்குகள் வாங்கியிருந்தார் அவருக்கு இண்டர்வியூ கடிதம் வரவில்லை. ஒருவர் 117 மார்க்குகள் வாங்கியிருந்தார் அவருக்கு இண்டர்வியூ கடிதம் வந்திருக்கிறது. இன்னொருவர் 119 மார்க்குகள் வாங்கியிருந்தார். அவருக்கு இண்டர்வியூ கடிதம் வரவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.
அடுத்து அவர்களிடம், என்னென்ன categoryயில் apply செய்திருந்தார்கள் என விசாரித்தோம். 109 மார்க்குகள் வாங்கிய முதல் நபர் General Category என்றார். 111 மார்க்குகள் வாங்கிய இரண்டாவது நபர் SC/ST category என்றார். 117 மார்க்குகள் வாங்கியவரும் SC/ST category என்றார். 119 மார்க்குகள் வாங்கிய கடைசி நபர் OBC Category என்றார். தலை சுற்றியது.
இன்று காலை PGBEA, PGBOU பொதுச்செயலாளர்கள் தோழர்.மாதவராஜ் மற்றும் தோழர்.சங்கரலிங்கம் தலைமையலுவலகம் சென்று பொது மேலாளரையும், PAD-SMஐயும் பார்த்து பேசிய போது உண்மை வெளிப்பட்டது. General categoryக்கு cut-off marks 108 என்றும், SC/ST categoryக்கு cut-off marks 112 என்றும், OBC categoryக்கு cut-off marks 123 என்றும் இறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகச் சொன்னார்கள்.
இது எப்படி சார், எல்லாம் தலைகீழாக இருக்கிறது... இட ஒதுக்கீடுக் கொள்கைக்கு எதிராக இருக்கிறது என்றும் நாம் அதிர்ச்சியடைந்தோம். ‘இட ஒதுக்கீடு சரியாகத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தந்த categoryயில் எண்ணிக்கை சரியாகத்தான் வரும்’ என்றார் பொது மேலாளர். நாம் நமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து, உடனடியாக ஒரு கடிதம் கொடுத்துவிட்டு வந்தோம்.
இதுகுறித்து நாம் மேலும் ஆராய்ந்தபோது, ஒரு மிகப் பெரும் மோசடி வெளிப்பட்டது.
முதலில் SC/ST categoryஐ சேர்ந்தவர்களில், எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு cut-off mark முடிவு செய்யப்படுகிறது.
அடுத்ததாக OBC categoryஐ சேர்ந்தவர்களில், எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு cut-off mark முடிவு செய்யப்படுகிறது.
இறுதியாக இந்த இரண்டு categoryயிலும் இல்லாத General categoryயில் எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு cut-off mark முடிவு செய்யப்படுகிறது.
General categoryயில் அதிகமான பேர் தேர்ந்தெடுக்கப்படுவதால், அவர்களுக்குரிய cut-off marks இயல்பாக குறைவாகவும், மற்ற categoryயில் குறைவான பேர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்களுக்குரிய cut-off marks அதிகமானதாகவும் இருக்கிறது.
ஆனால், அந்தந்த categoryயில் தேவைப்படும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவர்.
இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.
சட்டென்று மேலோட்டமாக பார்ப்பதற்கு இது சரியெனவும் தெரியும். ஆனால் உண்மை இதுவல்ல. இடஒதுக்கீட்டை தலைகீழாக வைத்திருக்கிறார்கள் பாண்டியன் கிராம வங்கியில்.
இவர்கள் முதலில் தீர்மானித்திருக்க வேண்டியது General Categoryஐ! அதில் OBC categoryயில் உள்ளவர்களும் வருவார்கள், SC/ST categoryயில் உள்ளவர்களும் வருவார்கள். அதற்குத்தான் General Category என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, எத்தனை பேர் தேவைப்படுகிறார்களோ அதற்கேற்ப cut-off mark முடிவு செய்ய வேண்டும்.
இந்த General Categoryக்குத் தேவையான cut-off marks வாங்கிய OBC மற்றும் SC/ST categoryயைச் சேர்ந்தவர்கள் General categoryயாகவே கருதப்படுவர். இவர்கள் போக மீதமிருக்கிற OBC மற்றும் SC/ST categoryயைச் சேர்ந்தவர்களுக்குத்தான் அந்தந்த categoryக்குத் தேவையான எண்ணிக்கைக்கேற்ப cut-off marks முடிவு செய்யப்பட வேண்டும்.
இப்படிச் செய்யும்போது, General categoryயின் cut-off marksஐ விட OBC மற்றும் SC/ST categoryக்குரிய cut-off marks ஒரு போதும் அதிகமாய் இருக்காது. இருக்க முடியாது. General categoryக்கு cut-off marks 108 என்றால், மற்ற OBCக்கும், SC/ST categoryக்கும் cut-off marks அதிகபட்சமாக 107.99 ஆகவாவது வரும். இதுதான் விஞ்ஞானபூர்வமான இடஒதுக்கீட்டு முறை.
இங்கே அதையே உல்டா பண்ணி, இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஒரு பெரும் துரோகம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. விசாரிக்கும்போது, IBPS வந்த பிறகு, இந்த உல்டாக்கள் பல வங்கிகளின் பணி நியமனங்களில் நடைபெற்று இருப்பது தெரிய வருகிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சென்ற வருடம் இதுபோல் நிகழ்ந்தபோது, BEFI சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து, ஐஓபி நிர்வாகத்துடன் பேசி சரிசெய்திருக்கின்றனர்.
காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட, ஒடுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு இந்த இட ஒதுக்கீடு மூலம் சிறு சிறு வெளிச்சம் கிடைக்கிறது. அவர்களை சமூகத்தில் கைகொடுத்து தூக்கி நிறுத்தும் சமூக நீதி நிலை நிறுத்தப்படுகிறது. அதனை சீர்குலைக்கிற வேலையில் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் ஈடுபட வேண்டாம் என்பதே நம் ஆசையும், வேண்டுகோளும்!
நிச்சயம் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும் (PGBEA), பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியனும் (PGBOU) நம் வங்கியில் இதனை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபடும் . பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதை ஒரு போதும் அனுமதியோம்.
இது குறித்து தொடர்பு கொள்ள விரும்புபவர்கள்
pgbea.vnr@gmail.com என்னும் இ-மெயிலிலோ
அல்லது
9443866719 எண்ணிற்கு தொலைபேசியிலோ
தொடர்பு கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!