ஆபிஸர்கள் பதவி நியமனத்தில், இந்திய அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் கடைப்பிடிக்க மறுப்பதை, ஏற்கனவே முந்தைய பதிவுகளில் தெரியப்படுத்தி இருந்தோம்.
இந்த செய்தியை கேள்விப்பட்டு, சமூக நீதிக்கு ஆதரவான பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இதனை எதிர்த்து இன்று விருதுநரில் தலைமையலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள்.
அதுகுறித்து இன்றைய தீக்கதிர் பத்திரிகையில் 5 ம்பக்கத்தில் கீழ்க்கண்ட செய்தி இடம் பெற்றிருக்கிறது. (பார்க்க: தீக்கதிர்)
___________________________________
பாண்டியன் கிராம வங்கி பணியிட நிரப்பலில்
இடஒதுக்கீடு இல்லை!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
கண்டனம்!!
சென்னை, மே 1-
பாண்டியன் கிராம வங்கிகளில் காலியாக இருக்கும் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான பணியில் இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்காததற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கிராம வங்கிகளில் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, வங்கிகள் நேர்காணல் நடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாண்டியன் கிராம வங்கியும் நேர்காணலுக்கான அறிவிக்கையை வெளியிட்டிருந்தது.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.பாண்டியன் கிராம வங்கியும் பிரிவுவாரியாக கட்-ஆப் மதிப்பெண்களை நிர்ணயம் செய்து நேர்காணலுக்கான தகுதி பெற்றவர்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளது. ஆனால், இந்த கட் ஆப் மதிப்பெண்கள் தகுதி வாய்ந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிக மதிப்பெண்களைப் பெற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதும், குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற இட ஒதுக்கீடு பிரிவிற்குள் வராதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் நிகழ்ந்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு குறைந்தபட்சமாக 123 மதிப்பெண்களும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 112 மதிப்பெண்களும், பொதுப்பிரிவினருக்கு 108 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த நிர்ணயம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. சமூக நீதிக் கோட்பாட்டை அடியோடு குழிதோண்டிப் புதைப்பதாகும்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பாண்டியன் கிராம வங்கி அதிகாரிகள் சங்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த இட ஒதுக்கீடு விரோதநடவடிக்கைக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளன. 3 ஆம் தேதியன்று நேர்காணல் துவங்குவதால் உடனடியாகத்தலையிடுமாறு வங்கியின்தலைவருக்கு மின்னஞ்சல்மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு இதுவரைஎந்தவித சாதகமானபதிலும்வரவில்லை.
இந்த பணி நிரப்பும் நடவடிக்கையை அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் அமல்படுத்த வேண்டும். அதற்குரிய வகையில் நேர்காணல் அழைப்புகள் இருக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பாண்டியன் கிராம வங்கியின் நிர்வாகம் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
வங்கியின் இந்த இட ஒதுக்கீடு விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பாண்டியன் கிராம வங்கி அதிகாரிகள் சங்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மே 2 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளன. விரைவில் தீர்வு காணாத பட்சத்தில் போராட்டம் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!