3.5.14

PGBEA - PGBOU Circular 7/2014 dated 03.05.2014



சுற்றறிக்கை: 7/2014         நாள்: 03.05.2014

பாராளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. நமக்கும், நம் பிரச்சினைகளுக்கும் யார் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நாம் வக்களிப்போம் என்னும் நோக்கத்தில் நாம் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க BEFI அழைப்பு விடுத்திருந்தது. அதனை நமது சென்ற சர்க்குலரில் வெளியிட்டு இருந்தோம். உடனே எதோ குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்புடன் நடந்துகொண்டதாக PGBOA சர்க்குலரில் புலம்பி இருக்கிறது.  புதிய தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு. அதை அமல்படுத்தியது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. சீர்திருத்தங்கள் என்னும் பெயரில் வங்கித்துறையையும், வங்கி ஊழியர்களின், அலுவலர்களின் வாழ்க்கையை சிதைக்கும் கொள்கைகளில் இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. பெருமுதலாளிகளுக்கு சலுகைகள் செய்து கொடுத்து பொதுமக்களை வாட்டி வதைக்கும்  நடவடிக்கைகளிலும் இந்த இரு அரசுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இவைகளை எதிர்த்து வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் போராடுகிற போதெல்லாம்  ஆதரவு தந்தவர்கள் இடதுசாரி கட்சிகள் மட்டுமே. எனவேதான் நாம் அவர்களை ஆதரிப்போம் என்றோம். இது கட்சி அரசியல் அல்ல. வர்க்க அரசியல். தொழிலாளர்களின் வர்க்க அரசியல். இதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் அவர்களுக்கு சிந்தனையில் கோளாறு இருப்பதாக அர்த்தம்.  அரசியல் அற்றவர்கள் நாங்கள்' எனச் சொல்வதுதான் அவமானத்துக்குரியதும் அசிங்கமானதுமாகும்.

நமது வங்கியில் இட ஒதுக்கீட்டில் நடக்க இருந்த மோசடி:

புதிய பணிநியமனம் செய்வதில் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் காட்டிய கால தாமதத்தை நமது சென்ற சர்க்குலரில் கடுமையாக விமர்சித்து இருந்தோம். அதற்குப் பிறகு அவசரம், அவசரமாக ஆபிஸர்களுக்கு மட்டும் இண்டர்வியூ தேதியை அறிவித்து, நிர்வாகத்திலிருந்து அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதுகுறித்து எந்தச் செய்திகளையும், தகவல்களையும் வங்கிக்குரிய அதிகாரபூர்வ வெப்சைட்டில் வெளியிடவில்லை. இந்த நிர்வாகம்  Transparent-ஆக இருக்க மறுக்கிறது என்பதன் அடையாளம்தான் இது.

அழைப்புக் கடிதங்கள் தனித்தனியாக அனுப்பப்பட்ட பிறகுதான், அதிகமான மார்க்குகள் எடுத்தவர்கள் சிலர் இண்டர்வியூக்கு அழைக்கப்படாதது தெரிய வந்தது. அதன் பிறகு நாம் விசாரிக்க ஆரம்பித்தால் ஒரு மிகப்பெரும் மோசடி வெளிப்பட்டது. இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தாமல் இண்டர்வியூக்கு  தகுதி பெறுவதற்கு கீழ்க்கண்டவாறு  கட்-ஆப் மார்க்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன.

General Category - 108
OBC category - 123
SC/ST category - 112

அதாவது, எழுத்துத் தேர்வில் 108 மதிப்பெண்கள் பெற்ற  ஜெனரல் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவில் கலந்துகொள்ள முடியும். ஆனால் 111 மார்க்குகள் எடுத்த எஸ்.ஸி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவில் கலந்து கொள்ள முடியாது. 122 மார்க்குகள் பெற்ற ஓபிசி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கலந்துகொள்ள முடியாது.

பார்த்த மாத்திரத்தில் மிகப்பெரும் கோளாறு இருப்பது தெரிந்தது. இது எப்படிநடந்தது என்று ஆராயும்போது, நிர்வாகமும் IBPSம் சேர்ந்து நடத்திய  மோசடி வெளிப்பட்டது. ஜெனரல் பிரிவில் முதலில் கட் -ஆப் மார்க்குகள் நிர்ணயம் செய்ய வேண்டும். அதில் அதிமான மார்க்குகள் எடுத்த எஸ்.ஸி/எஸ்.டி பிரிவினரும், ஓபிசி பிரிவினரும் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் போக மீதமிருக்கும் எஸ்.ஸி/எஸ்.டி பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினருக்கும் தனித்தனியாக கட்-ஆப் மார்க்குகள் நிர்ணயம் செய்ய சேண்டும். ஆனால் நமது வங்கியில் ஜெனரல் பிரிவில் அதிகமான  மார்க்குகள் எடுத்த எஸ்.ஸி/எஸ்.டி பிரிவினரும், ஓபிசி பிரிவினரும் சேர்க்கப்படவில்லை. உடனடியாக நமது இரு சங்கங்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினோம். நமது வெப்சைட்டில் இதனை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டோம். நம் வங்கியில் இருக்கும் அனைத்து சங்கங்களுக்கும் இந்த அநியாயத்தை தெரிவித்து, அனைவரும் சேர்ந்து இதனை முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதனைக் கேள்விப்பட்டு, இது சமூக நீதிக்கும், இந்திய அரசியல் அமைப்பு விதிகளுக்கும் எதிரானது என வங்கி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உடனடியாக சரி செய்ய வேண்டுகோள் விடுத்தது.

நாம் 30.4.2014 வங்கியின் சேர்மனை சந்தித்துப் பேசினோம். சரிசெய்வதற்கான முயற்சிகள் எடுப்பதாகச் சொன்னார். ஆனால் இண்டர்வியூ திட்டமிட்டபடி 3.5.2014ல்  நடக்க இருப்பது தெரிய வந்ததும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  சார்பில் 2.5.2014 அன்று தலைமையலுவலகத்தின் முன்பாக ஆர்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. போஸ்டர்கள் அடித்தும், பத்திரிகை செய்திகள் வாயிலாகவும் பொது மக்களிடத்தில் இவ்விஷயத்தைக் கொண்டு சென்று, மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த முக்கியமான பிரச்சினையில் தலையிட வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில், 2.5.2014 பிற்பகலில் நிர்வாகம் தனது முடிவை மறு பரீசீலனை செய்து, தாங்கள் ஏற்கனவே நிர்ணயித்த கட் -ஆப் மார்க்குகளின் படி இண்டர்வியூ நடத்தாமல், சுமூகமாக பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வந்தது. நம்மோடும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடும் பேச்சுவார்த்தை நடத்தியது.  இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாநிலச் செயலாளர் கணேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஞானகுரு, பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியனின் துணைத் தலைவர்  பி.எஸ். போஸ் பாண்டியன்,  பொதுச் செயலாளர் சங்கரலிங்கம்,  பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாலர் ஜா. மாதவராஜ், எஸ்.சி/எஸ்.டி. நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.ராஜேந்திர சோழன், பாண்டியன் கிராம வங்கி வொர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பாலாஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகத் தரப்பில் முதன்மை மேலாளர்கள் ஞானப்பிரகாசம் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் தவறானவை என்பதை ஏற்றுக் கொண்ட பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், அதிகாரிகள் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருக்கும் அனைவருக்கும் அழைப்பு அனுப்புவது என்று முடிவு செய்தது. நேர்காணல் நிறைவு பெற்று வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு உரிமைக்கு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தின. அதையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

தோழர்களே, நமது முன்முயற்சியால் ஒரு மிகப்பெரிய அநீதி களையப்பட்டு இருக்கிறது. இந்திய அரசின் இட ஒதுக்கீடு முறையை சரியாக வருங்காலத்திலும் இந்த  நிர்வாகம் பின்பற்றுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆதரவு தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும், நமது வங்கியில் உள்ள PGBWU, PGBOA, PGB SEWA சங்கங்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

CC / DPN லோன்கள் படுத்தும் பாடு!

CC / DPN ஐ.ஓ.பியில் உள்ளது போல நமக்கும் வழங்கப்படும் என நிர்வாகம் சொல்லியது. ஏப்ரல் முதல் வாரத்தில் சர்க்குலரும் வெளியிட்டது. அதிலேயே ஏராளமான கண்டிஷன்களைப் போட்டது. ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளவர்களுக்கும், லீவு regularise செய்யப்படாதவர்களுக்கும் கிடையாது என்றார்கள். ஒழுங்கு நடவடிக்கைகளை காலாகாலத்தில் முடிக்காததற்கும், leave regularise  செய்யப்படாததற்கும் நாம் காரணமல்ல. அவர்கள் மீது தவறுகளை வைத்துக்கொண்டு ஊழியர்களையும், அலுவலர்களையும் ஏன் தண்டிக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு இன்று வரை நிர்வாகத்திடம்   இருந்து பதில் இல்லை. இந்த நிலையில் Time-barred அக்கவுண்டகளுக்கு ஆபிஸர்கள் பொறுப்பு என பலருக்கும் CC/DPN லோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இது சர்க்குலரில் விதிக்கப்படாத கண்டிஷன். தன்னிஷ்டத்திற்கு இந்த நிர்வாகம் நடத்தும் அராஜகம் இது.

மீதமுள்ளவர்களுக்கு எதாவது ஒரு ‘கொரி' போட்டு திருப்பி அனுப்பப்படுகிறது. DPN லோனில் overdue இருக்கிறது என்றெல்லாம் காரணங்கள். DPN லோனுக்குரிய instalment தலைமையலுவலகம்தான் நிர்ணயிக்கிறது. மாதாமாதம் தலைமையலுவலகம்தான் பிடிக்கிறது. அப்புறம் எப்படி overdue வரும்? மாஸ்டரில் தவறு இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். Overdue இருப்பதை பார்க்கத் தெரிந்த டிபார்ட்மெண்ட் அதனை அடுத்த கணமே சரி செய்ய நடவடிக்கை எடுப்பதை விடுத்து, மொத்த லோன் பேப்பர்களையும் கொரி போட்டு திருப்பி அனுப்புவது எந்த மாதிரியான செயல்?

இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களும், அலுவலர்களும் ஒரு லோன் போட்டு விட்டு, இப்படி அலைக்கழிக்கப்படுவது, அவர்களை அவமானப்படுத்தும் செயலாகவே நாங்கள் கருதுகிறோம். நாமொன்றும் குற்றவாளிகளுமல்ல, அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரர்களுமல்ல.

400க்கும் மேற்பட்ட CC / DPN  லோன்கள் குவிந்துகிடக்க, இந்த இருபது நாட்களில் 60 லோன்களே சாங்ஷன் செய்யப்பட்டு இருக்கின்றன. என்ன நிர்வாகம் இது. இதில் இந்த வங்கி லாபம் அடைவதைப் பற்றியும், பல parameterகளில் சாதனை புரிந்திருப்பதைப் பற்றியும் நாங்கள் பெருமைப்பட என்ன இருக்கிறது. சந்தோஷப்பட  என்ன இருக்கிறது. நிர்வாகம் தருகிற ஸ்வீட் பாக்ஸ் இனிக்கவில்லை.

மிக முக்கிய வெற்றி:

மேலசெவல் கிளையில் மெஸஞ்சராய் பனிபுரிந்துவந்த தோழர்.செல்வராஜ், அதிகமாக லீவு எடுத்துவிட்டார் என்று அவர் ரிடையர் ஆவதற்கு ஒரு நாள் முன்பு ஒரு சார்ஜ் ஷீட் கொடுத்தது நிர்வாகம். இது சரியில்லை என நிர்வாகத்துடன் பேசினோம். ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன், “ஒரு பதிலைக் கொடுங்கள். சுமூகமாக முடித்து விடலாம்” என்றார். பதிலைக் கொடுத்தோம். ஆனால் அதனை  ஏற்றுக் கொள்ளாமல், அவருக்கு என்கொயரி போடப்பட்டது. இதுகுறித்து நமது அதிருப்தியை மிஸ்டர் ராமநாதனிடம் தெரியப்படுத்தினோம். சீக்கிரமாக என்கொயரி நடத்தி முடித்து விடலாம் என்றார் அவர். இதுதான் மிஸ்டர் ராமநாதனின் கழுத்தறுக்கும் பாணி. 2013 ஜூன் மாதம் ரிடையர் ஆன தோழர்.செல்வராஜுக்கு இன்று வரை என்கொயரி நடத்தி முடிக்கப்படவில்லை.  கிராஜிவிட்டி கொடுக்கப்படவில்லை. தி.டவுண் கிளையில் அவர் வைத்திருக்கும் நகைக்கடன் கட்ட முடியாமல் ஏலத்துக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானார் தோழர்.செல்வராஜ். சேர்மன் முதற்கொண்டு அனைவரிடமும் பேசிப் பார்த்தோம். பலனில்லை. அவருக்கு கிராஜுவிட்டி கொடுக்கப்பட வேண்டும் என லேபர் ஆபிஸில் வழக்குத் தொடர்ந்தோம். ரிடைய ஆன நாளில் இருந்து கிராஜுவிட்டி 10 சதவீதம் வட்டியுடன் கொடுக்கப்பட வேண்டும் என இப்போது தீர்ப்பாகி இருக்கிறது.

நமது கோரிக்கைகளும், இயக்கங்களும்:

தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து, இயக்கம் நடத்துவது எனவும், மே 1ம் தேதி நமது சங்க அலுவலகத்தில் நமது இரு சங்கங்களின் செயற்குழுக்களும் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்க இருப்பதையும் தெரிவித்து இருந்தோம். திட்டமிட்டபடி சங்க அலுவலகத்தில் கூடினோம். முன்னணித் தோழர்கள், மண்டலக் கமிட்டி உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். மார்க்சீய சிந்தனையாளரும், தொழிற்சங்க அனுபவங்கள் நிரம்பப்பெற்றவருமான தோழர். எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் நமது அழைப்பை ஏற்று  ‘மே தினச் சிந்தனைகளை' நம்மோடு பகிர்ந்து கொண்டார். முதலாளி வர்க்கம் எப்படி இந்த அற்புதமான வளங்களையும், மனிதர்களையும் சுரண்டுகிறது என்பதையும், அதை மீட்க நாம் போராட வேண்டிய அவசியத்தையும் இரண்டு மணி நேரம் மிக எளிமையாகச் சொன்னார். அருமையான உரையாடல்களுக்குப் பிறகு, மதியம் நமது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் நடந்தது.

ஒழுங்கு நடவடிக்கைகளை இழுத்தடித்து, பல ஊழியர்களின், அலுவலர்களின் வாழ்க்கையில் விளக்கை ஊதி அணைக்கும் இந்த நிர்வாகத்தின் போக்கில் மாற்றமே இல்லை. ஓய்வு பெறுகிற கடைசி நாட்கள் நிம்மதி குலைந்து, அமைதி இழந்து அலுவலர்கள் தவிப்பதற்கு எந்த விமோச்சனமும் இல்லை. கிளைகளில் பெருகும் வேலைப்பளுவை சரிசெய்யும் நடவடிக்கைகளுக்கான அறிகுறிகளே இல்லை. ஒப்புக்கொண்ட சிறு விஷயங்களைக் கூட நிறைவேற்றுவதற்கும் முனைப்பு இல்லை.  காலதாமதம் என்னும் பெரு நோய்  தலைமையலுவலகத்தைப் போட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. தலைமையலுவலகத்தை புனரமைக்க நடவடிக்கைகள் இல்லை.

இவை யாவுக்கும் பின்னணியில் வங்கியின் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனே இருக்கிறார் என குற்றம் சாட்டுகிறோம். அவரது இயல்பும், நடவடிக்கைகளும், அணுகுமுறையும்  மோசமானதாக இருக்கிறது என்பதை நமது அனுபவத்தில் அறிகிறோம். தலைமையலுவலகத்தை புனரமைப்பதில் ஏற்படும் தடங்கல்களுக்கும், CC / DPN லோன்களில் எழுந்திருக்கும் கடுமையான அதிருப்திக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளில் இரக்கமற்று நடந்து கொள்வதற்கும், அவரே மையப்புள்ளியாய் இருக்கிறார். Officers Recruitment விஷயத்தில் cut off marks முன்கூட்டியே தெரிந்தும், வேண்டுமென்றே அதை மறைத்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு இன்று பிரச்சினை பூதாகரமாவதற்கு மிஸ்டர் ராமநாதனே  காரணம். மனித உணர்வுகளுக்கு கொஞ்சங்கூட மதிப்பளிக்காமல் காலதாமதம் செய்வதில் அப்படியொரு கொடூரமான திருப்தி இவருக்குண்டு. அவரது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாற்றுவோம் என எச்சரிக்கிறோம்.

நாம் விரும்புகிற மாற்றங்கள் ஏற்படும் வரையில் நாம் தொடர்ந்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். அதன்படி-

1) அனைத்து நகரங்களிலும் நமது பிரச்சினைகளை விளக்கி ஃபிளக்ஸ் போர்டுகள் வைப்பது.

2)  நான்கு மண்டல அலுவலகங்கள் முன்பாகவும் கீழ்க்கண்ட தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது.
 
14.05.2014 - துத்துக்குடி
21.05.2014 - நெல்லை
28.5.2014   - விருதுநகர்
04.06.2014 - சிவகங்கை

ஆர்ப்பாட்டங்களையொட்டி, மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தப்படும். அதுகுறித்த தகவல்கள் மண்டலச் செயலாளர்கள் மூலம் தோழர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

3) ஜூன் 10 ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஓய்வூதியச் சலுகைகள் பெறாமல் பாதிப்புக்குள்ளான ஓய்வு பெற்ற தோழர்கள் குடும்பத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

இந்த கோரிக்கைகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. எனவே அனைத்துச் சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து, ஒன்றுபட்ட இயக்கத்திற்கு திட்டமிடுவது எனவும் கூட்டுச் செயற்குழு தீர்மானித்திருக்கிறது. ஜூன் இரண்டாம் வாரத்தில் மீண்டும் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்போம்.

நமது போராட்ட அறிவிப்புகளுக்குப் பிறகு, LFC/ LTC மற்றும் Lodging expenses to Officers ஆகிய கோரிக்கைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து அனுமதி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. வரவேற்கிறோம். அதே வேளையில் நிறைவேறாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அதற்கான பயணத்தைத் தொடருவோம்.....

தோழமையுடன்



   
(J.மாதவராஜ்)                                              (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA           பொதுச்செயலாளர் - PGBOU                       

1 comment:

  1. dear sir,when they r about to start clerk recruitment,pls reply sir....

    ReplyDelete

Comrades! Please share your views here!