28.1.15

PGB நிர்வாகத்தின் காட்டு தர்பார்!

பணி ஓய்வு பெறுகிறவர்கள் மீது நிர்வாகம் தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கிறது.

ஒழுங்கு நடவடிக்கைகளின் அடிப்படையான நோக்கமே தவறுகளை திருத்துவதுதான். தண்டிப்பது அல்ல. ஆனால் நமது நிர்வாகம் இதை ஒரு போதும் ஒப்புக்கொள்வதில்லை. பணியில் இருக்கும் காலத்தில் ஒரு தவறு நடந்தால், அது அவர் பணியில் இருக்கும் காலத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டு, அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்டால் நிர்வாகத்தின் நோக்கம் சரியென்று நாம் சொல்ல முடியும்.

ஆனால், அவர் பணியில் இருக்கும் காலமெல்லாம் மௌனமாய் இருந்துவிட்டு, பணி ஓய்வு பெறுகிற கடைசி சில தினங்களுக்கு முன்பு சார்ஜ்ஷீட் கொடுப்பது எந்த வகையில் நியாயம்? அது தவறுகளை திருத்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கம் கொண்டதா அல்லது தண்டிக்கும் நோக்கம் மட்டுமே கொண்டதா?

அந்த சார்ஜ் ஷீட்டிற்கு பதில் நாம் 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் அதன் மேல் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடாது. அதற்கு நேரமும், மனமும் கிடைக்கும் போது  அந்த ஃபைலை எடுத்துப் பார்த்து சில மாதங்கள் கழித்து என்கொயரி போடும். அந்த என்கொயரி நடந்து முடிய அப்படி இப்படி இரண்டு வருடங்கள் ஆகும். பின் அதன் மீது வாதம், எதிர்வாதம் முடிய சில மாதங்கள் ஆகும். அப்புறம் என்கொயரி ஆபிஸர் தனது findings கொடுக்க சில மாதங்கள். அவையெல்லாவற்றையும் டூன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட் படித்துப் பார்த்து அதன் மேல் நடவடிக்கை எடுக்க மேலும் சில மாதங்கள். ஆக குறைந்த பட்சம் முன்று ஆண்டுகளுக்கு மேலாக, குற்றஞ்சாட்டப்பட்டவர் எந்த ஓய்வூதியச் சலுகைகளும் வாங்க முடியாமல் பரிதபாமாய் காத்துக்கிடக்க வேண்டி இருக்கும். என்ன கொடுமை இது!

இந்த மாதம் பணி ஓய்வு பெற இருக்கும் 11 தோழர்களில் ஏழு தோழர்கள் நிம்மதியாக ஓய்வு பெறுகிற சூழலை இந்த நிர்வாகம் கெடுத்துச் சீரழித்திருக்கிறது. அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

ஓரத்தநாடு கிளையில் பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் தோழர்.சண்முகம், இதற்கு முன்பு மேலசெவல் கிளையில் பணி புரிந்த போது நடந்த ஒரு சம்பவத்திற்கு மூன்று வருடம் கழித்து, நிர்வாகம் இப்போது சார்ஜ் ஷீட் செய்து இருக்கிறது. இந்த மூன்று வருடங்களில்  சார்ஜ் ஷீட் கொடுத்து எப்போதோ முடித்திருக்கலாமே? இந்த கால தாமதத்திற்கு யார் பொறுப்பு? அவர்கள் மீது நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களின் வேதனை பற்றி கவலையே கிடையாது. பொறுப்பிலிருப்பவர்களிடம் கேட்டால், ‘நாங்கள் என்ன செய்ய முடியும். அவ்வளவு கேஸ்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகத்தான் பார்க்க முடியும்” என்று அலட்சியமான பதில்!இதே போன்று தலைமையலுவலகத்தின் கடிதங்களுக்கும், செய்திகளுக்கும் கிளையில் பணிபுரிகிறவர்கள் பதிலளித்தால், வங்கியின் நிலைமை என்னவாகும்?

கோவில்பட்டி கிளையில் பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் தோழர்.ஜமீன் பானு, அவர்களுக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்பு அந்த கிளையில் நடந்த ஒரு சம்பவத்திற்கு இப்போது சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர் மீது எந்தத் தவறும் இல்லையென்பது அனைவருக்கும் தெரியும், நிர்வாகத்துக்கும் தெரியும். ஆனால் இரக்கமற்ற தனது கோரப்பற்களை காட்டியிருக்கிறது. இன்னும் இதுபோன்று அந்தக் கோவில்பட்டி கிளையில் பணிபுரிந்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்களுக்கு நிர்வாகம்  சார்ஜ் ஷீட்கள் கொடுக்க இருக்கிறது என்பது இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் இன்னொரு கசப்பான உண்மை.

பாம்பன் கிளையில் பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் தோழர்.ஞானதேசிகன் அவர்களுக்கும் அந்த கிளையில் நடந்த ஒரு சம்பவத்திற்கு சார்ஜ்ஷீட்.  யார் தவறை கண்டுபிடித்து சொன்னார்களோ, அவர் மீதே குற்றச்சாட்டு. மேலும் நிர்வாகம் இதில் செய்து இருப்பது பச்சைத் துரோகம். வங்கியின் உயர் பொறுப்பிலிருப்பவர்களுக்கு மனசாட்சி இல்லை என்பதையே, இந்த சார்ஜ்ஷீட் சொல்கிறது.

இவைகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வேண்டுமென்றே ஊழியர்களையும் அலுவலர்களையும் வதைக்கும் நிர்வாகத்தின் வக்கிரமான குணமாகவே இதனை நாம் பார்க்கிறோம். ஓய்வு பெற இருப்பவர்கள் மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு எதிராக நாம் அணி வகுப்போம்! போராடுவோம்!!

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!