Showing posts with label Movements. Show all posts
Showing posts with label Movements. Show all posts

21.1.16

PGBWU circular 1/2016 dated 20.1.2016


இன்று நம் சங்கத்தின் சுற்றறிக்கை தயாராகி இருக்கிறது. திங்கட்கிழமை கிளைகளுக்கு கிடைக்கும். அதற்கு முன்பு படிப்பதற்காக:

18.7.15

மீண்டும் வேதாளமாய் நபார்டும், மத்திய அரசும்!

கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பத்தாவது இருதரப்பு ஒப்பந்தத்தை அமல் படுத்துவதில் மத்திய அரசும், நபார்டும் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன.

5.4.15

Circular 3/2015 dated 5.4.2015

சுற்றறிக்கை எண்: 3/2015    நாள் : 5.4.2015

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

28.3.15

எழுச்சிமிக்க அகில இந்திய தர்ணா!

பாண்டியன் கிராம வங்கியின் தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு முக்கியமான நாள் 27.3.2015!

25.3.15

தோழர் செல்வராஜின் துயரம் துடைப்போம்!


தோழர்.செல்வராஜ் மேலசெவல் கிளையில் கடைநிலை ஊழியராக  வேலை பார்த்து வந்தார்.  2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நமது வங்கியிலிருந்து ரிடையர் ஆனார். 2006ம் ஆண்டிலிருந்து அவரது Leave regularise செய்யப்படவில்லை.

18.3.15

AIRRBEA TN and Puduvai circular 1/2005 dated 18.3.2015

All India Regional Rural Bank Employees Association 
 -Tamil Nadu & Puduvai
(Affi: AIRRBEA, BEFI-TN)
C.O Colony, Opp : Collectorate, Virudhunagar
----------------------------------------------------------------------------------------------

சுற்றறிக்கை எண்: 1/2015 நாள் : 18.3.2015

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

19.2.15

Circular 2/2015 dated 17.2.2015

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

நமது சங்கத்தின் பொதுச்செயலாளரும், AIRRBEAவின் Joint Secretaryயுமான தோழர்.மாதவராஜ் அதிகமாக லீவு எடுத்துவிட்டார் என்று சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டு இருந்ததும், அதை கண்டித்து நாம் எதிர்ப்பு தெரிவித்ததும் தோழர்களுக்குத் தெரியும்.

29.1.15

PGB நிர்வாகத்தை கண்டித்து 30.1.2015 அன்று ஆர்ப்பாட்டம்!

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதப் போக்கையும், ஊழியர் விரோதப் போக்கையும் ஏற்கனவே சென்ற பதிவுகளில் சுட்டிக்காட்டி இருந்தோம்.

24.12.14

கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டம்!

22.12.2014 அன்று மத்திய அரசு, அந்த ஆபத்தான மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறது. கிராம வங்கிகளில் இருக்கும் அரசின் பங்குகளை 51 சதவீதத்திற்கு குறைத்து, மீதியை தனியார்கள் கைகளில் கொடுக்கும் நடவடிக்கை இது. கிராம வங்கிகளின் முதலீட்டை அதிகரிக்கப் போகிறோம் என்று அறிவிப்போடு இந்த பாதகத்தை செய்யத் துணிந்திருக்கிறது மோடியின் அரசு.

28.8.14

All Trade Unions in PGB - Gate Meeting on 27.8.2014

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் அணுகுமுறையும், செயல்பாடுகளும் மிக மோசமான நிலையில் இருக்கிறது.

26.5.14

தொடரும் நமது இயக்கம்!

ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை எதிர்த்து PGBEAவும், PGBOUவும் தொடர் இயக்கங்கள் ஆரம்பித்து நடத்தி வருகிறோம்.

3.5.14

PGBEA - PGBOU Circular 7/2014 dated 03.05.2014



சுற்றறிக்கை: 7/2014         நாள்: 03.05.2014

பாராளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. நமக்கும், நம் பிரச்சினைகளுக்கும் யார் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நாம் வக்களிப்போம் என்னும் நோக்கத்தில் நாம் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க BEFI அழைப்பு விடுத்திருந்தது. அதனை நமது சென்ற சர்க்குலரில் வெளியிட்டு இருந்தோம். உடனே எதோ குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்புடன் நடந்துகொண்டதாக PGBOA சர்க்குலரில் புலம்பி இருக்கிறது.  புதிய தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு. அதை அமல்படுத்தியது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. சீர்திருத்தங்கள் என்னும் பெயரில் வங்கித்துறையையும், வங்கி ஊழியர்களின், அலுவலர்களின் வாழ்க்கையை சிதைக்கும் கொள்கைகளில் இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. பெருமுதலாளிகளுக்கு சலுகைகள் செய்து கொடுத்து பொதுமக்களை வாட்டி வதைக்கும்  நடவடிக்கைகளிலும் இந்த இரு அரசுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இவைகளை எதிர்த்து வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் போராடுகிற போதெல்லாம்  ஆதரவு தந்தவர்கள் இடதுசாரி கட்சிகள் மட்டுமே. எனவேதான் நாம் அவர்களை ஆதரிப்போம் என்றோம். இது கட்சி அரசியல் அல்ல. வர்க்க அரசியல். தொழிலாளர்களின் வர்க்க அரசியல். இதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் அவர்களுக்கு சிந்தனையில் கோளாறு இருப்பதாக அர்த்தம்.  அரசியல் அற்றவர்கள் நாங்கள்' எனச் சொல்வதுதான் அவமானத்துக்குரியதும் அசிங்கமானதுமாகும்.

நமது வங்கியில் இட ஒதுக்கீட்டில் நடக்க இருந்த மோசடி:

புதிய பணிநியமனம் செய்வதில் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் காட்டிய கால தாமதத்தை நமது சென்ற சர்க்குலரில் கடுமையாக விமர்சித்து இருந்தோம். அதற்குப் பிறகு அவசரம், அவசரமாக ஆபிஸர்களுக்கு மட்டும் இண்டர்வியூ தேதியை அறிவித்து, நிர்வாகத்திலிருந்து அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதுகுறித்து எந்தச் செய்திகளையும், தகவல்களையும் வங்கிக்குரிய அதிகாரபூர்வ வெப்சைட்டில் வெளியிடவில்லை. இந்த நிர்வாகம்  Transparent-ஆக இருக்க மறுக்கிறது என்பதன் அடையாளம்தான் இது.

அழைப்புக் கடிதங்கள் தனித்தனியாக அனுப்பப்பட்ட பிறகுதான், அதிகமான மார்க்குகள் எடுத்தவர்கள் சிலர் இண்டர்வியூக்கு அழைக்கப்படாதது தெரிய வந்தது. அதன் பிறகு நாம் விசாரிக்க ஆரம்பித்தால் ஒரு மிகப்பெரும் மோசடி வெளிப்பட்டது. இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தாமல் இண்டர்வியூக்கு  தகுதி பெறுவதற்கு கீழ்க்கண்டவாறு  கட்-ஆப் மார்க்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன.

General Category - 108
OBC category - 123
SC/ST category - 112

அதாவது, எழுத்துத் தேர்வில் 108 மதிப்பெண்கள் பெற்ற  ஜெனரல் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவில் கலந்துகொள்ள முடியும். ஆனால் 111 மார்க்குகள் எடுத்த எஸ்.ஸி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவில் கலந்து கொள்ள முடியாது. 122 மார்க்குகள் பெற்ற ஓபிசி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கலந்துகொள்ள முடியாது.

பார்த்த மாத்திரத்தில் மிகப்பெரும் கோளாறு இருப்பது தெரிந்தது. இது எப்படிநடந்தது என்று ஆராயும்போது, நிர்வாகமும் IBPSம் சேர்ந்து நடத்திய  மோசடி வெளிப்பட்டது. ஜெனரல் பிரிவில் முதலில் கட் -ஆப் மார்க்குகள் நிர்ணயம் செய்ய வேண்டும். அதில் அதிமான மார்க்குகள் எடுத்த எஸ்.ஸி/எஸ்.டி பிரிவினரும், ஓபிசி பிரிவினரும் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் போக மீதமிருக்கும் எஸ்.ஸி/எஸ்.டி பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினருக்கும் தனித்தனியாக கட்-ஆப் மார்க்குகள் நிர்ணயம் செய்ய சேண்டும். ஆனால் நமது வங்கியில் ஜெனரல் பிரிவில் அதிகமான  மார்க்குகள் எடுத்த எஸ்.ஸி/எஸ்.டி பிரிவினரும், ஓபிசி பிரிவினரும் சேர்க்கப்படவில்லை. உடனடியாக நமது இரு சங்கங்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினோம். நமது வெப்சைட்டில் இதனை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டோம். நம் வங்கியில் இருக்கும் அனைத்து சங்கங்களுக்கும் இந்த அநியாயத்தை தெரிவித்து, அனைவரும் சேர்ந்து இதனை முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதனைக் கேள்விப்பட்டு, இது சமூக நீதிக்கும், இந்திய அரசியல் அமைப்பு விதிகளுக்கும் எதிரானது என வங்கி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உடனடியாக சரி செய்ய வேண்டுகோள் விடுத்தது.

நாம் 30.4.2014 வங்கியின் சேர்மனை சந்தித்துப் பேசினோம். சரிசெய்வதற்கான முயற்சிகள் எடுப்பதாகச் சொன்னார். ஆனால் இண்டர்வியூ திட்டமிட்டபடி 3.5.2014ல்  நடக்க இருப்பது தெரிய வந்ததும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  சார்பில் 2.5.2014 அன்று தலைமையலுவலகத்தின் முன்பாக ஆர்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. போஸ்டர்கள் அடித்தும், பத்திரிகை செய்திகள் வாயிலாகவும் பொது மக்களிடத்தில் இவ்விஷயத்தைக் கொண்டு சென்று, மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த முக்கியமான பிரச்சினையில் தலையிட வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில், 2.5.2014 பிற்பகலில் நிர்வாகம் தனது முடிவை மறு பரீசீலனை செய்து, தாங்கள் ஏற்கனவே நிர்ணயித்த கட் -ஆப் மார்க்குகளின் படி இண்டர்வியூ நடத்தாமல், சுமூகமாக பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வந்தது. நம்மோடும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடும் பேச்சுவார்த்தை நடத்தியது.  இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாநிலச் செயலாளர் கணேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஞானகுரு, பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியனின் துணைத் தலைவர்  பி.எஸ். போஸ் பாண்டியன்,  பொதுச் செயலாளர் சங்கரலிங்கம்,  பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாலர் ஜா. மாதவராஜ், எஸ்.சி/எஸ்.டி. நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.ராஜேந்திர சோழன், பாண்டியன் கிராம வங்கி வொர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பாலாஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகத் தரப்பில் முதன்மை மேலாளர்கள் ஞானப்பிரகாசம் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் தவறானவை என்பதை ஏற்றுக் கொண்ட பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், அதிகாரிகள் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருக்கும் அனைவருக்கும் அழைப்பு அனுப்புவது என்று முடிவு செய்தது. நேர்காணல் நிறைவு பெற்று வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு உரிமைக்கு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தின. அதையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

தோழர்களே, நமது முன்முயற்சியால் ஒரு மிகப்பெரிய அநீதி களையப்பட்டு இருக்கிறது. இந்திய அரசின் இட ஒதுக்கீடு முறையை சரியாக வருங்காலத்திலும் இந்த  நிர்வாகம் பின்பற்றுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆதரவு தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும், நமது வங்கியில் உள்ள PGBWU, PGBOA, PGB SEWA சங்கங்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

CC / DPN லோன்கள் படுத்தும் பாடு!

CC / DPN ஐ.ஓ.பியில் உள்ளது போல நமக்கும் வழங்கப்படும் என நிர்வாகம் சொல்லியது. ஏப்ரல் முதல் வாரத்தில் சர்க்குலரும் வெளியிட்டது. அதிலேயே ஏராளமான கண்டிஷன்களைப் போட்டது. ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளவர்களுக்கும், லீவு regularise செய்யப்படாதவர்களுக்கும் கிடையாது என்றார்கள். ஒழுங்கு நடவடிக்கைகளை காலாகாலத்தில் முடிக்காததற்கும், leave regularise  செய்யப்படாததற்கும் நாம் காரணமல்ல. அவர்கள் மீது தவறுகளை வைத்துக்கொண்டு ஊழியர்களையும், அலுவலர்களையும் ஏன் தண்டிக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு இன்று வரை நிர்வாகத்திடம்   இருந்து பதில் இல்லை. இந்த நிலையில் Time-barred அக்கவுண்டகளுக்கு ஆபிஸர்கள் பொறுப்பு என பலருக்கும் CC/DPN லோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இது சர்க்குலரில் விதிக்கப்படாத கண்டிஷன். தன்னிஷ்டத்திற்கு இந்த நிர்வாகம் நடத்தும் அராஜகம் இது.

மீதமுள்ளவர்களுக்கு எதாவது ஒரு ‘கொரி' போட்டு திருப்பி அனுப்பப்படுகிறது. DPN லோனில் overdue இருக்கிறது என்றெல்லாம் காரணங்கள். DPN லோனுக்குரிய instalment தலைமையலுவலகம்தான் நிர்ணயிக்கிறது. மாதாமாதம் தலைமையலுவலகம்தான் பிடிக்கிறது. அப்புறம் எப்படி overdue வரும்? மாஸ்டரில் தவறு இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். Overdue இருப்பதை பார்க்கத் தெரிந்த டிபார்ட்மெண்ட் அதனை அடுத்த கணமே சரி செய்ய நடவடிக்கை எடுப்பதை விடுத்து, மொத்த லோன் பேப்பர்களையும் கொரி போட்டு திருப்பி அனுப்புவது எந்த மாதிரியான செயல்?

இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களும், அலுவலர்களும் ஒரு லோன் போட்டு விட்டு, இப்படி அலைக்கழிக்கப்படுவது, அவர்களை அவமானப்படுத்தும் செயலாகவே நாங்கள் கருதுகிறோம். நாமொன்றும் குற்றவாளிகளுமல்ல, அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரர்களுமல்ல.

400க்கும் மேற்பட்ட CC / DPN  லோன்கள் குவிந்துகிடக்க, இந்த இருபது நாட்களில் 60 லோன்களே சாங்ஷன் செய்யப்பட்டு இருக்கின்றன. என்ன நிர்வாகம் இது. இதில் இந்த வங்கி லாபம் அடைவதைப் பற்றியும், பல parameterகளில் சாதனை புரிந்திருப்பதைப் பற்றியும் நாங்கள் பெருமைப்பட என்ன இருக்கிறது. சந்தோஷப்பட  என்ன இருக்கிறது. நிர்வாகம் தருகிற ஸ்வீட் பாக்ஸ் இனிக்கவில்லை.

மிக முக்கிய வெற்றி:

மேலசெவல் கிளையில் மெஸஞ்சராய் பனிபுரிந்துவந்த தோழர்.செல்வராஜ், அதிகமாக லீவு எடுத்துவிட்டார் என்று அவர் ரிடையர் ஆவதற்கு ஒரு நாள் முன்பு ஒரு சார்ஜ் ஷீட் கொடுத்தது நிர்வாகம். இது சரியில்லை என நிர்வாகத்துடன் பேசினோம். ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன், “ஒரு பதிலைக் கொடுங்கள். சுமூகமாக முடித்து விடலாம்” என்றார். பதிலைக் கொடுத்தோம். ஆனால் அதனை  ஏற்றுக் கொள்ளாமல், அவருக்கு என்கொயரி போடப்பட்டது. இதுகுறித்து நமது அதிருப்தியை மிஸ்டர் ராமநாதனிடம் தெரியப்படுத்தினோம். சீக்கிரமாக என்கொயரி நடத்தி முடித்து விடலாம் என்றார் அவர். இதுதான் மிஸ்டர் ராமநாதனின் கழுத்தறுக்கும் பாணி. 2013 ஜூன் மாதம் ரிடையர் ஆன தோழர்.செல்வராஜுக்கு இன்று வரை என்கொயரி நடத்தி முடிக்கப்படவில்லை.  கிராஜிவிட்டி கொடுக்கப்படவில்லை. தி.டவுண் கிளையில் அவர் வைத்திருக்கும் நகைக்கடன் கட்ட முடியாமல் ஏலத்துக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானார் தோழர்.செல்வராஜ். சேர்மன் முதற்கொண்டு அனைவரிடமும் பேசிப் பார்த்தோம். பலனில்லை. அவருக்கு கிராஜுவிட்டி கொடுக்கப்பட வேண்டும் என லேபர் ஆபிஸில் வழக்குத் தொடர்ந்தோம். ரிடைய ஆன நாளில் இருந்து கிராஜுவிட்டி 10 சதவீதம் வட்டியுடன் கொடுக்கப்பட வேண்டும் என இப்போது தீர்ப்பாகி இருக்கிறது.

நமது கோரிக்கைகளும், இயக்கங்களும்:

தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து, இயக்கம் நடத்துவது எனவும், மே 1ம் தேதி நமது சங்க அலுவலகத்தில் நமது இரு சங்கங்களின் செயற்குழுக்களும் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்க இருப்பதையும் தெரிவித்து இருந்தோம். திட்டமிட்டபடி சங்க அலுவலகத்தில் கூடினோம். முன்னணித் தோழர்கள், மண்டலக் கமிட்டி உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். மார்க்சீய சிந்தனையாளரும், தொழிற்சங்க அனுபவங்கள் நிரம்பப்பெற்றவருமான தோழர். எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் நமது அழைப்பை ஏற்று  ‘மே தினச் சிந்தனைகளை' நம்மோடு பகிர்ந்து கொண்டார். முதலாளி வர்க்கம் எப்படி இந்த அற்புதமான வளங்களையும், மனிதர்களையும் சுரண்டுகிறது என்பதையும், அதை மீட்க நாம் போராட வேண்டிய அவசியத்தையும் இரண்டு மணி நேரம் மிக எளிமையாகச் சொன்னார். அருமையான உரையாடல்களுக்குப் பிறகு, மதியம் நமது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் நடந்தது.

ஒழுங்கு நடவடிக்கைகளை இழுத்தடித்து, பல ஊழியர்களின், அலுவலர்களின் வாழ்க்கையில் விளக்கை ஊதி அணைக்கும் இந்த நிர்வாகத்தின் போக்கில் மாற்றமே இல்லை. ஓய்வு பெறுகிற கடைசி நாட்கள் நிம்மதி குலைந்து, அமைதி இழந்து அலுவலர்கள் தவிப்பதற்கு எந்த விமோச்சனமும் இல்லை. கிளைகளில் பெருகும் வேலைப்பளுவை சரிசெய்யும் நடவடிக்கைகளுக்கான அறிகுறிகளே இல்லை. ஒப்புக்கொண்ட சிறு விஷயங்களைக் கூட நிறைவேற்றுவதற்கும் முனைப்பு இல்லை.  காலதாமதம் என்னும் பெரு நோய்  தலைமையலுவலகத்தைப் போட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. தலைமையலுவலகத்தை புனரமைக்க நடவடிக்கைகள் இல்லை.

இவை யாவுக்கும் பின்னணியில் வங்கியின் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனே இருக்கிறார் என குற்றம் சாட்டுகிறோம். அவரது இயல்பும், நடவடிக்கைகளும், அணுகுமுறையும்  மோசமானதாக இருக்கிறது என்பதை நமது அனுபவத்தில் அறிகிறோம். தலைமையலுவலகத்தை புனரமைப்பதில் ஏற்படும் தடங்கல்களுக்கும், CC / DPN லோன்களில் எழுந்திருக்கும் கடுமையான அதிருப்திக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளில் இரக்கமற்று நடந்து கொள்வதற்கும், அவரே மையப்புள்ளியாய் இருக்கிறார். Officers Recruitment விஷயத்தில் cut off marks முன்கூட்டியே தெரிந்தும், வேண்டுமென்றே அதை மறைத்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு இன்று பிரச்சினை பூதாகரமாவதற்கு மிஸ்டர் ராமநாதனே  காரணம். மனித உணர்வுகளுக்கு கொஞ்சங்கூட மதிப்பளிக்காமல் காலதாமதம் செய்வதில் அப்படியொரு கொடூரமான திருப்தி இவருக்குண்டு. அவரது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாற்றுவோம் என எச்சரிக்கிறோம்.

நாம் விரும்புகிற மாற்றங்கள் ஏற்படும் வரையில் நாம் தொடர்ந்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். அதன்படி-

1) அனைத்து நகரங்களிலும் நமது பிரச்சினைகளை விளக்கி ஃபிளக்ஸ் போர்டுகள் வைப்பது.

2)  நான்கு மண்டல அலுவலகங்கள் முன்பாகவும் கீழ்க்கண்ட தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது.
 
14.05.2014 - துத்துக்குடி
21.05.2014 - நெல்லை
28.5.2014   - விருதுநகர்
04.06.2014 - சிவகங்கை

ஆர்ப்பாட்டங்களையொட்டி, மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தப்படும். அதுகுறித்த தகவல்கள் மண்டலச் செயலாளர்கள் மூலம் தோழர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

3) ஜூன் 10 ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஓய்வூதியச் சலுகைகள் பெறாமல் பாதிப்புக்குள்ளான ஓய்வு பெற்ற தோழர்கள் குடும்பத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

இந்த கோரிக்கைகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. எனவே அனைத்துச் சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து, ஒன்றுபட்ட இயக்கத்திற்கு திட்டமிடுவது எனவும் கூட்டுச் செயற்குழு தீர்மானித்திருக்கிறது. ஜூன் இரண்டாம் வாரத்தில் மீண்டும் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்போம்.

நமது போராட்ட அறிவிப்புகளுக்குப் பிறகு, LFC/ LTC மற்றும் Lodging expenses to Officers ஆகிய கோரிக்கைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து அனுமதி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. வரவேற்கிறோம். அதே வேளையில் நிறைவேறாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அதற்கான பயணத்தைத் தொடருவோம்.....

தோழமையுடன்



   
(J.மாதவராஜ்)                                              (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA           பொதுச்செயலாளர் - PGBOU                       

2.5.14

சமூகநீதியை மறுக்கும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை எதிர்த்து இன்று போராட்டம்!


ஆபிஸர்கள் பதவி நியமனத்தில், இந்திய அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் கடைப்பிடிக்க மறுப்பதை, ஏற்கனவே முந்தைய பதிவுகளில் தெரியப்படுத்தி இருந்தோம்.

இந்த செய்தியை கேள்விப்பட்டு, சமூக நீதிக்கு ஆதரவான பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இதனை எதிர்த்து இன்று விருதுநரில் தலைமையலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள்.

அதுகுறித்து  இன்றைய தீக்கதிர் பத்திரிகையில் 5 ம்பக்கத்தில் கீழ்க்கண்ட செய்தி இடம் பெற்றிருக்கிறது. (பார்க்க: தீக்கதிர்)
___________________________________

பாண்டியன் கிராம வங்கி பணியிட நிரப்பலில் 
இடஒதுக்கீடு இல்லை!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
கண்டனம்!!


சென்னை, மே 1-

பாண்டியன் கிராம வங்கிகளில் காலியாக இருக்கும் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான பணியில் இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்காததற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கிராம வங்கிகளில் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, வங்கிகள் நேர்காணல் நடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாண்டியன் கிராம வங்கியும் நேர்காணலுக்கான அறிவிக்கையை வெளியிட்டிருந்தது.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.பாண்டியன் கிராம வங்கியும் பிரிவுவாரியாக கட்-ஆப் மதிப்பெண்களை நிர்ணயம் செய்து நேர்காணலுக்கான தகுதி பெற்றவர்களுக்கு அழைப்பு அனுப்பியுள்ளது. ஆனால், இந்த கட் ஆப் மதிப்பெண்கள் தகுதி வாய்ந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிக மதிப்பெண்களைப் பெற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதும், குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற இட ஒதுக்கீடு பிரிவிற்குள் வராதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் நிகழ்ந்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு குறைந்தபட்சமாக 123 மதிப்பெண்களும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 112 மதிப்பெண்களும், பொதுப்பிரிவினருக்கு 108 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த நிர்ணயம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. சமூக நீதிக் கோட்பாட்டை அடியோடு குழிதோண்டிப் புதைப்பதாகும்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பாண்டியன் கிராம வங்கி அதிகாரிகள் சங்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த இட ஒதுக்கீடு விரோதநடவடிக்கைக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளன. 3 ஆம் தேதியன்று நேர்காணல் துவங்குவதால் உடனடியாகத்தலையிடுமாறு வங்கியின்தலைவருக்கு மின்னஞ்சல்மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு இதுவரைஎந்தவித சாதகமானபதிலும்வரவில்லை.

இந்த பணி நிரப்பும் நடவடிக்கையை அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் அமல்படுத்த வேண்டும். அதற்குரிய வகையில் நேர்காணல் அழைப்புகள் இருக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பாண்டியன் கிராம வங்கியின் நிர்வாகம் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

வங்கியின் இந்த இட ஒதுக்கீடு விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பாண்டியன் கிராம வங்கி அதிகாரிகள் சங்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மே 2 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளன. விரைவில் தீர்வு காணாத பட்சத்தில் போராட்டம் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

15.2.14

PGBEA - PGBOU Circular 3/2014 dated 14.2.2014





பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA, NFRRBO)




சுற்றறிக்கை: 3/2014                                         நாள்: 14.02.2014

அருமைத் தோழர்களே!

வணக்கம். பிப்ரவர் 10, 11 தேதிகளில் நாடு முழுவதும் 48 மணி நேர வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. நியாயமான ஊதிய உயர்வுக்காகவும், வங்கித்துறையை சீரழிக்கும் சீர்திருத்தங்களை எதிர்த்தும் நடந்து முடிந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான அலுவலர்களும், ஊழியர்களும் பங்கேற்று இருக்கின்றனர். இதனால் 14 லட்சம் கோடி மதிப்புள்ள பண வர்த்தனைகள் முடங்கியிருக்கின்றன என பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இவை யாவற்றுக்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் வலியப் போய் நடத்தவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே முயற்சித்தன. அரசும், ஐ.பி.ஏ வும் பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் பிடிவாதம் பிடித்ததால்தான் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ` வங்கியின் லாபம் முழுவதையும் ஊதியங்களுக்குச் செலவிட முடியாது எனவும், அதன் ஒரு பகுதியை முதலீட்டிற்கு பயன்படுத்த வேண்டும்` என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். எதோ லாபம் முழுவதையும் நாம் கேட்பது போல ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்திருக்கிறார். நாம் நியாயமான ஊதிய உயர்வினைத்தான் கேட்கிறோம். இந்த நாட்டில் பெரு முதலாளிகள் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்வதற்கு இவருக்கு துப்பில்லை. அப்படி செய்தாலே, வங்கிகளின் லாபம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

மத்திய அரசும், ஐ.பி.ஏவும் பிடிவாதம் தளர்த்தி நியாயமான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. அப்படி இணக்கமான சூழல் ஏற்படவில்லையென்றால், சங்கங்கள் இன்னும் விரிவடைந்த, தீவீரமான போராட்டங்களுக்குத் தயாராகும். அதற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

நாடு முழுவதும் நடந்து முடிந்த இந்த வேலைநிறுத்தத்தில், கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் இணைந்து கலந்து கொண்டனர். பண்டியன் கிராம வங்கியில் 233 கிளைகளில் 192 கிளைகளில் வங்கிச் சேவை நடைபெறவில்லை. வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட PGBEA, PGBOU, PGBOA தோழர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை நாம் பெறப் போகும் ஊதிய உயர்வில், நமது பங்கு இருக்கிறது என பெருமை கொள்வோம்.

வீர வணக்கம் தோழர்களே!

தொடரும் PGB நிர்வாகத்தின் அராஜகப் போக்கும் பழிவாங்கும் படலமும்!

சென்ற சர்க்குலரில் தோழர் முருகதாஸ் பணிபுரிந்த நாட்களுக்குரிய  ஊதியத்தை கேட்டதற்காக அவரை இந்த நிர்வாகம் திடுமென காரணம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்தததை குறிப்பிட்டு இருந்தோம். நிர்வாகம் அவர் வேலை பார்த்த நாட்களுக்குரிய ஊதியத்தை கொடுத்து விட்டது. அவரை விரைவில் reinstate செய்வதாக உறுதியளித்திருக்கிறது.

ஆனால் இவ்விஷயத்தை வெளியிட்டதற்காகவும், நிர்வாகத்தின் போக்கை தட்டிக் கேட்டதற்காகவும் PGBEA பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ் மீது பாய்ந்திருக்கிறது. அவர் மீது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் சென்ற வருடத்தின் ஆரம்பத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சார்ஜ் ஷீட் ஒன்று கொடுத்தது தோழர்களுக்கு ஞாபகமிருக்கும். 4.1.2013 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு, பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி  எதிர்ப்பைத் தெரிவித்திருந்தோம்.

நிர்வாகம் `ஒரு பதிலைக் கொடுங்கள். மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்காமல் நிறுத்திக்கொள்கிறோம்` என்றது. அதன் பேரில் தோழர்.மாதவராஜ் 18.1.2013 அன்றே பதிலைக் கொடுத்தார். நிர்வாகம் அத்தோடு பிரச்சினையை முடித்துக் கொள்வதாக உறுதியளித்தது. இப்போது 13 மாதங்கள் கழித்து, அந்த சார்ஜ் ஷீட் ஃபைலை தூசிதட்டி எடுத்து, என்கொயரி ஆர்டர் செய்திருக்கிறது. அப்பட்டமான பழிவாங்கும் போக்கும், தொழிற்சங்க விரோத மனப்பான்மையும் வெளிப்பட்டு இருக்கிறது.  இதனை நாம் கண்டிக்கிறோம். இரண்டு சங்கங்களும் கலந்து பேசி இது குறித்த எதிர்ப்பு இயக்கங்களை முடிவு செய்யும். BEFI, AIRRBEA  தலைமைக்கு கொண்டு சென்று நிர்வாகத்தின் பழிவாங்கும் போக்குக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நமது கோரிக்கைகளும் இயக்கமும்!

சென்ற சர்க்குலரில் இந்த நிர்வாகத்தின் மீது ஒரு எட்டு விமர்சனங்களை முன்வைத்திருந்தோம். அவைகளை சரி செய்யும் விதமாக ஆறு கோரிக்கைகளையும் எழுப்பியிருந்தோம். நேற்று (13.2.2014) நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி இணைந்து அது குறித்து விவாதித்தன. நமது இயக்கத்தையும், நிர்வாகத்தின் மீது வைத்திருக்கும் விமர்சனங்களையும் விளக்கி, கோரிக்கைகளை முன்னிலைப் படுத்தி முதலில் பிரச்சார இயக்கம் ஆரம்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.

நமது கோரிக்கைகளை தெரியப்படுத்தி, அதன் மீது உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையை ஒட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நமது இரு சங்கத்தின் செயற்குழுக்களும் விரைவில் கூடி முடிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், நமது பிரச்சார இயக்கத்தின் முதல் கட்டமாக-

1.நிர்வாகத்தின் மீதான நமது விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் விளக்கி ஒரு சிறு புத்தகமாக பிரசுரம் அனைத்துத் தோழர்களுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும்.

2. முக்கிய நகரங்களில் கீழ்க்கண்ட வாசகங்களுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படும்.
-------------------------------------------------
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகமே!
1.     இதயமேயில்லாமல் காட்டு தர்பார் செய்யும் தலையலுவலகத்தின் உயர்         பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளைத் தலைமையலுவலகத்திலிருந்து அப்புறப்படுத்து!
2.     மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் படி மக்களுக்கு     அவர்கள் வேலைபார்க்கும் இடத்திலேயே பணத்தை பட்டுவாடா செய்!
3.     ஓய்வு காலச் சலுகைகளை நிறுத்தி ஓய்வு பெற்றவர்களின் வயிற்றில் அடிப்பதை     கைவிடு!
4.     ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பேரில் ஊழியர்களையும், அலுவலரையும்         சித்திரவதை செய்யாதே!
5.     கிளைகளில் போதிய வசதிகளை செய்து, பணிநெருக்கடிகளை தீர்த்து வை!
6.     தற்காலிக ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்!

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ்
யூனியன்
-------------------------------------------------


இந்த வங்கியில் தொழில் அமைதி நிலவுவதும்,  ஊழியர்களும் அலுலர்களும் உற்சாகமாக பணிபுரிவதற்குமான சூழலை ஏற்படுத்துவதும் நிர்வாகத்தின் கைகளில்தான் இருக்கிறது.


தோழமையுடன்

                                                
(J.மாதவராஜ்)                                                           (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                              பொதுச்செயலாளர் - PGBOU   

(PGB management பற்றிய தொடரின் அடுத்த பகுதி- வெளிப்படைத்தன்மையற்ற PGB நிர்வாகம் - நாளை வெப்சைட்டில் வெளியாகும்)


5.2.14

PGBEA - PGBOU Circular 2/2014 dated 5.2.2014


பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA, NFRRBO)



சுற்றறிக்கை: 2/2014                                         நாள்: 05.02.2014

அருமைத் தோழர்களே!

வணக்கம். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்து IBA. க்கும் UFBU-வுக்குமிடையே 5 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நவம்பர் 2013 வரை நடைபெற்றுள்ளன. 18 டிசம்பர் 2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து ஜனவரி 20,21 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர்.இதனையடுத்து ஜன. 13 அன்று மத்திய தொழிலாளர் ஆணையர் தலையீட்டின் பேரில் ஜன. 17 அன்று ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொடக்க கட்ட உயர்வு 9.5 விழுக்காடு என்பதாக ஐபிஏ அறிவித்தது.

மேலும், இருவாரத்துக்கு ஒருமுறை ஊதிய பேச்சுவார்த்தையைத் தொடரலாம்; ஜூன் 2014க்கு முன்பே ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்தன.மீண்டும் ஜன.27 அன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது 0.5 விழுக்காடு மட்டுமே ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.இது ஊழியர், அதிகாரிகளை அவமானப்படுத்துவதாக அமைந்தது.இதற்கிடையில், 55 வயது நிறைந்த ஊழியர்களை அல்லது 30 ஆண்டு பணிபுரிந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்கலாம் , மாநிலம் முழுவதும் ஊழியர்களை இடமாற்றம் செய்யலாம் ஊழியர் ‘திறன்' அடிப்படையில் ஏற்ற தாழ்வான ஊதிய அமைப்பு விகிதத்தை வங்கித்துறையில் அறிமுகப்படுத்தலாம் என்று நிர்வாகம் சார்பில் எதிர்க் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

சுமூகப்பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றிருந்த தொழிற்சங்கங்களை ஆவேசமடைய வைத்தன. வங்கி ஊழியர்களை பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டங்களை அமல்படுத்த, கூட்டமைப்பு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கடந்த ஒப்பந்தத்தைக் காட்டிலும் இம்முறை வெறும் 10 விழுக்காடுதான் உயர்வு என்பதை ஏற்க இயலாது என்பதால் யுஎப்பியு கூட்டமைப்பின் 9 சங்கங்களும் பிப்.10ம் தேதி காலை 6 மணி முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கான அறைகூவல் விடுத்துள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வது என அகில இந்திய அளவில் அனைத்து கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. AIRRBEA இதனை நமக்குத் தெரிவித்துள்ளது. எனவே PGBEAவும், PGBOUவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்கின்றன.

தோழர்களே, வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

நமது வங்கியும் நமது இயக்கமும்:


பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் குறித்து நமது இரு சங்கங்களும் தொடர்ந்து கீழ்க்கண்ட விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம்.
1. மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கிறது.
2.வெளிப்படைத்தன்மையற்றதாகவும், இறுக்கமானதாகவும் இருக்கிறது.
3.ஊழியர்கள் பணிநெருக்கடிகளுக்கு தீர்வு காணாமல் இருக்கிறது.
4.வங்கிப்பணிகளில் அவரவர்க்கான விதிகளை வரையறுத்து ஒரு ஒழுங்கை ஏற்படுத்தாமல், ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நடத்தைகளில் மட்டுமே ஒழுங்கை பார்க்கிறது.
5.சம்பளப்பிடித்தம் என்றால் அதிவேகமாகச் செயல்படுகிறது. அதே வேளையில் உரிய சலுகைகளையும், உரிமைகளையும் வழங்குவதென்றால் காலம் தாழ்த்துகிறது, தட்டிக் கழிக்கிறது.
6. ஊழியர்களோடும், அலுவலர்களோடும் நட்பு ரீதியான நல்லுறவு வைத்துக்கொள்ளாமல், அனைவரையும் எதிரிகளாகவும், குற்றவாளிகளாகவும் பார்க்கிறது.
7.ஓய்வு பெறப் போகும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அடிவயிற்றில் பயத்தையும், படபடப்பையும் உருவாக்கி, வங்கிப்பணியில் அவர்கள் இயல்பாகவும் சுதந்திரமாகவும் ஈடுபடுவதை குறைக்கிறது.
8.புதிதாக பணிக்குச் சேர்ந்த இளம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை அரவணைத்து அவர்களுக்கு இந்த வங்கியின் மீது பிடிப்பையும் பற்றையும் உருவாக்குவதற்கு பதிலாக அதிகாரம் செலுத்தி இந்த வங்கியை விட்டு வெளியேறும் எண்ணத்தை  ஏற்படுத்துகிறது.

இவைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் பேசியிருக்கிறோம். இவைகளை சரிசெய்வதற்கான யோசனைகளையும், வழிகளையும் நம் தரப்பில் சொல்லியிருக்கிறோம். இந்த நிர்வாகம் சரிசெய்வதாக சொல்கிறது. ஆனால் ஆக்கபூர்வமான, திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறது.

'தலைமையலுவலகத்தை புனரமைக்க வேண்டும்' என்று நாம் பலவருடங்களாக சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பலரது வாழ்க்கையை சிதைத்து, இந்த வங்கியில் உற்சாகமாக பணிபுரியும் மனோபாவத்தை கெடுத்த  மிஸ்டர்.சங்கரநாராயணனை, AIVDயை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து விடுவியுங்கள் என்று எத்தனையோ முறை சொல்லியிருக்கிறோம். நிர்வாகமோ மார்ச் மாதத்தில் பணி ஓய்வு பெற இருக்கும் அவருக்கு பதவி உயர்வு கொடுத்து பாராட்டியிருக்கிறது.

மிஸ்டர் சங்கரநாராணனுக்குப் பதிலாக இப்போது மிஸ்டர் சந்தானக்குமாரை உட்கார வைத்திருக்கிறார்கள். இவரும் சங்கரநாரயணனைப் போன்ற மோசமான பார்வை கொண்டவர்தான். கிளைகளில் performance செய்யாதவர். பல கேஸ்களில் investigating officerஆக இருக்கிறவர். எனவே மிஸ்டர் சந்தானக்குமாருக்கு AIVDயை நிர்வகிப்பதற்கு தார்மீக உரிமை கிடையாது. அவரை மாற்ற வேண்டும் என நாம் கோரிக்கை வைக்கிறோம். வந்தவுடன் அவர் செய்த முதல் பணி, புளியங்குடிக் கிளையில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் தோழர்.முருகதாஸை சஸ்பெண்ட் செய்ததுதான். தோழர்.முருகதாஸ் வேலைபார்த்த நாட்களுக்குரிய ஊதியம் கொடுக்கப்படவில்லை. wages Act, 1936 பிரகாரம் இது தவறு, ஊதியத்தை உடனடியாக கொடுங்கள் எனக் கேட்டோம். அதற்குத்தான் இந்த சஸ்பென்ஷன்.  சஸ்பென்ஷன் ஆர்டரில் எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. ஊழியர் விரோத மனப்பான்மை அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது.

எனவே நாம் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய காரியங்களில் ஈடுபட வேண்டி இருக்கிறது. அதற்காக  நாம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் ஆரம்பிப்பது என இரு சங்கத்தின் தலைமையும் தீர்மானித்திருக்கின்றன.

1. தலைமையலுவலகத்தை புனரமைக்க வேண்டும். டிபார்ட்மெண்ட்களின் பொறுப்பு வகிப்பவர்கள் performerகளாகவும், இணக்கமான அணுகுமுறை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
2.NREGS, OAP கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அதற்கேற்ப தொழில்நுட்ப வசதிகள் உடனடியாக முழுமைப் படுத்தப்பட வேண்டும்.
3. நிலுவையிலிருக்கும் ஓழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள்  பாஸிட்டிவான பார்வையோடு முடிக்கப்பட வேண்டும்.
4. எந்தக் காரணம் கொண்டும் ரிடையர் ஆகிறவர்களின் ஓய்வுகாலச் சலுகைகளை நிறுத்தி வைப்பது கூடாது.
5. Graduation pay to newly recruited Office Assistants, Boarding and lodging expenses for officers on par with sponsor Bank, Petrol allowance and House maintanence allowance on par with sponsor bank, enhancement of LTC/LFC ஆகிய பொருளாதாரக் கோரிக்கைகள்  உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
6. அவரவர்க்கான Duties and responsibilities களை வரையறுத்து சர்க்குலர் வெளியிட வேண்டும்.

விரைவில் நமது இரு சங்கங்களும் நிர்வாகத்துடன் இந்தக் கோரிக்கைகள் குறித்து பேசுவோம். சாதகமான நிலைமைகளும், முன்னேற்றங்களும் ஏற்படவில்லையென்றால் நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். இந்தக் கோரிக்கைகள் குறித்து நமது வங்கியில் இருக்கும் சகோதரச் சங்கங்களோடும் பேசி வருகிறோம். அவர்களும் இதுபோன்ற சிந்தனைகளோடு இருக்கிறார்கள் என்பது ஆரோக்கியமான விஷயம்.

தோழர்.முருகதாஸ் சஸ்பென்ஷன் குறித்து பொதுமேலாளரிடமும், வங்கியின் சேர்மனிடமும் பேசியிருக்கிறோம். உடனடியாக அவரை Reinstate செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். ஓரிரு நாட்களில் Reinstate செய்வதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் உற்சாகமான செய்திகளோடு விரைவில் சந்திப்போம்.
தோழமையுடன்


                                                
(J.மாதவராஜ்)                                                        (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                         பொதுச்செயலாளர் - PGBOU   

6.1.14

PGBEA - PGBOU Circular dated 6.1.2014

சுற்றறிக்கை: 1/2014                                         நாள்: 6.1.2014

அருமைத் தோழர்களே!

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

போராட்ட அறைகூவலோடு துவங்குகிறது இந்த புத்தாண்டு.

வங்கித்துறையில் 9 வது இருதரப்பு ஒப்பந்தம் 31.10.2012 அன்றோடு முடிந்துவிட்ட நிலையில், 10வது இருதரப்பு ஒப்பந்தம் உருவாகி 1.11.2012 முதல் புதிய ஊதிய விகிதம் அமல் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்தம் ஏற்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது IBA. இந்த நிலையில் வங்கித்துறையில் இருக்கும் அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (United Forum of Banks Union) ஏற்கனவே டிசம்பர் 18ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தை நாடு முழுவதும் நடத்தியிருந்தது. 10 வது இருதரப்பு ஒப்பந்தத்தை விரைவாக நடத்தி முடித்து, அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்குமான புதிய ஊதிய விகிதத்தை அறிவிக்க வேண்டும் என்றும், வங்கித்துறையில் சீர்த்திருத்தங்கள் என்னும் பெயரில் தனியார் மயமாக்குவதையும், அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் UFBU முக்கிய கோரிக்கைகளாக முன்வைத்திருந்தது.  இந்த வேலை நிறுத்தத்திற்குப் பிறகும், மத்திய அரசும், IBAவும் அசைந்து கொடுக்காத நிலையில், UFBU ஜனவரி 20 மற்றும் 21 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு சென்ற டிசம்பர் இறுதியில் அறைகூவல் விடுத்திருந்தது.

வங்கித்துறையில் 10 வது இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு, புதிய ஊதிய விகிதம் அறிவிக்கப்பட்டால்தான், கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் அந்தப் புதிய ஊதிய விகிதம் அமல் செய்யப்படும். இதுதான் முறையாக இருந்து வருகிறது. எனவே வங்கித்துறையில்  ஊதிய உயர்வை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது நமது கோரிக்கையும் கூட. அதை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் போராடும்போது, கிராம வங்கி ஊழியர்கள் `யாருக்கோ வந்தது`  என வேடிக்கை பார்க்க முடியாது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்களும் இணைந்து நிற்பது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும். வேலை நிறுத்தத்திற்காக UFBU சார்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் strike noticeல், கிராம வங்கிகளில் அரசின் பங்குகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த வேலைநிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் கலந்து கொள்வது என்னும் யோசனை எழுந்தது.

அதன் அடிப்படையில் கிராம வங்கிகளில் இருக்கும் அகில இந்திய சங்கங்கள் (United Forum of RRB unions)  அனைத்தும் ஒன்றிணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்து இருக்கின்றன. AIRRBEA, NFRRBE, NFRRBO, AIRRBOF, AIGBEA, AIGBOA, AIGBWO, AIGBEC, AIGBOC, NCRRBE ஆகிய அனைத்துச் சங்கங்களும் கூட்டாக கையெழுத்திட்டு strike noticeஐ  3.1.2014 அன்று மத்திய அரசுக்கு கொடுத்து இருக்கின்றன.  எனவே, AIRRBEA, NFRRBE, NFRRBO  அகிய சங்கங்களின் உறுப்புச் சங்கங்களாய் இருக்கும் PGBEAவும், PGBOUவும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன. நம் வங்கியில் செயல்பட்டு வரும் சகோதரத் தொழிற்சங்கங்களையும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.

இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி UFRRBUஅறைகூவலின்படி கீழ்க்கண்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானித்திருக்கிறோம்.

1) அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் தனித்தனியாக கையெழுத்திட்டு பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கும், நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கும் கடிதம் அனுப்புவது. (அதற்கான படிவங்கள் சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்டு இருக்கின்றன.)

2) 10.1.2014 அன்று மாலை பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பட்டம் நடத்துவது.

3) இந்த வேலை நிறுத்தத்தையொட்டி நகர் மையங்களில், வணிக வங்கி ஊழியர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், பேரணிகளில் கலந்து கொள்வது.

4) 17.1.2014 அன்று கோரிக்கைகளை விளக்கி பேட்ஜ்கள் அணிவது. (அதற்கான பேட்ஜ்கள் கிளைகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.)

5) ஜனவரி  20,21 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது.

Probation period ல் இருக்கும் புதிதாக பணிக்குச் சேர்ந்த தோழர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டாம். வேலை நிறுத்தம் தவிர மற்ற போரட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பங்குபெறலாம்.

தோழர்களே!

இது நமது ஊதிய உயர்வுக்கான போராட்டம்.
இது இந்தியாவின் வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம்.
எனவே நாம் இதில் கலந்துகொள்கிறோம்.
போராடாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை.
எந்தக் கதவும் தட்டாமல் தானாகவே திறப்பதில்லை.
தேசம் முழுவதும் வங்கி ஊழியர்கள் மத்தியில் எழுந்திருக்கும் ஆவேசம் நம்மையும் பற்றிக்கொள்ளட்டும்.
வாருங்கள், ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய சித்தமாவோம்.
ஜனவரி 20, 21 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

0000

நமது இரு சங்கங்களும் இணைந்து அக்டோபர் மாதத்தில் இந்த நிர்வாகத்திடம் கொடுத்த 26 கோரிக்கைகளில், Staff Housing Loan மற்றும் பெருமாள் மலை கிளைக்கு Hill and Fuel Allowance  ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இடைவிடாமல் தொடர்ந்த நமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது.

அதேவேளையில் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கின்றன என்பது கசப்பான உண்மையாய் நீடிக்கிறது. கோரிக்கைகள் மீது, நமது இரு சங்கங்களும் தனித்தனியாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன.

பொருளாதாரக் கோரிக்கைகள் குறித்து ஐ.ஓ.பிக்கு எழுதி இருப்பதாகவும், பதில் வரவில்லையென்றும் வழக்கமான பதிலையே சொல்கிறது நிர்வாகம். இப்படியே வருடக்கணக்கில் காலதாமதம் செய்வது, ஊழியர் நலனில் இந்த நிர்வாகம் கையாளும் மெத்தனப் போக்கு என்றே நாம் கருதுகிறோம்.

கிளைகளில் பணிநெருக்கடியை குறைக்கும் தொழில்நுட்ப வசதிகளை இந்த நிர்வாகம் செய்யத் தயாராக இல்லை. NREGS மற்றும் OAP அக்கவுண்ட்களை கையாளுவதற்கான smart card கொடுக்கப்படவே இல்லை. ஒன்றரை வருடங்களாக வரும், வரும் என சொல்லப்படும் ATM  வசதி வரவில்லை. ஆனால் புதிதாக Money Transfer பிஸினஸ் துவங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இருக்கின்ற குழப்பங்களை இங்கு சரி செய்யாமல், புதிதாக நமக்கு சுமைகளை ஏற்றும் வேலைகள் மட்டும் மும்முரமாக நடக்கின்றன.

நமது வங்கியின் தொலைபேசி வசதியும், நெட்வொர்க் வசதியும் BSNL மூலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் திடுமென Aircel தொலைபேசிகள் பல கிளைகளில் வைக்கப்பட்டு இருக்கின்றன. கேட்டால் BSNL  சரியில்லை என்றும், Aircelல் கிளைகளுக்குள் பேசிக்கொண்டால் free  என்றும், 'PGB welcome'  என தானியங்கிக் குரல் அழைக்கும் வசதி Aircelல் இருப்பதாகவும் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. இந்த வசதிகள் BSNLலிலும் உண்டு. மெல்ல மெல்ல அனைத்துக் கிளைகளிலும் Aircel ஐ புகுத்திவிட்டு, BSNLலிருந்து வெளியேற இருப்பதாகவும் தெரிய வருகிறது. நாம் இதனை கடுமையாக ஆட்சேபிக்கிறோம். வேண்டுமானால் BSNL  நெட்வொர்க்கிற்கு  Aircel ஒரு substitute  ஆக இருக்கட்டும். அதற்காக ஒரு பொதுத்துறை நிறுவனமான BSNLலிருந்து விலகுவது என்பது ஏற்புடையது அல்ல என தெரிவிக்கிறோம்.

Universal sampo என்னும் தனியார் நிறுவனத்தோடு போட்ட medi claim ஒப்பந்தப்படி, நமது தோழர்களுக்கு வரவேண்டிய தொகை மாதக்கணக்கில் நிலுவையில் இருக்கிறது. மேலும் மிகவும் குறைவாகவே  reimburse  செய்யப்படுகிறது. அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை என பலமுறை சொல்லிவிட்டோம். நிர்வாகம் அதிலிருந்து வெளியேறாமல் இழுத்தடிக்கிறது. இந்த வங்கியில் கம்ப்யூட்டர்கள், மானிட்டர்கள், ஜெனரேட்டர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அதனைச் சரிசெய்யுங்கள் என்றால், சோம்பல் முறிக்கிறது நிர்வாகம். இவைகளில் காட்டாத அக்கறையும், வேகமும் ஏன் Aircelஐக் கொண்டு வருவதில் இருக்க வேண்டும் என்பது புதிராக இருக்கிறது. இதுகுறித்து ஆராய்வோம்.

ஒழுங்கு நடவடிக்கைகளில், நிர்வாகம் கையாளும் முறை இரக்கமற்றதாகவும், அதீத காலதாமதாகவும் இருக்கிறது. சஸ்பென்ஷன் செய்துவிட்டு வருடக் கணக்கில் சார்ஜ் ஷீட் கொடுக்காமல் இருப்பது, சார்க் ஷீட் கொடுத்து பதில் பெற்ற பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்படியே வைத்திருப்பது, என்கொயரி முடிந்து findings கொடுத்த பிறகு வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருப்பது என்பதே AIVDயின் வாடிக்கையாய் இருக்கிறது. ஒவ்வொரு ஃபைலிலும் ஒரு சக மனிதனின் வாழ்க்கை இருப்பதையும், காலதாமதமாகிற ஒவ்வொரு நாளும் அந்த மனிதர்கள் சித்திரவதை அனுபவிப்பதையும் AIVD உணர மறுக்கிறது. பல தோழர்களுக்கு ஓய்வுகாலச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டு எதிர்காலமே நிலைகுலைந்து போயிருப்பது குறித்து துளியும் கவலையற்று இருக்கிறது AIVD.


கோரிக்கைகள் பல நிறைவேறவில்லை. நமது பணி நெருக்கடிகள் தீர்க்கப்படவில்லை. ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் பெரும் அராஜகம் தொடர்கிறது. நிர்வாகம் இவைகளில் கவனம் செலுத்தி
சரிசெய்ய முன்வர வேண்டும். இவைகளில் மேலும் காலதாமதம் ஆகுமானால் நாம் இவைகளை மேல்மட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்றும், போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கிறோம்.

0000

வங்கியின் வணிகம் திருப்திகரமாக இல்லை என்றும், Advances குறைந்துகொண்டு இருக்கிறது என்றும் நிர்வாகம் கவலைப்படுகிறது. நாமும் கவலைப்படுகிறோம். வங்கியின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் இங்கு ஒரு சில விஷயங்களை சொல்லியாக வேண்டியிருக்கிறது. இத்தகைய சரிவுக்கு இந்த வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள் யாரும் பொறுப்பல்ல. முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறான முடிவுகளும், மோசமான அணுகுமுறையுமே காரணம்.

கரடு தட்டிப் போனவர்கள், புதிய சிந்தனைகள் வற்றிப் போனவர்கள், ஊழியர்களையும் அலுவலர்களையும் எதிரிகளாக மட்டுமே பார்க்கிறவர்கள்தாம் தலைமையலுவலகத்தின் முக்கியப் பொறுப்பில் தொடர்ந்து இருக்கிறார்கள். தலைமையலுவலகத்தை புனரமையுங்கள் என்று அனைத்துச் சங்கங்களும் குரல்கொடுத்தும் செவி சாய்க்காமல் போனதன் விளைவுதான் இது.

ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் அலுவலர்களை மிரட்டுவது, ஓய்வுகாலச் சலுகைகளில் கைவைப்பது தொடருமானால், மெல்ல மெல்ல அலுவலர்கள் `ஏன் கடன் கொடுக்க வேண்டும், கையைச் சுட்டுக்கொள்ள வேண்டும்` என்கிற இயல்பான மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என எச்சரித்தோம். அதைக் கேட்காமல் போனதன் விளைவுதான் இது.

இந்த வங்கியில் உழைக்கிறவர்கள் நலன்கள் புறக்கணிக்கப்படுவதால் ஊழியர்களும், அலுவலர்களும் உற்சாகம் இழந்து போயிருக்கிறார்கள், அதைச் சரி செய்யும் நடவடிக்கைகள் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. அதன் விளைவுதான் இது.

இவைகளில் ஒரு மாற்றம் இல்லாத பட்சத்தில், வங்கியின் நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கும். நிர்வாகம் தனது தவறுகளை சரிசெய்து, ஒரு மாற்றத்தைக் கொண்டு வரத் துணியுமானல், PGBEAவும், PGBOUவும் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்பதையும் தெளிவுபடுத்தி கொள்கிறோம்.


தோழமையுடன்

                                                
(J.மாதவராஜ்)                                                        (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                         பொதுச்செயலாளர் - PGBOU   




26.11.13

PGBEA - PGBOU circular 5/2013 dated 25.11.2013


Pandyan Grama Bank Employees Association
Pandyan Grama Bank Officers Union

சுற்றறிக்கை எண் : 5/2013                    நாள்: 25.11.2013

அருமைத்தோழர்களே!

வணக்கம்.

பாண்டியன் கிராம வங்கியின் வரலாற்றில், 24.11.2013 எனும் நாள், நெகிழ்ச்சியும், அன்பும், தோழமையும் நிறைந்த ஒரு அற்புத நாளாக நினைவில் நிறைந்திருக்கிறது. தோழர்.சோலைமாணிக்கத்தின் பணி நிறைவு விழா, ஒரு குடும்ப விழாவாகவும், தொழிற்சங்கத்தின் திருவிழாவாகவும் அமைந்துவிட்டது.  அவர் இந்த வங்கியில் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தங்களை  எல்லோருக்கும் அழகாகவும் சரியாகவும் சொல்லியிருக்கிறது.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட நமது தோழர்கள் வருகையால் அரங்கம் நிறைந்து, உட்கார இடமில்லாமல் வெளியே நின்று, விழாவினை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். வங்கியின் சேர்மன் திரு.கார்த்திகேயன், அன்றைய தினம் முக்கிய அலுவல்கள் காரணமாக வர இயலாததைத் தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். பொதுமேலாளர்களும் அனுப்பி இருந்தனர். அழைப்பிதழ்களில் இடம் பெறாவிட்டாலும், AIRRBEAவின் தலைவர் ராஜீவன் அவர்களும், Joint secretary  தோழர் மதனன் அவர்களும் நிகழ்வுக்கு வந்திருந்தனர். AIRRBEAவின் vice-president நாகபூஷண் ராவ்,  விருதுநகர் மாவட்ட சி.பி.எம் செயலாளர்  தோழர்.சேகர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.பாலசுப்பிரமணியன், நமது அட்வகேட் தோழர்.கீதா மற்றும் CITU, BEFI, AIIEA சங்கத்தலைவர்களும், தோழர்களும் வந்திருந்தனர்.

கரிசல் குயில் திருவுடையான் பாடல்களோடு ஆரம்பித்த நிகழ்ச்சி, இசையின் வழியாக காலங்களை அசை போட வைத்தது. PGBEA தலைவர் தோழர்.சங்கரசீனிவாசன் தலைமை தாங்க, PGBOU  தலைவர் தோழர்.சாமுவேல் ஜோதிக்குமார் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி ஆரம்பித்தது. தோழர்.சோலைமாணிக்கம் அவர்களையும், அவரது துணைவியாரையும் மேடைக்கு அழைத்து உட்கார வைத்த கணம், மொத்த அரங்கமும் அன்பின் மிகுதியால் ஆரவாரித்தது.

தோழர் சோலை மாணிக்கத்தை, அவரது பணிகளை  பலரும் நினைவுகூர்ந்து பேசினர்.  சமரசமற்ற அவரது போர்க்குணம்,  சலிப்பற்ற அவரது பயணம், எதிர்பார்ப்பற்ற அவரது நடவடிக்கைகள் அவரவர் அனுபவங்களால் முன்வைக்கப்பட்டன. குடும்ப  வாழ்வுக்கும், சங்க வாழ்வுக்குமிடையில் ஒரு தொழிற்சங்க முன்னணி ஊழியர்  கழித்த நாட்கள் சாதாரணமானவையல்ல. அது  ஒரு தனிமனிதனின் சாதாரண வாழ்வாக மட்டுமில்லாமல், ஒரு இயக்கத்தின் உயிர்த்துடிப்பு மிக்க காலமாகவும் இருந்ததை அறிய முடிந்தது.

தோழர்.சோலைமாணிக்கம் தனது ஏற்புரையில்,  தன்னை `first servant of PGBEA` என அறிமுகப்படுத்திக்கொண்டார்.  இந்த தொடர்  ஓட்டத்தில் தனது கரங்களில் இருந்து, தீபத்தை ஏந்திச் செல்ல இளைய கரங்கள் வந்துவிட்டன என்னும் சந்தோஷமும், திருப்தியும் தனக்கு இருப்பதாக நம்பிக்கையோடு குறிப்பிட்டார். வங்கியின் பணிகளிலிருந்து மட்டுமே விடைபெறுகிறேன், உங்களிடமிருந்து அல்ல, என்று சொல்லி `workers unity zindabad, working class unity zindabad' என்னும் தன் கம்பீரமான குரலால் கோஷங்கள் எழுப்ப, அனைவரும் அதைத் திருப்பிச் சொல்ல உணர்ச்சிப் பெருக்கில் நிறைந்திருந்தனர் அனைவரும். இது ஒரு காட்சி. 

இப்படி வங்கியில் பணிபுரியும் தோழர்களின் மனநிலையில், உயர்ந்து நிற்கும் தோழர் சோலைமாணிக்கத்தை அவமானப்படுத்தவும், களங்கப்படுத்தவும், தண்டனை வழங்கவும் துடித்துக் கொண்டு இருக்கிறது நிர்வாகம். அது இன்னொரு காட்சி.

தோழர் சோலைமணிக்கத்தைப் பழிவாங்கும் நோக்த்துடன் இந்த நிர்வாகம் 2010ம் ஆண்டு ஆரம்பித்த ஒழுங்கு நடவடிக்கைக்கு இன்னும் Final Order கொடுக்கவில்லை. இந்த நிலையில் தோழர்.சோலைமாணிக்கத்தின் சேமிப்புக்கணக்கை ஆராய்வதற்கு நிர்வாகம் ஆய்வாளர்கள் பலரை இறக்கிவிட்டு இருக்கிறது. நேர்மையான, நியாயமான, சமரசமற்ற ஒரு தொழிற்சங்கத்தலைவரின் பணி ஓய்வு என்பது நிம்மதியாக இருக்கக்கூடாது என நிர்வாகம் நினைக்கிறது. அவரது ஓய்வூதியச் சலுகைகளை நிறுத்துவதற்கு திட்டமிடுகிறது.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் தோழர்.சோலைமாணிக்கம் பக்கம் நிற்பதுவும், அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதும் அவசியம். பணி ஓய்வு விழாவில் பேசிய நமது அட்வகேட் கீதா அவர்கள் இதனை குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் இத்துடன் நாம் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு அனுப்ப வேண்டிய  கடிதத்தின் நகல் இந்த சுற்றறிக்கையோடு இணைக்கப்படுகிறது. தோழர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு கிளை வாரியாக உடனடியக அனுப்பு வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Com.J.Mathavaraj
General Secretary - PGBEA
Pandyan Grama Bank
Soolakkarai Medu
Virudhunagar Dist

தோழர்களே, நமக்காக உழைத்த ஒரு தொழிற்சங்கத் தலைவரோடு நாம் நிற்கிறோம் என்பதை நிர்வாகத்துக்கு நாம் உணர்த்த வேண்டிய நேரம் இது. நிர்வாகத்தின் அராஜகமான, அநியாயமான நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.

இந்த சுற்றறிக்கை படித்தவுடன் தாங்கள் செய்கிற முதல் வேலையாக, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிங்களில் தங்கள் கிளைகளில் உள்ள தோழர்கள் கையெழுத்திட்டு, தபாலில் அனுப்பி வைக்கிற காரியமாக இருக்கட்டும்.

நமது  கையெழுத்தின் வலிமையை உணர்த்துவோம்.
(தோழர் சோலைமாணிக்கம் பணிநிறைவு விழாக் காட்சிகளை கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்)

தோழமையுடன்


                                                                                                                                                                                 
(J.மாதவராஜ்)                                                                                       (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                                  பொதுச்செயலாளர் - PGBOU     
____________________________________________________________________________
கடித நகல்:


From

Name:
Post:
Roll no:
Pandyan Grama Bank
Branch:



To

The chairman
Pandyan Grama Bank
Administrative Office
Virudhunagar


Respected sir,

I would like to place on record the service rendered by Mr. Solai Manickan as the General Secretary and President of Pandyan Grama Bank Employees Association in the past years which enabled the smooth functioning of the Bank.  He was a leader who stood by his ideologies and principles and looked forward for the welfare of the employees and the Bank.  

I hereby urge the Management of the Pandyan Grama Bank to permit Mr. Solaimanickam, Vice President of Pandyan Grama Bank Employees Association who is due to retire from service on 30.11.2013, to retire peacefully and with the satisfaction of serving the Management, by withdrawing all the Disciplinary proceedings initiated against him and not to harass him further by initiating any fresh disciplinary proceedings.

Thanking you


Yours faithfully



( )


Date :
Place:
___________________________________________________________________________

தோழர் சோலைமாணிக்கம் பணிநிறைவு விழாக் காட்சிகளை கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்: