Showing posts with label tu series. Show all posts
Showing posts with label tu series. Show all posts

22.1.12

இருட்டிலிருந்து - 10



ரோஹிணி சஸ்பென்ஷன் செய்யப்பட்டபோது அப்போதிருந்த சங்கத்தலைமை செய்யத் தவறிய இடம் இதுதான். நிர்வாகத்தை எதிர்த்தாக வேண்டும் என்கிற வேகம் பொறுப்பில் இருந்தவர்களுக்கு தன்னியல்பாக கூடியிருந்தது. ஊழியர்களிடையே பயத்தை விதைத்து, சங்கத்தலைமையை அந்நியப்படுத்த நிர்வாகம் முயற்சிக்கிறது என்பதை புரிந்து கொண்ட பி.கேவுக்கு அதே தருணத்தை முன்வைத்து தோழர்களிடம் கிளர்ச்சி ஏற்படுத்திட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தன்னையே உந்துசக்தியாக முன்னிறுத்திக் கொண்டார். அதற்கான ஆகிருதியும், ஆளுமையும் அவரே கொண்டிருந்தார்.

சட்டையப்பனின் சஸ்பென்ஷனை ரத்துச் செய்ய சங்கத்திலிருந்து வந்து கெஞ்சுவார்கள் என்று நிர்வாகம் நினைத்திருக்கலாம். சங்கத்தின் திமிரை அடக்கி வைக்க இது சரியான தருணம் என்று கருதியிருக்கலாம். உடனடியாக பி.கே உண்ணாவிரதம் இருந்தது நிர்வாகத்தை அதிர்ச்சியடையச் செய்திருந்தது. எந்தவித முகாந்திரமும் இன்றி, காரணம் எதுவும் காட்டப்படாமல், சஸ்பென்ஷன் செய்தால், போராட்டமும் முன்னறிவிப்பின்றிதான் இருக்கும் என்பதை அந்த உண்ணாவிரதப் பந்தல் அறிவித்துக்கொண்டிருந்தது. வங்கி ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ ஒன்பது வருடங்களான பிறகு, நிர்வாகம் முதன்முறையாக வித்தைகளும், தந்திரங்களும், தைரியமும் நிறைந்த சங்கத்தை சந்திக்க வேண்டி இருந்தது. சேர்மன் வீட்டி காரை நிறுத்தி தலைமையலுவலகத்திற்குள் செல்லாமல் பி.கேவிடம் கையைக் கொடுத்து "ஆல் த பெஸ்ட்" என தன்னை எதற்கும் சளைக்காதவராய் காட்டிக்கொள்ள பந்தலுக்கு வந்தார். பி.கே எந்த அதிசயமும் படாமல், அவசரமுமில்லாமல் உட்கார்ந்தபடியே வெகு இயல்பாக கையைக் கொடுத்து "தேங்க்ஸ்" சொன்னார். தோழர்கள் கணேசன், விஸ்வநாதன், சுப்புராஜ், மணி, வேலு, சோமு, பரமசிவம், காமராஜ், பெருமாள்சாமி தலைமையலுவலகத்திலிருந்து நான், ஜீவா, அழகப்பன், போன்ற சிலரோடு மொத்தம் இருபது பேர் போலத்தான் அப்போது இருந்தோம்.

நேரம் ஆக, ஆக தோழர்கள் கிளையிலிருந்து வந்து கொண்டே இருந்தனர். கோஷங்கள் நிர்வாகத்திற்கு எதிராக தெறித்து எழும்பிக்கொண்டு இருந்தன. மதியத்திற்குள் அறுபது பேரைத் தாண்டி விட்டிருந்தது. வீட்டி காலையில் காட்டிய புன்சிரிப்பு, நாகரீகம் எல்லாம் அவரது கடுகடுப்பான முகத்தில் வெளுத்துப் போயிருந்ததாம். சாப்பிடப்போகும்போது அறைந்த காரின் கதவில் அது சத்தமாய் வெளிப்பட்டது. பந்தலில் இருந்த யாரும் சாப்பிடவில்லை. தோழர்.சட்டையப்பன் அமைதியாக ஒரு இடத்தில் வந்து உட்கார்ந்திருந்தார். அவரை அப்போதுதான் தோழர்கள் பலருக்கு அறிமுகமே ஆகியிருந்தது. பி.கே எல்லோரையும் வரவேற்று உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தார். மாலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களோடு பந்தல் விரிந்திருந்தது. இரவில் விளக்குகள் கட்டப்பட்டு ஜே ஜே என்றிருந்தது. சிலர் சாப்பிடச்சென்றாலும், பெரும்பாலானவர்கள் பி.கே பக்கத்தில் உட்கார்ந்து இருந்தனர். அவரிடம் காணப்பட்ட சிறு சோர்வும் நிர்வாகத்திற்கு எதிரான கோபத்தை எல்லோரிடமும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தது. எங்கோ எதோ ஒரு கிளையில், யாரோ ஒரு தோழர் சஸ்பென்ஷன் செய்யப்பட்டதற்கு பி.கே உண்ணாவிரதம் இருக்கிறார் என்பது தொலைபேசி வசதி சரியாக இல்லாத அந்தக் காலத்தில் எல்லோருக்கும் தெரிந்துகொண்டே இருந்தது.

தன்னலமற்ற காரியத்தில் ஒருவர் ஈடுபடுவதை புரிந்து கொள்ளும்போது உணர்வுபூர்வமான மாற்றங்கள் மனிதர்களுக்குள் ஏற்பட்டுவிடுகின்றன. அதைத்தான் அந்த இரவு சொல்லிக்கொண்டு இருந்தது. தூரத்துக் கிளைகளிலிருந்தெல்லாம் இரவிலும் வந்து கொண்டே இருந்தனர் தோழர்கள். வந்தவர்கள் பி.கே அருகில் சென்று கொஞ்சநேரம் அமைதியாய் இருப்பார்கள். கையைப் பிடித்து கண்கலங்குவார்கள். சிலர் மோசமான கெட்ட வார்த்தைகளால் நிர்வாகத்தையும், சேர்மனையும் பேசினார்கள். சங்கத்தலைவர் பரமசிவத்திற்கு கிடைத்த தகவல்களை அவ்வப்போது பி.கேவிடம் தெரியப்படுத்திக்கொண்டு இருந்தார். நிர்வாகம் சங்கத்தோடு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்து பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள விரும்புகிறது என்பதை மாலையிலிருந்தே சொல்லிக்கொண்டு இருந்தார். சாத்தூர் ஐ.ஓ.பி மேலாளர் இதில் தீவீரமாக இறங்கி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. பரமசிவத்தின் சகோதரர் கோவில்பட்டி ஐ.ஓ.பி மேலாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார் அப்போது.

அடுத்தநாள் காலையிலிருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டது. சிவன்கோவில் தெற்கு ரதவீதி முழுவதும் தோழர்களின் நடமாட்டங்களாய் இருந்தன. இருநூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் வந்து சேர்ந்திருந்தனர். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். சேர்மனின் டிரைவர் அம்பி தர்ணாப்பந்தலுக்குள் வந்து கிருஷ்ணகுமாருக்கு மாலை அணிவித்து "அநீதியை எதிர்க்க வந்த கிருஷ்ணன்" என்று சொன்னபோது கூட்டம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்து பெருஞ்சத்தமாய் ஆரவாரித்தது. சேர்மன் வீட்டியிடம் தொடர்ந்து அவமானங்களை சந்தித்து வந்த அவருக்குள் இருந்த கோபம் அன்றைக்கு வெளிப்பட்டது. சஸ்பென்ஷனில் அதிருப்தியடைந்திருந்த பொதுமேலாளர் கருப்பன்செட்டி அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தார். நிர்வாகத்தின் முறையற்ற நடவடிக்கை ஒவ்வொன்றும் சங்கத்தை மேலும் மேலும் வளர்ப்பதாகவே இருக்கிறது என்ற கவலை அவருக்குள் ஓடிக்கொண்டு இருந்திருக்க வேண்டும். பொதுமேலாளரின் பிரத்யேக கடைநிலை ஊழியராயிருந்த வரதராஜ பெருமாள் பந்தலுக்குள் வந்து எல்லோரிடமும் சகஜமாய் நின்று பேசிக்கொண்டு இருந்ததையும் அன்றைக்கு பார்க்க முடிந்தது.

மதியத்திற்குப் பிறகு பி.கேவிடம் சோர்வு அதிகமாக தென்பட்டது. சவரம் செய்யப்படாத அந்த முகத்தை வரைந்து கொண்டிருந்தேன். "காந்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துவிட்டால் பத்து நாட்களுக்கு முன்பிருந்தே தயாராகிவிடுவாராம். திட உணவை நிறுத்தி திரவ உணவிலேயே இருப்பாராம். உண்ணாவிரதம் இருக்கும்போது கடுமையான களைப்பை திடுமென ஏற்படுத்தாதாம்" என்று பி.கே சொல்லிக்கொண்டு இருந்தார். ஐ.ஓ.பி சாத்தூர் கிளை மேலாளர் தலைமையலுவலகத்திற்குள் சென்றார். கொஞ்சநேரம் கழித்து பரமசிவத்திடம் பேசினார். பரமசிவம், கணேசன், சோமு, சுப்புராஜ், வேலு, மணி எல்லோரும் பி.கேவிடம் பேசினார்கள். பிறகு பரமசிவம் " தோழர்களே! நிர்வாகம் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி" என அறிவித்தார். பி.கேவும் எழுந்து பேச்சுவார்த்தைக்குச் சென்றார்.

ஒருமணி நேரத்திற்கும் மேலே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. திரும்பி வந்து கிருஷ்ணகுமார் பேசினார். "தோழர்களே! நிர்வாகம் அதன் பிடிவாதத்திலேயே இருக்கிறது. உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமாம். பெரிய தண்டனை இல்லாமல் நிர்வாகம் சஸ்பென்ஷனை சில நாட்களில் விலக்கிக் கொள்ளுமாம். எந்த தவறும் செய்யாமல் இருக்கும் போது எந்த தண்டனையும் இருக்கக்கூடாது. இதில் பெரிசென்ன...சிறிசென்ன? சரி. ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி எதாவது காரணங்கள் கேட்கப்பட்டிருக்கிறதா? இல்லை. இம்மென்றால் சிறைவாசம்...உம்மென்றால் வனவாசமா. பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த நிர்வாகத்திற்கும், இந்த சேர்மனுக்கும் அப்படியே பொருந்துகிறது" என்று உணர்ச்சிபட பேசிக்கொண்டு போக கூட்டம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

கொஞ்சநேரத்தில் திரும்பவும் ஐ.ஓ.பி மேலாளர்  தலைமையலுவலகத்திலிருந்து வந்தார். அவருடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்கத்தின் சாத்தூர் கிளைச் செயலாளரும் இருந்தார். இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட் சூப்பிரண்டட்டும், அலுவலர் சங்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவருமான உமர்சலீமும், இன்னும் சில அலுவலர் சங்க பொறுப்பாளர்களும் வந்துவிட்டிருந்தனர். நிலைமை நீடித்தால் வங்கி ஸ்தம்பித்துவிடும் என வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். திரும்பவும் பேச்சு வார்த்தைக்குச் சென்றனர். மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது. தெருவிளக்குகள் போடப்பட்டன. இந்தமுறை வெளியே வந்தபோது நிர்வாகம் தன்னிலையிலிருந்து இறங்கி வந்திருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது. "தோழர்களே! நிர்வாகம் தோழர்.சட்டையப்பனின் சஸ்பென்ஷனை உடனடியாக விலக்கிக்கொள்வதாக உறுதியளித்திருக்கிறது" என்று பி.கே நிறுத்தினார். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். கைதட்டி "பி.ஜி.பி.இ.ஏ ஜிந்தாபாத்...ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ  ஜிந்தாபாத் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்தவாறு அமைதி காத்த பி.கே "கொஞ்சம் இருங்க..இனுமத்தான இருக்கு... ஆனால்.... அதற்கு தோழர்.சட்டையப்பன் தான் செய்த தவறுகளை எதிர்காலத்தில் திருத்திக்கொள்வதாக ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க வேண்டுமாம்" என்று சொல்லிமுடிப்பதற்குள் கூட்டத்திலிருந்து "ஒரு மயிரும் எழுதிக்கொடுக்க முடியாது" ஒருவர் ஆவேசப்பட பி.கே அடக்கினார். தோழர்.சட்டையப்பன் சலனமற்ற முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

ஊழியர் சங்க நிர்வாகிகளிடமும், நிர்வாகத்திடமுமாக மத்தியஸ்தம் செய்ய வந்தவர்கள் மாறி மாறிப் பேசினார்கள். அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பி.கே எழுந்து நிற்கும்போது லேசாக தள்ளாடியது போல இருந்தது. அவ்வளவுதான். ஒரே கூச்சல் எழுந்தது. "பி.கே நீங்க போக வேண்டாம். சேர்மனை இங்க வரச் சொல்லுங்க" என்றார்கள். சைகையால் அமைதியாக இருக்கும்படி தெரிவித்துவிட்டு பரமசிவம், கணேசன் ஆகியோரோடு பேச்சுவார்த்தைக்குச் சென்றார். முன்னூறு பேருக்கும் மேலே திரண்டிருந்த தோழர்கள் கடுமையான வேகத்தோடு இருந்தார்கள்.  கட்டுக்கடங்காத வெறி புகுந்துகொண்டது போல அந்த இடமே பரபரத்திருந்தது. காமராஜ் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டான். பக்கத்தில் இருந்த விறகுக்கடையில் சில தோழர்கள் கட்டைகளை எடுத்தபடி இருந்தார்கள். சோமுவும், ராதாவும் அவர்களை வெளியே அழைத்துக்கொண்டு இருந்தார்கள்.

இந்த தடவை வெளியே வந்தபோது பி.கே "தோழர்களே! நிர்வாகம் மேலும் இறங்கி வந்திருக்கிறது. தோழர்.சட்டையப்பன் இனி நல்லவிதமாக இருப்பேன்" என எழுதிக்கொடுத்துவிட்டால் சஸ்பென்ஷனை ரத்து செய்துவிடுவதாக சொல்கிறார்கள்" என்றார். "முடியாது...முடியாது" என்று சத்தங்கள் எழுந்தன. ஊழியர் சங்க நிர்வாகிகள் திரும்பவும் கூடி பேசினார்கள். அலுவலர் சங்கப் பொதுச்செயலாளர் ஆறுமுகம் "நிர்வாகம் இவ்வளவு இறங்கி வந்திருக்கு. நீங்களும் கொஞ்சம் இறங்கி வாங்க" என்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டு இருந்தார். பி.கே என்னை அழைத்தார். 'இனிமேல் ஒழுங்காக இருப்பேன்' என்பதற்கு பதிலாக 'எப்போதும்போல ஒழுங்காக இருப்பேன்' என்று ஆங்கிலத்தில் எழுத்தித்தர கேட்டார். எழுதிக் கொடுத்தேன். வேலு பார்த்து சரி சொன்னார். அந்த கடிதத்தை மத்தியஸ்தம் செய்ய வந்தவர்களிடம் "இப்படித்தான் எழுதித்தர முடியும்" என்று சொல்லிக் கொடுத்தார். அவர்கள் வாங்கிக் கொண்டு மாடியேறி சென்றார்கள். பி.கே விறகுக்கடைப்பக்கம் எட்டிப் பார்த்து " தோழர்களே! அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நமக்கு ஒற்றுமையைத் தாண்டி ஆயுதம் வேறு எதுவும் இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். கோபத்துக்கும், குரோதத்துக்கும் இங்கு இடமில்லை." என உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டு இருந்தார். தொண்டை அடைத்துப் பேச முடியாமல் போனது. "பி.கே உட்காருங்க...உட்காருங்க.." என்றார்கள். "அங்கு இருப்பவர்களை ஒன்று பந்தலில் வந்து உட்காரச் சொல்லுங்கள். இல்லை, இடத்தை காலி பண்ணச் சொல்லுங்கள்" என்றார். விறகுக்கடைப்பக்கம் சில தோழர்கள் எழுந்து ஒடினார்கள்.

நிர்வாகம் பிடிவாதமாக இருந்தது. வார்த்தைகளின் அர்த்தங்களில் இரண்டு பக்கமும் உறுதியாய் நின்றார்கள். எந்தத் தவறும் செய்யாதபோது, தவறு செய்தது போல எழுதித்தர முடியாது என்று பி.கே சத்தம் போட்டார். மத்தியஸ்தம் செய்ய வந்தவர்கள் மேலும் கீழுமாக போய் வந்து கொண்டிருந்தனர். கடைசியில் இரண்டு தரப்பின் அர்த்தங்களும் வருவது போன்ற ஆங்கில வார்த்தைகள் பிடிபட்ட பிறகு உடன்பாடு ஏற்பட்டது. தோழர் சட்டையப்பனிடம் கையெழுத்து வாங்கி நிர்வாகத்திடம் கொடுக்கச் சென்றனர் சங்க நிர்வாகிகள். சேர்மன் வீட்டி, சஸ்பென்ஷனை ரத்து செய்த ஆர்டரோடு, பி.கேவிடம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைக்க பழச்சாறும் வாங்கி வைத்திருந்திருக்கிறார். "என் தோழர்கள் கீழே காத்து இருக்கிறார்கள் என்று பி.கே அவரிடம் கை கொடுத்து இறங்கியிருக்கிறார். வெளியே ஒரே கொண்டாட்டமாவும், குதூகலாமாகவும் இருந்தது. கைகளை உயர்த்தி காரைக்குடியிலிருந்து வந்திருந்த தோழர்.சோலைமாணிக்கம் கோஷம் போட்டது அந்த இடத்தையும் அந்த இரவையும் காவியக்காட்சியாக்கி விட்டது. சிலர் உணர்ச்சி மேலீட்டால் கண்ணீர் விட்டு அழுதார்கள். பி.கே பழச்சாறு அருந்தி முடிக்கும் போது மணி பத்தரைக்கும் மேலே ஆகியிருந்தது. கண்ணாடி ஏற்றப்பட்ட காரில் சேர்மன் வீட்டி சென்றார்.

அடுத்தநாள் காலை தலைமையலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிவிட்டு சங்க நிர்வாகிகள் சட்டையப்பனின் சஸ்பென்ஷன் ரத்து செய்யப்பட்ட கடிதத்தோடு அவரை அழைத்துக் கொண்டு புன்னையாபுரம் கிளைக்குச் சென்றனர். அந்தக்கிளையின் மேலாளர், இப்படியெல்லாம் வீபரீதம் ஆகும் என்பதை அறியாதவராய் இருந்தாராம். மிகச்சாதாரணமான ஒரு விஷயத்தை நிர்வாகம் எப்படி பயன்படுத்தி விட்டது என்ற வருத்தம் அவருக்குள் ஒடியிருந்திருக்கிறது. திரும்பும் வழியில் சங்க நிர்வாகிகள் பல கிளைக்குச் சென்று இருக்கின்றனர்.

அடுத்தநாள் இரவு வெகுநேரம் கழித்து பி.கே சங்கக் கதவைத் தட்டினார். விளக்குகள் போடப்பட்டு சங்க அலுவலகமே விழித்துக் கொண்டது. இரண்டு நாள் பயணத்தையும், கிளைகளில் தோழர்கள் உற்சாகமடைந்ததையும் களைப்பின்றி சொல்லிக்கொண்டு இருந்தார். முத்துவிஜயன் என்னும் ஒரு அலுவலர் சங்க நிர்வாகிகளையும், தன்னையும் உபசரித்ததைப் பற்றி சொல்லி சிலிர்த்துக் கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாக் களைப்புகளையும் வெற்றி எப்படி உதிர்த்துப் போட்டு விடுகிறது? இரண்டுநாள் உண்ணாவிரதத்தில் போராளியாய் நின்ற மனிதரா இவர்? கம்பீரமற்று குழந்தை போலிருந்தார் இப்போது. எல்லோரும் போய் அந்த இரவிலும் முக்கணாந்தலில் டீ சாப்பிட்டோம். பி.கே பேசிக்கொண்டே இருந்தார். திருவள்ளுவர் பஸ்கள் ஊருக்குள் அதிவேகமாக புழுதி பறக்கச் சென்றன. கழுதைகள் போலீஸ் பிட்டுக்கு அடியில் அப்படியே நின்று கொண்டிருந்தன. நிப்புக்கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வந்து ஓய்வாக டீ குடித்துக் கொண்டிருந்தனர். "இந்த மனிதர்களுக்காக, இவர்கள் காட்டும் பாசத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்" என்ற பி.கேவின் வார்த்தைகள் மட்டும் திடுமென கவனத்தில் பதிந்தாலும் மொத்த அர்த்தமும் புரிந்தது.

(இன்னும் இருக்கிறது....)

- மாதவராஜ்

முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
 1 ,   2   ,   3  ,   4,   5,   6   7     8    9


17.1.12

இருட்டிலிருந்து - 9



ஒரு கணம்தான். சர்வாங்கமும் நடுங்கிப் போக, தப்பித்துக் கொள் என்று உள்ளுக்குள் அலறியது. பின்பக்கம் திறந்திருந்த வாசல் வழியே ஒட்டமெடுத்தேன். யாரோ துரத்துவது தெரிந்தது. வாசலைத் தாண்டி பரந்திருந்த சின்ன மொட்டை மாடியைக் கடந்து, சுவரை தாண்டி கீழே சரிந்திருந்த ஓடுகளில் உட்கார, வழுக்கி கீழே போய் குதித்தேன். அது கமர்ஷியல் டாக்ஸ் அலுவலகத்தின் பின்பக்கம். உள்ளேயிருந்து இரண்டு பேர் வேகமாக அருகில் வந்து 'என்ன சார்...என்ன சார்" என்று பதறினார்கள். மூச்சு வங்கிக்கொண்டு "மேலே யார்னு தெரில ..கொஞ்சம் பேர் வந்து அடிக்கிறாங்க" என்றேன். எனக்குப் பின்னால் அழகப்பனும் என்னைப் போலவே ஓடுகளின் வழியே கீழே வந்து சேர்ந்தான். ஓடுகளில் உட்காராமல் குதித்ததால், ஓடுகள் காலை அங்கங்கு வசமாக கிழித்து விட்டிருந்தன. சிராய்ப்புகளில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பரிதாபமாக நின்றிருந்தான். மேலே சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஜீவாவும், தங்கமாரியப்பனும் மாட்டிக் கொண்டு விட்டார்கள். என்ன ஆச்சு என்று தெரியாமல் தவிப்பாயிருந்தது. அதற்குள் அலுவலகத்தில் உள்ளவர்களும், தெருவில் உள்ளவர்களும் வெளியே கூடிவிட, மரப்படிகளின் வழியே தம் தம்மென்று சத்தங்கள் எழும்பி மெல்ல அடங்கியது.

"போய்ட்டாங்க", "யார்னு தெரியல", "எதுக்கு வந்து அடிச்சாங்க" குரல்கள் கேட்டன. அழகப்பன் மேலே சென்றான். நான் அசையாமல் கீழேயே உட்கார்ந்திருந்தேன். குற்ற உணர்ச்சி வதைத்தது. நான் மட்டும் தப்பித்து ஓடி வந்தது நியாயமாக படவில்லை. அலுவலகத்தில் இருந்த ஒருவர் "சார்...எதாவது குடிக்கிறிங்களா?' என்று கேட்டார். வேண்டாம் என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து மேலே போனேன். ஜீவா ஒரு மூலையிலும், தங்க மாரியப்பன் இன்னொரு மூலையிலும் நின்றிருந்தார்கள். தெருவில் உள்ளவர்கள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ஜீவாவின் அருகில் செல்ல தெம்பில்லாமல் வாசலில் உட்கார்ந்து விட்டேன். சூட்கேஸ்கள் தூக்கியெறியப்பட்டிருக்க துணிகள் அறை முழுவதும் இறைந்து கிடந்தன. ஜீவா அவரது முழங்கையை பார்த்துக் கொண்டிருந்தார். அருவாளின் பின்பக்கத்தால் அடித்திருக்க வீங்கியிருந்தது. தங்க மாரியப்பனின் கண்கள் சிவந்திருக்க, முகம் வீங்கிப் போயிருந்தது.

கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணகுமார், பெருமாள்சாமி, காமராஜ் என நிறைய தோழர்கள் வந்து விட்டனர். கிருஷ்ணகுமார் பதற்றத்தோடு அருகில் வந்து தோளில் கைவைத்து அமைதியாக இருந்தார். ஜீவாவின் அருகில் போய் பார்த்தார். சட்டென்று "வாங்க ஆக வேண்டியதைப் பார்ப்போம்" என்றார். போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறப்பட்டது. ரோட்டோரக் கடையில் இட்லி சாப்பிட்டதும், கிருஷ்ணகுமார் எல்லோரையும் சங்க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே இரவு தங்கச் செய்தார்.

எவ்வளவு யோசித்தாலும் அசம்பாவிதம் ஏன் நடந்தது என்று ஊகங்கள் மட்டுமே மிஞ்சின. காலையில் சங்கத்தலைவர் பரமசிவம் வீட்டில் டிபன் சாப்பிடும்போது ஜீவா மெதுவாக என்னிடம் கேட்டார். "ஏல நீ எதாவது சேட்டை பண்ணியா". அதிர்ச்சியாய் இருந்தது.  அறையில் தங்கியிருந்தவர்களில் நான் மட்டுமே எந்த வரைமுறையும், ஒழுங்கும் இல்லாதவனாக கருதப்பட்டேன். இரவு வெகுநேரம் கழித்து தூங்கச் செல்வது தவிர பெரும்பாலும் தங்கியது கிடையாது. இருந்தாலும் நான்தான் காரணமாக இருக்க முடியும் என பேச்சு நிலவியது அவமானமாய் இருந்தது. அடுத்தநாள் சங்க உதவிப் பொதுச்செயலாளர் கணேசன் புதிரை அவிழ்த்தார். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி அப்போதுதான் திருமணமாகியிருந்த இளம் தம்பதியினர் இருந்ததாகவும், பிரம்மச்சாரிகளின் நடமாட்டம் அந்த கணவனுக்கு எரிச்சலாக இருந்ததாம். யாரை சொல்லி என்ன ஆகப்போகிறது. கேட்டுக் கொண்டு இருந்த கிருஷ்ணகுமார் "சரி...விடுங்க...இனும நீங்க அங்க போக வேண்டாம்...இங்கேயே தங்கிக்கங்க" என்றார். நான், அழகப்பன், ஜீவா, பெருமாள்சாமி சங்க அலுவலக வாசிகளானோம். 42-பி, எல்.எப்.தெரு என்னும் முகவரி எங்கள் விலாசமானது.

பாலம் கடந்து சாத்தூர் ஆரம்பிக்கிற இடத்தில் வலப்பக்கத்தில் சட்டென்று  ஆற்றை நோக்கி திரும்பும் ஒரு சின்னச்சந்து போன்ற தெருவின் துவக்கத்தில், மாடியில் வரிசையாய் இருந்த மூன்று குடியிருப்புகளில் நடுவே இருந்தது சங்க அலுவலகம். வீடுகளைப் போல இருந்தாலும், குடும்பமாக யாரும் தங்கியிருந்தது இல்லை. இப்படி அலுவலகங்களில் பணிபுரிபவர்களே தங்கியிருந்தனர். சங்க அலுவலகத்தில் மூன்று அறைகள் இருந்தன. நடுவில் இருந்த அறைதான் பீரோ, மேஜை, டேபிள், நாற்காலிகளோடு சங்க அலுவலமாக செயல்பட்டது. அடுப்போடு இருந்த மூன்றாம் அறையில் எங்களது உடமைகளை வைத்துக் கொள்ள முடிந்தது. முன்பக்கம் வாசலைத் திறந்தால் மூன்று குடியிருப்புக்கும் பொதுவாக பால்கனி நீண்டிருக்கும். அங்கு நின்றால் கீழே தெருவும், நேர் எதிரே கொஞ்சம் தள்ளி மசூதியும் தெரியும். பின்பக்க வாசலைத் திறந்தால் மூன்று குடியிருப்புக்கும் பொதுவான சின்ன மொட்டைமாடி ஐந்தடி பக்கச் சுவரோடு காட்சியளிக்கும். கழிப்பறைகள், தண்ணீர் டேங்க் எல்லாம் அங்குதான். பக்கச்சுவர் அருகே சென்று பார்த்தால் எப்போதும் இரைந்து கொண்டிருக்கிற மெயின்ரோடு தெரியும். ஆற்றையொட்டி நிற்கிற மரங்களும், அதில் பிரம்மாண்டமான உருவத்தோடு அந்த புளிய மரமும் பார்வையை வசப்படுத்தும்.

அந்த புளியமரத்தின் அடையும் பட்சிகளின் சத்தங்களில் நாட்கள் புலர ஆரம்பித்தன. பிலால் டீக்கடையிலிருந்து வரும் அப்பாஸ் "தோழர்" என்று கதவைத்தட்டி நிற்பான். திறந்தால் நான்கு டீக்களோடு சிரிப்பான். மீண்டும் ஆற்றின் ஊற்றுக்களில் சென்று குளிப்பது வழக்கமானது. கிருஷ்ணகுமார் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தாலும், பெரும்பாலான நேரம் சங்க அலுவலகத்திலேயே இருந்தார். இரவுகளில் தொலைதூரத்தில் இருந்து வரும் தோழர்கள் கதவைத்தட்டுவார்கள். டிரான்ஸ்பருக்கு, தலைமையலுவலகத்தில் அடுத்தநாள் ஸ்டேசனரி எடுப்பதற்கு, கிளையில் எதாவது பிரச்சினை என்று வரும் அவர்களை சங்க அலுவலகம் ஆதரவோடு பராமரிக்கும். தினந்தோறும் 'அன்புள்ள பொதுச்செயலாளர் பி.கேவுக்கு...' என ஆரம்பித்த கடிதங்கள் ஏராளமாய் சங்க அலுவலகத்திற்கு வரும். தலைமையலுவலகத்தில் டிபார்ட்மெண்ட்டில் சென்று அந்தக் கடிதங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து உடனடியாக பேசி அன்று சாயங்காலமே பதில் எழுதிப் போடுவார். பல கடிதங்களுக்கு பி.கே சொல்லச் சொல்ல நான் எழுதுவேன். எப்போதும் தோழர்களின் வருகைகளோடும், நிர்வாகத்தின் நடவடிக்கைகளைப் பற்றிய விவாதங்களோடும் 42,பி-எல்.எப்.தெரு உயிரோட்டத்தோடு இருந்தது.

பி.கேவைப் பார்க்க சங்கத் தோழர்கள் மட்டுமில்லாமல் வெளியிலிருந்தும் அவ்வப்போது தோழர்கள் வந்து செல்வார்கள். அவர்களோடெல்லாம் நெருக்கமாக பழகமுடிந்தது. வக்கீல் மாரிமுத்து, டாக்டர் வல்லபாய், விகடன் மாணவ நிருபராய் அப்போது இருந்த சௌபா, மதுரையில் பாரத ஸ்டேட் பாங்க்கில் வேலை பார்த்த ஸ்ரீதர், மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளராய் இருந்த எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் போன்றோரெல்லாம் அடிக்கடி வருவார்கள். திடுமென இரவு பத்து மணிக்குப் போல தோழர்.எஸ்.ஏ.பெருமாள் வந்து ஆஜானுபாகுவாய் "என்ன பி.கே... எதாவது படம் பாக்கப் போவமா" என்பார். கிருஷ்ணகுமார் எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு என்னையும், காமராஜையும் அழைத்துக் கொண்டு படம் பார்க்கச் செல்வார். பி.கேவிடம் "யார் இவர்" என்றேன். சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர்களில் ஒருவர் என்றார். விட்டலாச்சாரியா படம் என்றால் சுவராஸ்யமாக பார்ப்பார் எஸ்.ஏ.பி. படம் பார்த்துவிட்டு வந்த பிறகு டீக்குடித்து விட்டு விடிய விடிய பி.கேவும், எஸ்.ஏ.பியும் பேசிக்கொண்டிருப்பார்கள். எம்.ஜி.ஆரைப் பற்றி, ராஜிவ் காந்தியின் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான அழைப்பு பற்றி, கோர்பச்சேவின் உலக அமைதிக்கான நடவடிக்கைகள் பற்றி செய்திகள் விரிந்து கொண்டிருக்கும். முடிந்தவரை விழித்து கேட்டு, அப்படியே தூங்கியும் விடுவேன். அவர்கள் இருவரும் எப்போது தூங்குவார்கள் என்று தெரியாது. காலையில் "மாது...எந்திரி' என்று டீக்குடிக்க பி.கே எழுப்புவார். எஸ்.ஏ.பி பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். எதோ கனவு மாதிரி எல்லாம் நினைவுக்கு வரும். வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல என்பது மெல்ல மெல்ல படிந்து கொண்டிருந்தது.

சேர்மன் வீட்டி புதிய கிளைகளைத் திறப்பதில் மிக துரிதமாக இருந்த நேரம் அது. 110க்குள் இருந்த கிளைகளின் எண்ணிக்கையை சில மாதங்களுக்குள் 140ஐ நெருக்கிக் கொண்டு வந்திருந்தார். ஒரேநாளில் மூன்று கிளைகளைக்கூட திறந்திருந்தார். திறப்புவிழா கூட்டங்களில் திரளும் தோழர்களிடையே தன்னை பிரதானப்படுத்திக் கொள்வதற்கும், தோழர்களை சங்க நடவடிக்கையிலிருந்து கவனத்தை திருப்புவதற்கும் அவர் ஜீப்புகளில் ஓடிக்கொண்டிருந்தார். ஐ.என்.டி.யு.சி தலைவர்கள் எல்லா கிளைத் திறப்புவிழாக்களுக்கும் சென்று வீட்டிக்கு மாலையும், சால்வையும் அணிவித்துக் கொண்டிருந்தனர். கிளைகள் திறக்கப்பட்ட இடங்கள் குறித்து அதிருப்தி இருந்த போதிலும் சங்கம் அவைகளில் குறிக்கிடாமல் இருந்தது. முதலில் கிளைகள் திறக்கப்படட்டும், வங்கியின் எதிர்காலம் குறித்த செயல்பாடுகளில் முட்டுக்கட்டை வேண்டாம் என்று பி.கே ஒரு தோழரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஒன்பது நாள் ஸ்டிரைக்கிற்கு முக்கிய காரணமாயிருந்த அலுவலர் சங்கம் பி.ஜி.பி.இ.ஏவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் இடைவெளியை அதிகரித்துக் கொண்டிருந்தது. 'கிளர்க்குகள் சரிசமமாய் உட்கார்ந்து சிகரெட் பிடிக்கிறார்கள்' என்பது கூட அலுவலர் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு சகிக்க முடியாமல் இருந்ததாக சங்க அலுவலகத்தில் பேச்சு அடிபட்டது.

கொஞ்சநாள்தான் இந்த நிலைமை நீடித்தது. வீட்டிக்கு பொறுமையில்லாமல் போனது. வங்கியில் ஒரு தீர்மானகர சக்தியாக உருப்பெற்றிருந்த பி.ஜி.பி.இ.ஏவின் வளர்ச்சி அவரை உறுத்திக் கொண்டே இருந்தது. மரம் சும்மாயிருந்தாலும் காற்று சும்மாயிருக்க விடாது என்பது மீண்டும் நிருபணமாகியது. புன்னையாபுரம் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த தோழர்.சட்டையப்பன் மீது மேலாளர் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் 'disobedience' என்று ஒரு புகார் கொடுத்திருந்தார். நிர்வாகம் உடனடியாக தோழர்.சட்டையப்பனை சஸ்பெண்ட் செய்தது. டிரான்ஸ்பர்களை வைத்து ஊழியர்களை மிரட்டிய நிர்வாகம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றிருக்கிறது என்று புரிந்து கொள்ள சங்கத்திற்கு நேரமே தேவையில்லாமல் இருந்தது. தோழர்.பி.கே அடுத்தநாளே தலைமையலுவலகத்தின் முன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.

(இன்னும் இருக்கிறது....)

- மாதவராஜ்

முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
 1 ,   2   ,   3  ,   4,   5,   6   7     8


12.1.12

இருட்டிலிருந்து - 8



காலவரையற்ற அந்த வேலைநிறுத்த நாட்களில்தான் ஊரில் தங்கையின் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. போராட்டத்தின் உக்கிரம் பற்றிக்கொள்ளாமல் வேறு உலகத்தில் நான் இருந்தேன். கூடப்பிறந்தவர்களோடு, ஊர் நண்பர்களோடு நேரம் கலகலப்பாயிருந்தது. "அம்மாவும், அப்பாவும் ஊர்ப்பக்கம் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வாப்பா" என்றார்கள். ஒரு வாரத்திற்குப்பிறகு எங்களோடு சாத்தூரில் தங்கியிருந்த ஜீவா அவரது ஊரான சாத்தான்குளத்திலிருந்து தகவல் அனுப்பியிருந்தார். இன்னும் இரண்டு நாட்களில் வங்கி திறக்கப்படும் என்றும், முக்கியக் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது. சாத்தூருக்குச் சென்ற பிறகு எல்லாவற்றையும் உற்சாகமாக கதைகதையாய் தோழர்கள் சொன்னார்கள்.

காரைக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சாத்தூர் என போராட்டக் குழுக்கள் பிரிக்கப்பட்டு தோழர்கள் கிளைகிளையாய் சென்றிருக்கிறார்கள். முதலில் திறக்கப்பட்ட பத்துப்பனிரெண்டு கிளைகளிலும் ஒன்றிரண்டு நாட்களில் ஐந்து கிளைகள் போல மூடப்பட்டிருக்கின்றன. ஐ.என்.டி.யூ.சி யூனியனின் தலைவர்கள் தங்கள் கிளைகளையே திறக்கமுடியவில்லையாம். அங்கு கேஷியரோ அல்லது மேலாளரோ ஊழியர் சங்கத்தைச் சார்ந்தவராக இருந்திருக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும், போராட்டக்குழுக்கள் லாட்ஜ்களில் தங்கி, முப்பதுக்கும் மேற்பட்டவர்களோடு உற்சாகத்தோடு இயங்கி வந்திருக்கின்றனர். பொது மேலாளர் கருப்பன்செட்டிக்கு நிர்வாகத்தை வீட்டி கையாளுகிற விதம் எதுவும் பிடிக்காமல் இருப்பதாகவும் தலைமையலுவலகத்தில் பேச்சு அடிபட்டிருக்கிறது. வீட்டியின் வீட்டில் ஆலோசனைகள் மாறி மாறி நடந்திருக்கின்றன. அலுவலர் சங்கத்தை தன்னோடு தக்க வைத்துக் கொள்வதற்கு படாதபாடு பட்டிருக்கிறார். எதுவும் முடியாமல் போக, இறுதியில் உடன்பாட்டிற்கு இறங்கி வந்திருக்கிறார்.

வேலைநிறுத்தம் நடந்த ஒன்பது நாட்களையும் லீவாகக் கருதி சம்பளம் கொடுக்க நிர்வாகம் ஒப்புக் கொள்கிற அளவுக்கு போராட்டம் வெற்றி பெற்றிருந்தது. ஊழியர்களும், அலுவலர்களும் பணிக்குச் சேரும் போது கட்டியிருந்த செக்யூரிட்டி டெபாசிட்டை திருப்பித் தரவும், டிரான்ஸ்பர் பாலிசி ஒன்று சங்கங்களோடு கலந்து பேசி ஏற்படுத்தவும், அனைத்துக் கிளைகளுக்கும் கேல்குலேட்டர் வாங்கித் தரவும், எழுத்தர் தேர்வு எழுத பத்து வரை கல்வித் தகுதி உள்ள கடைநிலை ஊழியர்களை அனுமதிக்கவும் நிர்வாகம் தள்ளப்பட்டிருந்தது. எல்லாம் நமது ஒற்றுமையால் வந்தது என்று கிருஷ்ணகுமார் வட்டாரக் கூட்டங்களில் எழுச்சியோடு புரிய வைத்தார். எங்கும் உற்சாகமும், சங்கத்தின் மீது அளப்பரிய காதலும் பொங்கியிருந்தது. வாழ்க்கை எவ்வளவு வேகமாக நிறம் மாறிக்கொண்டே போகிறது. ஐந்தாறு மாதங்களுக்கு முந்தைய நிலைமையை யோசித்துப் பார்க்கும் போது எல்லாம் பிரமிப்பாய் இருந்தது. ஒரு அமைப்புக்கு தலைமை எவ்வளவு முக்கியமானது என்பது புரிய ஆரம்பித்தது.

தென்காசியில் வைத்து அலுவலர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களும், ஊழியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களும் சேர்ந்து டிரான்ஸ்பர் பாலிசியை ஒன்றை உருவாக்கினார்கள். அலுவர்களுக்கு ஒரு இடத்தில் மூன்று வருடங்கள் எனவும், ஊழியர்களுக்கு நான்கு வருடங்களெனவும் முடிவு செய்யப்பட்டது. கடைநிலை ஊழியர்களுக்கு மாறுதல் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே எனவும், பெண்களுக்கு அவர்களது வாழ்க்கைத்துணை பணிபுரியும் இடங்களுக்கு அருகில் எனவும் தீர்மானிக்கப்பட்டது. கிருஷ்ணகுமாரே எல்லாவற்றுக்கும் ஆதார சுருதியாக இருந்தார். அவரது பேச்சில் அவர் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்தார். பி.கே என்னும் இனிஷியலில் கம்பீரமாக தெரிந்தார். ஊழியர்கள் மத்தியில் மறுப்பேதுமற்ற பிம்பம் அப்போது அவர்.

கொக்கி என்றும், கம்யூனிஸ்ட் என்றும் பி.கே அடையாளம் காணப்பட்டிருந்தார். ஒருநாள் அவரிடமே "நீங்கள் கம்யூனிஸ்டா" என்று கேட்டேன். சிரித்துக்கொண்டார். "ஏன் சிரிக்கிறீர்கள்" என்ற போது, "அப்படி அழைக்கப்படுவதில் சந்தோஷம், ஆனால் அதற்கு நான் தகுதியில்லையே" என்று அந்தப் பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டு, "இந்தக் கடிதத்தை எழுதுங்களேன்" என்று டிக்டேட் செய்ய ஆரம்பித்தார். ஜீவாவுக்கு நான் பி.கே அறைக்குச் செல்வதில் கொஞ்சம் வருத்தமிருந்தது. அவர் மீது மதிப்பு இருந்தாலும், என் மீது இருந்த அக்கறையே அதற்கு காரணம். "ஏலே...அந்த நெட்டையனோடு சேர்ந்து ஒரேயடியாத் திரியாத. அளவோட வச்சுக்க. பொழைக்கிற வழியப் பாரு" என்று திடுமெனச் சொல்வார். அவரது பாட்டையும், பாசத்தையும் ரசிக்கும் எனக்கு இந்த பேச்சு மட்டும் பிடிக்காது. திமிர் வரும். பழகினா என்ன ஆகிவிடும் என்று பி.கே அறைக்குப் போவேன்.

சாயங்காலமானால் எதோ வெறுமை சூழ்ந்து கொள்ள, பிடிப்பற்ற வாழ்வில் எதையோ தேடுவது போல இருந்தது. அறைக்கு பெரும்பாலும் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகுதான் போவேன். காலையில் எல்லோரும் குளித்து முடித்துக் கிளம்பிய பிறகுதான் எழுந்து சோம்பல் முறிப்பேன். வங்கியில் வேலை முடிந்த பிறகு சில நாட்கள் கிருஷ்ணகுமாரோடு, சில நாட்கள் அறை நண்பர்களோடு சினிமா, மணிசங்கர் லாட்ஜில் தங்கியிருந்த ஐ.ஓ.பியில் வேலை பார்த்த கண்னன் அறைக்குச் செல்வது என்று கழியும். பாண்டுகுடியிலிருந்து சாத்தூருக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்திருந்த காமராஜ் சாயங்கால நேரங்களில் வந்து ஒரு சிகரெட் குடித்துவிட்டு எதாவது புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பான். எப்போதாவது சீக்கிரத்தில் அறைக்குச் சென்றால் ஜீவாவை பாடச் சொல்லி தாளம் போட்டு கூத்தடிப்போம்.  அந்தத் தெருவில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் தங்கமாரியப்பனுக்குத்தான் இந்த சத்தங்கள் அவ்வளவாக பிடிக்காது.

அப்படியொரு நாளில்தான் அம்முவிடமிருந்து முதன்முதலாக கடிதம் வந்திருந்தது. சென்னையில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்காரம்மாவிடம் முகவரி வாங்கி எழுதியிருந்தாள். அண்ணன் பாண்டிச்சேரிக்கு மாற்றலாகும் வரை என்னை சந்திக்க முடியும் என்று நம்பியிருந்திருக்கிறாள். வாழ்க்கை முழுவதும் என்னோடு பயணிக்க விருப்பம் தெரிவித்திருந்தாள். கல்லூரி முகவரிக்கு கடிதம் எழுதி, அனுப்புனர் முகவரியில் என்பெயரைப் போடாமல் சாந்தி என்று குறிப்பிடச் சொல்லியிருந்தாள். சாத்தூர், அந்த வெப்பம், புன்னகை இழந்த நாட்கள் எல்லாம் சட்டென்று மாறிப்போக, ஒரு பெண்ணின் காதலனாக திளைத்துப் போனேன். கடிதத்தை திரும்ப திரும்பப் படித்தேன். ஆக்ஸ்போர்டு பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகள் குதூகலித்தது யாவும் எனக்காக எனத் தோன்றியது. அன்றைக்கே கடிதம் எழுதினேன். நான்கு நாட்கள் கழிந்ததும் தபால்காரருக்காக அலுவலகத்தில் காத்திருந்தேன். அவளிடமிருந்து கடிதம் வந்ததும் நிலை கொள்ளாமல் எழுத்துக்களை அடைகாப்பேன். தவித்து, சிலிர்த்து, சுவாசித்துக் கிடந்தேன்.

அலுவலர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் ஊழியர்கள் சங்கத்தில் அரவமில்லாமல் சேர்ந்து கொண்டிருந்தனர். தங்களுக்கு பாதுகாப்பும், எதிர்காலமும் ஊழியர்கள் சங்கத்தில் இருப்பதாக நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர். உமர்சலீமும், சங்கரசுப்புவும் டிரான்ஸ்பரில் செல்ல அவர்கள் தங்கியிருந்த 42-பி, எல்.எப் தெருவுக்கு ஊழியர்கள் சங்கம் வாடகைக்கு குடி புகுந்தது. வக்கீல் அகமதுஜான் போர்ஷனில் இருந்து, முழுவதும் தங்களுக்கு என்ற விலாசத்துடன் வாடகைக்குச் சென்ற அந்த நாளை தலைமையலுவலகத்தின் முன்பு திருவிழா போல கொண்டாடினார்கள். நானூறுக்கும் மேலே தோழர்கள் திரண்டிருந்தனர். சென்னையிலிருந்து பெஃபி சங்கத்திலிருந்து ஆறுமுகநயினார், கோதண்டராமன், வாசுகி வந்திருந்தார்கள். நயினார் கொடியேற்றினார். கிளைகளிலிருந்து, வட்டாரங்களிலிருந்து சங்கத்திற்கு நாற்காலிகள். பீரோ, டேபிள், ஃபேன்கள், கடிகாரம் என சாமான்களை தோழர்கள் குவித்தனர். அந்த விழாவில் நான் ஒரு கவிதை வாசித்தேன். 'இந்த எட்டு மாதக் குழந்தை தத்தி நடக்க ஒரு குட்டித் தொட்டில்' என்று வைரமுத்து பாணியில் எழுதிய வரிகள் கைதட்டல் பெற்றன. கிருஷ்ணகுமார் அன்று மொத்தக் கூட்டத்தையும் தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வார்த்தைகளாலும், தொனியாலும் மெய்சிலிர்க்க வைத்தார். சங்கத்தின் மகத்துவத்தை ஒரே நாளில் எல்லோருக்கும் புரிய வைத்துவிடமென்ற துடிப்பும், வெறியும் நிறைந்திருந்தது. பேசி முடித்ததும், "எப்படியிருந்துச்சு" என்று என்னிடம் கேட்கிற பழக்கம் உண்டாகியிருந்தது.

அவரோடு நெருக்கம் தென்பட்டாலும், ஊழியர் சங்கத்தின் முழுச் செயல்பாடுகளையும் அறியாமல் இருந்தேன். பி.கே தான் எல்லாமும் என்றுதான் எல்லோரையும் போல எனக்கும் புரிந்திருந்தது. ஒரு சங்கம் என்றால் என்ன, அது எப்படி வழி நடத்தப்படுகிறது, எப்படி இயங்குகிறது, செயற்குழுவின் பங்கு என்ன, தொழிற்சங்கத்தின் அரசியல் என்ன என்பதெல்லாம் புரிந்திருக்கவில்லை. நான் வெளியேத்தான் இருந்திருக்கிறேன். உள்ளே செல்வதற்கான நாள் ஒன்று வந்தது. மேலும் அருகில் செல்வதற்காகவே அந்த சம்பவம் நடந்தது போலிருக்கிறது.

அந்த அந்தி வேளையில் எங்கள் அறை களை கட்டியிருந்தது. அழகப்பனும் வழக்கத்தை மீறி உற்சாகமாயிருந்தான். திடுமென கதவைத் தள்ளிக் கொண்டு நான்கைந்து பேர் உள்ளே நுழைந்தார்கள். கூட இருக்கிற அறை நண்பர்களைப் பார்க்க வந்தவர்களாய் தோன்றவில்லையென்றாலும், "யார் வேணும்" என்றேன். "உனக்கு எந்த ஊருடா" என்று மிரட்டலாக பதில் வந்தது. விபரீதமாய்த் தெரிந்தாலும், "என்ன மரியாதையில்லாம பேசுறீங்க" என்று கேட்பதற்குள் முன்னால் இருந்தவன் வேகமாக பெல்ட்டை சுழற்றினான். எதிர்பாராத சுளீரால் நிலைகுலைந்து நிதானிப்பதற்குள் பெல்ட்டை மீண்டும் சுழற்றினான். தடுப்பதற்கு உயர்ந்த என் முன்னங்கையில் பெல்ட் சுற்றியது. சுண்டி இழுக்கவும் பெல்ட் என் கைக்கு வந்தது. தைரியம் கொண்டு மோசமான கெட்ட வார்த்தையை உதிர்த்துக் கொண்டு பெல்ட்டை ஒங்கிய அந்த கணத்தில் பின்னால் நின்றவனின் அசைவைப் பார்த்தேன். தோளுக்குப் பின்னால் இருந்து நீண்ட அரிவாள் அவன் கைகளுக்கு மின்னல் போல வந்தது.

(இன்னும் இருக்கிறது....)

- மாதவராஜ்

முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
 1 ,   2   ,   3  ,   4,   5,   6   7

27.8.11

இருட்டிலிருந்து - 7



வெட்டித் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப்பெரியவர்கள் சிலர் பேசிக்கொண்டு இருப்பார்கள். பாம்பு கடித்து ஒருவன் அலறிக்கொண்டு அங்கு வந்து துடிதுடிப்பான். அவனுக்கு எந்தவிதமான வைத்தியம் செய்யலாம் என பெரும் விவாதங்கள் நடக்கும். வலியின் வேதனைக்குரல் பின்னணியில் ஒலிக்க ஆள் ஆளாளுக்கு ஒன்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். முடிவற்ற சர்ச்சைகளுக்கு இடையில் அந்த பாவப்பட்ட மனிதன் இறந்து போவான். இதுதான் 'பாம்பும் பஞ்சாயத்தும்' நாடகம். கிராம வங்கி ஊழியனின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க யாரும் முன்வராத சோகத்தை அழுத்தமாக பதிவு செய்வதாய் இருந்தது. நிர்வாகத்தை கேட்டால், ஸ்பான்ஸர் வங்கி என்று சொல்ல, ஸ்பான்ஸர் வங்கியை கேட்டால் நபார்டு என்று கைகாட்ட, நபார்டோ தனக்கு அதிகாரம் இல்லை என்று நிதியமைச்சகத்துக்கு வழிசொல்ல, எல்லாவற்றுக்கும் மத்தியில் மாநில அரசு எந்த சம்பந்தமுமில்லாமல் அதுபாட்டுக்கு இருக்க, தூண் விட்டு தூண் ஓடிக்கொண்டு இருக்கும் கிராம வங்கி ஊழியனின் வாழ்க்கை அதில் இருந்தது. வசனங்களும், காட்சிகளும் பார்வையாளர்களை முழுமையாக ஆக்கிரமித்தது. அதிகார அமைப்புகளுக்கு எதிரான கேள்விகள் பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டன. கிருஷ்ணகுமாரை எல்லோரும் கைகுலுக்கி பாரட்டினார்கள். அந்த மொத்த விழாவையும் நாடகம் தனக்குரியதாய் எடுத்துக்கொள்ள சேர்மன் திருமலை முகம் சுருங்கி காரில் ஏறிப்போனார்.

கிருஷ்ணகுமார் மீதான நம்பிக்கையும், மரியாதையும் கூடிக்கொண்டே போனது. தலைமையலுவலகத்திற்குள் இப்போது அவர் வந்தால் அமைதி உடைந்து கலகலவென்று ஆனது. "வாங்க வாங்க" என்று முகம் மலர்ந்து ஊழியர்கள் அவரைச் சூழ ஆரம்பித்தார்கள். தைரியமாக அவரோடு டீ குடித்தார்கள். இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்ட் சூப்பிரண்டட் உமர் சலீமை மாமா என்று அன்போடு கூப்பிடுவார். ஸ்டாப் டிபார்ட்மெண்ட் சூப்பிரண்டெட் சங்கரசுப்புவும் இவரைப் பார்த்து புன்னகைக்க ஆரம்பித்தார். தோழர் என்னும் வார்த்தையோடு பேர் சொல்லி பேசும் வழக்கம் பாண்டியன் கிராம வங்கியில் உருவாகியது. அந்த மனிதனின் ஆளுமையின் மொழியாக அது மெல்ல எல்லோருக்குள்ளும் பரிணமித்துக்கொண்டு இருந்தது.  நிர்வாகத்திற்கு சகிக்க முடியாமல் இருந்திருக்க வேண்டும். கிருஷ்ணகுமாரோடு பேசுகிறவர்கள் கண்காணிக்கப்பட ஆரம்பித்தார்கள். அவரோடு சிரித்தவர்கள் நிர்வாகத்திற்கு அந்த நிமிடம் முதல் எதிரிகளாகி விட்டார்கள். நாளொரு டிரான்ஸ்பர் போட்டுக்கொண்டிருந்த நிர்வாகம் பெரும்பாலானவர்களுக்கு விரோதமாகியிருந்தது அந்த சூழலின் மறுபக்கம்.

லேபர் கமிஷனரோடு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நிர்வாகம் 1985 ஏப்ரல் 16ம் தேதி இரவோடு இரவாக அலுவலர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை அனுப்பியது. பிரமோஷன் குறித்து முடிவு ஏற்படுவதற்கு முன்னரே நிர்வாகத்தின் இந்த அத்துமீறலை சங்கம் கடுமையாக கண்டித்து ஏப்ரல் 26ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்தது. ஏப்ரல் 23ம் தேதி நடந்த சென்னைப் பேச்சுவார்த்தையில் தோழர் டபிள்யு.ஆர்.வரதராஜன் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு லேபர் கமிஷனரிடம் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தியிருந்தார். நிர்வாகம் அலுவலர் பணிநியமனத்தை நிறுத்தினால் போராட்டத்தை கைவிடுவதாக சொல்லியதை சேர்மன் திருமலை ஏற்கவில்லை. உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் போகும் என அவர் நினைத்திருக்க வேண்டும். முன்னர் நடந்த பலவீனமான தர்ணா அவருக்கு அப்படியொரு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். இந்த தடவை உண்ணாவிரதத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். கடைசியாக கிருஷ்ணகுமார் பேசியபிறகு காய்ந்த வயிறோடு சாயங்காலம் ஐந்து மணிக்கும் எழும்பிய கோஷங்களில் அனல் பறந்தது.

இன்னொரு அநியாயமும் நடந்தது. எழுத்தர் பதவிக்கான பணிநியமனத்திற்கு பத்திரிக்கைகளில் நிர்வாகம் விளம்பரம் செய்திருந்தது. அதில் கல்வித்தகுதியாக ப்ளஸ் டூ என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. வணிக வங்கிகளில் கூட அப்போது எழுத்தர் பதவிக்கான கல்வித்தகுதி பத்துதான். ப்ளஸ் டூ அறிமுகமாகி ஐந்தாறு வருடங்களே ஆகியிருந்தன. வங்கியில் பணிபுரியும் கடைநில ஊழியர்கள் எல்லாம் எஸ்.எஸ்.எல்.சி அல்லது பத்து வரைக்கும் படித்தவர்களாகவே இருந்தனர். அவர்களில் யாரும் இந்த பணி நியமனத்திற்கு மனுப்போடக் கூட அருகதையற்று போயினர். ஏற்கனவே அவர்களுக்கு பதவி உயர்வு என்பது சுத்தமாக மறுக்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற வாய்ப்பும் பறிக்கப்படுவது எரிச்சலை உண்டு பண்ணியது.

சங்கத்திலிருந்து நிர்வாகத்திடம் பிரச்சனை குறித்து பேசப்பட்டது. தாங்களாக தகுதியை நிர்ணயிக்கவில்லை என்றும், நபார்டுதான் சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பதாக சொல்லியிருக்கிறது. சுற்றறிக்கையையும் எடுத்துக் காண்பித்து இருக்கிறார்கள். சங்கத்தின் கோரிக்கையை பரிந்துரை செய்து நபார்டுக்கு கடிதம் எழுதுவதாகச் சொல்லியிருக்கிறது. பாம்பு கடித்ததற்கு எதாவது வைத்தியம் செய்தாக வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே சங்கத்திற்கு இருந்தது. சங்கம் உடனடியாக அகில இந்தியத் தலைமைக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றது. அதிகார அமைப்புகள் எப்போதும் தண்டனை வழங்கும் உரிமையை வழங்குவதை அருகில் இருப்பவர்களிடமும், சலுகைகள் வழங்கும் உரிமையை தொலைவில் இருப்பவர்களிடமும் கொடுத்து வைத்திருக்கிறது.

சங்கத்தைப் பற்றி, சங்க நடவடிக்கைகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொள்ள ஆரம்பித்திருந்தேன். கிருஷ்ணகுமாரின் அறைக்குச் செல்வது வழக்கமாயிருந்தது. பார்க்கிற நேரங்களில் பெரும்பாலும் யாருக்காவது கடிதம் எழுதிக்கொண்டு இருப்பார். ஒவ்வொரு கடிதமும் மெனக்கெட்டு, அதில் மொத்தமாக மூழ்கி எழுதும் அவரது சிரத்தை ஆச்சரியமாக இருந்தது. நல்ல பெரிய எழுத்துக்களில், புள்ளிகளை எல்லாம் உருட்டி உருட்டி, இடைவெளி விட்டு எழுதும் போது பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். நிறைய ஸ்கெட்ச் பேனாக்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு வண்ணமாக முகவரி எழுதுவார். கடிதங்களாய் குவிந்திருக்க மணி அவற்றை ஒட்டிக்கொண்டு இருப்பார். யாவற்றுக்கும் நடுவே கிருஷ்ணகுமாரின் பேச்சு ததும்பிக்கொண்டே இருக்கும். தோழர்கள் வந்து போய்க்கொண்டு இருப்பார்கள். சாத்தூருக்குப் பக்கத்தில் உள்ள சிறுகிராமமான நடுச்சூரங்குடியைச் சேர்ந்த காமராஜ் ஒருநாள் பாண்டுகுடி கிளையிலிருந்து வந்திருந்தபோது அறிமுகமாகியதும் அங்குதான். எங்கள் குடியிருப்பு மீண்டும் இடம் பெயர்ந்தது. நாடார் தெருவில் வணிகவரி அலுவலகத்திற்கு மேலிருந்த மாடிக்கு சென்றோம்.

அந்த மே ஒன்றாம் தேதியை ஊழியர்கள் மனதிற்கு கொண்டு சென்றது சங்கம். சிகாகோ நகரில் நடந்த  வீரஞ்செறிந்த போராட்டத்தை விளக்கி சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. தோழர்கள் நிறைந்து காணப்பட்ட உற்சாகச்சூழலில் தலைமையலுவலகத்தின் முன்புறம், அகில இந்திய சங்கத்தின் குடிசை போல வடிவமைக்கப்பட்டிருந்த AIRRBEA எழுத்துக்கள் கொண்ட செந்நிறக்கொடி ஏற்றப்பட்டது. தகவல் பலகை அமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளையும் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் சங்கம் மிக உன்னிப்பாகவும், தெளிவாகவும் இருந்தது. அடிக்கடி எழுந்த கோஷங்களில் இப்போது PGBEA என்னும் வார்த்தை தோழர்களுக்கு மிகச்சொந்தமான அந்நியோன்யமான உணர்வை தந்திருந்தது. கோலாகலமாக ஆரம்பித்த மேமாதம் மிக ஆக்ரோஷமான தர்ணாவோடு முடிந்தது. மே 31ம் தேதி நடந்த அந்த தர்ணா சங்க வரலாற்றில் முக்கியமான நாள்.

கிருஷ்ணகுமாரோடு நட்பு பாராட்டியதில் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் உமர்சலீமும், சங்கரசுப்புவும். முக்கிய துறையின் கண்காணிப்பாளர்களாக, நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு அவர்கள் 'துஷ்டர்களோடு' பழக்கம் வைத்திருந்தது சேர்மன் திருமலைக்கு பிடிக்காமல் போயிருந்தது. அவர்களை அவமானப்படுத்துவதிலும், ஓரங்கட்டுவதிலும் மும்முரமாயிருந்தார். தனக்கு வேண்டியவர்களிடம், தன்னை துதி பாடுபவர்களிடம் நெருக்கம் கொண்டு, அவர்களின் ஆலோசனைகளை அமல்படுத்திக்கொண்டு இருந்தார் வீட்டி. தாங்கள் மட்டும் சகமனிதனோடு சினேகம் கொண்டு நாலு வார்த்தை பேசுவது கண்டு வெறுப்புகொள்வது அவர்களின் சுயத்தை பெரிதும் பாதித்திருந்தது. இருவரும் பாண்டியன் கிராம வங்கி அலுவலர் சங்கத்தின் முக்கிய அங்கமாயிருந்ததால், நிலைமை வேறு ஒரு திசையிலிருந்து ஆராயப்பட்டது.

அலுவலர்களுக்கென்று பிரச்சினைகள் இருந்தும் அவற்றை கோரிக்கைகளாக முன்னிறுத்தி பேசி, போராடி சாதிக்கிற மனோபாவமும், தார்மீக பலமும் அற்று இருந்த அவர்கள் நிர்வாகத்துக்கு எதிராக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். அப்போது அதன் தலைவராக இருந்த சாத்தூர் கிளை மேலாளர் துரைராஜ், பொதுச்செயலாளராக இருந்த வங்கியின் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் எல்லோரும் கிருஷ்ணகுமாரோடு மேலும் இணக்கம் கொண்டனர். வைப்பாற்று மணலில் ஒரு இரவில் கிருஷ்ணகுமாரோடு மனந்திறந்து பேச, கோரிக்கைகள் வடிவம் பெற்றன. ஊழியர் சங்கத்திற்கும், அலுவலர் சங்கத்திற்கும் இடையில் கூட்டுப்போராட்டத்திற்கான தளம் உருவானது.

தன் இஷ்டத்திற்கு ஊழியர்களையும், அலுவலர்களையும் மிரட்டுவதற்கு டிரான்ஸ்பரை நிர்வாகம் ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதற்காக முறையான டிரான்ஸ்பர் பாலிசி உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையே கூட்டுப்போராட்டக்குழுவின் பிரதான நோக்கமாயிருந்தது. கடைநிலை ஊழியர்களை  எழுத்தர் பணிநியமனத்திற்கான தேர்வு எழுத  அனுமதிக்க வேண்டும், கிளைகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும், அனைத்துக்கிளைகளுக்கும் கால்குலேட்டர்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் கோரிக்கைகளாகியிருந்தன. மே 31ம் தேதி தர்ணா என்றும், நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜூன் 3ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் என்றும் சர்க்குலர் வெளியானது.

கொஞ்சங்கூட எதிர்பாராத இந்த நிகழ்ச்சி நிர்வாகத்தை நிலைகுலைய வைத்தது. சங்கத் தேர்தலில் தோற்றுப்போனவர்கள் ஐ.என்.டி.யு.சி இணைப்பில் பாண்டியன் கிராம வங்கி எம்ப்ளாயீஸ் யூனியன் என்று ஒன்று ஆரம்பித்திருந்தார்கள். அதை பொம்மைச் சங்கம் என்று கிருஷ்ணகுமார் அடிக்கடி குறிப்பிடுவார். அந்த சங்கத்திலிருந்து வரிந்து கட்டிக்கொண்டு கூட்டுப் போராட்டக்குழுவைத் தாக்கி சுற்றறிக்கைகள் இறைக்கப்பட்டன. ஊழியர்கள் சங்கம் போராட்டம் மட்டுமே தீர்வு என்று நம்புகிறது என்றும், அதன் தலைவர்கள் தீவீரவாதிகள் என்றும் அவர்களை நம்பி அலுவலர்கள் சங்கம் செல்ல வேண்டாமென்றும் புலம்பித் தள்ளியிருந்தது. அதில் பொதுச்செயலாளர் என்ற இடத்தில் கையெழுத்துப் போட்டிருந்த சிதம்பரத்தின் கையெழுத்துக்களைப் பார்க்கும் போது பாவம் போல இருந்தது. களப்பணியாளர்கள் என்ற பெயரில் ஒரு மொட்டைக்கடிதம் கூட்டுப் போராட்டக்குழுவை தரக்குறைவாக, சுயநலக்குழுவாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. நிர்வாகத்தின் ஆசைகளும், ஆசீர்வாதங்களும் எல்லா எழுத்துக்களிலும் நிரம்பியிருந்தது.

நாட்களை வேகமாக நகர்த்திய அந்தக் கோடை வெப்பமான மனிதர்களாய் தோழர்களை உருமாற்றியிருந்தது. முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட மே 31 தர்ணாப் பந்தல் மிக நீளமாக சிவன் கோவில் தெற்கு ரத வீதியில் நிறைந்திருந்தது. வீடுகளை ஓட்டிச் செல்லும் சாக்கடை நாற்றத்தை தாங்கியபடி தோழர்கள் கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த ஒற்றுமைக்கு முன்னால் நிர்வாகம் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என நம்பிக்கை எல்லோருக்கும் ஏற்பட்டிருந்தது. ஆனால் நிர்வாகம் பிடிவாதமாக இருக்க, ஜூன் 3ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் ஆரம்பமாகியது.

(இன்னும் இருக்கிறது....)

முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
 1 ,   2   ,   3  ,   4,   5,   6

11.8.11

இருட்டிலிருந்து - 6

பெரிய அளவில் நிர்வாகத்தை எதிர்த்து ஊழியர்கள் உடனே திரண்டு விடுவார்கள் என்று புதிய சங்கத்தலைமை எதிர்பார்த்திருக்க முடியாதுதான். இருந்தாலும் இந்த அளவுக்கு முதல் போராட்டம் எண்ணிக்கையற்றுப் போனது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அசிஸ்டெண்ட் லேபர் கமிஷனரிடமிருந்து தந்தி வந்திருந்தது. புதிய சங்கத்தலைமைக்கு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், சேதாரங்கள் இல்லாமல் மரியாதையாக அதே இடத்தில் நின்று கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. ஜனவரி 24ம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தைக் கைவிட்டு சங்கம் பேச்சுவார்த்தைக்குச் சென்றது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜனவரி 28ம் தேதி அகில இந்திய கோரிக்கைகளை முன்னிறுத்தியும், கடைநிலை ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்வதில் உள்ள கோளாறுகளை களைந்திட வலியுறுத்தியும் ஒருநாள் நாடு முழுவதும் நடந்த வேலைநிறுத்தத்திற்கு ஓரளவு ஆதரவு இருந்தது. வேலை நிறுத்தம் இந்த நிர்வாகத்தை எதிர்த்து இல்லை என்று ஊழியர்கள் தெளிவுபடுத்தி கொஞ்சம் தைரியம் கூடியிருந்தார்கள். சங்கத்தலைமைக்கு பெரிய ஆதரவு இருந்தாலும் வெளிப்படையாக நிர்வாகத்தை எதிர்த்து வெளிவருவதில் பயம் இருந்தது. அந்த பயத்தை உயர் அதிகாரிகளும், தோற்றுப்போன சங்கத்தலைமையில் இருந்த சிலரும் திட்டமிட்டு உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். பொதுவாகவே ஊழியர்கள் மத்தியில் ஒரு மனோநிலை குடியிருக்கிறது. கிருஷ்ணகுமாரை தேர்ந்தெடுத்துவிட்டோம், எல்லாவற்றையும் இனி அவர் பார்த்துக்கொள்வார் எனவும், தங்கள் வேலை வேடிக்கை பார்ப்பது எனவுமாக பாவித்துக் கொள்கிறார்கள். சுற்றிலும் இரண்டு குழுவாய் நின்று ஆரவாரிக்க, அவர்கள் சார்பாக எம்.ஜி.ஆரும், வீரப்பாவும் மட்டும் தாவித் தாவி வாள் சண்டை போடுகிற போட்டியாக கருதிக்கொள்கிறார்கள்.

உடனடியாக கிளைகளுக்கு பிரச்சாரம் செல்வது எனவும்  திருநெல்வேலியில், சாத்தூரில்,காரைக்குடியில் வட்டாரக் கூட்டங்கள் நடத்துவது எனவும் திட்டமிட்டு புதிய செயற்குழு முழுமூச்சோடு இறங்கியது. தலைமையலுவகத்திற்கு வந்து ஒவ்வொரு ஊழியர்களிடமும் பேசினார்கள். நாங்கள் பணிபுரிந்த அலுவலகம் இருந்த அதே தெருவில் அந்த ஆக்ஸ்போர்டு பள்ளியில் வைத்து வட்டாரக்கூட்டம் நடத்தப்பட்டது. கிருஷ்ணகுமார் உணர்ச்சி பூர்வமாக பேசினார். 'மரம் சும்மாயிருந்தாலும் காற்று சும்மாயிருக்க விடாது" என்று நிர்வாகத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பின்னால் இருக்கிற ஆணவத்தையும், அதன் பாதிப்புகளையும் விளக்கினார். எவ்வளவோ செலவு செய்கிற நிர்வாகம், கிளைகளில் கழிப்பிட வசதி கூட செய்து தராத அவலத்தையும், கடைநிலை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தித் தராத போக்கையும் வலியோடு உணரவைத்தார். "தலைமை மட்டுமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளாது, நாம் எல்லோரும் சேர்ந்துதான் சங்கம், தனிமரம் தோப்பாகாது" என்று புரிய வைத்தார்."உறங்கிக் கொண்டிருக்கும் போர்வாளை விட ஊர்ந்து கொண்டிருக்கும் புழு மேலானது. புழுக்களை விடவா நாம் கேவலமாகிவிட்டோம். உறைவிட்டு வெளிவந்த போர்வாளாக உயர்ந்து நிற்போம்" என்று ஒவ்வொருவரின் நரம்புகளிலும் தீயை பற்ற வைத்தார். அவரது பேச்சில் அனாயசமாக தெறித்து வரும் இலக்கியமும், பொதிந்து கிடந்த உண்மைகளும் எல்லோரையும் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது.

அசிஸ்டெண்ட் லேபர் கமிஷனரோடு தொடர்ந்த பேச்சுவார்த்தையில், சங்கத்தின் பொதுச்செயலாளருக்கும், தலைவருக்கும் டிரான்ஸ்பர்கள் தருவதற்கு நிர்வாகம் மீண்டும் ஒப்புக் கொண்டது. சில கோரிக்கைகள் வாபஸ் பெறப்பட்டன. சில கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை தொடர்ந்தது. கிருஷ்ணகுமாருக்கு சாத்தூர் கிளையும், பரமசிவத்திற்கு உப்பத்தூர் கிளையும் டிரான்ஸ்பர்கள் போடப்பட்டன. ரோஹிணி எங்கள் துறையில் மாறுதலாகி பணியாற்றத் தொடங்கினார்கள். பரமசிவமும், ரோஹிணியும் தலைமையலுவலகம் இருந்த சிவன் கோவில் தெற்குரத வீதியில் தலைமையலுவலகத்திற்கு ஏழு எட்டு வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் வாடகைக்கு குடிவந்தார்கள். வழக்கறிஞர் மாரிமுத்து அவர்களிடம் ஜூனியராக இருந்த சையது அகமதுவின் அலுவலகத்திலேயே ஒரு போர்ஷனில் தங்கிக் கொண்ட கிருஷ்ணகுமார் அதையே சங்கத்தின் முகவரியாக சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தார்.

நாங்கள் மீண்டும் எங்கள் குடியிருப்பை மாற்றிக்கொண்டோம். ஊருக்கு வெளியே இருந்ததால் ஆத்திர அவசரத்துக்குக் கூட ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருந்தது. மீண்டும் ஊருக்குள் பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து ஆற்றுக்குப் பிரியும் ஒரு சந்தில் மிகச் சின்ன அறையொன்றில் தங்கிக் கொண்டோம். நாகராஜும், அழகர்சாமியும் எங்களோடு வந்து தங்கிக்கொள்ளவில்லை. காரைக்குடி அருகில் இருந்து வந்த கடைநிலை ஊழியர் அழகப்பன், எப்போதும்வென்றானைச் சேர்ந்த தங்கமாரியப்பன், பெருமாள்சாமி, நான், ஜீவலிங்கம், முருகன் என நாங்கள் இப்போது உருமாறியிருந்தோம். ஜீவலிங்கம் வேலைபார்த்த டெவலப்மண்ட் டிபார்ட்மெண்டின் சூப்பிரண்டட் ரவீந்திரன் வயது வித்தியாசம் பாராமல் எல்லோருடனும் பிரியத்துடன் பழகுகிறவராக இருந்தார். அவரது வீட்டில் மனைவியும், மக்களும் ஊருக்குச் சென்றிருந்தனர். நாங்கள் நான்கைந்து பேர் அவர் வீட்டில் போய் தங்கிக்கொண்டு அட்டகாசம் செய்தோம். “ஏலே... இந்த காம்பவுண்டுல மத்தவங்களும் குடியிருக்காங்க. கொஞ்சம் மெதுவா பேசுங்கலே” என்பார்.

ஒருநாள் சாயங்காலம் மெயின் ரோட்டில் எதற்காகவோ நடந்து போய்க்கொண்டு இருந்தபோது ஒரு இடத்தில் சின்னதாய் கூட்டம் நின்றிருந்தது. பாம்பை வைத்துக் கொண்டு ஒரு வித்தைக்காரன் தெளிவாக, வேகமாக, அவர்களுக்கே உரிய சுருதியோடு பேசிக்கொண்டு இருந்தான். தள்ளி சென்று கொண்டிருந்த எனக்கு அந்த கூட்டத்தில் கிருஷ்ணகுமார் நின்று கொண்டிருந்தது ஆச்சரியத்தை தந்தது. பின்னால் சென்று அந்த உயரமான மனிதரின் முதுகில் தட்டி "ஹலோ" என்றேன். திரும்பிப் பார்த்தவர் முகமெல்லாம் சட்டென மலர்ந்தவராய் "நீங்க மாதவராஜ்தான... ஏ.சி.டில வேலை பாக்குறீங்க இல்ல.." என ஒன்றிரண்டு தடவை பார்த்திருந்தாலும் மிகச் சரியாக சொன்னார். "நீங்க இங்க நிக்குறீங்க..?' சின்ன கேள்வியோடு நான் இழுக்க, "நின்னா என்ன..அவனோட பேச்ச கவனிங்க.. அது ஒரு கலை. கூட்டத்தை எப்படி தன் பக்கம் வைத்திருக்கிறான் பாருங்க" என்றார். சொல்லிவிட்டு அந்தப் பக்கம் திரும்பி ஒருமுறை பார்த்துக் கொண்டார். தோளில் ஜோல்னாப்பை தொங்கிக் கொண்டிருந்தது. சட்டென திரும்பி "வாங்க ஒரு டீ சாப்பிடலாம்" என்று பதிலை எதிர்பாரமலேயே நடக்கத் தொடங்கினார். கூடவே சென்றேன்.

அந்தக் கடையிலேயே மூன்று மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் அவரே பேசினாலும், அவ்வப்போது நான் பேசியதையும் ரசித்துக் கொண்டார். என்னிடம் இருந்த இலக்கிய ஆர்வத்தை புரிந்து கொண்டவராக பாரதியை, இந்திராபார்த்த சாரதியின் குருதிப்புனலை, பாலைவனச்சோலை படத்தை, செம்மீனை, கந்தர்வனின் மீசைக் கவிதையை, சிவாஜி கனேசனை என உரையாடல் பற்றி படர்ந்து சென்று கொண்டிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஓவ்வொரு விஷயத்திலும் அவரிடம் தெரிந்த தீர்க்கமும், நுட்பமும் முற்றிலும் என்னை வசப்படுத்தியிருந்தன. இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கலாமே என்றுதான் பிரிந்தேன்.

சில தினங்களில் மீண்டும் அவரைப் பார்த்தேன். எங்கள் அலுவலகத்திற்கு விஸ்வநாதன், மணி,  சோலைமாணிக்கம், கணேசன் ஆகியோரோடு வந்திருந்தார். மிக சினேகமாய் சிரித்துக் கொண்டு "கோழிக்கோடு வர்றீங்களா" என்றார். கோழிக்கோட்டில் அகில இந்திய சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 2, 3 தேதிகளில் நடப்பதாக சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. செல்வதற்கு மனமிருந்தும் வேறொரு விஷயம் முக்கியமாகப் பட்டது. வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஒன்பதாவது ஆண்டு முடிந்து பத்தாவது ஆண்டு பிறப்பதையொட்டி அதை கொண்டாடுவதாக சேர்மன் சர்க்குலரும் வந்திருந்தது. தொடர்ந்து இரண்டு ஞாயிற்றுக்கிழமை எட்வர்ட் பள்ளியில் வைத்து விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கலைநிகழ்ச்சிகள் இருந்தன. கோழிக்கோட்டிற்குச் சென்றுவிட்டு கலைநிகழ்ச்சிகளுக்கு வந்துவிடலாம்தான். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென்றிருந்தது. வரமுடியாததை வருத்தத்தோடு தெரிவித்தேன். சிரித்துக்கொண்டே சென்றார்.

சாத்தூரிலிருந்து ஒரு இரவில் அகில இந்தியச் சங்கத்தின் செந்நிறக்கொடிகள் கட்டிய வேன்களில் உற்சாகமாய் மக்கள் கோழிக்கோட்டிற்கு பயணமானது தலைமையலுவலகத்தில் முக்கிய விஷயமாக கருதப்பட்டது. யார் யாரெல்லாம் சென்றது என்று கணக்கு எடுத்துக் கொண்டிருந்தார்கள். செல்லாதவர்கள் எல்லாம் நல்ல பிள்ளைகளாய் கருதப்பட்டர்கள். லாங் ஜம்ப், ஹை ஜம்ப், ஷார்ட் புட், கபடி, டேபிள் டென்னிஸ் என்று பரிசுகள் குவித்திருந்தேன். ஆனாலும் செஸ் விளையாட்டில் ஒரு தவறான அசைவில் தோற்றது வருத்தத்தை தந்தது. அங்குதான் கண்ணன் பழக்கமானார். செஸ் விளையாட்டில் என்னை வென்றவரை அவர் வென்றிருந்தார். அந்த சாயங்காலத்தில் இன்குலாப் கவிதைகளையும், இளவேனில் கட்டுரைகளையும் கால்பந்து மைதானத்தில் வைத்து சொல்லிக்கொண்டிருந்தார்.

கோழிக்கோடில் இருந்து மிகுந்த உற்சாகத்தோடு திரும்பிய மக்கள் அந்த பயணத்தைப் பற்றி கதை கதைகளாய் சொன்னார்கள். போகாமல் போனதற்கு வருத்தம் வந்தது. சங்கம் குறித்து இப்போது நிறையவே பேச ஆரம்பித்தார்கள். கூடி நிறைகிற இது போன்ற தருணங்கள் மனிதர்களுக்குள் நெருக்கத்தையும், பற்றையும் உருவாக்கிவிடுகிறது. நிர்வாகமும் அதே எண்ணத்தில்தான் பத்தாவது ஆண்டை கொண்டாடத் தீர்மானித்திருக்க வேண்டும்.  மார்ச் 9ம் தேதி நடக்கும் அந்த விழாவில் சங்கத்தின் சார்பில் "பாம்பும் பஞ்சாயத்தும்" என்னும் நிஜ நாடகம் நடக்க இருப்பதாக சங்கத்தின் சுற்றறிக்கை வந்தது. அன்று சாயங்காலம் எங்கள் அலுவலகத்திற்கு வந்த கிருஷ்ணகுமார் "தோழர்.மாதவராஜ்..! நீங்களும் பாம்பும் பஞ்சாயத்தும் நாடகத்துல நடிக்கலமே" என்றார். சரியென்று சொல்லிவிட்டேன். தொடர்ந்து மூன்று நாட்கள் சாயங்காலம் கிருஷ்ணகுமாரோடு இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒத்திகை பார்க்கிற இடத்தில் இருந்த சகஜமும், அரட்டையும் அலாதியாக இருந்தது. பழையபேட்டை மணி அடித்த ஜோக்குகளில் விழுந்து விழுந்து எல்லோரும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். சட்டென்று தீவிரம் கொண்டு கிருஷ்ணகுமார் எழுந்து "வாங்க" என எல்லோரையும் தயார் படுத்துவார்.

விழா மிகுந்த உற்சாகமாகவும், சத்தமாகவும் இருந்தது. ஆள் ஆளாளுக்கு மிமிக்ரி, பாட்டு,சேர்மன் புகழ் என தங்களால் ஆனதைச் சொல்லி மகிழ்ந்தார்கள். சேர்மன் திருமலை கூட்டத்தைப் பார்த்து பார்த்து மிகுந்த உற்சாகமயிருந்தார். நானும் ஜாலியாக டான்ஸ் ஆடினேன். கணேசனும், பழையபேட்டை மணியும் ஆடிக்கொண்டு இருக்கும் போதே அரங்கத்தில் வந்து என்னைத் தூக்கியும், ருபாய் நோட்டுகளை சட்டையில் குத்தியும் விட்டார்கள். சங்கடமாக இருந்தாலும் எதோ பெருமையகவும் இருந்தது அப்போது. அடுத்த சில நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பாம்பும் பஞ்சாயத்தும் நாடகம் அறிவிக்கப்பட்டது. அதுவரை இருந்த சத்தம் எல்லாம் நின்று மொத்த இடமும் அமைதியானது. திருமலை புன்னகை களைந்து, நெற்றியில் சுருக்கங்கள் விழ உற்றுப்பார்த்தார். அங்கங்கே நின்றிருந்தவர்கள் அரங்கம் நோக்கி பார்வையை திருப்பி நெருங்கி வந்தனர்.

(இன்னும் இருக்கிறது.....)

முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
 1 ,   2   ,   3  ,   4,   5


7.8.11

இருட்டிலிருந்து - 5

பொதுக்குழுவிற்கு முந்தின நாள் இரவிலிருந்தே காரைக்குடியிலிருந்தும், இராமநாதபுரத்திலிருந்தும் வர ஆரம்பித்துவிட்டார்கள். மணிசங்கர் லாட்ஜில் விளக்கு அணைக்கப்படாமல் ஒரே அரட்டையும், சிரிப்புமாயும் இருந்தது. நிறைய பேரை அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன். தேர்தலைப்பற்றி குறிப்பிடாமல், பொதுக்குழுவிற்கு வாருங்கள் என்றும், நாம் எல்லோரும் சேர்ந்ததுதான் சங்கம் என்றும் கிருஷ்ணகுமார் கிளை கிளையாய் ஏறி இறங்கியிருந்தது ஒவ்வொருவர் மனதிலும் பதிந்திருந்தது. திருமலையை சமாளிக்கவும், எதிர்க்கவும் கிருஷ்ணகுமார்தான் சரியான மனிதரென ஒரு பிம்பம் எழுந்திருந்ததை உணர முடிந்தது. புதிய மனிதர்களிடம் ஒதுங்கி நிற்கிற இயல்பு என்னை தனித்து இருக்க வைத்தாலும், அவர்களின் உரையாடல்களும், அனுபவங்களும் மிகச் சீக்கிரத்தில் நெருக்கம் கொள்ள வைத்தன.

சின்னச் சின்ன ஊர்களில் பேண்ட்டும் சட்டையும் போட்ட மனிதர்களாய் நுழைந்த பலர் 'பதினாறு வயதினிலே' டாக்டர்களாய் வலம் வந்த கதைகளில் ஆரம்பித்தது கச்சேரி. எங்கேயோ உள்ள முக்கு ரோட்டில் இறங்கி, அதன் வழியே செல்லும் ஒரே ஒரு பஸ்ஸை விட்டு விட்டு நான்கைந்து மைல் தொலைவில் உள்ள கிராமத்துக்கு கேஷ் சாவியோடு நடந்தே செல்லும் பயணங்கள் வெளிவந்தன. 'என்னய்யா பேங்கு இது.. ஒரு கக்கூஸ் கூட இல்ல...' என்று சொல்லிக் கொண்டே கடைநிலை ஊழியர் ஒருவர் தனது கிளையின் அனுபவத்தைச் சொன்னார். அவர்கள் கிளையில் ஒரு மேடம் பணிபுரிகிறார்களாம். பனிரெண்டு மணிக்கு மேலே இவரை அழைத்து 'பக்கத்து வீட்டுல அந்த அண்ணாச்சி வெளியே போய்ட்டாங்களான்னு கொஞ்சம் பாத்துட்டு வந்து சொல்லுங்களேன்' என்று தினமும் சொல்வார்களாம். கேட்டவுடன் அந்த இடம் அமைதி கொண்டது. இன்னொருவர் 'என்னத்த செய்ய' என்று சொல்லிக் கொண்டே அவரது கதையைச் சொன்னார். காலைக்கடன் கழிக்க அவரும் கிளையில் வேலை பார்க்கும் இன்னொருவரும் ஊருக்கு வெளியே செல்வார்களாம். மறைவிடம் பார்த்து உட்கார்ந்த சில நிமிடங்களில் பீடியோடு வந்து நேர் எதிரே உட்கார்ந்தவாறே அந்த ஊர்க்காரர் 'அப்புறம் சார், இன்னிக்கு நகக்கடன் உண்டுங்களா" என்று கேட்டாராம். முதலில் கொஞ்சநாள் அரண்டு இவரது கடனையே கழிக்க முடியாமல் கஷ்டப்பட்டவருக்கு பிறகு அதுவே சகஜமாகி விட்டதாம். எல்லோரும் பெரிதாக கத்திச் சிரித்தார்கள்.

இப்படியே ஆளாளுக்கு சொல்லி சோகங்களும், சிரிப்புகளுமாய் அந்த இரவின் நிறத்தை வேறொரு வண்ணத்தில் வரைந்து கொண்டு இருந்தார்கள். எப்போது படுத்தார்கள் என்று தெரியாது. விழித்த போது அங்கங்கே ஏழு மணிக்கான இளம் வெளிச்சத்தில் படுத்திருந்தார்கள். சிறிது நேரத்தில் எழுந்து மீண்டும் அதே அரட்டைகளோடு ரமண வித்யாலாயா பள்ளிக்கு புறப்படத் தயாரானார்கள்.

பள்ளிக்கூட வாசலில் கிருஷ்ணகுமாரும், அவருடன் சிலரும் நின்று 'வாங்க வாங்க' என்று மிக அன்போடு கும்பிட்டும், கை கொடுத்தும் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். அருகில் சென்றபோது தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். 'ஐ யம் கிருஷ்ணகுமார்' என்றார். பக்கத்தில் இருந்தவர் 'நாந்தான் மணி, பழையபேட்டை" என்றார். அப்போதுதான் அவரை முதல் தடவையாக பார்க்கிறேன். இன்னொருவர் தன்னை சோலைமாணிக்கம் என்று சொல்லிக் கொள்ளவும் மற்றவர்கள் கணேசன் என்றும், விஸ்வநாதன் என்றும், சுப்புராஜ் என்றும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். எல்லோரையும் இந்த ஒரு மாதமாகத்தான் கேள்விப்பட்டிருந்தேன்.  தான் பொதுச் செயலாளர் பதவிக்குபோட்டியிடுவதாகவும், ஒரு வாய்ப்பு தரவேண்டும் எனவும் கிருஷ்ணகுமார் மிகவும் மரியாதையோடு கேட்டார். "இல்லை, நா சிதம்பரத்துக்குத்தான் ஓட்டுப் போடுவேன்" என அவரது முகத்துக்கு நேரே சொன்னேன். கொஞ்சம் கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு "என்ன அப்படி" என்றார். "அவர் கூட ஒரே டிபார்ட்மெண்டில் வேலை பாக்குறேன். நல்ல பழக்கம்" என்றேன். அதற்குப் பிறகும் அவர் விடவில்லை. "பரவாயில்ல, எங்க பேனல்ல நிக்குற மத்தவங்களுக்கு ஓட்டுப் போடலாம்ல" என்றார். சம்மதித்தேன். சந்தோஷமாக கைகுலுக்கிக்கொண்டார்.

மகரபூஷணமும், நெல்லையப்பனும் வந்திருந்தார்கள். நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு அவர்களை சந்திக்கிறேன். 'எப்படி இருக்கீங்க...' என்று மணிசங்கர் லாட்ஜில் உள்ள எல்லோரையும் விசாரித்துக் கொண்டார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து வந்து மக்கள் குவிந்து கொண்டிருந்தார்கள். சோமுவையும் அன்றைக்கு திரும்ப சந்தித்தேன். அவரும் ராதாகிருஷ்ணனும் ஒரு ஓரமாய் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்களும் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக பேசினார்கள். சேர்மன் திருமலையின் டிரைவர் அம்பியும் வந்திருந்தார். அது ஒரு ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது. பொதுக்குழுவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து வந்து அவ்வப்போது தகவல் சொல்லவே அவரை திருமலை அனுப்பி வைத்திருப்பதாக பேசிக்கொண்டார்கள்.

சிதம்பரம், சூரியப்பிரகாசம், மாரியப்பன், சிகப்புத்துண்டு போட்ட பரிமளச்செல்வம், ரெங்கநாதன் எல்லோரும் இன்னொரு பக்கம் ஒரு கோஷ்டியாய் நின்றிருந்தார்கள். 'கொக்கிகள் எல்லாம் ஒண்ணு சேந்துட்டாங்க' என்றார் ரெங்கநாதன். "கொக்கிகளா அப்படின்னா..?" என்றேன். சிதம்பரம் சிரித்துக் கொண்டே "கொக்கிகள்னா தெரியாதா..கம்யூனிஸ்ட்டுகள்" என்றார். யாரெல்லாம் என்று கேட்டபோது அவர்கள் சோமுவையும், ராதாகிருஷ்ணனையும், கிருஷ்ணகுமாரையும் சொன்னார்கள். 'இந்த சோமு நம்ம கமிட்டியில இவ்வளவு நாள் இருந்துட்டு இன்னிக்கு அவங் கட்சிக்காரன் ஒருத்தன் நிக்கிறான் என்றவுடன் அவன சப்போர்ட் பண்றான் பாரு" என்றார்கள். கோவில்பட்டிக்கு நிஜநாடகங்கள் பார்க்க அழைத்துச் சென்ற ராதாகிருஷ்ணனும், மகரபூஷணம் இருக்கும்போது மணிசங்கர் லாட்ஜுக்கு ஒரு இரவில் வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்த சோமுவும், கிருஷ்ணகுமாரும் இப்போது மிகுந்த அர்த்தமுள்ளவர்கள் போலத் தோன்றினார்கள். கூட்டத்தில் எல்லோரிடமும் கலந்து நின்று அவர்கள் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

பொதுக்குழு ஆரம்பிக்க பதினோரு மணிக்கும் மேலாகியது. முன்னூறு பேருக்கும் மேலே வந்திருந்தார்கள். கனத்த அமைதி நிலவியது. தீர்மானங்கள், செயலாளர் அறிக்கை, வரவு செலவு கணக்கு எல்லாம் எந்த விவாதங்களுமின்றி  வேக வேகமாக நிறைவேற்றப்பட்டன. ஆளுக்கு முதலில் கிருஷ்ணகுமார் கைதட்டி அங்கீகரித்துக் கொண்டிருந்தார். தேர்தலை நோக்கி காரியங்கள் வேகமாக நகற்றப்பட்டன. இரண்டு அணிகளாக அறிவிக்கப்பட்டன. பழையபேட்டை ரோஹிணியின் கணவர் பரமசிவம் தலைவராகவும், கிருஷ்ணகுமார் பொதுச்செயலாளராகவும், சோமுவும், கணேசனும் உதவிப் பொதுச்செயலாளர்களாகவும், சுப்புராஜ் பொருளாளராகவும், சோலைமாணிக்கம், விஸ்வநாதனையும் உள்ளடக்கி பதினைந்து பேர் கொண்ட கமிட்டி ஒரு பேனலாக முன்மொழியப்பட்டது. பரிமளச்செல்வம் தலைவராகவும், சிதம்பரம் பொதுச்செயலாளராகவும், மாரியப்பன், ரெங்கநாதன், சூரியப்பிரகாசத்தை உள்ளடக்கிய பதினைந்து பேர் கமிட்டி இன்னொரு பேனலாக அறிவிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று ஒட்டு போட்டார்கள். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஒட்டுப் போட்டவர்கள் டீ குடிக்க, மரத்தடியில் உட்கார்ந்து கூட்டமாய் பேசிச் சிரிக்க என்று பொழுதை கழித்தார்கள். அவ்வப்போது யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்றும் சிலர் வந்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இரவு எட்டு மணிக்கும் மேலாகியது. நேற்று இரவே வந்து மணிசங்கர் லாட்ஜில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட இன்னும் கலைந்து போகாமல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள காத்திருந்தார்கள். எல்லாம் ஒரு பரபரப்பாகவும், முழுமையான ஒரு போட்டியாகவும் தென்பட்டது.

கிருஷ்ணகுமார் அணி அதிக வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சிதம்பரம் அணியில் சூரியப்பிரகாசம் மட்டுமே அதிக வாக்குகளோடு குறைந்த வித்தியாசத்தில் தோற்றிருந்தார். பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் கிருஷ்ணகுமார் எல்லோர் முன்பும் வந்து நின்றார். வெற்றி பெற்ற வேகம் எதுவும் இல்லாமல் மிக நிதானமாக பேசினார். இது வெற்றி, தோல்வி என மட்டும் பார்க்காமல் சங்கத்தை நடத்துகிற பொறுப்பு என்று பார்க்க வேண்டும் என்றார். நிறைய கோரிக்கைகள் ஊழியர்களின் புழுக்கத்தில் புதைந்து கிடப்பதாகவும் அவற்றிற்கு உருவம் கொடுத்து வென்றெடுப்பதே சங்கத்தின் முக்கிய பணியாக இருக்கும் என்றார். எல்லோருக்கும் தன்மானம், சுயமரியாதையை இந்த சங்கம் உறுதி செய்யும் என்ற போது கரவொலி எழும்பி அடங்க நேரமானது. அனுபவம் வாய்ந்த தோழர்கள் சூரியப் பிரகாசம், மாரியப்பன், சிதம்பரம் ஆகியோர் சங்கத்தின் புதிய தலைமைக்கு வழிகாட்ட வேண்டும், ஆலோசனைகள் தரவேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என முடித்தார். புதிய உற்சாகத்தோடு எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டார்கள். சிதம்பரத்தை பார்க்க கஷ்டமாயிருந்தது. அணைந்து போன தெரு விளக்குக்கு அடியில் அவரும், மாரியப்பனும் அமைதியாக நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மட்டும் எட்டு சர்க்குலர்களுக்கு மேல் சங்கத்திலிருந்து வெளி வந்தன. இந்திரா காந்தியின் படுகொலை கண்டிக்கப்பட்டதோடு, அதைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலையும் வன்மையாக கண்டித்திருந்தது. கோரிக்கைகள் குறித்த ஆலோசனைகள் தெரிவிக்குமாறு கேட்டு, அனுப்பியவர்கள் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சங்கத்திலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதும், பொதுச்செயலாளரை சாத்தூருக்கு மாறுதல் செய்ய நிர்வாகம் ஒப்புக் கொண்டதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சங்கத்தை நடத்திய முந்தைய செயற்குழு எந்த கணக்குகளையும், பேரேடுகளையும், ஃபைல்கலையும் ஒப்படைக்கவில்லை என்பது அம்பலமாக்கப்பட்டது.  ‘சம வேலைக்கு சம ஊதியம்' என்று சுப்ரீம் கோர்ட்டில் அகில இந்திய சங்கம் தொடுத்த வழக்கிற்கு நிதியாக அலுவலர்களுக்கு ரூ.15/-, எழுத்தர்களுக்கு ரூ.10/-, கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.5/- நிர்ணயித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

ஏராளமான விஷயங்களை புரிந்துகொள்ள முடிந்தது. ஆந்திராவில் உள்ள நாகார்ஜுனா கிராம வங்கியில் உள்ள கடைநிலை ஊழியர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியது, அதையே ரிட் பெட்டிஷனாக ஏற்றுக் கொண்டு விசாரணை நடந்து வருவது போன்ற முக்கிய செய்திகளை எல்லோரும் அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு கிளையின் வியாபார அளவை பொறுத்து கடைநிலை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யலாம் என மத்திய அரசும், நபார்டும் வெளியிட்ட சுற்றறிக்கைகளை கண்டித்து அகில இந்திய சங்க பொதுச் செயலாளர் திலீப் குமார் முகர்ஜி எழுதிய கடிதம் அப்படியே வெளியிடப்பட்டு அரசின் நயவஞ்சகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. எட்டு வருட காலம் தொடர்ந்து பணிபுரிந்து கொண்டிருப்பவர்களின் பணிநிரந்தரத்துக்கும் கிளையின் வர்த்தகத்துக்கும் என்ன சம்பந்தம் என்னும் கேள்வி அனைவருக்குள்ளும் எழ ஆரம்பித்தது.  சங்க உறுப்பினர்கள் தங்கள் சம்பந்தப்பட்டவைகளையும், தங்களைச் சுற்றி நடப்பவைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை சர்க்குலர்களில் இருந்தன. கிருஷ்ணகுமாரின் தலைமையில் சங்கம் புதிய அர்த்தங்களோடும் , புதிய பரிமாணங்களோடும் எழுந்தது. தொழிற்சங்கம் என்பது சாதாரண விஷயம் என்னும் நினைப்பும் யார் வேண்டுமானாலும் நடத்தலாம் என்னும் கருத்தும் எனக்குள் வேகமாக தகர்ந்து கொண்டிருந்தன.

இதுதான் எல்லோருக்குமான பொதுவான உணர்வாக இருந்திருக்க வேண்டும்.  சங்க சுற்றறிக்கைகளை தலைமையலுவலகத்தில் சுவராஸ்யத்தோடு படிக்க ஆரம்பித்தார்கள். மிகுந்த வரவேற்பு இருந்தும் தைரியத்தோடு வெளிப்படையாக சங்க நடவடிக்கைகளில் பங்கு பெற எல்லோருக்குள்ளும் தயக்கங்கள் இருந்தன. நிர்வாகத்துக்கு எதிராக தங்களைக் காண்பித்துக்கொள்ள பயம் இருந்தது.

இந்தக் காலக்கட்டத்தில்தான் ஒரு வருடத்திற்கு மேலாக வாசம் புரிந்து வந்த மணிசங்கர் லாட்ஜை இன்னொருவர் வாங்கியதும், அவர் அதனை குடியிருப்புகளாய் மாற்றப் போவதாகக் கூறி வேறு இடத்திற்கு எங்களை வெளியேறச் சொன்னதும் நிகழ்ந்தது. அவசரம் அவசரமாக பைபாஸில், ரோட்டோரத்தில் ஒன்றின் மீது ஒன்றாக தீப்பெட்டிகளை அடுக்கி வைக்கப்பட்டது போன்ற ஒரு இடத்தில் குடியேறினோம். ஒவ்வொரு தளத்திலும் ஒரே அறைதான். இரண்டாவது தளத்தில் உள்ள அறையில் தங்கிக் கொண்டேன். அது மொட்டைமாடியோடு இணைந்தது. இதே நேரத்தில்தான் சென்னையிலிருந்த அண்ணனும் பாண்டிச்சேரியில் என்.டி.சியில் வேலைக்குச் சேர்ந்து இடம்பெயர்ந்து விட்டிருந்தான். இனி அம்முவைப் பார்ப்பது என்பதெல்லாம் கிட்டத்தட்ட முடிந்துபோன விஷயமாகவேத் தோன்றியது. நிலாவையும், நட்சத்திரங்களையும் அண்ணாந்து பார்த்தபடி கிடந்தேன்.

சில மாதங்களில் அந்தக் கட்டிடத்தையும்  வீட்டுக்காரர் தனக்குத் தெரிந்த ஒருவருக்காக வாடகைக்கு விடத் தீர்மானித்திருந்தார். சாத்தூருக்கு வெளியே மின்சார வாரியத்தின் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் போய் தங்கிக் கொண்டோம். வீட்டிற்கு நேர் எதிரே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அப்போது வெட்ட வெளியாய் இருந்தது.  தொலைவில் ஆர்.ஆர்.நகரில் இருக்கிற மெட்ராஸ் சிமெண்ட்ஸின் உயர்ந்த குழாய்கள் தெளிவாகத் தெரியும்.  அதிலிருந்து புகை காற்றுவெளியில் படர்ந்து கொண்டிருக்கும். பார்க்கமுடியாத வலியெடுக்கும். யூனியன் கார்பைட் விஷம் கக்கி ஒரு நள்ளிரவில் போபால் மக்களை அப்படியொரு நாளில்தான் கொன்று குவித்திருந்தது. பத்திரிக்கைகளில் பார்த்த காட்சிகள் சகிக்க முடியாமலிருந்தன. அந்த ரணமான நாட்களில்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டு தினமும் கூட்டங்களும், பிரச்சாரமுமாய் இருந்தது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருக்க, காங்கிரஸ் அ.தி.மு.கவோடு கூட்டு வைத்து இந்திரா காந்தி மரணத்தை மக்கள் முன் வைத்துக் கொண்டிருந்தது. சிதம்பரமும் டிரான்ஸ்பரில் திருநெல்வேலி சென்று விட்டபடியால், கூட்டங்களைக் கேட்கப் போவதுதான் பொழுது போக்காய் இருந்தது. எம்.ஜி.ஆர் திரும்ப வந்து முதல்வராவார் என்று ஒருபக்கம் பிரச்சாரம் செய்ய, டி.ராஜேந்தர் செத்துப்போன கன்னுக்குட்டியை வைத்து பால் கறக்க நினைக்கிறார்கள் என்று தி.மு.கவுக்காக பிரச்சாரம் செய்தார். எல்லாம் வேடிக்கையாக இருந்தது.

புதிதாக மாற்றலாகியிருந்த அழகர்சாமியும், நாகராஜும் எங்களோடு வந்து தங்கியிருந்தனர். ஜீவலிங்கம் ரூமிலிருக்கும் போதெல்லாம் பாடிக் கொண்டிருப்பார். வாசலில் வந்து குளிருக்கு சாக்கு மூடி உட்கார்ந்திருக்கும் ஆடு மேய்க்கிறவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பார். இரவின் பூச்சி சத்தங்களோடு எங்களுக்குள் பேசுவதற்கு அரசியலும், சங்கம் குறித்த செய்திகளுமே பெரும்பாலும் அப்போது முன்வந்து நின்றன. அழகர்சாமி எம்.ஜி.ஆர் பக்தர். அ.தி.மு.கவும் காங்கிரஸும் ஜெயித்ததற்கு நாடார் மெஸ்ஸில் பிரியாணி வாங்கித் தந்தார்.

வங்கியில் நிகழ்ச்சிகள் வேகமாக நடக்க ஆரம்பித்தன. நிர்வாகம் ஒப்புக்கொண்ட மாதிரி சங்கத்தின் பொதுச்செயலாளர். கிருஷ்ணகுமாருக்கு தலைமையலுவலகத்திற்கு மாறுதல் அளிக்கவில்லை. கிளைகளுக்கு அடிப்படை வசதிகள், கடைநிலை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, என்று இன்னும் சில கோரிக்கைகளை முன்னிறுத்தியும், தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஊழியர்களை பந்தாடுகிற மாறுதல் உத்தரவுகளை எதிர்த்தும் 1985 ஜனவரி 23ம் தேதி தர்ணா என்றும், 24ம் தேதி அடையாள உண்ணாவிரதம் என்றும் சங்கத்திலிருந்து சுற்றறிக்கை வந்தது.  எங்கும் அமைதி நிலவியது. திருமலையின் கார் என்றையும்விட அதிகமாக உறுமிக்கொண்டு வங்கிக்கு வந்து போனது. தர்ணாவுக்கு வர வேண்டாம் என பகிரங்கமாக பிரச்சாரமும் செய்யப்பட்டது. அந்த தர்ணாவுக்கு உண்மையில் மொத்தம் பத்தொன்பது பேர்களே வந்திருந்தார்கள். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இருவரே வரவில்லை. தலைமையலுவலகத்திலிருந்து யாரும் செல்லவில்லை.

(இன்னுமிருக்கிறது...)

முந்தைய இருட்டிலிருந்து பகுதிகள்:
 1 ,   2   ,   3  ,   4

29.7.11

இருட்டிலிருந்து - 4

கடந்தகாலம் எப்போதும் வசந்தத்தின் பூக்களை சொறிந்து கொண்டும், நிகழ்காலம் எப்போதும் கோடையின் தணலை கொட்டிக் கொண்டும் இருக்கின்றன.

-மாதவராஜ்

பழையபேட்டை கிளையில் எதோ பிரச்சினையாம், சேர்மன் திருமலை  கிளையில் இருந்தவர்களை எல்லாம் கடுமையாக பேசிவிட்டாராம் என்றுதான் முதலில் தலைமையலுவலகத்தில் பேச்சு அடிபட்டது. மேலும் விபரங்களைக் கேள்விப்பட பட ஒரு சுவராஸ்யம் சேர்ந்து கொண்டது. ஆள் ஆளுக்கு அதை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த கிளையின் மேலாளராய் இருந்த கோமதிநாயகம் சொல்லிக் கொடுத்துத்தான் திருமலை அங்கு போயிருந்தாராம். அங்கு கடைநிலை ஊழியராய் வேலை பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியன்1 என்னும் மணியிடம் "நீ எப்பவும் லேட்டாத்தான் வருவியோ' என்று கேட்டிருக்கிறார். மணி மறுத்திருக்கிறார். "நோ...நோ.. உன்னைப்பத்தி நிறைய கம்ப்ளைண்ட் வந்திருக்கு. ஐ யம் குட் ஃபார் குட், பேட் ஃபார் பேட்" என்று அதட்டலாய் திருமலை சொல்லவும் மணி "மன்னிக்கணும். இங்கில¦ஷ்ல என்ன பேசுறீங்கன்னு தெரியல" என்று சொல்லியிருக்கிறார். "என்ன... கிண்டல் பண்றியா, இதெல்லாம் பழைய சேர்மன்கிட்ட வச்சுக்க" என்று சொல்லிவிட்டு அந்தக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த ரோஹிணி என்பவரிடம் திருமலை தனது கோபத்தைக் காட்டியிருக்கிறார். இங்கிலிஷில் பொரிந்து தள்ளியிருக்கிறார். அப்புறம் வேகமாய் வெளியேறி இருக்கிறார்.

திருமலை சென்றபிறகு ரோஹிணி அழுதிருக்கிறார்கள். 'அவர் என்ன சொல்லிவிட்டுப் போனார் என்று உங்களுக்குத் தெரியுமா...கேட்டீங்களா.." என்று புண்பட்டு கேட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் சரிவர திருமலையின் ஆங்கிலத்திற்கு அர்த்தம் புரியாமல் நின்றிருக்கிறார்கள். "ஒங்க கூட எல்லாம் யார் வேலை பார்ப்பார்கள்" என்று திருமலை கேட்டதாகச் சொன்னார்களாம். அவமானமாயிருந்திருக்கிறது. தலைமையலுவலகத்தில் சேர்மனுக்கு நெருக்கமானவர்கள் வேறு ஒரு கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். சேர்மன் போகும் வழியில் வங்கியின் கார் பிரேக் டவுன் ஆகிவிட்டதாம். வாடகைக் கார் ஒன்றை பிடித்துத்தான் சென்றாராம். அந்த எரிச்சலை காட்டி விட்டார் என்றார்கள். 'என்ன நடந்தது என்று முழுசாய்த் தெரியவில்லை, நம்ம என்ன செய்ய முடியும்' என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன்2 சொன்னாராம். சிதம்பரமோ சேர்மனிடம் பேச வேண்டும் என்றார். யூனியன்காரர்கள் சேர்மனை கேள்வி கேட்காமல் மௌனம் சாதிப்பதாய் ஒரு கருத்து உருவாகிக் கொண்டிருந்தது. "சேர்மன் அவங்க ஜாதிக்காரர், அதான் இப்படி" என்று சாத்தூர் மாரியம்மன் கோவில் பக்கத்தில் உள்ள டீக்கடையில் நின்று ஒரு சாயங்காலத்தில் டீயின் ருசியோடு விஷயங்கள் அலசப்பட்டன.

சில நாட்களில் திருமலை மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க ரோஹிணி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகச் சொல்லப்பட்டதும் மொத்தமும்  தீப்பற்றிக் கொண்டது. அதிர்ச்சியும், மௌனமான சந்தோஷங்களும் ஒருசேர ஊழியர்களின் முகங்களில் தென்பட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது சாதரணமானவர்கள் காட்டும் எதிர்ப்பு எல்லாக் காலங்களிலும் சிலாகிக்கப்படுகிறது. அடுத்த நாளே ரோஹிணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மணி ஜமீன்கொல்லன் கொண்டான் கிளைக்கும், வெங்கு சிக்கல் கிளைக்கும் மாறுதல் செய்யப்பட்டார்கள். வங்கியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது போல இறுக்கம் நிலவியது. சிவன் கோவில் தெருவில் இருந்த தலைமையலுவலகத்தில் திருமலையின் கார் சத்தம் கேட்டதும் அனைவரும் நிசப்தமாகிப் போனார்கள். எங்கள்துறை உதவி சூப்பிரண்டட் மெய்யப்பன் கூட திடுமென தனக்கு கூடுதல் அதிகாரம் கிட்டியதாய் அடிக்கடி எல்லோரையும் உற்றுப்பார்த்துக் கொண்டார். இத்தனைக்கும் நடுவில் வழக்கம் போல அமைதியாய் இருந்த சூப்பிரண்டட் இஸ்மாயில்3 மரியாதைக்குரியவராய் தெரிந்தார். எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் போய், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வேளை அது. எங்காவதிருந்து "இறைவா...உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு" என்று பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. 

பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த கட்டிடத்தில் எங்களோடு பக்கத்தில் இருந்த அக்கவுண்ட்ஸ் துறையின் கடைநிலை ஊழியர் பெயரும் மெய்யப்பன்தான்.  அவர் திருமலை குறித்து மேலும் மேலும் செய்திகளை புதிது புதிதாக கொண்டு வந்து கொண்டிருந்தார். ஒரு கிளையின் மேலாளரை "பாஸ்டர்ட் ஒனக்குல்லாம் எவண்டா வேலை கொடுத்தான்" என்று கேட்டாராம். கிருஷ்ணகுமார் பணிபுரிந்து கொண்டிருந்த ராமநாதபுரம் கிளைக்குச் சென்று "ஷோ மீ த யூனியனிஸ்ட்.. ஐ வில் கிக் ஹிம்" என்று இரைந்திருக்கிறார். சங்கத்தின் பொறுப்பில் இல்லாததால் கிருஷ்ணகுமார் அமைதியாக இருந்தாராம். அப்படியே திருமலையை எதிர்த்து பேசியிருந்தாலும் சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் தனக்காக பேசுவார்களா என்ற அவநம்பிக்கையால் அவர் அப்படி இருந்துவிட்டதாக கிருஷ்ணகுமாரின் மௌனத்துக்கு காரணங்கள் கூறப்பட்டன. எங்கும் எதிர்ப்புக் குரல்கள் முணுமுணுப்புகளாக அரவமில்லாமல் எழுந்து கொண்டிருந்தன.

நடப்பதையெல்லாம் கேள்விப்பட்டாலும் பெரிதாக ஒன்றும் ஆர்வம் காட்டாமல் நான் பாட்டுக்கு என்னுடைய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். கிரிக்கெட் விளையாடப் போவதில் சாத்தூரில் சில நண்பர்கள் கிடைத்திருந்தார்கள். கணையாழிக்கு இரண்டு கவிதைகள் அனுப்பியிருந்தேன். சென்னையிலும், கோயம்புத்தூரிலும் இருந்த அண்ணன்களுக்கும், பெங்களூரில் இருந்த தம்பிக்கும் கடிதங்கள் எழுதி, பதில்களுக்காக காத்திருந்தேன். எங்கள் அலுவலகத்திற்கு ஐந்தாறு கட்டிடங்கள் தாண்டி இருந்த ஆக்ஸ்போர்டு பள்ளிக்குப்4 போய் வருகிற குழந்தைகளை உதவி சூப்பிரண்டட்டின் எரிச்சலான பார்வையையும் அலட்சியப்படுத்தி பார்த்துக் கொண்டிருப்பேன்.  சென்னையில் தனது தங்கையை பள்ளிக்குச் சில நேரங்களில் அழைத்துச் செல்லும் அம்முவின் ஞாபகம் வரும்.  இரவில் சிதம்பரத்தோடு பேக்பைப்பர் அடித்து, இரண்டு பச்சை முட்டைகளை உடைத்து குடித்து, சில புரோட்டாக்களையும், மேலும் சில ஆஃப்பாயில்களையும் விழுங்கி படுத்துக் கொண்டாலும் எதையோ இழந்து போன மாதிரி இருக்கும். கடந்தகாலம் எப்போதும் வசந்தத்தின் பூக்களை சொறிந்து கொண்டும், நிகழ்காலம் எப்போதும் கோடையின் தணலை கொட்டிக் கொண்டும் இருக்கின்றன. இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்' மீட்டும் ஏக்கங்களில் புதைந்து கொள்வேன்.

இலக்கியம் பேசுவதற்கு அருகில் யாரும் இருக்கவில்லை. மகரபூஷணம் இருக்கும் போது ஒருதடவை மணிசங்கர் லாட்ஜுக்கு நடுராத்திரியில் வந்த சோமு5 கொஞ்சம் பேசினார். ஜோல்னாப் பையோடு வந்த அவரிடம் சில ரஷ்யப் புத்தகங்கள் இருந்தன. கல்கியின் 'பொன்னியின் செல்வனி'ல் 'அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்' என்று பூங்குழலி பாடியது அவர் தெரிந்திருக்கவில்லை. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' அவர் படித்திருக்கவில்லை. ஆனாலும் நான் பேசியபோது அமைதியாக கேட்டுக் கொண்டார். எனது கவிதைகளை படித்தார். சில விமர்சனங்களைச் சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சத்தில் விடிகாலை நான்கு மணிக்குப் போல அவர் எழுந்து போனது மட்டும் அரைகுறைத் தூக்கத்தில் நினைவிலிருந்தது. 

மகரபூஷணமும் சோமுவும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர்களாம். சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்துக்கு வந்துவிட்டு இரவில் தங்கிவிட்டு திருச்செந்தூருக்கு சென்றதாய் விடிந்தபிறகு மகரபூஷணம் சொன்னார். இப்போது விளாத்திக்குளம் அருகில் அரியநாயகிபுரம் கிளையில் வேலை பார்க்கிறாராம். இதற்கு முன்னர் சோமு தலைமையலுவலகத்தில் பணிபுரிந்தாராம். அப்போது பிசினஸ் டிப்பார்ட்மெண்ட் சூப்பிரண்டட் சுப்பிரமணியம்6 ஒருதடவை அவரை சொடக்குப் போட்டு அழைக்க, சோமு கடுமையாக கோபப்பட்டு, தலைமையலுவலகத்தில் அனைவரையும் வெளியே அழைத்து ஸ்தம்பிக்க வைத்தாராம். கடைசியில் சுப்பிரமணியம் மன்னிப்பு கேட்ட பிறகே அனைவரும் வேலைக்கு வந்தார்களாம்.

அந்த நிகழ்ச்சியை திரும்பவும் வங்கியில் பேச ஆரம்பித்தார்கள். அப்போது சங்கம் சரியாக இருந்ததாகவும், இப்போது சோரம் போய்விட்டதாகவும் வெளிப்படையாக பேசினார்கள். வங்கியில் பணிபுரிபவர்களுக்கு மரியாதையில்லை, இந்த யூனியன்காரர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பது பரவிக்கொண்டே இருந்தது. ஸ்பான்ஸர் வங்கியான ஐ.ஓ.பி மூலமாகவே ரோஹினியின் சஸ்பென்ஷன் விலக்கப்பட்டதாகச் சொன்னார்கள். சிதம்பரத்திடம் அவர் வீட்டில் வைத்து இதுபற்றி பேசும் போதெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். நடக்கிற விஷயங்களும், சேர்மனின் நடவடிக்கைகளும் அவருக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிந்தது. 'சேர்மனிடம் பேசியிருக்கிறோம், எல்லாம் சரியாகிவிடும்' என்று சொல்லி நிறுத்திக் கொள்வார். 

அவரைப் பார்க்க பாவமாய் இருந்தது. வெளியே பேசுவது எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதையெல்லாம் சொல்லவும் எனக்கு மனமில்லை. கிருஷ்ணகுமார் தலைமையில், பழையபேட்டை மணி, விஸ்வநாதன்7, கணேசன் எல்லோரும் கிளை கிளையாய் செல்வதாகவும், சேர்மனையும், யூனியனையும் எதிர்த்து பிரச்சாரம் செய்வதாகவும் மெய்யப்பன் ரகசியமாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.  சங்கத்தின் செயற்குழுவில் இருந்த சோலைமாணிக்கமும்8, சோமுவும் பகிரங்கமாக சங்கத்தலைமையை விமர்சிப்பதாகவும் சொன்னான். ‘என்னண்ணே...இதெல்லாம் உண்மையா'" என்று சங்கர் சிதம்பரத்திடம் கேட்டான். சிதம்பரம் ஒப்புக் கொண்டார். "பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். கூட்டிர்ற வேண்டியதுதான்." என்றார். "நீ ஜெயிச்சிருவியாண்ணே" என்று சங்கர் கேட்டுச் சிரித்தான். "நாஞ் ஜெயிக்காம யார்டா இங்க ஜெயிப்பா? பத்துருவோம்." என்று வீறாப்பாய் பதில் வந்தது. 

அந்த நாட்கள் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தன. அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருநாள் காலை பதினொன்றரை மணிக்கு "இந்திரா காந்தியை சீக்கியக் காவலாளியே சுட்டுக் கொன்னுட்டானாம்" என்று தகவல் யாரோ சொல்ல பதற்றம் சூழ்ந்தது. வெளியே கடைகள் எல்லாம் சடசடவென மூடப்பட்டன. ஆக்ஸ்போர்டு குழந்தைகளை அவரவர் தாய்மார்கள் வந்து அள்ளிக் கொண்டு சென்றார்கள். லேசாய் ஒருபக்கம் வெள்ளை முடி தெரியும் இந்திரா காந்தியின் முகம் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது. மதியத்திற்கு மேல் வங்கியும் இயங்கவில்லை. நல்லவேளை ஆச்சி மெஸ் திறந்து வைத்திருந்தார்கள். ஆனால் இரவு சாப்பாடு இருக்காது என்று சொல்லி விட்டார்கள். சாயங்காலம் ஒரு காலியான சிமெண்ட் லாரியில் ஏறி தூத்துக்குடிக்கு நான், ஜீவலிங்கம், முருகன் பயணமானோம். கோவில்பட்டியில் வைத்து வண்டியை மடக்கி சிலர் திருப்பி அனுப்பி விட்டார்கள். மணிசங்கர் லாட்ஜிக்குத் திரும்பிய போது சட்டை, பேண்ட், உடம்பு பூராவும் சிமெண்ட் முலாம் பூசியிருந்தது. குளித்து படுத்த போது இந்திரா காந்தி முகம் ஞாபகத்துக்கு வரவில்லை.

காலையில் சிதம்பரத்தை பார்க்கச் சென்றோம். அவர் இல்லை. சிகரெட், டீக்குக் கூட வழியில்லை. உள்ளூரில் வேலை பார்த்த ஆர்.வீ.ஆர் என்று அழைக்கப்படும் வரதராஜனும்9, ஆர்.எஸ்.என்10 என்று அழைக்கப்படும் சங்கரநாராயணனும் உதவி செய்தார்கள். அவர்கள் இருவரும் சேர்மன் செக்ரட்டரியேட்டில் பணிபுரிபவர்கள். யூனியன் மீது அவர்களுக்கு எந்த மரியாதையும் இருக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அப்போது. ஆனால் அன்றைக்குத்தான் தெரிந்தது அவர்களுக்கு சேர்மன் மீதும் நல்ல அபிப்ராயம் இல்லையென்பது. அவர்கள் பேச்சிலேயே குறிப்பாய்த் தெரிந்தது. சிதம்பரத்தின் தன்னம்பிக்கை மீது பரிதாபம்தான் வந்தது.

அடுத்த சில நாட்களில் பொதுக்குழுவிற்கான சர்க்குலர் சங்கத்திலிருந்து மாரியப்பன் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார். சங்கத்தில் பொறுப்பில் இப்போது இருப்பவர்களே தொடர்ந்து இருக்க வேண்டும் என சேர்மன்  திருமலை விரும்புவதாக வெளியே சொல்லப்பட்டது. கோவில்பட்டியில் வைத்து அதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை சேர்மனே ரகசியமாக நடத்தியதாகவெல்லாம் பேச்சு வந்தது. கிருஷ்ணகுமார் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக இன்னொரு பக்கமிருந்து செய்தி வெளியானது. சிதம்பரத்தை கொஞ்ச நாளாய் பார்க்க முடியவில்லை. அவரும் தனக்கு ஆதரவு திரட்டிக்கொண்டிருந்தார். பரபரப்பாய் பொதுக்குழுவிற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

1. சுப்பிரமணியன் - இப்போது PGBEA வின் உதவிப்பொதுச்செயலாளர். மேலச்செவல் கிளை
2. மாரியப்பன் - PGBOA வில் பொதுச்செயலாளராய் இருந்தார். இப்போது கீழவெளிவீதி கிளையில் அலுவலர்.
3. இஸ்மாயில் - ரிடையர் ஆகிவிட்டார்.
4. ஆக்ஸ்போர்டு பள்ளி - இப்போது வாசு ஜவுளி ஸ்டோர்.
5. சோமசுந்தரம் - PGBEA வில் தலைவர் உட்பட முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். இப்போது ஆறுமுகநேரி கிளையில் கிளர்க்காக இருக்கிறார்.
6. E.சுப்பிரமணியம் - ரிடையர் ஆகிவிட்டார்.
7. விஸ்வநாதன் - இப்போது PGBOUவின் செயற்குழு உறுப்பினர். ஆமத்தூர் கிளை மேலாளர்.
8. சோலமாணிக்கம் - இப்போது PGBEA பொதுச்செயலாளர். 
9. ஆர்.வரதராஜன் - இப்போது சித்துராஜபுரம் கிளை மேலாளர்.
10 ஆர்.சங்கர நாராயணன் - இப்போது திருச்சி கிளையின் அலுவலர்.

(இன்னுமிருக்கிறது...)

இருட்டிலிருந்து முந்தைய பகுதிகள்: 1    2    3