Showing posts with label politics. Show all posts
Showing posts with label politics. Show all posts

24.5.12

பெட்ரோல் விலை உயர்வு: அணி திரண்டு எதிர்ப்போம்!



காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவை நாட்டு மக்கள் மீது ஈவிரக்கமற்ற முறையில் மற்றுமொரு தாக்குதலை நிகழ்த்திக் கொண்டாடியுள்ளது. பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இம்முறை லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50 அளவிற்கு மிகக்கடுமையான உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு புதனன்று நள்ளிரவு முதலே அமலுக்கு வருகிறது என்றும் அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை இடைவிடாமல் அரசு உயர்த்தி வருவதன் விளைவாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மேலும் தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் லிட்டர் ஒன் றுக்கு ரூ.7.50 அளவிற்கு பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறு வனங்கள் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு நிர்ணயம் தொடர்பாக அரசுக்கு இருந்த கட்டுப்பாட்டை கைவிட்டதன் விளைவாக மாதத்திற்கு ஒருமுறை சர்தேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப உள்நாட்டில் பெட்ரோல் விலையை மாற்றி அமைப்பதாகக் கூறி எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ச்சியாக விலையை உயர்த்தி வருகின்றன. இதற்கு அரசு முழு அனுமதி வழங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. இந்த காலக் கட்டத்தில் மொத்தம் 39 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முதலாவது ஐந்தாண்டு காலத்தில் 22 முறை பெட் ரோல் விலை உயர்த்தப்பட்டது. தற்போது கடந்த மூன்றாண்டு காலத்தில் மட்டும் 17 முறை விலை உயர்த்தப்பட் டுள்ளது. இதற்கு முன்பு 2008ல் ரூ.5.43, 2009ல் ரூ.4.29, 2011 மார்ச் 2ம்தேதி ரூ.5.29 என உயர்த்தப்பட்டதே மிக அதிகமான உயர்வாக இருந்தது. தற்போது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50 என மிக அதிகமான அளவு உயர்த்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், நமது ஊதியத்திலிருந்து மாதமாதம் சராசரியாக ரூ.500 முதல் ரூ.1000 வரை, மத்திய அரசு வழிப்பறி செய்கிறது என்பதுதான் உண்மை.

பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்கவே முடியாதது என்றும், சர்வதேச சுழலால்தான் இந்த உயர்வு என்பது போல பத்திரிகைகளும், சில அறிவுஜீவிகளும் சொல்கின்றனர். அதுகுறித்த உண்மைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியென்றால் உலக மார்க் கெட்டில் கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை.

2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண் ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 54 ஆகத்தான் இருந்தது. நவம்பர் 2011ல் ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் அப்போது வாங்கிக்கொண்டு இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா. ஏன் இந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்?

எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?

பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சத விகிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவிகிதம் உள்நாட்டில் தயாராகும் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால் மத்தியஅரசு எப்படியெல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்துகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங்கியுள்ள வரியினங்கள் வருமாறு (24.8.2011)

ஆதார விலை- ரூ. 24.23

சுங்கத்தீர்வை - ரூ. 14.35

கல்விவரி - ரூ. 0.43

விற்பனையாளர் கமிஷன் - ரூ. 1.05

சுத்திகரிப்பு செலவு - ரூ 0.52

சுத்திகரிப்பு விலையின்மூலதனச்செலவு - ரூ. 6.00

மதிப்புக்கூட்டு வரி - ரூ. 5. 50

கச்சா எண்ணெய் சுங்கவரி - ரூ. 1.10

பெட்ரோல் சுங்கவரி - ரூ. 1. 54

சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00

மொத்தம் - ரூ. 60.72

இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படுகின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங் களின் கொள்ளை லாப கணக்கே... தனி.

அரசுக்கு நஷ்டமா?

பெட்ரோலியத்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள்ள அறிக்கையின்படி 2004 - 05ம் ஆண்டில் பெட்ரோலிய பொருட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ. 15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசு களுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.

இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட்களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத் திருக்கும் வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.2லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி. ஆனால் இதே காலத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ. 23 ஆயிரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட்ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம்தான் மானியமாக வழங்கப்படுகிறது. எப்படி பார்த்தாலும் அரசுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமடைகின்றனவா?

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய் வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டியலில் பார்த்தாலே மன்மோகன், மாண்டேக்சிங் அலுவாலியா வகையறாவின் வருத்தம் புரியும்.

2008ம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.6962.58 கோடி, 2009 ல் ரூ. 2,949.55 கோடி, 2010 ல் ரூ. 10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொருட் களின் விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை அடைந்திருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்யத் துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம். 2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் ( 2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.


நிகர லாபம்
(கோடியில்)
அரசுக்கு செலுத்திய வரி
(கோடியில்)
மொத்த லாபம்
(கோடியில்)
ஐஓசி

5294.00832.276126.27
எச்பிசிஎல்2142.2290.902233.12
பிபிசிஎல்2142.22198.002340.22



உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ், திமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என கூறுகின்றனர் எனத் தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக்கில் சிறிய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்டமாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?

2010- 11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரி பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?. இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவனங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட்ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் 59 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் காரணம் இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு சுங்க வரி சலுகைகளை அளித்திருக்கிறது. அத னையும் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.

இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமே போதுமானது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனியாக வரிச்சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை, உள்நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.

அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன் மோகன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.

இது யாருக்கான அரசு? 


எப்போது பார்த்தாலும் விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். ரேசன் பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரதிற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும் ஒரு சில சலுகைகளையும் வெட்டுவதிலேயே மத்திய காங்கிரஸ் அரசு குறியாக இருந்து வருகிறது.

ஆனால் மறுபுறம், நாட்டின் பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. 2008 முதல் 2010 ம் ஆண்டு வரை பெரும் நிறுவனங்களிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடியை அப்படியே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடி ரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554 கோடி ரூபாயும் நேரடி வரிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில் வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடி ரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழைகளை மேலும் ஏழைகளாக்குவது, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக, மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்து முறியடித்தால் மட்டுமே சாதாரண,நடுத்தர, உழைப்பாளி மக்கள் வாழ்ந்திட முடியும்.

இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே அரசின், அதிகாரவர்க்கத்தின் முகத்திரையைக் கிழித்து, இந்த உண்மையை பேசுகின்றன. இவைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து போராட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றன.

ஒரு சமூகப்பார்வையுள்ள தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களாக, இதனால் நாமும் நமது குடும்பமும் பாதிக்கப்படுகிறது என்கிற யதார்த்தம் புரிந்து கோபம் கொள்கிற மனிதர்களாக நாமும் மத்திய அரசின் இரக்கமற்ற பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து அணி திரள்வோம்!

11.7.11

"சார் அவங்க non-political யூனியனாம். நீங்க political யூனியனாமே?”

இப்படி ஒரு கேள்வியை மீண்டும் ஒருமுறை அண்மையில் சந்திக்க நேர்ந்தது.  அண்மையில் New Recrutimentற்கான இண்டர்வியூ நடந்த போது PGBEAவும், PGBOUவும் தலைமையலுவலத்தின் வெளியே இருந்து, பங்குபெற்ற புதியவர்களுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருந்தோம். “நன்றாக இண்டர்வியூ செய்யுங்கள்”,  ”செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து கொள்ளுங்கள்”, “பதற்றப்படாமல் நிதானமாக பதில் சொல்லுங்கள்” என்று அவர்களை உற்சாகப்படுத்தியும், “நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தும் உள்ளே அனுப்பிக்கொண்டு இருந்தோம்.  தாங்களும் புதியவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம் என அலுவலகத்தின் உள்ளே PGBWUவும், PGBOAவும் உட்கார்ந்திருந்தார்கள்.

இண்டர்வியூ முடித்துவிட்டு வெளியே வந்தவர்களை, “நன்றாக இண்டர்வியூ செய்தீர்களா. விரைவில் ரிசல்ட் தெரியும்” என வழியனுப்பி வைத்துக்கொண்டு இருந்தோம். அப்படி வந்தவர்களில் ஒருவர் நம்மிடம் கொஞ்சம் நின்று யோசித்து, "சார் அவங்க non-political யூனியனாம். நீங்க political யூனியனாமே?” என்று கேட்டார். நாம் சிரித்துக்கொண்டே, “யார் சொன்னார்கள்?” என்று கேட்டோம். “உள்ளே இருக்கிற யூனியன்காரங்க சொன்னாங்க.” என்றார். அவரிடம் அப்போது விளக்கமாக உரையாடுவதற்கு நேரமும், தருணமும் இல்லை. “இங்கு எல்லோரும் political" தான் என்று சுருக்கமாகச் சொல்லி அனுப்பி வைத்தோம்.

Pandyan Grama Bank Employees Association (PGBEA),  மற்றும் Pandyan Grama Bank Officers Union (PGBOU) ஆகிய சங்கங்கள் மீது, Pandyan Grama Bank Workers Union (PGBWU)ம், Pandyan Grama Bank Officers Association (PGBOA)ம் சேர்ந்து இப்படியொரு பிரச்சாரத்தை தாங்கள் பிறந்ததிலிருந்தே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  இது நமது வங்கியில் மட்டுமில்லை, எங்கெல்லாம் சமூகப்பார்வையும், சமரசமற்ற லட்சியங்களும் கொண்ட யூனியன் கள் இருக்கின்றனவோ, அவைகள் மீதெல்லாம் காலம் காலமாய் இப்படியொரு பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள் மற்றவர்கள். இதன் மூலம், பொது சமூகத்திலிருந்து நியாயமான, நேர்மையான சங்கங்களை அந்நியப்படுத்தவோ, அப்புறப்படுத்தவோ அந்த மற்றவர்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இங்கே political  என்ற வார்த்தை எந்த அர்த்ததில் பிரயோகிக்கப்படுகிறது என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.  நமது சங்கங்களில் அனைத்துக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.  அவரவர்களின் அரசியல் சார்ந்த கருத்துக்களுக்கும், முடிவுகளுக்கும் இங்கு இடம் உண்டு. எனவே தனிப்பட்ட ஒருக் கட்சியைச் சார்ந்த political wing ஆக  நமது சங்கங்களைக் கருத முடியாது. அப்படியானால்   நம்மைப் பற்றி political, political  என்று ஏன் மற்றவர்கள் ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டும்?

Politics என்றால் அரசியல். அரசியல் என்றால், ஒரு அரசின் நடவடிக்கைகளும், மக்களை ஆட்சி செய்யும் முறையும் ஆகிறது. அவைகள் குறித்து , எந்த ஒரு பிரஜையும் பேசாமல் இருக்க முடியுமா? அரசு என்றால் என்ன?  சகல இடங்களிலும் அதன் கைகளும், நகங்களும் நீண்டு இருக்கின்றன. ஜாதிச் சான்றிதழ் வாங்கப் போனால் அங்கு தாசில்தார்தான் அரசு. ஒரு வாகனத்தை ஒட்ட ஆரம்பித்தால் ஆர்.டி.ஓ அலுவலகம் அரசு. தெருவுக்குள் இரண்டு பேருக்கு கைகலப்பும், தகராறும் வந்தால் காவல்துறை அரசு. குற்றம் சுமத்தப்பட்டால் நீதிமன்றமே அரசு. பயிர்க்கடனோ, கல்விக்கடனோ, வீட்டுக்கடனோ வாங்க நினைத்தால் வங்கியே அரசு. எனவே நாம் அனைவருமே அரசின் ஏராளமான கைகளுக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அதன் நடவடிக்கைகள் நம்மை பாதித்துக்கொண்டே இருக்கின்றன.

இன்று மாற்றி மாற்றி பெட்ரோல் விலையும், காஸ் விலையும்  கூடிக்கொண்டே இருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்படுகின்றனர். நாமும் அவதிப்படுகிறோம். நமது உழைப்பினால் பெற்ற ஊதியம் இப்படிப்பட்ட விலை உயர்வுகளால் பறி போகிறது. நாம் அரசை விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறோம்.  இது காங்கிரஸ் என்னும் கட்சியின் மீதுள்ள எதிர்ப்பால் வந்த விமர்சனம் அல்ல.  விலைவாசி உயர்வு மீதான விமர்சனத்தால் காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது எழும் எதிர்ப்பு. இதுதான் நமது  அரசியல், இதுதான் நமது politics.

இங்கு non political  என தங்களை ‘புனிதர்களாக’ அடையாளப்படுத்திக்கொள்ளும் சங்கங்கள், நம்மைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை ஒருபோதும் கண்டு கொள்வதில்லை. இடியே விழுந்தாலும் அவர்கள் அமைதியாக இருப்பார்கள். எவனுக்கோ வந்தது என்று கையது கொண்டு வாயது பொத்திக் கொள்வார்கள்.  கேட்டால், "அது politicsங்க. நமக்கெதுக்கு வம்பு. நாம நம்ம காரியத்தை மட்டும் பார்ப்போம். டிரான்ஸ்பர்களை பேசுவோம். அதுக்குத்தானத் தானே நாம் இருக்கோம்” என்று தங்கள் லட்சியங்களை சிலாகிப்பார்கள்.   இதுதான் அவர்களின் அரசியலற்றதன்மை. இதுதான் அவர்களது non-politics.

நாம் அப்படியில்லை. நமது டிரான்ஸ்பர்களைப் பற்றி பேசுவோம். நமது அலவன்சுகளைப் பற்றி பேசுவோம். நமது பாதிப்புகளைப் பற்றி பேசுவோம். ஒரு வங்கி ஊழியனாக, ஒரு பிரஜையாக, ஒரு மனிதனாக நம்மைச் சுற்றி நடக்கும் யாவற்றையும் பேசுவோம். இப்படிப் பேசுவதைத்தான் politics  என்கிறார்கள்.

சரி. தேசமே ஊழலால் புரையோடிச் சீரழிந்து கிடக்கும்போது, அதைப் பற்றிப் பேசாமல் கள்ள மவுனம் சாதிப்பதில் politics இல்லையா? இங்குதான் இந்த political  மற்றும் non political என்னும் சொற்பிரயோகங்களின் உண்மையான அர்த்தங்கள் இருக்கின்றன. அரசை விமர்சனம் செய்தால் politics. அரசை விமர்சனம் செய்யாவிட்டால் non politics. அதாவது அரசை எதிர்த்தால் politics. அரசை ஆதரித்தால் non politics. எப்பேர்ப்பட்ட தந்திரம் இது. இதைத்தான் முதுகெலும்பற்றவர்கள் காலம் காலமாக செய்துகொண்டே இருக்கிறார்கள். இவர்கள்தாம் ஊழலுக்கு எதிராகத் தாங்கள் போராட முன்வராமல் யாராவது ‘ஒரு அன்னா ஹாசாரே’ வந்து எல்லாவற்ரையும் பார்த்துக்கொள்வார் என்று எழுந்து, சாப்பிட்டு, தூங்கியே தங்கள் வாழ்வை அர்த்தமாக்கிக் கொள்வார்கள்.

நாம் ஒரு தொழிலாளிக்கு இருக்க வேண்டிய சமூகக்கடமையை பேசுகிறோம். நமது பிரச்சினைகள் எதனால் ஏற்படுகிறது என பேசுகிறோம். அவற்றை எப்படித் தீர்ப்பது என பேசுகிறோம். நிர்வாகத்தின் மனம் கோணாமல், நிர்வாகத்தைத் தடவிக் கொடுத்து கொடுத்தே காரியம் செய்ய வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். இதுதான் political  மற்றும் non political களுக்கு இடையேயான அடிப்படை வேறுபாடு.  “எல்லாவற்றையும் கேள்வி கேள்” என்றால் political. "கேள்வி கேட்காமல் அப்படியே ஒத்துக்கொள்” என்றால் non political.

நாம் யாருமே politicsக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. உப்பு, மிளகாய், காய்கறி, நடக்கும் ரோடு, போகும் பஸ், வாங்கும் டிக்கெட் என வாழ்வின் கணங்கள் ஒவ்வொன்றிலும் politics இருக்கிறது. அவைகளைப் பற்றி யாராவது பேசாமல் இருக்கிறோமா? பேசினால்தான் நமக்கு சூடும், சொரணையும் உயிரும் இருப்பதாக அர்த்தம். நாம் உயிருள்ளவர்கள். political ஆகவே இருப்போம்.

அடுத்தது, அந்த மற்றவர்கள் நம்மைப் பார்த்து அடிக்கடி,  ‘கம்யூனிஸ்டுகள்’,  ‘லெஃப்ட்’,  ‘எப்போதும் போராடுவார்கள்’ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதைப் பற்றி அடுத்த விவாத களத்தில் தொடர்வோம்.

இந்த விவாதம் குறித்து நீங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க இங்கே செல்லுங்கள்.