Showing posts with label cir2014. Show all posts
Showing posts with label cir2014. Show all posts

3.5.14

PGBEA - PGBOU Circular 7/2014 dated 03.05.2014



சுற்றறிக்கை: 7/2014         நாள்: 03.05.2014

பாராளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. நமக்கும், நம் பிரச்சினைகளுக்கும் யார் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நாம் வக்களிப்போம் என்னும் நோக்கத்தில் நாம் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க BEFI அழைப்பு விடுத்திருந்தது. அதனை நமது சென்ற சர்க்குலரில் வெளியிட்டு இருந்தோம். உடனே எதோ குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்புடன் நடந்துகொண்டதாக PGBOA சர்க்குலரில் புலம்பி இருக்கிறது.  புதிய தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு. அதை அமல்படுத்தியது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. சீர்திருத்தங்கள் என்னும் பெயரில் வங்கித்துறையையும், வங்கி ஊழியர்களின், அலுவலர்களின் வாழ்க்கையை சிதைக்கும் கொள்கைகளில் இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. பெருமுதலாளிகளுக்கு சலுகைகள் செய்து கொடுத்து பொதுமக்களை வாட்டி வதைக்கும்  நடவடிக்கைகளிலும் இந்த இரு அரசுகளுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இவைகளை எதிர்த்து வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் போராடுகிற போதெல்லாம்  ஆதரவு தந்தவர்கள் இடதுசாரி கட்சிகள் மட்டுமே. எனவேதான் நாம் அவர்களை ஆதரிப்போம் என்றோம். இது கட்சி அரசியல் அல்ல. வர்க்க அரசியல். தொழிலாளர்களின் வர்க்க அரசியல். இதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் அவர்களுக்கு சிந்தனையில் கோளாறு இருப்பதாக அர்த்தம்.  அரசியல் அற்றவர்கள் நாங்கள்' எனச் சொல்வதுதான் அவமானத்துக்குரியதும் அசிங்கமானதுமாகும்.

நமது வங்கியில் இட ஒதுக்கீட்டில் நடக்க இருந்த மோசடி:

புதிய பணிநியமனம் செய்வதில் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் காட்டிய கால தாமதத்தை நமது சென்ற சர்க்குலரில் கடுமையாக விமர்சித்து இருந்தோம். அதற்குப் பிறகு அவசரம், அவசரமாக ஆபிஸர்களுக்கு மட்டும் இண்டர்வியூ தேதியை அறிவித்து, நிர்வாகத்திலிருந்து அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதுகுறித்து எந்தச் செய்திகளையும், தகவல்களையும் வங்கிக்குரிய அதிகாரபூர்வ வெப்சைட்டில் வெளியிடவில்லை. இந்த நிர்வாகம்  Transparent-ஆக இருக்க மறுக்கிறது என்பதன் அடையாளம்தான் இது.

அழைப்புக் கடிதங்கள் தனித்தனியாக அனுப்பப்பட்ட பிறகுதான், அதிகமான மார்க்குகள் எடுத்தவர்கள் சிலர் இண்டர்வியூக்கு அழைக்கப்படாதது தெரிய வந்தது. அதன் பிறகு நாம் விசாரிக்க ஆரம்பித்தால் ஒரு மிகப்பெரும் மோசடி வெளிப்பட்டது. இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தாமல் இண்டர்வியூக்கு  தகுதி பெறுவதற்கு கீழ்க்கண்டவாறு  கட்-ஆப் மார்க்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தன.

General Category - 108
OBC category - 123
SC/ST category - 112

அதாவது, எழுத்துத் தேர்வில் 108 மதிப்பெண்கள் பெற்ற  ஜெனரல் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவில் கலந்துகொள்ள முடியும். ஆனால் 111 மார்க்குகள் எடுத்த எஸ்.ஸி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவில் கலந்து கொள்ள முடியாது. 122 மார்க்குகள் பெற்ற ஓபிசி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கலந்துகொள்ள முடியாது.

பார்த்த மாத்திரத்தில் மிகப்பெரும் கோளாறு இருப்பது தெரிந்தது. இது எப்படிநடந்தது என்று ஆராயும்போது, நிர்வாகமும் IBPSம் சேர்ந்து நடத்திய  மோசடி வெளிப்பட்டது. ஜெனரல் பிரிவில் முதலில் கட் -ஆப் மார்க்குகள் நிர்ணயம் செய்ய வேண்டும். அதில் அதிமான மார்க்குகள் எடுத்த எஸ்.ஸி/எஸ்.டி பிரிவினரும், ஓபிசி பிரிவினரும் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் போக மீதமிருக்கும் எஸ்.ஸி/எஸ்.டி பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினருக்கும் தனித்தனியாக கட்-ஆப் மார்க்குகள் நிர்ணயம் செய்ய சேண்டும். ஆனால் நமது வங்கியில் ஜெனரல் பிரிவில் அதிகமான  மார்க்குகள் எடுத்த எஸ்.ஸி/எஸ்.டி பிரிவினரும், ஓபிசி பிரிவினரும் சேர்க்கப்படவில்லை. உடனடியாக நமது இரு சங்கங்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினோம். நமது வெப்சைட்டில் இதனை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டோம். நம் வங்கியில் இருக்கும் அனைத்து சங்கங்களுக்கும் இந்த அநியாயத்தை தெரிவித்து, அனைவரும் சேர்ந்து இதனை முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இதனைக் கேள்விப்பட்டு, இது சமூக நீதிக்கும், இந்திய அரசியல் அமைப்பு விதிகளுக்கும் எதிரானது என வங்கி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி உடனடியாக சரி செய்ய வேண்டுகோள் விடுத்தது.

நாம் 30.4.2014 வங்கியின் சேர்மனை சந்தித்துப் பேசினோம். சரிசெய்வதற்கான முயற்சிகள் எடுப்பதாகச் சொன்னார். ஆனால் இண்டர்வியூ திட்டமிட்டபடி 3.5.2014ல்  நடக்க இருப்பது தெரிய வந்ததும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  சார்பில் 2.5.2014 அன்று தலைமையலுவலகத்தின் முன்பாக ஆர்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. போஸ்டர்கள் அடித்தும், பத்திரிகை செய்திகள் வாயிலாகவும் பொது மக்களிடத்தில் இவ்விஷயத்தைக் கொண்டு சென்று, மத்திய மாநில அரசுகள் உடனடியாக இந்த முக்கியமான பிரச்சினையில் தலையிட வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில், 2.5.2014 பிற்பகலில் நிர்வாகம் தனது முடிவை மறு பரீசீலனை செய்து, தாங்கள் ஏற்கனவே நிர்ணயித்த கட் -ஆப் மார்க்குகளின் படி இண்டர்வியூ நடத்தாமல், சுமூகமாக பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வந்தது. நம்மோடும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடும் பேச்சுவார்த்தை நடத்தியது.  இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாநிலச் செயலாளர் கணேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஞானகுரு, பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியனின் துணைத் தலைவர்  பி.எஸ். போஸ் பாண்டியன்,  பொதுச் செயலாளர் சங்கரலிங்கம்,  பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாலர் ஜா. மாதவராஜ், எஸ்.சி/எஸ்.டி. நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.ராஜேந்திர சோழன், பாண்டியன் கிராம வங்கி வொர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பாலாஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகத் தரப்பில் முதன்மை மேலாளர்கள் ஞானப்பிரகாசம் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மதிப்பெண்கள் தவறானவை என்பதை ஏற்றுக் கொண்ட பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், அதிகாரிகள் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருக்கும் அனைவருக்கும் அழைப்பு அனுப்புவது என்று முடிவு செய்தது. நேர்காணல் நிறைவு பெற்று வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு உரிமைக்கு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்பதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தின. அதையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

தோழர்களே, நமது முன்முயற்சியால் ஒரு மிகப்பெரிய அநீதி களையப்பட்டு இருக்கிறது. இந்திய அரசின் இட ஒதுக்கீடு முறையை சரியாக வருங்காலத்திலும் இந்த  நிர்வாகம் பின்பற்றுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆதரவு தந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும், நமது வங்கியில் உள்ள PGBWU, PGBOA, PGB SEWA சங்கங்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

CC / DPN லோன்கள் படுத்தும் பாடு!

CC / DPN ஐ.ஓ.பியில் உள்ளது போல நமக்கும் வழங்கப்படும் என நிர்வாகம் சொல்லியது. ஏப்ரல் முதல் வாரத்தில் சர்க்குலரும் வெளியிட்டது. அதிலேயே ஏராளமான கண்டிஷன்களைப் போட்டது. ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளவர்களுக்கும், லீவு regularise செய்யப்படாதவர்களுக்கும் கிடையாது என்றார்கள். ஒழுங்கு நடவடிக்கைகளை காலாகாலத்தில் முடிக்காததற்கும், leave regularise  செய்யப்படாததற்கும் நாம் காரணமல்ல. அவர்கள் மீது தவறுகளை வைத்துக்கொண்டு ஊழியர்களையும், அலுவலர்களையும் ஏன் தண்டிக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு இன்று வரை நிர்வாகத்திடம்   இருந்து பதில் இல்லை. இந்த நிலையில் Time-barred அக்கவுண்டகளுக்கு ஆபிஸர்கள் பொறுப்பு என பலருக்கும் CC/DPN லோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இது சர்க்குலரில் விதிக்கப்படாத கண்டிஷன். தன்னிஷ்டத்திற்கு இந்த நிர்வாகம் நடத்தும் அராஜகம் இது.

மீதமுள்ளவர்களுக்கு எதாவது ஒரு ‘கொரி' போட்டு திருப்பி அனுப்பப்படுகிறது. DPN லோனில் overdue இருக்கிறது என்றெல்லாம் காரணங்கள். DPN லோனுக்குரிய instalment தலைமையலுவலகம்தான் நிர்ணயிக்கிறது. மாதாமாதம் தலைமையலுவலகம்தான் பிடிக்கிறது. அப்புறம் எப்படி overdue வரும்? மாஸ்டரில் தவறு இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். Overdue இருப்பதை பார்க்கத் தெரிந்த டிபார்ட்மெண்ட் அதனை அடுத்த கணமே சரி செய்ய நடவடிக்கை எடுப்பதை விடுத்து, மொத்த லோன் பேப்பர்களையும் கொரி போட்டு திருப்பி அனுப்புவது எந்த மாதிரியான செயல்?

இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களும், அலுவலர்களும் ஒரு லோன் போட்டு விட்டு, இப்படி அலைக்கழிக்கப்படுவது, அவர்களை அவமானப்படுத்தும் செயலாகவே நாங்கள் கருதுகிறோம். நாமொன்றும் குற்றவாளிகளுமல்ல, அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரர்களுமல்ல.

400க்கும் மேற்பட்ட CC / DPN  லோன்கள் குவிந்துகிடக்க, இந்த இருபது நாட்களில் 60 லோன்களே சாங்ஷன் செய்யப்பட்டு இருக்கின்றன. என்ன நிர்வாகம் இது. இதில் இந்த வங்கி லாபம் அடைவதைப் பற்றியும், பல parameterகளில் சாதனை புரிந்திருப்பதைப் பற்றியும் நாங்கள் பெருமைப்பட என்ன இருக்கிறது. சந்தோஷப்பட  என்ன இருக்கிறது. நிர்வாகம் தருகிற ஸ்வீட் பாக்ஸ் இனிக்கவில்லை.

மிக முக்கிய வெற்றி:

மேலசெவல் கிளையில் மெஸஞ்சராய் பனிபுரிந்துவந்த தோழர்.செல்வராஜ், அதிகமாக லீவு எடுத்துவிட்டார் என்று அவர் ரிடையர் ஆவதற்கு ஒரு நாள் முன்பு ஒரு சார்ஜ் ஷீட் கொடுத்தது நிர்வாகம். இது சரியில்லை என நிர்வாகத்துடன் பேசினோம். ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன், “ஒரு பதிலைக் கொடுங்கள். சுமூகமாக முடித்து விடலாம்” என்றார். பதிலைக் கொடுத்தோம். ஆனால் அதனை  ஏற்றுக் கொள்ளாமல், அவருக்கு என்கொயரி போடப்பட்டது. இதுகுறித்து நமது அதிருப்தியை மிஸ்டர் ராமநாதனிடம் தெரியப்படுத்தினோம். சீக்கிரமாக என்கொயரி நடத்தி முடித்து விடலாம் என்றார் அவர். இதுதான் மிஸ்டர் ராமநாதனின் கழுத்தறுக்கும் பாணி. 2013 ஜூன் மாதம் ரிடையர் ஆன தோழர்.செல்வராஜுக்கு இன்று வரை என்கொயரி நடத்தி முடிக்கப்படவில்லை.  கிராஜிவிட்டி கொடுக்கப்படவில்லை. தி.டவுண் கிளையில் அவர் வைத்திருக்கும் நகைக்கடன் கட்ட முடியாமல் ஏலத்துக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. மிகுந்த சிரமங்களுக்கு உள்ளானார் தோழர்.செல்வராஜ். சேர்மன் முதற்கொண்டு அனைவரிடமும் பேசிப் பார்த்தோம். பலனில்லை. அவருக்கு கிராஜுவிட்டி கொடுக்கப்பட வேண்டும் என லேபர் ஆபிஸில் வழக்குத் தொடர்ந்தோம். ரிடைய ஆன நாளில் இருந்து கிராஜுவிட்டி 10 சதவீதம் வட்டியுடன் கொடுக்கப்பட வேண்டும் என இப்போது தீர்ப்பாகி இருக்கிறது.

நமது கோரிக்கைகளும், இயக்கங்களும்:

தீர்க்கப்படாத பிரச்சினைகளை முன்வைத்து, இயக்கம் நடத்துவது எனவும், மே 1ம் தேதி நமது சங்க அலுவலகத்தில் நமது இரு சங்கங்களின் செயற்குழுக்களும் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்க இருப்பதையும் தெரிவித்து இருந்தோம். திட்டமிட்டபடி சங்க அலுவலகத்தில் கூடினோம். முன்னணித் தோழர்கள், மண்டலக் கமிட்டி உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். மார்க்சீய சிந்தனையாளரும், தொழிற்சங்க அனுபவங்கள் நிரம்பப்பெற்றவருமான தோழர். எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் நமது அழைப்பை ஏற்று  ‘மே தினச் சிந்தனைகளை' நம்மோடு பகிர்ந்து கொண்டார். முதலாளி வர்க்கம் எப்படி இந்த அற்புதமான வளங்களையும், மனிதர்களையும் சுரண்டுகிறது என்பதையும், அதை மீட்க நாம் போராட வேண்டிய அவசியத்தையும் இரண்டு மணி நேரம் மிக எளிமையாகச் சொன்னார். அருமையான உரையாடல்களுக்குப் பிறகு, மதியம் நமது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் நடந்தது.

ஒழுங்கு நடவடிக்கைகளை இழுத்தடித்து, பல ஊழியர்களின், அலுவலர்களின் வாழ்க்கையில் விளக்கை ஊதி அணைக்கும் இந்த நிர்வாகத்தின் போக்கில் மாற்றமே இல்லை. ஓய்வு பெறுகிற கடைசி நாட்கள் நிம்மதி குலைந்து, அமைதி இழந்து அலுவலர்கள் தவிப்பதற்கு எந்த விமோச்சனமும் இல்லை. கிளைகளில் பெருகும் வேலைப்பளுவை சரிசெய்யும் நடவடிக்கைகளுக்கான அறிகுறிகளே இல்லை. ஒப்புக்கொண்ட சிறு விஷயங்களைக் கூட நிறைவேற்றுவதற்கும் முனைப்பு இல்லை.  காலதாமதம் என்னும் பெரு நோய்  தலைமையலுவலகத்தைப் போட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறது. தலைமையலுவலகத்தை புனரமைக்க நடவடிக்கைகள் இல்லை.

இவை யாவுக்கும் பின்னணியில் வங்கியின் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனே இருக்கிறார் என குற்றம் சாட்டுகிறோம். அவரது இயல்பும், நடவடிக்கைகளும், அணுகுமுறையும்  மோசமானதாக இருக்கிறது என்பதை நமது அனுபவத்தில் அறிகிறோம். தலைமையலுவலகத்தை புனரமைப்பதில் ஏற்படும் தடங்கல்களுக்கும், CC / DPN லோன்களில் எழுந்திருக்கும் கடுமையான அதிருப்திக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளில் இரக்கமற்று நடந்து கொள்வதற்கும், அவரே மையப்புள்ளியாய் இருக்கிறார். Officers Recruitment விஷயத்தில் cut off marks முன்கூட்டியே தெரிந்தும், வேண்டுமென்றே அதை மறைத்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு இன்று பிரச்சினை பூதாகரமாவதற்கு மிஸ்டர் ராமநாதனே  காரணம். மனித உணர்வுகளுக்கு கொஞ்சங்கூட மதிப்பளிக்காமல் காலதாமதம் செய்வதில் அப்படியொரு கொடூரமான திருப்தி இவருக்குண்டு. அவரது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாற்றுவோம் என எச்சரிக்கிறோம்.

நாம் விரும்புகிற மாற்றங்கள் ஏற்படும் வரையில் நாம் தொடர்ந்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்திருக்கிறோம். அதன்படி-

1) அனைத்து நகரங்களிலும் நமது பிரச்சினைகளை விளக்கி ஃபிளக்ஸ் போர்டுகள் வைப்பது.

2)  நான்கு மண்டல அலுவலகங்கள் முன்பாகவும் கீழ்க்கண்ட தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது.
 
14.05.2014 - துத்துக்குடி
21.05.2014 - நெல்லை
28.5.2014   - விருதுநகர்
04.06.2014 - சிவகங்கை

ஆர்ப்பாட்டங்களையொட்டி, மண்டல வாரியாக கூட்டங்கள் நடத்தப்படும். அதுகுறித்த தகவல்கள் மண்டலச் செயலாளர்கள் மூலம் தோழர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

3) ஜூன் 10 ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஓய்வூதியச் சலுகைகள் பெறாமல் பாதிப்புக்குள்ளான ஓய்வு பெற்ற தோழர்கள் குடும்பத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்துவது.

இந்த கோரிக்கைகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. எனவே அனைத்துச் சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து, ஒன்றுபட்ட இயக்கத்திற்கு திட்டமிடுவது எனவும் கூட்டுச் செயற்குழு தீர்மானித்திருக்கிறது. ஜூன் இரண்டாம் வாரத்தில் மீண்டும் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்போம்.

நமது போராட்ட அறிவிப்புகளுக்குப் பிறகு, LFC/ LTC மற்றும் Lodging expenses to Officers ஆகிய கோரிக்கைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து அனுமதி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. வரவேற்கிறோம். அதே வேளையில் நிறைவேறாத விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. அதற்கான பயணத்தைத் தொடருவோம்.....

தோழமையுடன்



   
(J.மாதவராஜ்)                                              (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA           பொதுச்செயலாளர் - PGBOU                       

24.4.14

PGBEA - PGBOU Circular 6/2014 dated 22.4.2014


சுற்றறிக்கை: 6/2014   நாள்: 22.04.2014

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

மிகுந்த வருத்தத்துடனும், அதிருப்தியுடனும் இந்த சுற்றறிக்கையை வெளியிட வேண்டியிருக்கிறது. பொறுப்புகளை தட்டிக் கழிப்பதும், எல்லையற்ற கால தாமதமும் இந்த நிர்வாகத்தின் இயல்புகளாய் இருக்கின்றன.  பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் காட்டி வந்த பொறுமை, பேச்சுவார்த்தையில் நாம் காட்டிய நிதானம், கடைப்பிடித்து வந்த சுமூகமான நடைமுறை எல்லாவற்றையும் இந்த நிர்வாகம் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறது என நினைக்கிறோம்.

நமது இரு சங்கங்களும் இணைந்து சில கோரிக்கைகளை முன்வைத்து, இயக்கம் நடத்துவது என தீர்மானித்திருந்தோம். அதனை தோழர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரியப்படுத்தி இருந்தோம். இதற்கு இடையில், நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் சில உத்திரவாதங்கள் தரப்பட்டன.

1. பல ஒழுங்கு நடவடிக்கைகளில் முடிவுகள் எடுக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. அதனால் சம்பந்தப்பட்ட தோழர்களின் கிராஜுவிட்டி மற்றும் ஓய்வு காலச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த வங்கியில் பணிபுரிந்த அந்தத் தோழர்களின்  எதிர்காலம் இருண்டு போய் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாய் நாம் தொடர்ந்து இதுகுறித்துப் பேசி வருகிறோம். `இதோ`, `அதோ` என்று இழுத்தடித்துக்கொண்டே இருந்தது நிர்வாகம். கடைசியாக ` இந்த பிப்ரவரி மாதத்தில் முடித்துத் தருகிறோம்` என்றார்கள். பிறகு  `கண்டிப்பாக மார்ச் மாதத்தில் முடித்துத் தருகிறோம்` என்றார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட ஒரு தோழருக்குக் கூட ஒழுங்கு நடவடிக்கை இன்னும் முடித்துத் தரவில்லை.

2. அது போலவே, பிப்ரவரி மாதத்திற்குள் ஆபிஸர்களுக்கும், கிளரிக்கலுக்கும் புதிய பணி நியமனத்தை முடித்து விடுவோம் என்றார்கள். ஏப்ரலுக்குள் ஜெனரல் டிரான்ஸ்பர்கள் போட்டு விடிவோம் என்றார்கள். ஆனால் அதற்கான அறிகுறிகளே இல்லை. ஆபிஸர்களுக்கு மட்டும் பணிநியமனத்திற்கான அறிவிப்பு வெளியானது. இன்னும் இண்டர்வியூ துவக்கப்படவில்லை. கிளரிக்கலுக்கோ எதுவுமே இல்லை. பணி நியமனம் வருகிறது, வருகிறது என்று வேக வேகமாக 22 கிளைகள் மட்டும் திறக்கப்பட்டு விட்டன. கடுமையான ஆள் பற்றாக்குறையிலும், வேலைப்பளுவினாலும் நம் தோழர்கள் அவதிப்படுகின்றனர். பல்லவன் கிராம வங்கியில் பிப்ரவரி மாதத்திற்குள் புதிய பணி நியமனம் முடிந்து விட்டது. நம் வங்கியில் எதுவும் தொடங்கப்படவே இல்லை. கேட்டால் ஐ.ஓ.பியில் இருந்து அனுமதி வரவில்லை என்கிறார்கள். அதற்கு யார் பொறுப்பு? அதற்கு யார் கஷ்டப்படுவது?

3.Ehnancement of LTC/ LFC, Reimbursenment of petrol expenses, Lodging expenses for Officers on par with sponsor Banks  என நாம் பல பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். எதையுமே இந்த நிர்வாகம் நிறைவேற்றவில்லை. 2012, 2013ம் ஆண்டுகளில் வருடக் கணக்கையொட்டி விடுமுறை நாட்களில் பணிபுரிந்ததற்கு overtime Allowance கேட்டோம். இன்று வரை நிறைவேற்றவில்லை.

4. தலைமையலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றியவர்களை, sensitive postகளில் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் இருப்பவர்களை இடமாற்றம் செய்யுங்கள் என வலியுறுத்தி வந்தோம். ஏப்ரல் மாதத்தில், இடமாற்றம் செய்வதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஏப்ரல் மாதமும் முடியப்போகிறது. ஆனால் நிர்வாகத் தரப்பில் அதற்கான முகாந்திரமே இல்லை.

5.150 கோடி லாபம் சம்பாதித்திருப்பது குறித்து சந்தோஷப்படுகிற நிர்வாகம், அதில் compliment to all கொடுப்பதற்கு மட்டும் மறுக்கிறது.

2009ம் ஆண்டில் நிறுத்தி வைத்த Maternity Leave இப்போது கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதை நாம் பாரட்டினோம். பாராட்டுகிறோம். அதற்காக, நாம் மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது. சிறு சிறு சலுகைகளை செய்து கொடுத்துவிட்டு, பெரிய காரியத்தை செய்துவிட்டதாக நிர்வாகம் நினைத்துக் கொள்கிறது. நிர்வாகத் தரப்பில் நிலவும் காலதாமதத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது.

நல்லதைச் செய்தால் நிச்சயம் பாராட்டுவோம். செய்யாமல் இருந்தால் சுட்டிக் காட்டுவோம். வலியுறுத்துவோம். போராடுவோம் இதுதான் PGBEAவும், PGBOUவும்.

CC / DPN  லோன் தொகையை ஐ.ஓ.பியில் உள்ளதைப் போல வழங்கப்பட்டதை நிச்சயம் வரவேற்கிறோம். ஆனால் அதில் loss of pay எடுத்தவர்களுக்கு கிடையாது என்றும், vigilance /non vigilance case இருக்கிறவர்களுக்கு கிடையாது என conditions விதிப்பதையும் எதிர்க்கிறோம். இங்கு வருடக்கணக்கில் leave regularise செய்யாமல் இருப்பது யாருடைய தவறு? ஒழுங்கு நடவடிக்கைகளை வருடக் கணக்கில் முடிக்காமல் வைத்திருப்பது யாருடைய தவறு?

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், திரும்பத் திரும்ப நிர்வாகம் சாக்குப் போக்கு சொல்வதும், இழுத்தடிப்பதுமே நடக்கிறது. இதனை மேலும் பொறுத்துக் கொள்ள நாம் தயாரில்லை.

ஏற்கனவே முடிவு செய்தது போல, நமது கோரிக்கைகளையும், நிர்வாகத்தின் குளறுபடிகளையும் சுட்டிக்காட்டி அங்கங்கு ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படும். மண்டல வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

மே மாதம் 1ம் தேதி, உழைப்பாளர் தினத்தில் நமது இரு சங்கங்களின் செயற்குழுக்களும் கூடி, இது குறித்து திட்டமிடுவதென முடிவு செய்யப்படுகிறது.

அக்கினி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது.

தோழமையுடன்

தோழமையுடன்


   
(J.மாதவராஜ்)                                         (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                பொதுச்செயலாளர் - PGBOU                       

15.2.14

PGBEA - PGBOU Circular 3/2014 dated 14.2.2014





பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA, NFRRBO)




சுற்றறிக்கை: 3/2014                                         நாள்: 14.02.2014

அருமைத் தோழர்களே!

வணக்கம். பிப்ரவர் 10, 11 தேதிகளில் நாடு முழுவதும் 48 மணி நேர வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. நியாயமான ஊதிய உயர்வுக்காகவும், வங்கித்துறையை சீரழிக்கும் சீர்திருத்தங்களை எதிர்த்தும் நடந்து முடிந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான அலுவலர்களும், ஊழியர்களும் பங்கேற்று இருக்கின்றனர். இதனால் 14 லட்சம் கோடி மதிப்புள்ள பண வர்த்தனைகள் முடங்கியிருக்கின்றன என பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இவை யாவற்றுக்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் வலியப் போய் நடத்தவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே முயற்சித்தன. அரசும், ஐ.பி.ஏ வும் பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் பிடிவாதம் பிடித்ததால்தான் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ` வங்கியின் லாபம் முழுவதையும் ஊதியங்களுக்குச் செலவிட முடியாது எனவும், அதன் ஒரு பகுதியை முதலீட்டிற்கு பயன்படுத்த வேண்டும்` என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். எதோ லாபம் முழுவதையும் நாம் கேட்பது போல ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்திருக்கிறார். நாம் நியாயமான ஊதிய உயர்வினைத்தான் கேட்கிறோம். இந்த நாட்டில் பெரு முதலாளிகள் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்வதற்கு இவருக்கு துப்பில்லை. அப்படி செய்தாலே, வங்கிகளின் லாபம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

மத்திய அரசும், ஐ.பி.ஏவும் பிடிவாதம் தளர்த்தி நியாயமான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. அப்படி இணக்கமான சூழல் ஏற்படவில்லையென்றால், சங்கங்கள் இன்னும் விரிவடைந்த, தீவீரமான போராட்டங்களுக்குத் தயாராகும். அதற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

நாடு முழுவதும் நடந்து முடிந்த இந்த வேலைநிறுத்தத்தில், கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் இணைந்து கலந்து கொண்டனர். பண்டியன் கிராம வங்கியில் 233 கிளைகளில் 192 கிளைகளில் வங்கிச் சேவை நடைபெறவில்லை. வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட PGBEA, PGBOU, PGBOA தோழர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை நாம் பெறப் போகும் ஊதிய உயர்வில், நமது பங்கு இருக்கிறது என பெருமை கொள்வோம்.

வீர வணக்கம் தோழர்களே!

தொடரும் PGB நிர்வாகத்தின் அராஜகப் போக்கும் பழிவாங்கும் படலமும்!

சென்ற சர்க்குலரில் தோழர் முருகதாஸ் பணிபுரிந்த நாட்களுக்குரிய  ஊதியத்தை கேட்டதற்காக அவரை இந்த நிர்வாகம் திடுமென காரணம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்தததை குறிப்பிட்டு இருந்தோம். நிர்வாகம் அவர் வேலை பார்த்த நாட்களுக்குரிய ஊதியத்தை கொடுத்து விட்டது. அவரை விரைவில் reinstate செய்வதாக உறுதியளித்திருக்கிறது.

ஆனால் இவ்விஷயத்தை வெளியிட்டதற்காகவும், நிர்வாகத்தின் போக்கை தட்டிக் கேட்டதற்காகவும் PGBEA பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ் மீது பாய்ந்திருக்கிறது. அவர் மீது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் சென்ற வருடத்தின் ஆரம்பத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சார்ஜ் ஷீட் ஒன்று கொடுத்தது தோழர்களுக்கு ஞாபகமிருக்கும். 4.1.2013 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு, பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி  எதிர்ப்பைத் தெரிவித்திருந்தோம்.

நிர்வாகம் `ஒரு பதிலைக் கொடுங்கள். மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்காமல் நிறுத்திக்கொள்கிறோம்` என்றது. அதன் பேரில் தோழர்.மாதவராஜ் 18.1.2013 அன்றே பதிலைக் கொடுத்தார். நிர்வாகம் அத்தோடு பிரச்சினையை முடித்துக் கொள்வதாக உறுதியளித்தது. இப்போது 13 மாதங்கள் கழித்து, அந்த சார்ஜ் ஷீட் ஃபைலை தூசிதட்டி எடுத்து, என்கொயரி ஆர்டர் செய்திருக்கிறது. அப்பட்டமான பழிவாங்கும் போக்கும், தொழிற்சங்க விரோத மனப்பான்மையும் வெளிப்பட்டு இருக்கிறது.  இதனை நாம் கண்டிக்கிறோம். இரண்டு சங்கங்களும் கலந்து பேசி இது குறித்த எதிர்ப்பு இயக்கங்களை முடிவு செய்யும். BEFI, AIRRBEA  தலைமைக்கு கொண்டு சென்று நிர்வாகத்தின் பழிவாங்கும் போக்குக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நமது கோரிக்கைகளும் இயக்கமும்!

சென்ற சர்க்குலரில் இந்த நிர்வாகத்தின் மீது ஒரு எட்டு விமர்சனங்களை முன்வைத்திருந்தோம். அவைகளை சரி செய்யும் விதமாக ஆறு கோரிக்கைகளையும் எழுப்பியிருந்தோம். நேற்று (13.2.2014) நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி இணைந்து அது குறித்து விவாதித்தன. நமது இயக்கத்தையும், நிர்வாகத்தின் மீது வைத்திருக்கும் விமர்சனங்களையும் விளக்கி, கோரிக்கைகளை முன்னிலைப் படுத்தி முதலில் பிரச்சார இயக்கம் ஆரம்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.

நமது கோரிக்கைகளை தெரியப்படுத்தி, அதன் மீது உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திருக்கிறோம். பேச்சுவார்த்தையை ஒட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை நமது இரு சங்கத்தின் செயற்குழுக்களும் விரைவில் கூடி முடிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், நமது பிரச்சார இயக்கத்தின் முதல் கட்டமாக-

1.நிர்வாகத்தின் மீதான நமது விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் விளக்கி ஒரு சிறு புத்தகமாக பிரசுரம் அனைத்துத் தோழர்களுக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும்.

2. முக்கிய நகரங்களில் கீழ்க்கண்ட வாசகங்களுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படும்.
-------------------------------------------------
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகமே!
1.     இதயமேயில்லாமல் காட்டு தர்பார் செய்யும் தலையலுவலகத்தின் உயர்         பொறுப்பிலிருக்கும் அதிகாரிகளைத் தலைமையலுவலகத்திலிருந்து அப்புறப்படுத்து!
2.     மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் படி மக்களுக்கு     அவர்கள் வேலைபார்க்கும் இடத்திலேயே பணத்தை பட்டுவாடா செய்!
3.     ஓய்வு காலச் சலுகைகளை நிறுத்தி ஓய்வு பெற்றவர்களின் வயிற்றில் அடிப்பதை     கைவிடு!
4.     ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பேரில் ஊழியர்களையும், அலுவலரையும்         சித்திரவதை செய்யாதே!
5.     கிளைகளில் போதிய வசதிகளை செய்து, பணிநெருக்கடிகளை தீர்த்து வை!
6.     தற்காலிக ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்!

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ்
யூனியன்
-------------------------------------------------


இந்த வங்கியில் தொழில் அமைதி நிலவுவதும்,  ஊழியர்களும் அலுலர்களும் உற்சாகமாக பணிபுரிவதற்குமான சூழலை ஏற்படுத்துவதும் நிர்வாகத்தின் கைகளில்தான் இருக்கிறது.


தோழமையுடன்

                                                
(J.மாதவராஜ்)                                                           (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                              பொதுச்செயலாளர் - PGBOU   

(PGB management பற்றிய தொடரின் அடுத்த பகுதி- வெளிப்படைத்தன்மையற்ற PGB நிர்வாகம் - நாளை வெப்சைட்டில் வெளியாகும்)


5.2.14

PGBEA - PGBOU Circular 2/2014 dated 5.2.2014


பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA, NFRRBO)



சுற்றறிக்கை: 2/2014                                         நாள்: 05.02.2014

அருமைத் தோழர்களே!

வணக்கம். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்து IBA. க்கும் UFBU-வுக்குமிடையே 5 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நவம்பர் 2013 வரை நடைபெற்றுள்ளன. 18 டிசம்பர் 2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து ஜனவரி 20,21 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர்.இதனையடுத்து ஜன. 13 அன்று மத்திய தொழிலாளர் ஆணையர் தலையீட்டின் பேரில் ஜன. 17 அன்று ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொடக்க கட்ட உயர்வு 9.5 விழுக்காடு என்பதாக ஐபிஏ அறிவித்தது.

மேலும், இருவாரத்துக்கு ஒருமுறை ஊதிய பேச்சுவார்த்தையைத் தொடரலாம்; ஜூன் 2014க்கு முன்பே ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்தன.மீண்டும் ஜன.27 அன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது 0.5 விழுக்காடு மட்டுமே ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.இது ஊழியர், அதிகாரிகளை அவமானப்படுத்துவதாக அமைந்தது.இதற்கிடையில், 55 வயது நிறைந்த ஊழியர்களை அல்லது 30 ஆண்டு பணிபுரிந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்கலாம் , மாநிலம் முழுவதும் ஊழியர்களை இடமாற்றம் செய்யலாம் ஊழியர் ‘திறன்' அடிப்படையில் ஏற்ற தாழ்வான ஊதிய அமைப்பு விகிதத்தை வங்கித்துறையில் அறிமுகப்படுத்தலாம் என்று நிர்வாகம் சார்பில் எதிர்க் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

சுமூகப்பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றிருந்த தொழிற்சங்கங்களை ஆவேசமடைய வைத்தன. வங்கி ஊழியர்களை பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டங்களை அமல்படுத்த, கூட்டமைப்பு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கடந்த ஒப்பந்தத்தைக் காட்டிலும் இம்முறை வெறும் 10 விழுக்காடுதான் உயர்வு என்பதை ஏற்க இயலாது என்பதால் யுஎப்பியு கூட்டமைப்பின் 9 சங்கங்களும் பிப்.10ம் தேதி காலை 6 மணி முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கான அறைகூவல் விடுத்துள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வது என அகில இந்திய அளவில் அனைத்து கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. AIRRBEA இதனை நமக்குத் தெரிவித்துள்ளது. எனவே PGBEAவும், PGBOUவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்கின்றன.

தோழர்களே, வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

நமது வங்கியும் நமது இயக்கமும்:


பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் குறித்து நமது இரு சங்கங்களும் தொடர்ந்து கீழ்க்கண்ட விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம்.
1. மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கிறது.
2.வெளிப்படைத்தன்மையற்றதாகவும், இறுக்கமானதாகவும் இருக்கிறது.
3.ஊழியர்கள் பணிநெருக்கடிகளுக்கு தீர்வு காணாமல் இருக்கிறது.
4.வங்கிப்பணிகளில் அவரவர்க்கான விதிகளை வரையறுத்து ஒரு ஒழுங்கை ஏற்படுத்தாமல், ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நடத்தைகளில் மட்டுமே ஒழுங்கை பார்க்கிறது.
5.சம்பளப்பிடித்தம் என்றால் அதிவேகமாகச் செயல்படுகிறது. அதே வேளையில் உரிய சலுகைகளையும், உரிமைகளையும் வழங்குவதென்றால் காலம் தாழ்த்துகிறது, தட்டிக் கழிக்கிறது.
6. ஊழியர்களோடும், அலுவலர்களோடும் நட்பு ரீதியான நல்லுறவு வைத்துக்கொள்ளாமல், அனைவரையும் எதிரிகளாகவும், குற்றவாளிகளாகவும் பார்க்கிறது.
7.ஓய்வு பெறப் போகும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அடிவயிற்றில் பயத்தையும், படபடப்பையும் உருவாக்கி, வங்கிப்பணியில் அவர்கள் இயல்பாகவும் சுதந்திரமாகவும் ஈடுபடுவதை குறைக்கிறது.
8.புதிதாக பணிக்குச் சேர்ந்த இளம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை அரவணைத்து அவர்களுக்கு இந்த வங்கியின் மீது பிடிப்பையும் பற்றையும் உருவாக்குவதற்கு பதிலாக அதிகாரம் செலுத்தி இந்த வங்கியை விட்டு வெளியேறும் எண்ணத்தை  ஏற்படுத்துகிறது.

இவைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் பேசியிருக்கிறோம். இவைகளை சரிசெய்வதற்கான யோசனைகளையும், வழிகளையும் நம் தரப்பில் சொல்லியிருக்கிறோம். இந்த நிர்வாகம் சரிசெய்வதாக சொல்கிறது. ஆனால் ஆக்கபூர்வமான, திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறது.

'தலைமையலுவலகத்தை புனரமைக்க வேண்டும்' என்று நாம் பலவருடங்களாக சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பலரது வாழ்க்கையை சிதைத்து, இந்த வங்கியில் உற்சாகமாக பணிபுரியும் மனோபாவத்தை கெடுத்த  மிஸ்டர்.சங்கரநாராயணனை, AIVDயை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து விடுவியுங்கள் என்று எத்தனையோ முறை சொல்லியிருக்கிறோம். நிர்வாகமோ மார்ச் மாதத்தில் பணி ஓய்வு பெற இருக்கும் அவருக்கு பதவி உயர்வு கொடுத்து பாராட்டியிருக்கிறது.

மிஸ்டர் சங்கரநாராணனுக்குப் பதிலாக இப்போது மிஸ்டர் சந்தானக்குமாரை உட்கார வைத்திருக்கிறார்கள். இவரும் சங்கரநாரயணனைப் போன்ற மோசமான பார்வை கொண்டவர்தான். கிளைகளில் performance செய்யாதவர். பல கேஸ்களில் investigating officerஆக இருக்கிறவர். எனவே மிஸ்டர் சந்தானக்குமாருக்கு AIVDயை நிர்வகிப்பதற்கு தார்மீக உரிமை கிடையாது. அவரை மாற்ற வேண்டும் என நாம் கோரிக்கை வைக்கிறோம். வந்தவுடன் அவர் செய்த முதல் பணி, புளியங்குடிக் கிளையில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் தோழர்.முருகதாஸை சஸ்பெண்ட் செய்ததுதான். தோழர்.முருகதாஸ் வேலைபார்த்த நாட்களுக்குரிய ஊதியம் கொடுக்கப்படவில்லை. wages Act, 1936 பிரகாரம் இது தவறு, ஊதியத்தை உடனடியாக கொடுங்கள் எனக் கேட்டோம். அதற்குத்தான் இந்த சஸ்பென்ஷன்.  சஸ்பென்ஷன் ஆர்டரில் எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. ஊழியர் விரோத மனப்பான்மை அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது.

எனவே நாம் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய காரியங்களில் ஈடுபட வேண்டி இருக்கிறது. அதற்காக  நாம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் ஆரம்பிப்பது என இரு சங்கத்தின் தலைமையும் தீர்மானித்திருக்கின்றன.

1. தலைமையலுவலகத்தை புனரமைக்க வேண்டும். டிபார்ட்மெண்ட்களின் பொறுப்பு வகிப்பவர்கள் performerகளாகவும், இணக்கமான அணுகுமுறை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
2.NREGS, OAP கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அதற்கேற்ப தொழில்நுட்ப வசதிகள் உடனடியாக முழுமைப் படுத்தப்பட வேண்டும்.
3. நிலுவையிலிருக்கும் ஓழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள்  பாஸிட்டிவான பார்வையோடு முடிக்கப்பட வேண்டும்.
4. எந்தக் காரணம் கொண்டும் ரிடையர் ஆகிறவர்களின் ஓய்வுகாலச் சலுகைகளை நிறுத்தி வைப்பது கூடாது.
5. Graduation pay to newly recruited Office Assistants, Boarding and lodging expenses for officers on par with sponsor Bank, Petrol allowance and House maintanence allowance on par with sponsor bank, enhancement of LTC/LFC ஆகிய பொருளாதாரக் கோரிக்கைகள்  உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
6. அவரவர்க்கான Duties and responsibilities களை வரையறுத்து சர்க்குலர் வெளியிட வேண்டும்.

விரைவில் நமது இரு சங்கங்களும் நிர்வாகத்துடன் இந்தக் கோரிக்கைகள் குறித்து பேசுவோம். சாதகமான நிலைமைகளும், முன்னேற்றங்களும் ஏற்படவில்லையென்றால் நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். இந்தக் கோரிக்கைகள் குறித்து நமது வங்கியில் இருக்கும் சகோதரச் சங்கங்களோடும் பேசி வருகிறோம். அவர்களும் இதுபோன்ற சிந்தனைகளோடு இருக்கிறார்கள் என்பது ஆரோக்கியமான விஷயம்.

தோழர்.முருகதாஸ் சஸ்பென்ஷன் குறித்து பொதுமேலாளரிடமும், வங்கியின் சேர்மனிடமும் பேசியிருக்கிறோம். உடனடியாக அவரை Reinstate செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். ஓரிரு நாட்களில் Reinstate செய்வதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் உற்சாகமான செய்திகளோடு விரைவில் சந்திப்போம்.
தோழமையுடன்


                                                
(J.மாதவராஜ்)                                                        (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                         பொதுச்செயலாளர் - PGBOU   

6.1.14

PGBEA - PGBOU Circular dated 6.1.2014

சுற்றறிக்கை: 1/2014                                         நாள்: 6.1.2014

அருமைத் தோழர்களே!

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

போராட்ட அறைகூவலோடு துவங்குகிறது இந்த புத்தாண்டு.

வங்கித்துறையில் 9 வது இருதரப்பு ஒப்பந்தம் 31.10.2012 அன்றோடு முடிந்துவிட்ட நிலையில், 10வது இருதரப்பு ஒப்பந்தம் உருவாகி 1.11.2012 முதல் புதிய ஊதிய விகிதம் அமல் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்தம் ஏற்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது IBA. இந்த நிலையில் வங்கித்துறையில் இருக்கும் அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (United Forum of Banks Union) ஏற்கனவே டிசம்பர் 18ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தை நாடு முழுவதும் நடத்தியிருந்தது. 10 வது இருதரப்பு ஒப்பந்தத்தை விரைவாக நடத்தி முடித்து, அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்குமான புதிய ஊதிய விகிதத்தை அறிவிக்க வேண்டும் என்றும், வங்கித்துறையில் சீர்த்திருத்தங்கள் என்னும் பெயரில் தனியார் மயமாக்குவதையும், அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் UFBU முக்கிய கோரிக்கைகளாக முன்வைத்திருந்தது.  இந்த வேலை நிறுத்தத்திற்குப் பிறகும், மத்திய அரசும், IBAவும் அசைந்து கொடுக்காத நிலையில், UFBU ஜனவரி 20 மற்றும் 21 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு சென்ற டிசம்பர் இறுதியில் அறைகூவல் விடுத்திருந்தது.

வங்கித்துறையில் 10 வது இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு, புதிய ஊதிய விகிதம் அறிவிக்கப்பட்டால்தான், கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் அந்தப் புதிய ஊதிய விகிதம் அமல் செய்யப்படும். இதுதான் முறையாக இருந்து வருகிறது. எனவே வங்கித்துறையில்  ஊதிய உயர்வை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது நமது கோரிக்கையும் கூட. அதை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் போராடும்போது, கிராம வங்கி ஊழியர்கள் `யாருக்கோ வந்தது`  என வேடிக்கை பார்க்க முடியாது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்களும் இணைந்து நிற்பது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும். வேலை நிறுத்தத்திற்காக UFBU சார்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் strike noticeல், கிராம வங்கிகளில் அரசின் பங்குகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த வேலைநிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் கலந்து கொள்வது என்னும் யோசனை எழுந்தது.

அதன் அடிப்படையில் கிராம வங்கிகளில் இருக்கும் அகில இந்திய சங்கங்கள் (United Forum of RRB unions)  அனைத்தும் ஒன்றிணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்து இருக்கின்றன. AIRRBEA, NFRRBE, NFRRBO, AIRRBOF, AIGBEA, AIGBOA, AIGBWO, AIGBEC, AIGBOC, NCRRBE ஆகிய அனைத்துச் சங்கங்களும் கூட்டாக கையெழுத்திட்டு strike noticeஐ  3.1.2014 அன்று மத்திய அரசுக்கு கொடுத்து இருக்கின்றன.  எனவே, AIRRBEA, NFRRBE, NFRRBO  அகிய சங்கங்களின் உறுப்புச் சங்கங்களாய் இருக்கும் PGBEAவும், PGBOUவும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன. நம் வங்கியில் செயல்பட்டு வரும் சகோதரத் தொழிற்சங்கங்களையும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.

இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி UFRRBUஅறைகூவலின்படி கீழ்க்கண்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானித்திருக்கிறோம்.

1) அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் தனித்தனியாக கையெழுத்திட்டு பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கும், நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கும் கடிதம் அனுப்புவது. (அதற்கான படிவங்கள் சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்டு இருக்கின்றன.)

2) 10.1.2014 அன்று மாலை பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பட்டம் நடத்துவது.

3) இந்த வேலை நிறுத்தத்தையொட்டி நகர் மையங்களில், வணிக வங்கி ஊழியர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், பேரணிகளில் கலந்து கொள்வது.

4) 17.1.2014 அன்று கோரிக்கைகளை விளக்கி பேட்ஜ்கள் அணிவது. (அதற்கான பேட்ஜ்கள் கிளைகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.)

5) ஜனவரி  20,21 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது.

Probation period ல் இருக்கும் புதிதாக பணிக்குச் சேர்ந்த தோழர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டாம். வேலை நிறுத்தம் தவிர மற்ற போரட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பங்குபெறலாம்.

தோழர்களே!

இது நமது ஊதிய உயர்வுக்கான போராட்டம்.
இது இந்தியாவின் வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம்.
எனவே நாம் இதில் கலந்துகொள்கிறோம்.
போராடாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை.
எந்தக் கதவும் தட்டாமல் தானாகவே திறப்பதில்லை.
தேசம் முழுவதும் வங்கி ஊழியர்கள் மத்தியில் எழுந்திருக்கும் ஆவேசம் நம்மையும் பற்றிக்கொள்ளட்டும்.
வாருங்கள், ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய சித்தமாவோம்.
ஜனவரி 20, 21 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

0000

நமது இரு சங்கங்களும் இணைந்து அக்டோபர் மாதத்தில் இந்த நிர்வாகத்திடம் கொடுத்த 26 கோரிக்கைகளில், Staff Housing Loan மற்றும் பெருமாள் மலை கிளைக்கு Hill and Fuel Allowance  ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இடைவிடாமல் தொடர்ந்த நமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது.

அதேவேளையில் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கின்றன என்பது கசப்பான உண்மையாய் நீடிக்கிறது. கோரிக்கைகள் மீது, நமது இரு சங்கங்களும் தனித்தனியாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன.

பொருளாதாரக் கோரிக்கைகள் குறித்து ஐ.ஓ.பிக்கு எழுதி இருப்பதாகவும், பதில் வரவில்லையென்றும் வழக்கமான பதிலையே சொல்கிறது நிர்வாகம். இப்படியே வருடக்கணக்கில் காலதாமதம் செய்வது, ஊழியர் நலனில் இந்த நிர்வாகம் கையாளும் மெத்தனப் போக்கு என்றே நாம் கருதுகிறோம்.

கிளைகளில் பணிநெருக்கடியை குறைக்கும் தொழில்நுட்ப வசதிகளை இந்த நிர்வாகம் செய்யத் தயாராக இல்லை. NREGS மற்றும் OAP அக்கவுண்ட்களை கையாளுவதற்கான smart card கொடுக்கப்படவே இல்லை. ஒன்றரை வருடங்களாக வரும், வரும் என சொல்லப்படும் ATM  வசதி வரவில்லை. ஆனால் புதிதாக Money Transfer பிஸினஸ் துவங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இருக்கின்ற குழப்பங்களை இங்கு சரி செய்யாமல், புதிதாக நமக்கு சுமைகளை ஏற்றும் வேலைகள் மட்டும் மும்முரமாக நடக்கின்றன.

நமது வங்கியின் தொலைபேசி வசதியும், நெட்வொர்க் வசதியும் BSNL மூலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் திடுமென Aircel தொலைபேசிகள் பல கிளைகளில் வைக்கப்பட்டு இருக்கின்றன. கேட்டால் BSNL  சரியில்லை என்றும், Aircelல் கிளைகளுக்குள் பேசிக்கொண்டால் free  என்றும், 'PGB welcome'  என தானியங்கிக் குரல் அழைக்கும் வசதி Aircelல் இருப்பதாகவும் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. இந்த வசதிகள் BSNLலிலும் உண்டு. மெல்ல மெல்ல அனைத்துக் கிளைகளிலும் Aircel ஐ புகுத்திவிட்டு, BSNLலிருந்து வெளியேற இருப்பதாகவும் தெரிய வருகிறது. நாம் இதனை கடுமையாக ஆட்சேபிக்கிறோம். வேண்டுமானால் BSNL  நெட்வொர்க்கிற்கு  Aircel ஒரு substitute  ஆக இருக்கட்டும். அதற்காக ஒரு பொதுத்துறை நிறுவனமான BSNLலிருந்து விலகுவது என்பது ஏற்புடையது அல்ல என தெரிவிக்கிறோம்.

Universal sampo என்னும் தனியார் நிறுவனத்தோடு போட்ட medi claim ஒப்பந்தப்படி, நமது தோழர்களுக்கு வரவேண்டிய தொகை மாதக்கணக்கில் நிலுவையில் இருக்கிறது. மேலும் மிகவும் குறைவாகவே  reimburse  செய்யப்படுகிறது. அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை என பலமுறை சொல்லிவிட்டோம். நிர்வாகம் அதிலிருந்து வெளியேறாமல் இழுத்தடிக்கிறது. இந்த வங்கியில் கம்ப்யூட்டர்கள், மானிட்டர்கள், ஜெனரேட்டர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அதனைச் சரிசெய்யுங்கள் என்றால், சோம்பல் முறிக்கிறது நிர்வாகம். இவைகளில் காட்டாத அக்கறையும், வேகமும் ஏன் Aircelஐக் கொண்டு வருவதில் இருக்க வேண்டும் என்பது புதிராக இருக்கிறது. இதுகுறித்து ஆராய்வோம்.

ஒழுங்கு நடவடிக்கைகளில், நிர்வாகம் கையாளும் முறை இரக்கமற்றதாகவும், அதீத காலதாமதாகவும் இருக்கிறது. சஸ்பென்ஷன் செய்துவிட்டு வருடக் கணக்கில் சார்ஜ் ஷீட் கொடுக்காமல் இருப்பது, சார்க் ஷீட் கொடுத்து பதில் பெற்ற பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்படியே வைத்திருப்பது, என்கொயரி முடிந்து findings கொடுத்த பிறகு வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருப்பது என்பதே AIVDயின் வாடிக்கையாய் இருக்கிறது. ஒவ்வொரு ஃபைலிலும் ஒரு சக மனிதனின் வாழ்க்கை இருப்பதையும், காலதாமதமாகிற ஒவ்வொரு நாளும் அந்த மனிதர்கள் சித்திரவதை அனுபவிப்பதையும் AIVD உணர மறுக்கிறது. பல தோழர்களுக்கு ஓய்வுகாலச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டு எதிர்காலமே நிலைகுலைந்து போயிருப்பது குறித்து துளியும் கவலையற்று இருக்கிறது AIVD.


கோரிக்கைகள் பல நிறைவேறவில்லை. நமது பணி நெருக்கடிகள் தீர்க்கப்படவில்லை. ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் பெரும் அராஜகம் தொடர்கிறது. நிர்வாகம் இவைகளில் கவனம் செலுத்தி
சரிசெய்ய முன்வர வேண்டும். இவைகளில் மேலும் காலதாமதம் ஆகுமானால் நாம் இவைகளை மேல்மட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்றும், போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கிறோம்.

0000

வங்கியின் வணிகம் திருப்திகரமாக இல்லை என்றும், Advances குறைந்துகொண்டு இருக்கிறது என்றும் நிர்வாகம் கவலைப்படுகிறது. நாமும் கவலைப்படுகிறோம். வங்கியின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் இங்கு ஒரு சில விஷயங்களை சொல்லியாக வேண்டியிருக்கிறது. இத்தகைய சரிவுக்கு இந்த வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள் யாரும் பொறுப்பல்ல. முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறான முடிவுகளும், மோசமான அணுகுமுறையுமே காரணம்.

கரடு தட்டிப் போனவர்கள், புதிய சிந்தனைகள் வற்றிப் போனவர்கள், ஊழியர்களையும் அலுவலர்களையும் எதிரிகளாக மட்டுமே பார்க்கிறவர்கள்தாம் தலைமையலுவலகத்தின் முக்கியப் பொறுப்பில் தொடர்ந்து இருக்கிறார்கள். தலைமையலுவலகத்தை புனரமையுங்கள் என்று அனைத்துச் சங்கங்களும் குரல்கொடுத்தும் செவி சாய்க்காமல் போனதன் விளைவுதான் இது.

ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் அலுவலர்களை மிரட்டுவது, ஓய்வுகாலச் சலுகைகளில் கைவைப்பது தொடருமானால், மெல்ல மெல்ல அலுவலர்கள் `ஏன் கடன் கொடுக்க வேண்டும், கையைச் சுட்டுக்கொள்ள வேண்டும்` என்கிற இயல்பான மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என எச்சரித்தோம். அதைக் கேட்காமல் போனதன் விளைவுதான் இது.

இந்த வங்கியில் உழைக்கிறவர்கள் நலன்கள் புறக்கணிக்கப்படுவதால் ஊழியர்களும், அலுவலர்களும் உற்சாகம் இழந்து போயிருக்கிறார்கள், அதைச் சரி செய்யும் நடவடிக்கைகள் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. அதன் விளைவுதான் இது.

இவைகளில் ஒரு மாற்றம் இல்லாத பட்சத்தில், வங்கியின் நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கும். நிர்வாகம் தனது தவறுகளை சரிசெய்து, ஒரு மாற்றத்தைக் கொண்டு வரத் துணியுமானல், PGBEAவும், PGBOUவும் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்பதையும் தெளிவுபடுத்தி கொள்கிறோம்.


தோழமையுடன்

                                                
(J.மாதவராஜ்)                                                        (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                         பொதுச்செயலாளர் - PGBOU   




PGBEA Circular 1/2014 dated 4.1.2014


சுற்றறிக்கை: 1/2014                                         நாள்: 04.01.2014

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

2013ம் ஆண்டு பிறந்தபோதும் நிறைய எதிர்பார்ப்புகள் நம்மிடம் இருந்தன. அதே எதிர்பார்ப்புகளுடன்தான் நாம் 2014ம் ஆண்டிலும் காலடி எடுத்து வைக்கிறோம்.   ஊழியர்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்ட காலமாக சென்ற வருடம் கழிந்திருக்கிறது என்பது கசப்பான உண்மையாக முன்னிற்கிறது. ஆனால் அவைகள் குறித்து நமது சங்கம் தொடர்ந்து பேசியிருக்கிறது. சுற்றறிக்கைகள், வட்டாரக் கூட்டங்கள், இணையதளம் மூலமாக பிரச்சாரம் செய்திருக்கிறது. போராடுவதன் மூலமே நாம் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை உணர்த்தி வந்திருக்கிறது. இவை யாவும் அனுபவங்களாக நமக்குள் நிறைந்திருக்கின்றன. 2014ம் ஆண்டை சிறப்பானதாக அமைத்துக்கொள்ளும் வல்லமை உழைக்கும் மக்களாகிய நம் கைகளில்தான் இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்துவோம்.

PGBEAவின் செயற்குழு 22.12.2013 அன்று விருதுநகரில், சங்க அலுவலகத்தில் நடந்தது. வங்கியில் ஊழியர்களின் இன்றைய நிலைமை, அவர்களது பிரச்சினைகள் மற்றும் நிர்வாகத்தின் போக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை நிர்வாகத்துக்கு எழுதி, அதன் மேல் பேச்சுவார்த்தையை ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்தியிருந்தோம். PGBOUவுடன் இணைந்து ஒரு கோரிக்கை சாசனத்தை அக்டோபரில் சமர்ப்பித்து, சர்க்குலரில் தெரியப்படுத்தி இருந்தோம். அவைகளில் STaff Housing Loanஐத் தவிர வேறு எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்களின் நலன்களிலும் பிரச்சினைகளிலும் நிர்வாகம் மெத்தனமாக நடந்துகொள்வதாக செயற்குழு கருதியது. அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகத்துடன் பேசி, அவைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என செயற்குழு தீர்மானித்தது.

2. இங்கு முறையான Transfer Policy இல்லாமலிருப்பதே, பல்வேறுவிதமான குழப்பங்களுக்கும், விதிமீறல்களுக்கும், பாரபட்சங்களுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. நிர்வாகத்துடன் இதனை பலமுறை பேசியிருக்கிறோம். Transfer Policy ஒன்றை உருவாக்க ஒரு கமிட்டி அமைத்து, அனைத்துச் சங்கங்களுடனும் பேசி இறுதிப்படுத்தலாம் என நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு யோசனையை முன்வைத்தது. இன்றுவரை அப்படியொரு கமிட்டி அமைக்கப்படவில்லை. Transfer Policy ஒன்றை, வங்கித்துறையின் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்க இயக்கம் நடத்த வேண்டும் என செயற்குழு தீர்மானித்தது.

3. கிளைகளில் NREGS மற்றும்  OAP அக்கவுண்டுகள் குவிந்து கிடக்கின்றன. அவைகளுக்குரிய Transactionகளை பார்க்க முடியாமல் ஊழியர்களும் அலுவலர்களும் திணறுகின்றனர். NREGSக்குரிய பணம், கிராமங்களில், மக்கள் வேலை செய்யும் இடங்களிலேயே பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்பதுதான் அரசு விதி. Business Corespondentகள் அதற்குரிய வகையில் தொழில்நுட்பரீதியாக equip செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வருடங்களாகியும் நிலைமை சரிசெய்யப்படவில்லை. நிர்வாகத்துடன் பேசும்போதெல்லாம் பல்வேறு உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலைமையில் Money Transfer-ம் நம் வங்கியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாய் அறிகிறோம். அதே வேளையில், ATM கொண்டு வருவதற்கான முயற்சிகள் நிறைவேறாமல் இருக்கின்றன. பொதுவாக ஊழியர்களுக்கு வேலையை அதிகரிக்கும் காரியங்கள் வேகமாகவும், வே¨யை ஓரளவுக்கு சமன்செய்யும் காரியங்கள் இக்கு மந்தமாகவும் நடைபெறுகின்றன. செயற்குழு இந்தப் போக்கை கடுமையாக விமர்சித்ததுடன் இதனை சரிசெய்யும் இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டும் என தீர்மானித்தது.

4. அறுபது வயதுக்கு மேல் ஓய்வு பெற்ற அலுவலர்களை பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், குறிப்பிட்டப் பணிகளுக்காக பயன்படுத்துவதை செயற்குழு விவாதித்தது. இது ஆரோக்கியமான நடைமுறை இல்லை என்றே கருதியது. அறுபது வயதுக்கு மேல், ஒருவரது ஓய்வு நாட்களில், இப்படி பணிபுரிய பயன்படுத்துவதை எந்த சமூக நோக்குள்ள சங்கமும் எதிர்க்கவே செய்யும். மேலும் இந்த சமூகத்தில் வேலையில்லாமல் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான புதிய பணி வாய்ப்புகளை இதுபோன்ற நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கவேச் செய்யும். நமது Staff Service Regulationக்கும், Reserve Bank guidelinesக்கும் எதிரான காரியம் இது. எனவே நிர்வாகம் 60 வயதுக்கு மேலான அலுவலர்களை, வங்கிப்பணிகளுக்கு பயன்படுத்துவதை எதிர்ப்பது என்றும், தடுப்பது என்றும் செயற்குழு தீர்மானித்தது.

இந்தப் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்தது.

5. வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற தோழரும், PGBEAவின் மகத்தான தலைவருமான தோழர்.சோலைமாணிக்கம் அவர்களை செயற்குழு பாராட்டியது. வங்கிப்பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக, PGBEAவின் உதவித்தலைவராக , செயற்குழு உறுப்பினராயிருந்த தோழர்.நாசர் (அடைக்கலப்பட்டிணம் கிளை) co-opt செய்யப்பட்டார். அதனால் உருவான செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தோழர்.ரெங்கநாதன் (கயத்தாறு கிளை) தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை:

செயற்குழு முடிவின்படி, நமது பிரச்சினைகளை முன்னிறுத்தி ஏற்கனவே கடிதங்கள் எழுதியிருந்தோம். 31.12.2013 அன்று, வங்கியின் சேர்மனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

1. `பதவி உயர்வு, டிரான்ஸ்பர் என்று ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் நிர்வாகம் நிறைய செய்து இருப்பதாகவும், ஆனால் Staff Housing Loan மட்டுமே நிறைவேற்றி இருப்பதாக நாம் கடிதம் எழுதி இருப்பதாகவும்` என நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது. நாம் ஜூலை மாதத்தில் முன்வைத்த கோரிக்கை சாசனத்தில், SHL  மட்டுமே நிறைவேற்றப்பட்டு இருப்பதை எடுத்துச் சொன்னோம். பெருமாள் மலை கிளைக்கு Hill and Fuel Allowance வழங்கப்பட்டு இருப்பது நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாம் அதற்கான மகிழ்ச்சியைத் தெரிவித்தோம். அதே வேளையில் எண்ணற்ற கோரிக்கைகளும், பிரச்சினைகளும் தீர்க்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதை சுட்டிக்காட்டினோம். Staff vehicle Loan சர்க்குலர் சில நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 2013ம்  ஆண்டு பணிக்குச் சேர்ந்த Office Assistantகளுக்கு graduation increment  கொடுப்பது குறித்து நபார்டு நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், அதுவரை காத்திருக்க வேண்டியிருக்கிறது என சொல்லப்பட்டது. அப்படிச் சொல்வதற்கு நபார்டு எந்த அதிகாரமும் இல்லை என்னும் நமது நிலைபாட்டைத் தெரிவித்தோம்.

2. Transfer Policy ஒன்றை உருவாக்க நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. மற்ற சங்கங்களின் பிரதிநிதிகள், நிர்வாகத் தரப்பில் சில அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு கமிட்டி அமைத்து Transfer policy உருவாக்குவோம் என உறுதியளிக்கப்பட்டது.

3. தொழில்நுட்ப வசதிகள் செய்து தர நிர்வாகம் தயாராக இருப்பதாகவும், வங்கிக்கு அமைந்த service providerகள் சரியில்லை, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என விளக்கமளிக்கப்பட்டது.

4. 60 வயதுக்கு மேல் ஓய்வுபெற்றவர்களை நிர்வாகம், வங்கிப்பணிக்கு பயன்படுத்துவது குறித்து நமது நிலைபாட்டைத் தெரிவித்தோம். Book of Instructionஐ update  செய்ய இரண்டு ஓய்வு பெற்ற அலுவலர்களை பயன்படுத்தியிருப்பதாகவும், இனி யாரையும் பயன்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

தோழர்களே, நிர்வாகத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அந்தந்த நேரத்துக்கு காரணங்கள் சொல்லி சமாதானம் செய்கிற நிர்வாகம்,  நமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதில்லை என்பதுதான் நமது அனுபவங்களாக இருக்கின்றன.

PGBOU வுடன் கலந்தாலோசித்து, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்போம். புத்தாண்டை, நமது பிரச்சினைகளை தீர்க்கிற ஆண்டாக அமைத்துக் கொள்வோம்.

தோழமையுடன்



                                                
(J.மாதவராஜ்)
பொதுச்செயலாளர் - PGBEA