Showing posts with label Organisation. Show all posts
Showing posts with label Organisation. Show all posts

1.7.13

PGBEA - PGBOU மாநாடுகள் ஜூலை 6, 7 தேதிகளில்! அனைவரும் வாருங்கள்!!


மீண்டும் நமக்கான நாள் வருகிறது.

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் 
ஒருசேர ஓரிடத்தில் சந்திக்கப் போகிறோம்.  
ஒருவரையொருவர்  நலம் விசாரித்துக் கொள்வோம்.

அன்பைப் பரிமாறி, அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம்.

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (PGBEA) -  20வது மாநாடும் 

பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியனின் (PGBOU)  - 12வது மாநாடும்


ஜூலை மாதம் 6, 7 தேதிகளில்
மதுரையில்-
காமராஜர் சாலையில், கணேஷ் தியேட்டர் அருகில்-
மேனகா ராமலிங்கம்  திருமண மஹாலில் நடக்க இருக்கிறது.


ஜூலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடும்
ஜூலை 7ம் தேதி காலை 10 மணிக்கு பொது மாநாடும் நடக்க இருக்கிறது.



தோழர்.G.பாலச்சந்திரன் அவர்கள்
 (President, Aill India Overseas Bank Staff Association)
பிரதிநிதிகள் மாநாட்டைத் துவக்கி வைத்து, 
‘ஒன்று படுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்’
என்னும் கோஷத்தின் உயிர்த்துடிப்பை நமக்கு உணர்த்துகிறார்.

அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.சையத் கான்
 (Secretary General - AIRRBEA) அவர்கள்
மறைந்த நமது மகத்தான தலைவர் தோழர்.திலிப் குமார் முகர்ஜி அவர்களின் நினைவுகளையும்- 
 பென்ஷன், தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம், ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட நமது அகில இந்திய விஷயங்களையும் 
நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன் (General Secretary - BEFI ,TN) அவர்கள் 
10 வது இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளையும்,
வங்கி அரங்கில், மத்திய அரசு கொண்டு வரும் சீர்திருத்தங்களையும்  
அதனால் ஏற்பட இருக்கும் விளைவுகளையும், 
நாம் எப்படி அவைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் 
நம்மிடையே தெளிவுபடுத்த இருக்கிறார்.

இந்தியன் வங்கி ஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவரும், 
எழுத்தாளருமாகிய தோழர்.எஸ்.வி.வேணுகோபால்  கலந்துகொண்டு, 
புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு 
வாழ்த்துக்களைச் சொல்லி, அவர்களோடு 
ஒரு அர்த்தமுள்ள உரையாடலை நடத்த இருக்கிறார்.

முக்கியமான இந்த நிகழ்வுகளோடு, சென்ற மாநாட்டின் 
நினைவுகள் நிழலாடுகின்றன. காட்சிகள் தோன்றுகின்றன. 
அதோ, நமது தோழர்.முகர்ஜி பேசுகிறார்.
 “கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷனை பெற்றுத் தராமல், 
நான் மரணமடைய மாட்டேன்” என்று உரத்து சொல்கிறார். 
நம்பிக்கைகளை விதைத்த மகத்தான மனிதர் இன்று நம்முடன் இல்லை. அவரின் உருவங்களால் கட்டியமைக்கப்பட்ட இடமாக, 
தோழர்.முகர்ஜியின் பெயரில் 
மாநாட்டு அரங்கம் அலங்கரிக்கப்பட இருக்கிறது.

வரலாற்றிலிருந்து வரலாறு எழ இருக்கிறது. 
ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கிறது.

கலகலப்பான, உற்சாகமான, புதுமையான 
அனுபவங்கள் நிறைந்த நாட்களில், 
உங்களையும் இணைத்துக்கொள்ள அழைக்கிறோம்.

வாருங்கள்.

17.6.13

புதிதாக பணிக்குச் சேர்பவர்களிடம் வருத்தம் தெரிவிக்கிறோம்!


பாண்டியன் கிராம வங்கியில் 2012ம் வருடத்திற்குரிய Recrutiment இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.  தங்கள் வாழ்வில் வெளிச்சம் ஏற்பட்டு இருக்கிறது என்னும் நம்பிக்கையோடும், கனவுகளோடும் இளைஞர்கள் நம் வங்கிக்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு  இருக்கிற வேளை இது.  அவர்களை வரவேற்று, கிராம வங்கிகள் குறித்த நல்ல அபிப்பிராயங்களையும், அவர்களுக்கு இந்த வங்கியில் இருக்கும் நல்ல எதிர்காலத்தையும் எடுத்துச் சொல்லி, அவர்கள் தோளில் கை போட்டு நட்புரீதியாக நிற்க வேண்டிய தருணம் இது. செய்யும் வேலைகளில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, கிளைகளில் அவர்கள் இயல்பாகவும், சகஜமாகவும் பழகுவதற்கு ஏற்ற சூழல்களை அவர்களுக்கு உருவாகித்தர வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் இந்த நியாயமான பிரக்ஞைகளிலிருந்து  திசை தவறி, குறி தவறி,  நாம் விலகிச் சென்று கொண்டு இருப்பதாகப் படுகிறது.  நமக்கான தரத்திலிருந்தும், மரியாதையிலிருந்தும் இறங்க ஆரம்பித்திருக்கிறோமோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது.  மிகுந்த வருத்தத்துடன் இதனை பகிர்ந்து கொள்கிறோம்.

கடந்த ஒரு வாரமாக  புதிய  Office Assistantகளுக்கான Record verification , Training  முடிந்து posting நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இரண்டு Batchகள்  நடந்து முடிந்திருக்கின்றன.  நமது PGBEA சங்கத்திலிருந்து தலைவர்களும், முன்னணித் தோழர்களும் entranceல் அமர்ந்து அவர்களை வரவேற்று, வாழ்த்திக்கொண்டு இருந்தோம். புதியவர்களுக்கு, ”know Your Work, Know your Right' என்னும் புத்தகத்தைக் கொடுத்து  அது அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு இருந்தோம். நமது சங்கத்தை பற்றி எடுத்துச் சொல்லி நம்மிடம் உறுப்பினராய் ஆக வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.

இன்னொரு சங்கமான workers unionகாரர்கள் கொஞ்சம் தள்ளி, உள்ளே இருந்துதான் அவர்களிடம் முதலில்  பேசினார்கள். அவர்கள் ஏற்கனவே புதியவர்களின் வீடுகளுக்குச் சென்று பேசியிருக்கிறார்கள். Training-ன் போது விருதுநகரில் தங்குவதற்கு லாட்ஜ், ரூம் போட்டுத் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். நமது சங்கத்தை தீவீரவாதிகள் சங்கம் என்றும், அரசியல் சார்பு யூனியன் என்றும் கன்னா பின்னாவென்று படம் போட்டு இருக்கிறார்கள். தாங்கள்தான் யோக்கியமான சங்கம் என்று membership formகளில் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். இவ்வளவையும் நடத்தி முடித்துவிட்டு, இங்கேயும்  நம்மை முந்திகொண்டு, தலைமையலுவலகத்திற்கு வெளியே. சேர், பெஞ்ச்  எல்லாம் போட்டு அமர்ந்து கொண்டார்கள்.  இதில் போய் போட்டி போட்டுக்கொண்டு நாமும் நமது இடத்தை மாற்றிக் கொள்ளவா முடியும்? எப்போதும் போல் ஒரே இடத்தில்தான்  இருந்தோம் நாம் .

தாங்கள்தான் முதலில் புதியவர்களிடம் பேச வேண்டும் என்பது மட்டுமல்ல workers unionகாரர்களின்   நோக்கம். வெளியே புதியவர்களிடம் பேசி முடித்ததும், workers unionகாரர்கள்  இருவர் புதியவர்களின் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமுமாக நடந்து வந்து தலைமையலுவலத்தின் உள்ளே வரைக்கும் கொண்டு சென்று விட்டு வருவார்கள். இடையில் நாம் அவர்களிடம் பேசிவிடக் கூடாதாம். எப்பேர்ப்பட்ட தொழிற்சங்க சிந்தனை இது! இருந்தாலும் நம் தோழர்கள், புதியவர்களை அணுகி,  ‘know Your Work, Know your Right' புத்தகத்தைக் கொடுத்து அறிமுகப்படுத்தினார்கள். இதையும் தாங்க முடியாமல், workers unionகாரர் ஒருவர், “வாங்க, நேரமாகுது. சீக்கிரம் உள்ளே போங்க “ என விரட்டவும் செய்தார்.  எதோ ஒரு கலகம் நடக்கிற இடத்தில் மாட்டிக்கொண்டது போல புதியவர்கள் மிரண்டு போனார்கள். அமைதியாகவே இருந்தோம் நாம்.

“நாமும்  அவர்களைத் தாண்டி வெளியே போய் சேர், பெஞ்ச் களை போட்டு உட்காருவோம்”
“நாமும் வீடுகளுக்கு போய் செக்-ஆப் பார்மில் கையெழுத்து வாங்குவோம்”
“நாமும் லாட்ஜ், ரும்கள் போடுவோம்”
இதுபோன்ற குரல்கள் நம் தோழர்களிடமிருந்தும் கேட்க ஆரம்பித்தன. “வாயை மூடுங்கள்” என அவர்களை சத்தம் போட்டு, அடக்கினோம். இந்த ‘நாமும்’ என்கிற வார்த்தையில் ஒலிக்கும் தொனியும், அர்த்தங்களும் அவமானத்தைத் தந்தன.

தேசம் முழுவதும் உள்ள கிராம வங்கி ஊழியர்களில், ஆபிசர்களில் 80 சதவீதத்திற்கும் மேலாய் உறுப்பினர்களாய் கொண்ட  All India Regional Rural Bank Employees Association (AIRRBEA)  என்னும் மகத்தான சங்கத்துடன் இணைந்தவர்கள் நாம். வஞ்சிக்கப்பட்ட கிராம வங்கி ஊழியர்களைத் திரட்டி அவர்களுக்கு வணிக வங்கி ஊதியத்தைப் பெற்றுத் தந்தவர்கள் நாம். இந்த வங்கியில் பணிபுரிபவர்களுக்கான மரியாதையையும், அடிப்படை வசதிகளையும் நிலைநாட்டியவர்கள் நாம். ஊழியர்களைப் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலமாகவோ, நீதிமன்ற மூலமாகவோ, போராட்டங்களின் மூலமாகவோ அவைகளைத் தீர்த்து வைப்பதில் பெரும் பங்காற்றியவர்கள் நாம். இதோ, கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷனை மிக விரைவில் பெற்றுத் தர இருப்பவர்கள் நாம்.நமக்கென ஒரு சொந்தக் கட்டிடம் உருவாக்கி அதில் நமது சங்க அலுவலகத்தை பராமரிப்பவர்கள் நாம். நமக்கென்று ஒரு வலைத்தளம் உருவாக்கி, தோழர்களோடு தொடர்ந்தும், துரிதமாகவும் தொடர்பு கொண்டு இருப்பவர்கள் நாம்.  தங்கள் சொந்த வாழ்வின் அருமையான நேரங்களையும், தருணங்களையும் சங்கத்திற்காகவும், உறுப்பினர்களுக்ககவும் இழக்க நேர்ந்த தலைவர்களைக் கொண்டவர்கள் நாம்.

இப்போது, மேலே சொன்ன ‘நாம்’  என்பதற்கும் அதற்கு மேலே சொன்ன ‘நாமும்’ என்பதற்குமான இடைவெளிகளையும், சுருதிபேதங்களையும்  உணர முடியும்.

புதியவர்களை நம் தொழிற்சங்கமான Pandyan Grama Bank Employees Association (PGBEA) வில் உறுப்பினர்களாய் சேர்க்க வேண்டும் என நாம் நினக்கிறோம். தங்கள் சங்கமான Pandyan Grama Bank Workers Union (PGBWU)வில் உறுப்பினர்களாய் சேர்க்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லை. அவரவர்க்கான நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்காக கைக்கொள்ளும் நடைமுறைகளும், கைவிடும் தார்மீக நெறிகளும் வேதனையளிக்கின்றன.

இந்த வங்கியை அறிந்து, தங்கள் பணிகளை அறிந்து, பிரச்சினைகளை அறிந்து, சங்கங்களை அறிந்து அதன் பின்னர், ஒரு புதிய தோழர் தனக்கான சங்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என நாம் நினைக்கிறோம். அதற்கான அவகாசத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், workers unionக்கு அதில் நம்பிக்கை இல்லை. எங்கே வங்கிக்கு வந்தால் தங்களைப் பற்றிய வண்டவாளங்கள் தெரிந்துவிடுமோ, நம்மிடம் உறுப்பினர்களாய் ஆக மாட்டார்களோ என தங்கள் மீதே நம்பிக்கையில்லாமல், பயம் காரணமாக முந்திக்கொண்டு வீடுகளுக்குச் சென்று, செக் ஆப் பார்மில் கையெழுத்து வாங்குகிறார்கள்.  அவர்கள் கையெழுத்து வாங்கி விட்டார்களே என  ‘நாமும்’ வாங்க வேண்டும் என ஒரு போட்டி உணர்வு எழ ஆரம்பிக்கிறது.

புதியவர்களுக்கு, வங்கியில் என்ன வேலை, எப்படி இருக்கும், எவ்வளவு சம்பளம், என்ன லீவு, பிரமோஷன் எப்படி என்பதெல்லாம் குறித்து ஏராளமான சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கும். அதுகுறித்து விளக்கங்கள் அளித்து, அவர்களுக்கு ஆதரவாய் நிற்க வேண்டியது நம் கடமை. அதனை நாம் செய்கிறோம். இப்படி புதியவர்களை அறிவுபூர்வமாக வளர்த்தெடுக்க workers unionக்கு எந்த வழியுமில்லை. எனவேதான் அவர்கள் புதியவர்களுக்கு லாட்ஜ், ரூம்கள் போட்டு, போக வர கார்களும் வேன்களும் ஏற்பாடு செய்து,  பணிவிடைகள் செய்து, அவர்களை தன் பக்கம் தக்க வைப்பதில் குறியாய் இருக்கிறார்கள்.  யாராவது நம்மிடம் ‘விருதுநகரில் தங்குவதற்கு இடமிருக்கிறதா’ என்று கேட்டால் நமது சொந்த சங்க அலுவலகத்தில் தங்க அனுமதிக்கிறோம் நாம். அவர்கள் போட்டுத் தந்த லாட்ஜில் தங்கி, அவர்கள் வாங்கிக்கொடுக்கும் உணவைச் சாப்பிட்ட பிறகு எப்படி நம் சங்கத்தில் அவர்கள் சேர்வார்கள் எனவே அவர்களைப் போல  ‘நாமும்’  லாட்ஜில் ரூம்கள் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்னும் போட்டி உணர்வு எழ ஆரம்பிக்கிறது.

இப்போது PGBEAவுக்கும்,  PGBWUக்கும் உள்ள வித்தியாசத்தையும், முரண்பாட்டையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.  வங்கியில் சேர்ந்து புதியவர்கள்  நம்மைத் தெரிந்து கொள்ள வேண்டும் என நாம் நினைக்கிறோம். புதியவர்களை வீடுகளுக்குப் போய் கவர வேண்டும் என  அவர்கள் நினைக்கிறார்கள். நாம் புதியவர்களின் எதிர்காலத்துக்குத் தேவையான விஷயங்களை புத்தகமாக கொடுக்கிறோம் அவர்களோ லாட்ஜ் போட்டு தங்குவதற்கு இடம் கொடுக்கிறார்கள். நாம் சங்கம் நடத்துகிறோம். அவர்கள் வியாபாரம் நடத்துகிறார்கள். இதுதான் வித்தியாசம்.

வியாபாரத்தில் லாபம் அடைய வேண்டுமானால் எதற்கும் துணிவார்கள். லஜ்ஜை, இங்கீதம், சூடு, சொரனை என்கிற மனித குணங்களை இழந்து போவார்கள். வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தால் கோபமும், வெறியும் ஏற்படும்.  கன்னா பின்னாவென்று மோத ஆரம்பிப்பார்கள். அதுதான் இங்கு நடக்கிறது.

“ஒரு போட்டியின் வெற்றியை  உங்கள் தகுதியையும், தரத்தையும் மட்டும் வைத்து எடை போடாதீர்கள். போட்டியாளர்களின் தரத்தையும், தகுதியையும் வைத்து எடைபோடுங்கள். ஏனென்றால் நீங்கள் அவர்கள் தரத்துக்கு இறங்கவோ, ஏறவோ வேண்டியிருக்கும். அது உங்களால் முடியுமா என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்” என்பார்கள் அனுபவசாலிகள். “பகுத்தறிவு கொண்டவர்களோடு,  பக்குவம் பெற்றவர்களோடு  மோதுவது சிறப்பு. மூர்க்கத்தனமான மூடர்களோடு மோதுவது இழிவு” என்பார் தந்தை பெரியார்.

நாம் அவர்களின் தரத்துக்கு இறங்கிப் போகவும் முடியாது. அவர்களால் நம் தரத்துக்கு ஏறி வரவும் முடியாது. நமக்கென்று மகத்தான வரலாறு இருக்கிறது. நமக்கென்று அற்புதமான தோழர்கள் உறுப்பினர்களாய் இருக்கிறார்கள். நமக்கென்று ஒரு செல்வாக்கும், மரியாதையும் இருக்கிறது. அவைகளை இந்த போட்டி உணர்வால் இழந்துபோக வேண்டிய அவசியமில்லை.

தங்கள் வாழ்க்கை, எதிர்காலம், சொந்தப் பிரச்சினைகள். கல்லூரி வாழ்க்கை நினைவுகள் என எவ்வளவோ சுமந்து வரும் புதியவர்களை இடைமறித்து, நமது சங்கத்திலிருந்து தொந்தரவு செய்வதாக  யாரேனும் ஒருவர் உணர்ந்தாலோ, உணர்ந்திருந்தாலோ வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். புதியவர்களின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது. உண்மைகளை அறிந்து நம் பக்கம் நிச்சயம் வருவார்கள்.

23.7.11

Managers meetingல் நாம்!

நேற்று விருதுநகர் மண்டலத்தைச் சேர்ந்த Branch managersக்கான review meeting நமது தலைமையலுவலகத்தில் நடைபெற்றது. தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என நிர்வாகம் நம்மையும் அழைத்திருந்தது. இது ஒரு ஆரோக்கியமான நடைமுறையாகவே நாம் கருதுகிறோம். “we are not oppossite parties,  we are coailition parties" என்று நமது சேர்மன்  சென்றமுறை பேச்சுவார்த்தையில் நம்மிடம் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் இதுவென புரிந்து கொள்கிறோம். PGBEA சார்பில் தோழர்.மாதவராஜும், PGBOU  சார்பில் தோழர் விஸ்வநாதனும் கலந்துகொண்டனர்.

மீட்டிங்கின் ஆரம்பத்தில் சேர்மன்,  நடந்து முடிந்த காலாண்டு (ஏப்ரல் - ஜூன் 2011) கணக்கில், நமது டெப்பாசிட் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளையும், தாக்கங்களையும் எடுத்துரைத்தார்.  நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறோம் என்பதே அவரது உரையின் சாராம்சமாக இருந்தது. Advancesல் jewel loanகளே அதிகமாய் இருப்பதையும், 86 சதவீதமாக இருக்கும் அதனை 75 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது நமகு இலக்கு என்பதையும் எடுத்துரைத்தார். இதன் அர்த்தம் நகைக்கடனை குறைக்க வேண்டும் என்பதல்ல, மற்ற கடன்களை, குறிப்பாக easy loan போன்றவைகளை அதிகரிக்க வேண்டும் என்பதே என தனது நிலைபாட்டை தெளிவு படுத்தினார்.  Branch managerகள் வெளியே செல்ல வேண்டும், canvass  செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நமது இலக்குகள் தெளிவானவை என்றும், நாம் முயற்சி செய்தால் அடையக்கூடியவை என்பதையும் மீண்டும் மீண்டும் விளக்கினார்.

தொடர்ந்து, அந்த மீட்டிங் ஹாலிலேயே, ஒவ்வொரு Branch  manager களிடம், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, அவர்கள் எவ்வளவு achieve  செய்திருக்கிறார்கள்,  குறிப்பிட்ட காலவரம்பிற்குள் இலக்கையடைய என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என review  செய்யப்பட்டது.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளைப் பேச அழைத்தார்கள். PGBWU சார்பில் அதன் பொருளாளர் விவேகானந்தன் முதலில் பேசினார். வழக்கம்போல் , அவர்களுக்கே உரித்தான பாணியில் வழவழ கொழகொழவென்றிருந்தது.

PGBEA  சார்பில் தோழர்.மாதவராஜ்,  இதுபோன்ற கூட்டங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு தோன்றியதற்கு,  முதலில் சேர்மனுக்கு நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.  இந்தக் கூட்டம் oneway traffic போல இருப்பதாகவும், managers  தங்கள் தரப்பிலிருந்து உண்மைகளை உடைத்துப் பேசாமல் இறுக்கத்தோடு இருப்பதாகவும் ஒரு observer ஆக தனக்குத் தோன்றுவதாகச் சொன்னார்.  Managerகளே ground levelல் பணிபுரிந்து அதன் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவர்கள் என்றும், இலக்குகளை விஞ்ஞான பூர்வமாக வடிவமைக்க வேண்டியவர்கள் நிர்வாகம் என்றும், இந்த இருமுனைகளும் சந்தித்து தீர்வு கண்டு, மேலும் முன்னேறும் இடமாக managers மீட்டிங் இருக்க வேண்டும் என்று விளக்கினார்.  அதற்கு வெளிப்படையான உரையாடல்கள் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.  ஒவ்வொருவரிடமும் பலமும் இருக்கிறது, பலவீனமும் இருக்கிறது என்றவர் அதனை சரி செய்வதும், , சமன் செய்வதுமே இதுபோன்ற appraisalகளின் தன்மையாக இருக்க வேண்டும் என்றார்.  ‘நான் சரியாக perform  செய்யவில்லை, அதனால் எனக்கு தூரத்தில் transfer  போட்டு இருக்கிறார்கள்’ என சம்பந்தப்பட்டவரே convince  ஆகுமளவுக்கு நிர்வாகத்தரப்பில் transparencyயும்,  impartialityயும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.  இந்த குறிப்பிட்ட காலாண்டில் ஆள் பற்றாக்குறையாலும்,  பணி நெருக்கடியாலும் வாடிக்கையாளர் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதையும் அதுவே, வங்கியின் வளர்ச்சிக்கு தடைகல்லாக இருந்ததையும், புதிய Recruitment மூலம் அந்த நெருக்கடி ஒரளவுக்கு தீர்ந்து போக இருப்பதால், நாம் இலக்குகளை அடைய சாத்தியங்கள் அதிகமாகி இருக்கின்றன எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

PGBOU சார்பில் தோழர் விஸ்வநாதன் பேசும் போது, managerகளுக்கு சமீப ஆண்டுகளில் நடந்த பணி ஓய்வுகள் கடுமையான பயத்தை ஏற்படுத்தி  இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார். எப்போதோ அவர்கள் கொடுத்த கடன்களின் தன்மையால், அவர்களுக்கு பணி ஓய்வில் கிடைக்க வேண்டிய தொகை பிடித்தம் செய்யப்படுவதால், managers  பாதுகாப்பான கடன்கள் மட்டுமே கொடுத்து நிம்மதியாக பணி ஓய்வு பெறுவோம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்றார். அவர்களுக்கு ஆதரவும், நம்பிக்கையும் அளித்து உற்சாகப்படுத்த வேண்டியது நிர்வாகம் என்றார்.

தொடர்ந்து பேசிய சேர்மன், தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் வெளிப்படையான பேச்சுக்களை நிர்வாகம் வரவேற்பதாகவும், இதனால் மறைந்திருக்கும் சில உண்மைகள் புலப்படுவதாகவும், அது நிர்வாகத்திற்கு வருகிற காலங்களில் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். பணிபுரியும் வசதிகளை (comfort)  ஏற்படுத்தித் தர வேண்டியது நிர்வாகம் என்பதை ஒப்புக்கொண்டவர், கடந்த காலங்களில் அந்த comfortஐ முழுமையாக நிறைவேற்ற இயலாத சூழல் நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கலாம் என்றதோடு, அதே சமயம் கிடைத்த  comfortக்குரிய பணிகளை நாம் செய்திருக்கிறோமா என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதும் அவசியம் என்றார்.

விருதுநகர் வட்டார மேலாளர் திரு.நெடுஞ்செழியன் கிளைகளில் managers செய்ய வேண்டிய பணிகளை தொகுத்துச் சொன்னதோடு, கூட்டம் நிறைவுற்றது.  நமக்கு இது ஒரு புதிய அனுபவம்தான்.

14.7.11

டிரான்ஸ்பர் கமிட்டியோடு பேச்சுவார்த்தை - 14.7.2011

8.7.2011 அன்று சேர்மனுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இன்று நிர்வாகத் தரப்பில் அமைக்கப்பட்ட, டிரான்ஸ்பர் கமிட்டியுடன் (GM-O, PAD-SM, AIVD-SM)   PGBEAவும், PGBOU வும் பேச்சுவார்த்தை நடத்தின. ஏற்கனவே, யார் யாருக்கு, எங்கெங்கு டிரான்ஸ்பர்கள் விரும்புகிறோம் என்பதை பட்டியலிட்டு கொடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் பாதிப்புகளுக்குள்ளான டிரான்ஸ்பர்களை மாற்றித்தர வேண்டும் என நாம் வலியுறுத்தினோம். புதிய பணிநியமனத்தையொட்டி அனைத்தும் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதிதாகத் திறக்கப்பட்ட கிளைகளுக்கு, தன் இஷ்டத்திற்கு நம் தோழர்கள் சிலரை டிரான்ஸ்பர் செய்ததை உடனடியாக மாற்றித் தரும்படிக் கேட்டுக்கொண்டோம்.  ஆள் பற்றாக்குறையினாலும், வேலைப்பளுவினாலும் கிளைகளில் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர் ஊழியர்கள் என்பதை விளக்கினோம்.  சமீப காலங்களில் PGB ஊழியர்கள் கடுமையான stressக்கு ஆளாகிக்கொண்டு இருப்பதை பல உதாரணங்களோடு சொன்னோம்.  இவ்வளவு வேதனைகளுடனும், வலியுடனும் வங்கிக்காக பணிபுரியும் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்றோம். நமது தரப்பில் சொல்லப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, சேர்மனுடன் பேசி முடிவெடுப்பதாக டிரான்ஸ்பர் கமிட்டி சொல்லப்பட்டது.

நிர்வாகம், இவ்விஷயத்தில் பிரச்சினைகளை புரிந்துகொண்டு, சாதகமான முடிவுகள் எடுக்கும் என நம்புகிறோம்.  பார்ப்போம்.

8.7.11

சேர்மனுடன் பேச்சுவார்த்தை - 8.7.2011

நமது சங்கம் PGBEA இன்று நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. நமது தரப்பில் தோழர்கள் சோலைமாணிக்கம், மாதவராஜ், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகத்தரப்பில் chairman, G.M(O), PAD-SM ஆகியோர் கலந்து கொண்டனர். நாம் பேசிய விஷயங்கள்:

1. Computer Increment, Newspaper Allowance உள்ளிட்ட அலவன்சுகள்.
2. Compliment
3. நமது வங்கியிலேயே temporary ஆக பணிபுரிபவர்கள் நிரந்தரமாக்குதல்.
4.சென்ற Block yearல் தவிர்க்க முடியாத சூழலில் LFC செல்ல முடியாத தோழர்களுக்கு extension
5.Infrastructure
6. New recruitment
7. கடைநிலை ஊழியர்களிலிருந்து எழுத்தராக பதவி உயர்வு பெற்று டிரான்ஸ்பரில் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே டிரான்ஸ்பர் போடப்படாமல் தொலைதூரங்களில் அவதிப்படுபவர்களுக்கு டிரான்ஸ்பர்கள்.
8. சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய கிளைகளுக்கு posting செய்யப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு டிரான்ஸ்பர்கள்.

பேச்சு வார்த்தை விபரங்கள்:

1. Computer Increment, Newspaper Allowance உள்ளிட்ட அலவன்சுகள் குறித்து சேர்மன் ஐ.ஓ.பிக்கு நேரில் சென்று பேசியதாகவும், Computer increment குறித்த அரசாணையில் ஐ.ஒ.பி நிர்வாகம் சில சந்தேகங்கள் எழுப்பி இருப்பதாகவும், அவை clarify செய்யப்பட்டவுடன், நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவைகளை விரைவில் நமக்கு வாங்கித்தருவதற்கு தானே முழுப் பொறுப்பையும் ஏற்பதாகவும் உறுதியளித்தார்.

2. Complimentஐ நமது வங்கியின் போர்டு நிராகரித்து விட்டதையும், தான் செய்த முயற்சிகளையும் எடுத்துரைத்தார். நாம் நமது வங்கியின் லாபத்தில் 5 சதவீதத்தை இதுபோன்ற staff welfare fundக்கு ஒதுக்கலாமே என யோசனை தெரிவித்தோம். சேர்மன் உடனே அந்த யோசனையை வரவேற்றதோடு, ஐ.ஓ.பியில் இந்த நடைமுறை இருப்பதாகவும், தான் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.

3. பல கிராம வங்கிகளிலும், சில வணிக வங்கிகளிலும் one time measure ஆக, அங்கு temporary ஆக பணிபுரிபவர்களை நிரந்தரமாக்கியிருப்பதையும், நமது வங்கியியிலும் அது போன்ற நடைமுறைகளை சாத்தியமாக்கிட வேண்டும் எனவும் சொன்னோம். தனக்கும் இதில் சம்மதம் உண்டு என்றும், அனுமதிக்கப்பட்ட வழிகளில் முயற்சிப்பதாக சேர்மன் அவர்கள் தெரிவித்தார். இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நமது ஒப்புதல் எப்போதும் உண்டு என்றதோடு, இந்த நல்ல காரியம் பல குடும்பங்களில் விளக்கேற்றும் என்றும் தெரிவித்திருக்கிறோம்.

4. Deputation ஏற்பாடு செய்யப்படாமல் போனது, உடல்நலம் சுகவீனமுற்றது போன்ற காரணங்களால் சென்ற block yearல் LTC செல்ல முடியாமல் போனவர்களுக்கு, time extend செய்து , LTC செல்ல அனுமதிக்க வேண்டும் என்றோம். அவை ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய நியாயமான காரணங்களாய் இருந்தால் அனுமதிக்கிறோம் என்றிருக்கிறார் சேர்மன்.

5. நமது வங்கியில் பணிச்சூழல் பல வகையிலும் கெட்டுப் போய் உள்ளது. அதில் முக்கியமானது, கிளைகளில் computer, printer எல்லாம் காலாவதியாகியும், இன்னும் நாம் அதை வைத்து தினமும் போராடுவதும், அன்றாட வேலைகளை முடிக்க முடியாமல் திண்டாடுவதும் ஆகும். அவைகள் அனைத்திற்கும் புதியவைகளை replace செய்ய வங்கியின் போர்டு இப்போது அனுமதித்து இருப்பதாகவும், விரைவில் அவை யாவும் சரி செய்யப்படும் எனவும் சேர்மன் உறுதியளித்தார்.

6. புதிய பணி நியமனம் இந்த மாதம் ஜூலை 18ம் தேதி வாக்கில் போர்டில் வைத்து இறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.

7. அதையொட்டிய டிரான்ஸ்பர்களில், அனைத்து பாதிப்புகளும் சரி செய்யப்படும் எனவும் சேர்மன உறுதியளித்தார்.

8.புதிதாக திறக்கப்பட்ட கிளைகளுக்கு, நமது தோழர்களை டிரான்ஸ்பர்கள் செய்திருந்ததை நாம் கடுமையாக எதிர்த்திருந்தோம். சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தோம். நமது தோழர்கள் மெடிக்கல் லீவில் சென்றிருந்தனர். தன்னுடன் PGBEA பேசியிருந்தால், இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டு இருக்காது எனவும், தான் அதனை முதலிலேயே சரி செய்திருப்பேன் எனவும் சேர்மன் தெரிவித்தார். சங்கத்தின் எதிர்ப்பு தனக்கு வருத்தமளிப்பதாகவும் வெளிப்படையாகச் சொன்னார். தொடர்ந்து எங்கள் தோழர்கள் பாதிக்கப்படுவது எங்களுக்கு வருத்தமளிக்கிறது என நம் நிலையை நாம் விளக்கினோம். GM(o), PAD-SM ஆகியோருடன் பேசி இணக்கமாக இந்தப் பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள் என்றார் சேர்மன். நாம் சம்மதித்திருக்கிறோம்.

இந்தப் பேச்சுவார்த்தையில், நாம் united India medical claim ல் உள்ள குறைபாடுகளைச் சொன்னோம். அவைகள் சரி செய்யப்பட்டு improved claim procedure ஒன்று நமது போர்டில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், நமது வங்கியின் வணிகத்தில், அட்வான்ஸில் 90 சதவீதம் நகைக்கடனாகவே இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். சேர்மன் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொன்னதோடு, இந்நிலையை மாற்ற தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு நமது ஒத்துழைப்பு வேண்டும் எனவும் கூறினார். நாம் இவ்விஷயத்தில் அவரோடும், வங்கியோடும் முழுமையாக இருப்போம் எனவும் உறுதி கூறினோம்.

இந்த பேச்சுவார்த்தையின் இடையே சேர்மன் அவர்கள் சொன்ன வாக்கியம் மிக முக்கியமானது மட்டுமல்ல, அற்புதமானதும் கூட.

“We are not opposite parties. We are coailtion parties"

என்பதே அது. நிச்சயமாக நாம் இதனை வரவேற்கிறோம். இதன் அர்த்தமும், பரிமாணங்களும் உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்படுமானால், நாமும், நமது வங்கியும் சிகரங்களைத் தொட முடியும். ஆனால் நடைமுறைப்படுத்துவது எப்போதும் நிர்வாகத்தின் கைகளிலேயே இருக்கிறது. கடந்தகால அனுபவங்கள் அதனை கசப்பாகவே நமக்கு தந்திருக்கிறது. இதனையும் சேர்த்து நிர்வாகம் புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகும்.

நம்மைத் தொடர்ந்து PGBOU  சார்பில் தோழர்கள் போஸ் பாண்டியன் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோர் நிர்வாகத்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

23.6.11

14.6.2011- EA , OU சப் கமிட்டி

14.6.2011 அன்று பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் (Pandyan Grama Bank Employees Association) மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் (Pandyan Grama Bank Officers Union) சப் கமிட்டி திருநெல்வேலியில் கூடியது.

PGBEA சார்பில் தலைவர் மாதவராஜ், உதவித்தலைவர்கள் சங்கர், அருண் பிரகாஷ்சிங், உதவிப்பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோரும், PGBOU  சார்பில் பொதுச்செயலாளர் சங்கரலிங்கம், லீகல் அட்வைசர் செல்வகுமார் திலகராஜ், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜூலை 7ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் குறித்த விவாதிக்கப்பட்டது.

அகில இந்திய அளவில், AIBEA, NCBE, AIBOC, BEFI ஆகிய சங்கங்கள், வங்கித்துறையையும், வங்கி ஊழியர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க இந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

நமது அகில இந்திய கிராமப்புற வங்கி ஊழியர்கள் சங்கம் (All India Regional Rural Bank Employees Association), தனக்குரிய சமூக தொலை நோக்குப் பார்வையுடன் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.  எனவே நாமும் ஜூலை 7ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். நமது சங்க சுற்றறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறோம்.

22.6.2011 அன்று தலைமையலுவலகம் முன்பாக இந்த வேலைநிறுத்தம் குறித்து மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

25.6.2011 அன்று திருநெல்வேலியிலும், 30.6.2011 அன்று மதுரையிலும் நமது இரு சங்கங்களின் சார்பில் உறுப்பினர்கள் சந்திப்பும் நடத்த இருக்கிறோம்.

11.6.2011 - நமது சங்க சப் கமிட்டி

11.6.2011 அன்று நமது சங்க சப் கமிட்டி காரைக்குடி அருகில் பள்ளத்தூரில் நடைபெற்றது.

தலைவர்.மாதவராஜ், பொதுச்செயலாளர்.சோலைமாணிக்கம், உதவித்தலைவர்கள் தோழர் சங்கர், உதவிப்பொதுச்செயலாளர்கள் தோழர் சுப்பிரமணியன், தோழர் அண்டோ கால்பட், உதவிப்பொருளாளர்.தோழர் அருளானந்தம், செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் பாபு, சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாறுதல்கள், புதிய பதவி நியமனம், ஜூலை 7 அகில இந்திய வேலை நிறுத்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

7.6.2011 - வங்கிச் சேர்மனுடன் பேச்சுவார்த்தை

7.6.2011 அன்று வங்கிச் சேர்மன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நமது தரப்பில் தலைவர்.மாதவராஜ், உதவித்தலைவர்.சங்கர், உதவிப்பொதுச் செயலாளர் தோழர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாறுதல்கள், கிளைகளில் ஆள் பற்றாக்குறை, புதிய பதவி நியமனம், computer increment, Newspaper allowance, compliment  குறித்து பேசப்பட்டது.